Tuesday, 19 July 2016

ஆராய்ச்சி ஆய்வேடில் இடம் பெற்ற ஆசிரியர் விளக்கம்


    (மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 2015-ம் ஆண்டு மு.மோகன் என்ற (எம்.ஏ., தமிழ்) முதுகலைப்பட்டம் பயின்ற மாணவர் கவிஞர். பெரு.பழனிச்சாமியின் “உயிர் நட்புக் கவிதை நூலின் உள்ளடக்க வெளிப்பாடு” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்த ஆய்வேடில் இடம் பெற்ற ஆசிரியர் விளக்கம்)


          கவிஞர் பெரு.பழனிச்சாமி தமிழ் நாட்டில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜி.உசிலம்பட்டி எனும் கிராமத்தில் கு.பெருமாள்-சீனியம்மாள் தம்பதியினரின் மூன்றாம் மகனாக 02.06.1988-ல் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மகேஸ்வரி எனும் ஒரு மூத்த சகோதரியும் பெத்தணசாமி எனும் ஒரு மூத்த சகோதரரும் ஆவர். குடும்பச்சூழ்நிலையின் காரணமாக அவரது தாய் தந்தையர் குழந்தைகளோடு மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கட்டாரபட்டி எனும் கிராமத்தில் 1990-ல் குடியேறினர். அக்கிராமத்தின் அருகிலுள்ள பழையூர் எனும் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றிருக்கிறார். அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்றபோது அவ்வகுப்பளவிலாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெற்றிருக்கிறார். அங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியிருந்ததால் அங்கிருந்து இடமாறுதல் பெற்று அத்திபட்டி எனும் ஊரில் தெற்குப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்றிருக்கிறார். அங்கு பயின்ற காலங்களில் அப்பள்ளியில் நடைபெறும் சுதந்திர தினம், குடியரசு தினம், பள்ளி ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பள்ளி நடத்தும் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். பின்னர் அங்கு எட்டாம் வகுப்புவரை மட்டுமே பள்ளி இருந்ததால் அங்கிருந்து இடமாறுதல் பெற்று தன் சொந்த ஊரான ஜி.உசிலம்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு வரை பயின்று முடித்துத்திருக்கிறார். பின்னர் அங்கும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி இருந்ததால் அங்கிருந்து இடமாறுதல் பெற்று ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்று முடித்திருக்கிறார். 
                பின்னர் ஆண்டிபட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரியில் இளநிலைப் பொருளாதாரம் எடுத்துப்பயின்றிருக்கிறார். தன் கல்லூரிப்பருவத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதும் போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார். பொருளாதாரத்தை தன் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்து படித்தாலும் தன் கல்லூரியில் தமிழ் துறையைச்சார்ந்த பேராசிரியர்களோடு நெருங்கிய பழக்கமுடையவராக இருந்திருக்கிறார். ஆகவே வெளியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாக்கள் மற்றும் தமிழ் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ள சில மாணவ-மாணவியர்களோடு தமிழ் பேராசிரியை கலாகோபி அவர்கள் இவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பேராசிரியை. கலாகோபியின் ஊக்குவிப்புடன் பெரு.பழனிச்சாமி அவரது கவிதைகளை மேடையில வாசித்திருக்கிறார். 
                   முதலாமாண்டு படிப்பு முடியும்  பருவத்தில் பேராசிரியை. கலாகோபி இடமாறுதல் பெற்றுச் சென்றுவிட, இரண்டாம் ஆண்டு புதிதாக வகுப்பிற்கு வந்த தமிழ் பேராசிரியர். கருணாகரன் வகுப்பில் கதை, கவிதை, கட்டுரைகள் எப்படி எழுதுவதென்று விளக்கிக் கூறி எழுதுவதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுத்திருக்கிறார். அவரோடும் நெருங்கிய தொடர்புடையவராக பெரு.பழனிச்சாமி இருந்திருக்கிறார். மூன்றாமாண்டு பயின்றபோது பேராசிரியர் கருணாகரனும் பணியிடமாறுதல் பெற்றுச் சென்றுவிட தான் எழுதிச் சேகரித்து வைத்திருந்த கவிதைகளை புதிதாக தமிழ்த்துறைத் தலைவராக வந்த பேராசிரியர்.கரு.முருகேசன் அவர்களிடம் கொடுத்து திருத்தம் பெற்று கவிஞர். ஞானபாரதி, கவிஞர். மதன் எசேக்கியா மற்றும் கவிஞர். தட்சணாமூர்த்தி ஆகியோர்களுடன் பழக்கம் பெற்றெழுந்து தன் நண்பர்களின் ஒத்துழைப்போடு “புதியநிலவு” எனும் கவிதைத் தொகுப்பை எழுதி ஆண்டிபட்டியில் அன்றைய ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் இராமசாமி அவர்களின் தலைமையில் டாக்டர்.சரவணன் அவர்கள் வெளியிட தன் முதல் நூலை வெளியீடு செய்திருக்கிறார். 
