முனைவர்.கொ.சதாசிவம்,
உதவிப்பேராசிரியர்,
சுற்றுச்சூழல் பொருளியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை- 21.
அலைபேசி:
9488055405 மின்னஞ்சல்: sadamku@gmail.com
பெரு.பழனிச்சாமி,
முனைவர்பட்ட
ஆய்வாளர், சுற்றுச்சூழல் பொருளியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை-
21. அலைபேசி: 9715793829 மின்னஞ்சல்: palanimku@gmail.com
தமிழக
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தாழையூத்து கிராமத்தில் பதினோறு பளியர் இன குடும்ப
மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு சில சமூக ஆர்வலர்களின் தீவிர முயற்சியால் 2006-ல்
காலனி வீடுகளை அரசாங்கம் கட்டிக் கொடுத்திருக்கிறது. போதுமான வேலை வாய்ப்புகளும், பண
வசதிகளும், கல்வியறிவும் இல்லாததன் காரணத்தால் இன்னும் பழமையான நாகரீகமுடையவர்களாகவே
இருக்கின்றனர். ஊட்டச்சத்துப் பொருட்களை முறையாக உண்ணத் தெரியாத காரணத்தாலும் அதற்கான
வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மெலிந்த உடல் பருமன்
உடையவர்களாகக் காணப்படுகின்றனர். தலைவலி, இருமல், காய்ச்சல், வயிற்றுவலி, போன்ற பிரச்சனைகளுக்கு
மருத்துவமனைக்குச் செல்லாமல் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்துவதாகக் சிலர் கூறுகின்றனர்.
பாம்பு மற்றும் பூரான், தேள், விசவண்டுகளின் கடிகளுக்கு சிறுகுறிஞ்சி, பெரியாநங்கை,
கொடி சங்கை, மிளகு நங்கை, வெள்ளைநாகைதலைவேர், வண்டுகொள்ளிபட்டை ஆகிய மூலிகைச் செடிகளைப்
பயன்படுத்துவதாக கூறுகின்றனர். செயற்கை மருத்துவத்தில் இல்லாத பலன் அதில் இருப்பதாகக்
அதிக நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
தங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாய
வேலைகளையும் மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பஞ்சாயத்துகளில்
நடைபெறும் வேலைகளிலும் நாட்டமில்லாத இம்மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக மலைக்குச் சென்று
வேலை செய்தும் அங்கிருந்து கொண்டுவரும் தேன், கிழங்கு, மரப்பட்டை, சரானத்தி வேர் போன்ற
மூலிகைப் பொருட்களை நேரடியாக சந்தையில் விற்காமல் இடைத்தரகர்களிடம் விற்று ஏமார்ந்தும்
இன்றைய பணத்தால் இன்றைக்குப் பசி தீர்ந்தால் போதும் என்று எண்ணி நாளைய வாழ்க்கைக்குச்
சேகரிக்க தெரியாதவர்களாக அன்றாடங்காட்சிகளாகவே வாழ்கின்றனர். தேன் எடுப்பதை தங்கள்
முக்கியத் தொழிலாகக் கருதுகின்றனர்.
தங்களின் வாழ்க்கைத் தேவைக்காக அதிகதூரம்
மலைப்பகுதிகளுக்குச் சென்று திரும்பும் பெண்கள் உடல்ரீதியான பலபிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளைச் சரியான முறையில் தெரிந்து கொள்ளாத இவர்கள் நான்கு
ஐந்திற்கு மேலாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அக்குழந்தைகளை முறையாக வளர்க்க
முடியாமல் சிரமப்படுகின்றனர். அடுத்தடுத்த வருடமென்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும்
தாய்மார்கள் தங்களின் மூத்தபிள்ளைகளை வைத்து இளம் பிள்ளைகளை வளர்க்க முன்வருகின்றனர்.
