Wednesday, 22 February 2017

கிராமங்களைவிட்டு வெளியேறும் மக்களும்; வெளியேற்றும் வஞ்சமும்


முன்னுரை:
கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பென்றார் இந்தியாவின்; தந்தை காந்தியடிகள், ஆனால் இன்று கிராமங்கள்தான் சாதிகளின் ஊற்றாக இருந்து வளர்ந்து வருகின்றன. இந்தியா 2020-ல் வல்லரசு நாடாகும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் .பி.ஜே.அப்துல்கலாம். ஆனால் நம் நாட்டின் கிராமப்புறங்கள் இன்னும் சாதிகளை மையமாகக் கொண்டு வளர்ந்து வரும்போது எப்படி அது சாத்தியமாகும். சாதி என்கின்ற இந்த பழைமைத்தீயை மத்திய மாநில அரசுகள் அனைக்காவிட்டால் அது இன்னும் பல நிலைகளில் விஸ்வரூபமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த சாதிய வன்முறைகளுக்குப் பயந்துதான் ஏனைய கிராமவாசிகள் அங்கிருந்து வெளியேறி நகர்புறங்களில் குடியேறுகின்றனர்.
மதவாரியாகப் பிரிந்து கிடக்கும் மக்கள்:
இந்தியாவில் பரவலாக இந்துக்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள் என்ற மூன்று மதத்தைச்சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம் மூவரும் வெவ்வேறு விதமான தெய்வ வழிபாடுகளையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றி வாழ்கின்றனர். இறைவனையே மூவரும் வணங்கினாலும் வௌ;வேறு முறைகளில் வழிபாடுகளை நடத்துகின்றனர். பிறப்பு, இறப்பு மற்றும் தங்களுக்குள் நடைபெறும் இல்ல நிகழ்வுகளிலும் மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் தனித்தனியான முறைகளில் சடங்குகளைச் செய்கின்றனர். பிறப்பால் மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற கோட்பாடுகள் இருந்தாலும். இவர்கள் மூவருக்குள்ளும் மதவாரியான உயர்வு தாழ்வு பிரச்சனைகள் காணப்படுகின்றன.
சாதிய முறைகள்:
மனித இனத்தின் தோற்றத்தின் தொடக்கத்தில் மனிதாபிமானத்தோடுதான் இருந்திருக்கிறது. அதன் வளர்ச்சியால் அதற்குள் ஏற்பட்டுப்போன போட்டிகளும் பொறாமைகளும் தீண்டாமையாக எழுந்திருக்கிறது. இந்த சாதிய முறைகள் இந்து மதத்தில்தான் அதிகமாக காணப்படுகிறது. இந்து மதத்தில் உயர் சாதி கீழ்சாதி என என இருபிரிவினராக மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். அந்த இரண்டு பரிவிற்குள்ளும் பல கிளைப் பிரிவுகள் இருக்கின்றன. அந்தக் கிளைப்பிரிவிலும் உயர்வு தாழ்வு பிரச்சனைகள் இருக்கின்றன.  
தொழில்வாரியாகப் பிரிக்கப்பட்ட மக்கள்:
சில மக்கள் தொழில் வாரியாக பிரிக்கப்பட்டு இன்றும் இழிதொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் கிராமப்புறங்களில் துணிதுவைப்பதற்கும், முடிவெட்டுவதற்கும், சாக்கடை அள்ளுவதற்கும், பிணம் தூக்குவதற்கும், இறந்த ஆடுமாடுகளை அப்புறப்படுத்துவதற்கும் என்று மக்கள் பலதரமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைய காலத்திலும் அதே நிலை தொடர்கிறது, நாகரீக மாற்றத்தால் அவர்களின் குடும்பம் முன்னேற்றம் கண்டிருந்தாலும் அத்தொழிலைச் செய்ய சில கிராமங்களில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். போதுமான கல்வியறிவைப் பெற்றிருக்கும் அவர்களின் பிள்ளைகள் அத்தொழிலைச் செய்ய முன்வருவதில்லை. எனவே நகர்புரங்களை நோக்கி குடியேற வேண்டிய கட்டாயச்சூழல் ஏற்படுகிறது.
கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத மக்கள்:
நம் நாட்டின் பல பகுதிகளில் இன்னும் கிராமப்புற கோவில்களுக்குள் ஆதிதிராவிட மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே தங்கள் வசதிக்கேற்ப கோயில்கள் கட்டி அவர்களின் தெருக்களுக்குள்லேயே கோவில் வழிபாடு திருவிழாக்களை நடத்திக்கொள்கின்றனர். ஏன் ஆதிதிராவிட மக்கள்; பொதுக்கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை? அவர்கள் இழிதொழில்களைச் செய்கிறார்களாம். அத்தொழில்களைச் செய்வதால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாம்.
தேனீர்கடைகளில்கூட இல்லாத சுதந்திரம்:
கிராமப்புற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்குத் தெரியும் கிராமப்புறங்களின் அவல நிலைகள். கிராமத்தில் ஒரு சாதாரண தேனீர்கடைகளில்கூட சுதந்திரமில்லை. ஆதிதிராவிடர் அல்லாதவர்களுக்கு ஒரு டம்ளரும் ஆதிதிராவிடர்களுக்கு ஒரு டம்டளரும் பயன்படுத்தப்படுகிறது. இதில் விலைப்பேதம் கிடையாது. மேலும் தேனீர்க்கடை இருக்கைகளில் ஆதிதிராவிட மக்கள் அமரக்கூடாது என்று வரையறைகளும் இருக்கின்றன. இருந்தபோதிலும் தேனீர்கடை பிரச்சனைகளில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன்பாக 2007-ல் சில அமைப்புகளால் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக தேனீர்கடைகளில் இரட்டை டம்ளர் முறை  ஒரு தீர்வுக்கு வந்தது.
சில தன்னார்வ அமைப்புகளின் போராட்டங்களைக் கவனத்தில் கொண்டு காவல் துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றிய ராஜேந்திரன் அவர்கள் பிறப்பித்த ஆணையின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமதேனீர் விருந்து நடத்தப்பட்டது. அதன் விளைவாக இன்றைய கிராமத்து தேனீர்க்கடைகளில் ஆதிதிராவிடர்களுக்கு பிளாஸ்டிக் டம்ளர்களிலும், மற்றவர்களுக்குப் பொதுவான சில்வர் டம்ளர்களில் தேனீர் வழங்கப்படுகின்றன. இதுதான் கிராமப்புற தேனீர்கடைகளில்  இன்று ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றம்.
கிழக்குப்புறமாக ஒதுங்கி நிற்கும் சேரிகள்:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் கிழக்குப்புறமாகத்தான் அமைந்திருக்கின்றன. காரணம் அவர்களின் மீது வீசும் காற்றுகூட ஆதிதிராவிடர் அல்லாதவர்களின் மீது படக்கூடாதாம் இப்படியான ஒரு அப்பட்டமான சூழல் முன்காலங்களில் இருந்திருக்கின்றன. அதனடிப்படையிலேயே இன்றும் பெரும்பாலான ஊர்களில் சேரிகள் கிழக்குப்புறமாகவே ஒதுங்கி நிற்கின்றன. ஊருக்கு மேலிந்து வரும் சாக்;கடைத்தண்ணீர் அவ்வழியாகத்தான் ஊரணியைச் சென்றடையும். அதேபோன்று குப்பைக் கழிவுகள் அப்பகுதியில்தான் பெரும்பாலாக கொட்டப்படும்.


