Thursday, 20 October 2016

“அரசும், பழங்குடிமக்கள் வாழ்வும்”


முனைவர்.கொ.சதாசிவம்
உதவிப் பேராசிரியர், பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21.
அலைபேசி: (0) 9488055405 மின்னஞ்சல்: sadamku@gmail.com
                பெரு.பழனிச்சாமி, கோ.அஜிதா
முனைவர்பட்ட  ஆய்வாளர்கள், பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21. அலைபேசி: (0) 9715793829 மின்னஞ்சல்: palanimku@gmail.com, ajitha1904@gmail.com
                       
இந்தியா முழுவதிலும் பரவலாக பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் மலைப் பகுதிகளின் குகைகளில் பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்கள். தரைவாழ் மக்களைக் கண்டால் குகைகளிலிருந்து வெளியில் வரப்பயந்து ஒளிந்திருந்த காலங்களெல்லாம் வரலாற்றில் இருக்கின்றன. மக்கள் தொகை அடிப்படையில் பழங்குடியினரை இருவகையாகப் பிரிக்கலாம். பழங்குடியின மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக காணப்படும்போது, அவர்களைப் பழங்குடியினர் குழுவாகவும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகக் காணப்படும்போது, பரவி வாழும் பழங்குடியினர்  எனவும் வகைபடுத்தலாம்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பழங்குடியினர் 7.95 இலட்சம்பேர் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. சதவீத அடிப்படையில் பார்க்கையில் பழங்குடியினர் 1.10 சதவீதமாகும். பழங்குடியினர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி விளிம்புநிலை மக்களாகவே உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் ஈட்டல் மூலம் முன்னேற்றம் காணல் ஆகிய நிலைகளில் அவர்களின் பங்கு மிகக்குறைவாகவே இருக்கிறது. பழங்குடியினர் மத்தியில் ஆண்கள் 61.81 சதவீதமும், பெண்கள் 46.80 சதவீதமும் கல்வியறிவு பெற்றவர்கள் எனவும், மொத்தத்தில் 54.34 சதவிகிதம் பேர்தான் கல்வியறிவுடன் இருக்கிறார்கள் எனவும் கணக்கெடுப்பு கூறுகிறது
ஒருமுறை தமிழக முன்னாள் முதல்வர். எம்.ஜி.ஆர் அவர்கள் தேனி மாவட்ட மலைவாழ் பழங்குடியின மக்களைப்பார்க்க நேரில் வருகிறார். அப்போது பஞ்சம் பட்டினியால் வாடிய வேலப்பர் கோவில் மலைவாழ் மக்களைப் பார்க்க வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று. மலைமேலிருந்த அம்மக்களைப் பார்த்து கைகூப்பி வணங்கி கீழே இறங்கி வருமாறு அழைத்தார், அதன் பின்னரே மலையைவிட்டுக் கீழிறங்கி வந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறேன் என்று வாக்குறுதி தந்தார். அதன்படி தமிழக அரசு முதன் முதலாக வேலப்பர்கோவில் மலையடிவாரத்தில் வீடுகள் கட்டித்தந்தது. அன்றிருந்து இன்று வரையிலும் எம்.ஜி.ஆரை நினைவில்கொண்டே அம்மக்கள் வாழ்கின்றனர். சிலரின் கைகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படம் பச்சை குத்தப்பட்டிருப்பதும் இதனை உறுதி செய்கிறது. வேலப்பர்; கோவிலில் பதினைந்து வீடுகள் வரை காணக்கிடைக்கின்றன.
வேலப்பர்கோவில் எனும் சிற்றூறில் மதுரை, தேனி மாவட்ட மக்களிடையே பிரசித்தி பெற்ற வேலப்பர் திருக்கோவில் ஒன்று உள்ளது. அக்கோவிலுக்கு அங்கு வசிக்கும் பழங்குடியினப் பிரிவின் பளியரின மக்களே பூசாரிகளாக உள்ளனர். அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கூட்டம் அலைமோதும். இக்கோவில் தமிழக அறங்காவல் துறையின் வசம் உள்ளது. இக்கோவிலின் வருமானத்தை பளியரின மக்களுக்குப் பகிர்ந்தளித்தாலே போதும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அலைய வேண்டிய அவசியமில்லை. மலையைவிட்டு கீழிறங்கி வந்து தங்களுக்குத் தெரியாத விவசாய வேலைகளை கட்டாயமாகவும் வேண்டாவெறுப்புடனும் செய்ய வேண்டிய அவசியமில்லை. யாரிடமும் விவசாயக் கொத்தடிமைகளாக வேலை செய்ய வேண்டிய வாய்ப்புகளும் இல்லை.
வேலப்பர் கோவில் மலையிலிருந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலை தூரம் கொண்ட விருமானூத்து ஒண்டிமலை சன்னாசியர்பர் திருக்கோவிலில் ஜி.உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருடாவருடம் புரட்டாசி மாதத்தில் மழைவேண்டி கிடாவெட்டி விருந்து கொடுப்பது வழக்கம். இந்த வகை அன்னதானத்தில் கலந்துகொண்டு ஏராளமானவர்கள் பயன் பெறுவார்கள். அதில் வேலப்பர் கோவில் பளியரின மக்களும் அடங்குவர். இத்தனை தூரத்திலிருந்து வந்து உணவுண்டுவிட்டு பந்தி முடியும் வரை வேகும் வெயிலில் காத்திருந்து மிச்சமீதி உணவுகளை பாத்திரங்களில் வாங்கிச் செல்வதைப் பார்த்தால் கண்கள் குளமாகிவிடும். முன்னாடியெல்லாம் நடந்துவந்து விருந்தில் கலந்துகொண்டவர்கள் தற்போது ஷேர் ஆட்டோக்களில் வந்து செல்வதுதான் ஒரே மாற்றம். அம்மக்கள் அழுக்குப்படிந்த மேனியோடும், ஆடைகளோடும் காணப்படுகின்றனர். குழித்து பலவருடங்கள் ஆனதுபோல் அவர்களின் தோற்றம். மண்ணிலிருந்து துவட்டி எடுத்து காயப்போட்டது போல் அவர்களின் குழந்தைகள் அணிந்திருந்த ஆடைகள்;. அதைப் பார்க்கும்போது மனிதம் தலைதூக்கி இவர்களை மேலோங்கச் செய்யும் அமைப்புகளே இல்லையா? எனும் மனவருத்தங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. நாம் வளரும் இந்தியாவில்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
பழங்குடியினரின் நலன் கருதி அரசு பழங்குடியினர் நல இயக்குநரகத்தை 01.04.2000-ல் தோற்றுவித்தது. அதனடிப்படையில் அம்மக்களுக்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், திருவள்ளுர், காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கடலூர், மதுரை, அரியலூர், திருநெல்வேலி, சென்னை ஆகிய 18 மாவட்டங்களில் மட்டுமே பழங்குடியினர் 10,000 பேருக்கும் மேல் வாழந்து வருகின்றனர் என்பதை தமிழக அரசின் புள்ளிவிபரம் எடுத்துக்காட்டுகிறது.