இதனால் குழந்தைகளின் கல்விமுறை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்
காலகட்டத்தில் சத்தான உணவுப் பொருட்களைச் சாப்பிடாததாலும் போதுமான வசதியின்மையின் காரணத்தாலும்
உடலில் குறைபாடுடைய குழந்தைகளையும் எடைக்குறைவான குழந்தைகளையும் பெற்றெடுக்கின்றனர்.
சில தாய்மார்களுக்கு குழந்தை இறந்தே பிறக்கின்றது. தங்கள் குடும்ப வறுமையின் காரணத்தால்
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பெண்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு மலைப்பகுதிகளுக்கு
வேலைக்குச் செல்கின்றனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலம் மிகமோசமாகப் பாதிக்கப்படுகின்றது.
பொதுவாகவே மலைக்கிராமங்களில் தண்ணீர்ப்
பஞ்சமே இருக்காது என்பது தரைவாசிகளின் கருத்து. ஆனால் தாழையூத்து கிராமத்தில் அரசாங்கம்
அமைத்துக் கொடுத்த ஆழ்துழைக்கிணறுகளில் போதுமான நீர்வசதிகள் கிடைப்பதில்லை அப்படியே
கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீர் ஊரிக்கிடைக்கும் பட்சத்தில் அதை பக்கத்து ஊரைச்சேர்ந்த
சில மக்கள் (மழைவாழ் இனத்தைச் சாராதோர்) மோட்டார் சைக்கிள்களில், குடங்களுடன் வந்து
பிடித்துச் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற அவலங்களை
எதிர்த்துக் கேட்க்கும் அளவிற்கு தெம்பு இல்லாத
விளிம்புநிலை மக்களாகவே இன்றும் வாழ்கின்றனர்.
அரசாங்க சலுகைகள் முறையாக வந்து சேர்கின்றதா?
என்ற கேள்விக்கு இல்லையென்ற பதிலே அதிகமாக வருகின்றது. மாவட்டத்தின் கடைசி எல்லைப்பகுதியில்
வசிப்பதால் போதுமான வசதிகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. விதவைகள் மற்றும் முதியோர்
உதவித் தொகைக்கு எழுதிப்போட்டாலும்கூட அதை முறையாக வாங்கித்தர அதிகாரிகள் மெத்தனம்
காட்டுகிறார்கள். எங்களிடம் இடைத்தரகர்கள் எதிர்பார்ப்புடன் செயல்படுகிறார்கள். அன்றாட
சாப்பாட்டிற்கே வழியில்லாத நாங்கள் எப்படி அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது
என்று வருத்தமாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் இம்மக்கள் தங்கள் பாரம்பரியங்களை
மதிப்பவர்களாகவும், குலதெய்வ வழிபாடுகள் உடையவர்களாகவும், செயற்கை மருத்துவ முறைகளை
விரும்பாதவர்களாகவும் வாழ்கின்றனர். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை மோட்டார் சைகிள்களில்
மருத்துவர்கள் வந்து செல்வதாகவும் இயற்கை மருத்துவத்தின் மீது நம்பிக்கையில்லாத சிலர்
அவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர்.
தாங்கள் வசிக்கும் கிராமத்திற்கு மேற்புறமும்
கீழ்புறமும் வேறு இனமக்கள் வாழ்வதால் அவர்களின் சாதாரண வாழ்க்கை முறைகளைப் பார்க்கும்போது
தங்களுக்கான பாரம்பரியங்களை மறந்து விடுபவர்களாக மாறிவருகின்றர். மலைக்குள் சுதந்திரமாக
வாழ்ந்தவர்களை கிராமப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து தங்களின் உரிமைகளைப் பறித்து இருப்பதாக
உணருகின்றனர்.
கடந்த எட்டாண்டுகளுக்கு முன்பாகவே வீடுகளைக்
கட்டித்தந்த அரசாங்கம் பெண்களுக்கான நவீன கழிப்பறை வசதியைச் செய்து கொடுத்திருக்க வேண்டும்.