பொது இடங்களில் அமர்வதற்குத் தடை:
பொது இடங்களில் மேடான பகுதிகளில் அதாவது கோவில் மேடை ஆழமரத்தடி, வேப்பமரத்தடி போன்ற இடங்களில் ஆதிதிராவிடர் அல்லாதவர்கள் கூடும் இடங்களில் ஆதிதிராவிடர்கள் அவர்களுக்குக் கீழான பகுதிகளில்தான் அமர வேண்டும். அப்படி மேலான பகுதிகளில் அமர்ந்தால் அவ்விடத்திலேயே பிறரால் நிச்சயம் தாக்கப்படுவார்கள். எனவே அவர்கள் அதிகமாக ஊருக்குள் உலவுவதைத் தவிர்க்கின்றனர்.
முடிதிருத்தும் செய்வதில்லை:
முடிதிருத்தும் செய்யும் தொழிலாளர்கள் உள்ளுர் வாழ் ஆதிதிராவிடர்களுக்கு முடிதிருத்தம் செய்வதில்லை. எனவே அம்மக்கள் பக்கத்து ஊர்களுக்கோ அல்லது நகர்புறங்களுக்கோ சென்று முடிதிருத்தம் செய்து கொள்கிறார்கள். இப்படிப்பல வேலைகளுக்கு நகர்புறத்தைச் சேர்ந்த மக்களாகவே மாறிப்போன இவர்கள் கிராமங்களில் இருக்கும் தீண்டாமை எனும் அவல நிலையை சகிக்க முடியாமல் நகர்புறம் நோக்கி குடியேறுகின்றனர்.
சொந்த ஊரைவிட்டு வெளியேறும் ஆதிதிராவிடர்கள்:
ஆதிதிராவிடர் பகுதிகளில் யார் வேண்டுமானாலும் குடியேரலாம். ஆனால் ஆதிதிராவிடர் அல்லாத பகுதிகளில் ஆதிதிராவிடர்கள் குடியேற முடியாது என்பது கிராமப்புறங்களில் எழுதி வைக்கப்படாத சட்டமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர்; பகுதிகளில் குடியேறும் ஆதிதிராவிடர் அல்லாதவர்கள். ஆதிதிராவிடர்களின் வீடுகளில் வாடகைக்கோ, ஒத்திக்கோ குடியேறுகிறார்கள். அப்படியே அங்குள்ள ஆதிதிராவிடர்களுக்கு வட்டிக்குப் பணம் தருகிறார்கள். தான் குடியேறிய வீட்டை முதலில் தன் வசப்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் அக்கம் பக்கத்து சொத்துக்களையெல்லாம் அபகரிக்க முற்படுகிறார்கள். குறிப்பாக ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் பணம் தருகிறார்கள் அப்பணத்திற்கு வட்டிக்குமேல் வட்டி போட்டு அவர்களால் கட்ட முடியாத அளவிற்கு ஒரு தொகையைச் சொல்கிறார்கள்.
அதைக் கட்ட முடியாத சூழலுக்கு ஆதிதிராவிடர்கள்; ஆளாகின்றனர். அவர்களை அடித்து துன்புறுத்தி பயப்பட வைக்கின்றனர்ஆதிதிராவிடர்கள், ஆதிதிராவிடர் அல்லாதவர்களால் தாக்கப்பட்டால் அவர்களை திருப்பித்தாக்க முடியாத அப்பாவிகளாக இருக்கின்றன. இதைத்; அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆதிதிராவிடர்களைத்தாக்கி அவர்களின் வீடுகளை சொத்துக்களை அபகரிக்க முற்படுகின்றனர். எனவே ஆதிதிராவிடர்கள்;; தங்களுக்கோ தங்கள் குடும்பத்திற்கோ ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து உயிர்பிழைத்தால் போதுமென்று இரவோடு இரவாக வீட்டைக் காலி செய்துவிட்டு நகர்புறங்களில் குடியேறி, கிடைக்கின்ற கூலிவேலைகளைச் செய்து தங்கள் அன்றாடப் பொளப்பு நடத்துபவர்களாக மாறி வருகின்றனர்.
அங்கும் படையெடுக்கும் ஆதிதிராவிடர் அல்லாதவர்கள் அவர்களை மிரட்டி அவர்களின் பெயர்களில் இருக்கும் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்து கொள்கிறார்கள். சேரிகளில் திடீரென்று சில வீடுகள் மாளிகைளாக மாறியிருக்கும் அப்படி மாறியிருந்தால் அது நிச்சயம் ஆதிதிராவிடர்களின் வீடுகளாக இருக்காது. ஆதிதிராவிடர்களின் இடம், வீடுகளை வலுக்கட்டாமாக பிடுங்கி ஆதிதிராவிடர் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் மாளிகையாகத்தான் இருக்கும். பல வீடுகள் பாலடைந்து கிடக்கும் அந்த வீடுக்காரர்கள் கடனுக்குப் பயந்து ஓடியிருப்பார்கள். அல்லது அப்பகுதியில் குடியேறிய ஆதிதிராவிடர் அல்லாதவர்கள் அடித்துப் பிடுங்கியிருப்பார்கள். அப்படி பிடுங்குகின்ற இடங்களை அவர்கள் சில வருடங்களுக்கு பராமரிப்பு இல்லாமலேயே போட்டுவிட்டு சில வருடம் கழித்து அங்கு வாழும் பிற ஆதிதிராவிடர்களின் பட்டாக்களை வைத்து அரசை ஏமாற்றி பசுமை வீடுகளை வாங்கி கைப்பணத்தையும் போட்டு மாளிகைகளாக மாற்றி விடுவார்கள். தங்கள் கடனைத் திருப்பித்தந்து ஆதிதிராவிடர்கள் தங்கள் இடங்களை மீட்க முன்வந்தாலும் அவர்களது இடத்தில் திடீரென்று முளைத்திருக்கும் அம்மாளிகைகளுக்கு எப்படிப் பணம் தந்து மீட்க முடியும்?.
முடிவுரை:
மத்திய-மாநில அரசுகள் ஆதிதிராவிடர்களிடமிருந்து கைமாறியிருக்கும் சொத்துக்கள் (வீடுகள், காலி இடங்கள், நிலங்கள்) ஆதிதிராவிடர் அல்லாதவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது சட்டப்படி செல்லுபடியாகாது என்று சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் தமிழகத்தின் பல கிராமங்களில் வாழும் ஆதிதிராவிடர்களின் நலன் காப்பதாகவும், நகர்புறம் நோக்கியோ அல்லது வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்தோ சென்ற ஆதிதிராவிட மக்கள் மீண்டும் அவரவர்களின் கிராமங்களிலேயே குடியிருப்பதற்கும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் மிகுந்த உருதுணையாக இருக்கும்.



2 comments:

  1. Dear comrade, I have been read your article. Anyone who easily reading your article and observe the the resource. Gd method. but, the article have to input the sources and then food note. congratulations.

    ReplyDelete