                    கல்லூரி படிப்பை முடித்து ஒருவருட காலம் தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத்திட்டம், மற்றும் ஆண்டிபட்டி ஆரோக்கியகத்தில் பஞ்சாயத்து ராஜ் திட்டம், மற்றும் தேனி ரஷ்பவுண்டேசன் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். சில அதிகாரிகளுக்குக் கீழே பணியாற்றிய இவர் தானும் அதிகாரியாக வளர வேண்டுமென்ற எண்ணத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டுமென்று எடுத்த முடிவில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பொருளியல் புலத்தில் எம்.ஏ., முதுகலைப்பாடப்பிரிவில் சேர்ந்து 2010-2012-ம் ஆண்டுகளில் பயின்று முடித்திருக்கிறார். தன் முதுகலைப்பருவத்தில் கலை ஆர்வம் மிகுந்தவராகவே இருந்த இவர், முதுகலை முதலாமாண்டு பயின்றபோது தன் நண்பர்களோடு சேர்ந்து ஆண்டிபட்டி கல்லூரியின் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு ஒரு நாடகத்தில் நடிக்க அக்குழு முதல் பரிசைப் பெற்றிருக்கிறது. அன்று நிறைய கல்லூரிகள் பங்கேற்றுயிருந்ததால் கடுமையான போட்டிகளுக்கு இடையே மதுரை காமராசர் பல்கலைக் கழக பொருளியல் புலம் ஒட்டு மொத்த பரிசுகளையும் தட்டி ஓவரால் சீல்டையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் முதுலை இரண்டாமாண்டு பயின்றபோது நாட்டு நலப்பணித் திட்டத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக அளவிலான போட்டியில் “உங்கள் வாக்கு ஜனநாயகத்தின் மூச்சு” என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து பரிசினை பெற்றிருக்கிறார். 
                     பின்னர் பொருளியல் புலத்தில் தன் நண்பர்களிடம் ஏற்பட்ட நட்பின் வயப்பட்டு “உயிர்  நட்பு” என்ற நூலை எழுதி நண்பர்கள் மற்றும் பேராசிரியர்களின் உதவியோடு பொருளியல் புலத்தில் அப்புலத்தின் தலைவர். முனைவர்.ச.வெ.ஹரிகரன் அவர்களின் தலைமையிலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் பொறுப்பிளிருந்த முனைவர்.ராஜியக்கொடி அவர்கள் வெளியிட தன் இரண்டாம் நூலை வெளியீடு செய்திருக்கிறார். இவருக்கு ஆண்டிபட்டியிலிருக்கும் தேனீ கலை இலக்கிய மையம் இவரது “உயிர் நட்பு” எனும் நூலிற்கு அறிமுக விழா நடத்தி சிறப்பு சேர்த்திருக்கிறது. பின்னர் தேனீ கலை இலக்கிய மையம் பாராட்டுப் பரிசு கொடுத்தும் தேனி மாவட்ட இளம் படைப்பாளர் விருது கொடுத்தும் கௌரவித்திருக்கிறது. மீண்டும் தான் பயின்ற அதே பொருளியல் புலத்தில் சேர்ந்து எம்.பில்., பட்டம் பெற்றிருக்கிறார். அறிவுக்கூர்மையில் சிறந்து விளங்கும் பொருளில் புல பேராசிரியர் முனைவர். கொ.சதாசிவம் அவர்களிடம் முனைவர் பட்டப் படிப்பினைத் தொடரயிருகிறார். மேலும் ஆண்டிபட்டி உமாநாராயணன் பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் உள்ள இவர் அப்பதிப்பகத்திலிருந்து வெளிவரும் நூல்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 
            கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதி, வாழும் இச்சமூகத்திற்கு இவர் சிறப்புச் சேர்த்து வருகிறார். சமீபத்தில் மதுரை தியாகராசர் கல்லூரியில் 265-பேர் கலந்து கொண்ட கட்டுரைப்போட்டியில் இவரும் கலந்துகொண்டு “உலகமய சூழலில் பெண்களின் நிலை” என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இரண்டாம் பரிசைப் பெற்றிருக்கிறார். மேலும் “அழகியவள்”, “எங்க ஊருத்திருவிழா (ஜி.உசிலம்பட்டி)” என்ற மூன்று கவிதைத் தொகுப்புகள் மற்றும் “கடிதங்கள் சேர்த்த காதல் வரலாறு” என்ற ஒரு நாவல் மேலும் “மனம்போன பாதை” என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பு என எழுதி முடித்து வெளிக்கொண்டுவர இருக்கிறார். ஆண்டிபட்டி உமாநாராயணன் பதிப்பகம் வெளிக்கொண்டு வரவிருக்கும் “தேனி கல்லூரி மலர்கள்” எனும் கவிதைத் தொகுப்பில் சில கவிதைகளையும் எழுதியிருக்கிறார். மேலும் “என்ன பாஸ் பிரச்சனை” என்ற ஒரு குறுப்படத்தில் நடித்திருக்கிறார். பல தமிழ் சார்ந்த விழா மேடைகளில் பேசியிருக்கும் இவர் சில இடங்களில் கவிதை, சிறுகதைப்போட்டிகளின் நடுவராகவும் இருந்திருக்கிறார். வரவேற்பு விழா, பிரிவு உபசரிப்பு விழா, புத்தக வெளியீட்டு விழா எனப் பல விழாக்களின் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். 
“எழுதியவன் ஒருவேலை மறைந்து போனாலும்
 எழுத்துக்கள் எந்நாளும் மறைவதில்லை” என்ற வரிகளை
இவ்வுலகிற்குகுத் தந்த இவர் இளம் எழுத்தாளர்களுக்கு கரம்; கொடுத்து தூக்கி விடுபவராகவும் அவர்களை இச்சமூகத்தில் அடையாளம் காட்டுபவராகவும் இருந்து வருகிறார்.
“தாயும் 
தமிழும் 
என் ஜீவன்” 
என்ற அவரது கவிதை வரிகளுக்கிணங்க தமிழுக்குத் தனை அற்பணித்து இங்கு போதுமான சேவைகளைச் செய்து வருகிறார்.

No comments:

Post a Comment