அதேபோன்று கன்னிப் பெண்களும், கர்ப்பிணிப்பெண்களும் பயன்பெறும் வகையில் சத்துணவு மையங்களையும்
அமைத்துக் கொடுத்திருக்க வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகளை முறையாகப் படிக்க வைப்பதற்கும்
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய விளக்கங்களையும் அரசு முன்பே விழிப்புணர்வுகளின்
மூலம் எடுத்துரைத்து பாமர மக்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால்
இன்றைக்கு தாழையூத்து கிராம பழங்குடியின பளியர் இன மலைவாழ் மக்கள் சுகாதாரம் மற்றும்
கல்வி வளர்ச்சியில் சற்று முன்னேறியிருப்பார்கள்.
அக்கிராமத்தின் அருகிலுள்ள ஜெ.ஜெ.நகர்
சில வருடங்களுக்கு முன்பாகவே உருவானதாகும். அதற்கு முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலையின்
உச்சிப்பகுதியான நீர்நிலைகளும், இயற்கை மூலிகை வகைகளும் நிறைந்த செழிப்பான பகுதியான
யானைக்கஜம் என்ற மலைவாழிடத்தில் சுதந்திரமாகவும் தங்கள் வாழ்விற்குத் தேவையான எல்லா
வசதிகளோடும் வாழ்ந்ததாகக் கூறினர். கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
அங்கு பரம்பரையாக வாழ்ந்தோம். ஆனால் இப்போது எங்கள் அனைவருக்கும் மலையடிவாரப் பகுதியில்
வீடுகளைக்கட்டிக் கொடுத்து கட்டாயமாக மலையிலிருந்து கீழிறக்கி ஜெ.ஜெ.நகரில் குடியமர்த்தியிருக்கிறது
அரசாங்கம் என்கிறார்கள் அந்த பழங்குடியின பளியர் இன மலைவாழ் மக்கள்.
மலைப்பகுதிகளிலேயே இயற்கையோடு இயற்கையாக
வாழ்ந்த எங்களை இங்கு குடியமர்த்தினால் நாங்கள் இங்கு என்ன வேலை செய்து பிழைப்பு நடத்த
முடியுமென்று வருந்துகின்றனர். வீடுகளைக் கட்டித்தந்தவர்கள் சிமெண்ட் சாலைகள் அமைத்துத்
தரவில்லையென்றும், மின்சார வசதி செய்துதரவில்லை, என்றும் குடிதண்ணீர் வசதிகள் செய்து
செய்துதரவில்லை, என்றும் தங்கள் குறைகளை மிகுந்த வருத்தங்களுடன் பட்டியலிடுகின்றனர்.
தாழையூத்து மற்றும் ஜெ.ஜெ.நகரில் வாழும்
பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தும், குழந்தைகளைப் பெற்றெடுத்தும் போதுமான
உடல் வளர்ச்சியில்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். பூங்கொடி, செல்வி, ராஜேஸ்வரி என்று
தரைவாழ் மக்களைப்போன்று பெயர் வைக்க கற்றுக் கொண்டவர்கள் இன்றும் தரைவாழ் மக்களைப்
போன்று வாழத்தெரியாதவர்களாக இருப்பதை நினைக்கும் போது அதிகமான மனவருத்தமே மேலோங்குகிறது.
குறிப்பாக பெண்களின் சுகாதாரம் அதிகமாகப்
பாதிக்கப்படுகிறது. போதுமான மருத்துவ வசதிகளும், விழிப்புணர்வுகளும் இல்லாததுமே இதற்கான
முதற்காரணம் என்று கூறலாம். ஜெ.ஜெ.நகரில் வீட்டிற்கொரு கழிப்பறை அரசு நிதியிலிருந்து
கட்டிக் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் அதை தண்ணீர் வசதிகள் இல்லாமல் யாரும் பயன்படுத்துவதில்லை.