மலைப்பகுதிகளில் குறிப்பாக மலை அடிவாரப்பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி பளியரின மக்கள் வாழ்கின்றனர். முறையான உணவுப்பழக்க வழக்கமின்றி அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காணப்படுகின்றன. கற்பிணிப் பெண்களுக்கு குறைமாதக் குழந்தைகள் பிறந்து இறக்கின்றன. பள்ளி படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசு கட்டிக்கொடுத்திருக்கும் காலனி வீடுகளில் ஒரே ஒரு அறை மட்டுமே உண்டு. அதன் உள்ளேயே அடுப்பு வைத்து சமைக்கின்றனர். அந்த புகைக்குள்ளேயே குழந்தைகள் விளையாடுவதும், சாப்பிடுவதும், தூங்குவதும் நடக்கின்றன. புகையைச் சுவாசித்தால் நோய் வருமென்ற அடிப்படை அறிவுகூட இம்மக்களுக்குத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலாக வாழும் பழங்குடியினப் பகுதிகளான சேலம் (ஏற்காடு, பச்சமலை, அருநூத்துமலை மற்றும் கல்ராயன்மலை), நாமக்கல் (கொல்லிமலை), விழுப்புரம் (கல்ராயன்மலை), திருவண்ணாமலை (ஜவ்வாதுமலை), திருச்சிராப்பள்ளி (பச்சமலை), தர்மபுரி (சித்தேரி மலை), மற்றும் வேலூர் (ஜவ்வாது மற்றும் ஏலகிரிமலை) ஆகிய 7 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பழங்குடியினர்  மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள பழங்குடியினரில் 6 வகை பழங்குடியினர், அதாவது தோடர், கோத்தர், குரும்பா, இருளர், பனியர் மற்றும் காட்டுநாயக்கன் இனத்தவரின் மக்கள் தொகை குறைந்து கொண்டோ அல்லது அதிகரிக்காமல் நிலையாகவோ உள்ளது. எனவே, இவ்வினத்தவர், அழிவின் விளிம்பிலுள்ள தொல் பழங்குடியினராகக் கண்டறியப்பட்டுள்ளனர் என அரசு தரப்பு விளக்குகிறது. அதே சமயத்தில் தேனி, மதுரை மாவட்ட மலைப்பகுதிகளில் வாழும் பளியர்கள் குறித்த ஆய்வும் தேவையாகிறது. மிகுந்த வறுமையில் வாழும் இம்மக்களுக்கு அரசுத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி உதவிகள் செய்திட மாவட்ட நிர்வாகம் முன்வருமாயின் அம்மக்களின் வறுமை தீர்ந்து முன்னேற்றம்பெற வழிபிறக்கும்.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மாணாக்கர்களுக்கென 1979-ல் நிறுவப்பட்ட எஸ்.எப்.ஆர்.டி (Society for Rural Development- SFRD) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அரசு நிதியுதவியுடன் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் அபிநவம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிமலை ஆகிய இடங்களில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் பழங்குடியினர் கல்வி வளர்ச்சிக்காக இயங்குகின்றன. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில், தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஒன்று நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று தொழிற்பயிற்சி மையங்கள் சேலம் மாவட்டம் கருமந்துரையிலும், நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரிலும், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டியிலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.
ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கின்ற பழங்குடியினர்களுக்கான கல்வி வளர்ச்சிக்கு இது மட்டுமே போதுமான ஒன்றாக இருக்க முடியாது. எனவே பழங்குடியினருக்கான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இன்னும் சில பள்ளிகளைத் தேர்வு செய்து அரசு நிதியுதவி வழங்கலாம். அதேபோன்று தொழில்நெறி மையங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் தேனியிலோ, மதுரையிலோ இருக்கும் மாணாக்கர்கள் எப்படி நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இயங்கி வரும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை சீக்கிரமாக அணுகமுடியும்? தமிழகத்தில் இன்னும் இவர்களின் கல்வி வளர்ச்சி மேம்பாட்டை அடையாமல் பின்தங்கியேதான் உள்ளது. மலையிலிருந்து நகர்ப்புறத்திற்கு வந்துசெல்ல தெரியாதவர்களாகவும், அதற்கான பொருளாதார வசதிகள் இல்லாதவர்களாகவுமே வாழ்கின்றனர். தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை பழங்குடியினருக்கென தொழிற்பயிற்சி மையங்கள் இருப்பதைப் போன்றாவது குறைந்த பட்சம் 6 இடங்களிலாவது துவங்க அரசு முன்வர வேண்டும். பழங்குடியினரின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் இப்பிரிவின இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும்.
பழங்குடியினர் பற்றிய விவரங்களைச் சேகரிக்கவும், பழங்குடியினர் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி, சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை முதலியவற்றை ஆராய்ச்சி செய்வதற்காகவும், மைய அரசின் நிதியுதவியுடன் 1983-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், முத்தரை பாலாடா என்ற இடத்தில்பழங்குடியினர் ஆராய்ச்சி மையம்ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பழங்குடியினரின் வாழ்க்கை முறை குறித்த புகைப்படங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியன பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் ஒரு விற்பனைக் கூடமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அரசினுடைய இத்திட்டம் பழங்குடியின மக்களின் பாரம்பரியங்களை அழிவிலிருந்து காக்கும் வண்ணமாகவும் உலகிற்கு அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி விளக்கிச் சொல்லும் விதமாகவும் அமைந்திருக்கிறது.
மத்திய அரசின் உதவிகள்:
மத்திய அரசு (i) பழங்குடியினர்  துணைத் திட்டத்தின் கீழ் சிறப்பு மத்திய உதவி (ii) இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 275(1)-இன் கீழ் ஒதுக்கீடு மற்றும் (iii) அழிவின் விளிம்பிலுள்ள தொல் பழங்குடியினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது.
பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான சிறப்பு மைய நிதியுதவி
                பழங்குடியினர்  வாழும் பகுதிகளில் 60 விழுக்காடு நிதி, வருவாய் ஈட்டும் திட்டங்களுக்காகவும், 30 விழுக்காடு நிதி அதே பகுதிகளில் வருவாய் ஈட்டும் தொழில்களுக்குண்டான உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதற்காகவும் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினக் குழுக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படுவதுடன், சில பொருளாதார திட்டங்களுக்காகவும், இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. 10 விழுக்காடு நிதி வேலைவாய்ப்பு பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ.651 இலட்சம் உத்தேச நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 275(1) இன் கீழ், மைய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவியிலிருந்து பழங்குடியினர் பகுதிகளில் உள்கட்டமைப்புப் பணிகள், அதாவது நடைமேம்பாலம், இணைப்புச் சாலைகள், மின் இணைப்பு, தடுப்பணை ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சேலம் மாவட்டத்தில் அபிநவம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிமலை ஆகிய இடங்களிலுள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளைப் பராமரிப்பதற்கு இந்நிதி பயன்படுத்தப்படுகிறதுஇத்திட்டத்தின் கீழ் 2016-17-ம் நிதியாண்டிற்கு ரூ.880 இலட்சம் உத்தேச நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