வீடுகள் கட்டித் திறந்து வைத்த இரண்டு வாரங்கள் மட்டுமே தண்ணீர் தந்தார்கள். இப்போது
குழாயில் ஒரு சொட்டுத் தண்ணீரும் வரவில்லை. பக்கத்து தோட்டங்களில் தண்ணீர் எடுத்து
வந்து குடிப்பதாகக் கூறுகின்றனர். குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் திண்டாடும் இவர்கள்.
எப்படி குளிப்பது, ஆடைகளைத் துவைப்பது, சுகாதாரத்தை பேணிக்காப்பது, நோய்களிலிருந்து
தங்களைக் பாதுகாப்பது என்ற பலகேள்விகள் சமூக ஆர்வலர்களாகிய நமக்குள்ளே அடுக்கடுக்காக
எழுகிறது. மேலும் புதிதாகக் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளின் கழிப்பறைக் கதவுகள் காற்றுக்குத்
தானாகவே விழுந்து விட்டன. எனவே கழிப்பறைகளை விறகு வைப்பதற்கும் மலைகளிலிருந்து கொண்டு
வரும் பொருட்களைச் சேகரிப்பதற்குமே அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்றும் கூறினர்.
மலைப் பகுதிகளில் வசிக்கும் எங்களுக்கு
நாட்டில் நடக்கும் விசயங்கள் எதுவுமே தெரிவதில்லை. இங்கு சரியான நெட்வொர்க் வசதியும்
கிடையாது. ஆதலால் யாருக்காவது உடல்நிலைப் பாதிக்கப்பட்டாலோ, கர்ப்பிணி பெண்களுக்கு
திடீரென்று பிரசவவலி வந்துவிட்டாலோ அவசர அலைப்பிற்கு 108 ஆம்புலன்ஸ் சேவையைகூட நாட
முடியாமல் போகிறது. அப்படியே தொடர்பு கிடைத்துவிட்டாலும் ஆம்புலன்ஸ் வாகனம்வர நேரமாகிவிடுவதால்
அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. விஞ்ஞான உலகம் மூலைமுடுக்கெல்லாம் கொடிகட்டி பறந்து
வெற்றிகள் பெற்றுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இந்தியாவின் பூர்வீகக் குடிகளாகிய
பழங்குடியின மக்கள் போதுமான வசதிகள் இன்றி இன்றும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
இயற்கை மூலிகைச் செடிகளோடு பின்னிப்பிணைந்து
வாழ்ந்து கொண்டிருந்த எங்களைப் பிரித்து கிராமப் பகுதிகளுக்குக் கொண்டு வந்து சாதாரண
மக்களைப் போன்று வாழவைத்து அரசு எங்களின் பாரம்பரியங்களையும் சுதந்திரங்களையும் பறித்திருக்கிறது.
மலைவாசிகளாக வாழ்ந்த எங்களை மலைக்குள் அனுமதிக்க அரசாங்கம் மறுக்கிறது என்று தங்கள்
ஆதங்கங்களை அப்பகுதி பழங்குடியின பளியர் இன மலைவாழ் மக்கள் மன வேதனைகளுடன் தெரிவித்தனர்.
இவர்களைப் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இந்திய அரசின் ‘உள்ளடங்கிய
வளர்ச்சி’ உண்மையாக வேண்டுமெனில் இவ்விளிம்பு நிலை மக்களின் வாழ்வும் நலமும் போற்றப்பட்டு
மேன்மையுற வேண்டும்.
Hard Rock Hotel & Casino Las Vegas - MapyRO
ReplyDeleteFind Hard Rock Hotel 경상북도 출장안마 & Casino Las Vegas, Las Vegas, NV, United States, 보령 출장마사지 ratings, photos, prices, expert advice, traveler 목포 출장안마 reviews and tips, and 밀양 출장샵 more information from Rating: 4.7 · 6,326 votes · Price range: 양주 출장안마 $$