அழிவின் விளிம்பிலுள்ள தொல் பழங்குடியினர் மேம்பாடு
அழிவின் விளிம்பிலுள்ள தொல் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக, மைய அரசு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மைய அரசு 2013-2014-ஆம் ஆண்டு முதல் ரூ.20 கோடி தொகையினை வருடந்தோறும் வழங்கி வருகிறது. அழிவின் விளிம்பிலுள்ள தொல் பழங்குடியின மக்களுக்கென்று பாரம்பரிய வீடுகள் கட்டுதல், கறவை மாடுகள் வழங்குதல், குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்குகள் போன்ற வசதிகள் இந்நிதியின் வாயிலாக செய்யப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2016-17-ம் நிதியாண்டில் ரூ.2000 இலட்சம் உத்தேச ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்யும் உதவிகள் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது
அதே சமயத்தில் தமிழகத்தில் தேனி, மதுரை மாவட்ட மலைப்பகுதிகளில் வாழும் பளியர் இனமக்களை அழிவின் விளிம்பிலுள்ள தொல் பழங்குடியினர் வகையில் சேர்த்து அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க முன்வர வேண்டும். அரசின் வழிகாட்டுதலோடு மேலே கூறப்பட்ட திட்டங்களெல்லாம் முறையாக பழங்குடியினரைச் சென்றடைந்தால் தேனி மாவட்ட வேலப்பர்கோவில் மலைவாழ் மக்கள் மட்டுமல்ல தமிழகத்தில் வாழும் அனைத்து மலைவாழ் மக்களும் முன்னேற்றம் பெற மிகுந்த உத்வேகம் தருவதாக இருக்கும். பழங்குடியினர் மேம்பட வேண்டும், தரைவாழ் மக்கள் போன்று அவர்களும் போதுமான முன்னேற்றங்களைப் பெற வேண்டும் என்ற நல்லெண்ணெமும் மனிதாபிமானமும் ஈடேறுமா? இதற்கான நற்பணிகளைத் தனது திட்டங்களின் மூலம் தமிழக அரசும் மதுரை, தேனி மாவட்ட நிர்வாகங்களும் நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


6 comments:

  1. Very good information. The Central and state Government should take sincere efforts in respect of Tribal issues of basic amenities and give proper rights as exists in the constitutional provision. By Kubendiran

    ReplyDelete
  2. Very good brother. I feel some more tribal social/political hidden issues which blocks the development of tribes must be brought out in this article.That could be the ultimate agenda. By K.Andy

    ReplyDelete
    Replies
    1. good information. Johnnesan kolli hills

      Delete
    2. good information. Johnnesan kolli hills

      Delete
  3. தமிழக பழங்குடி மக்களின் வாழ்வியலையும்
    மத்திய மாநில அரசுகளால் அவர்கள் படும் துன்பங்களையும் ,முனைவர்கள் மு.கொ .சதாசிவம், பெரு.பழனிசாமி, மற்றும் கோ.அசிதா ஆகியோரின் எண்ணங்கள்
    காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று பதிவு. முனைவர்கள் மூவரையும் 18.பட்டி
    மக்களோடு , ஆழ் மனதின் வாழ்த்துகளை
    அன்புடன் சமர்பிக்கும்.

    எல்.தருமன்
    மாவட்ட மலையாளி பேரவை
    ்்். 18.பட்டி
    திருவண்ணாமலை
    தெற்கு மாவட்டம் .


    ReplyDelete
  4. பெரு.பழனிசாமி மற்றும் அசிதா ஆகியோரின் சமூகப்பணி தொடர்ந்திட என் ஆழ்மனதின் வாழ்த்துக்கள் .

    அன்புடன்

    எல்.தருமன்
    ,,,, 18. பட்டி.

    ReplyDelete