முனைவர்.கொ.சதாசிவம்,
உதவிப் பேராசியர்,
பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21. அலைபேசி: (0)
9488055405 மின்னஞ்சல்: sadamku@gmail.com
பெரு.பழனிச்சாமி,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21. அலைபேசி: (0) 9715793829 மின்னஞ்சல்: palanimku@gmail.com
இன்றைய சூழலில் பெண்களின் நிலை முன்னேற்றம் கண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த படியாகத்தான் இருக்கின்றன. பெண்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் ஆணாதிக்கமானது ஓங்கி எழும்போது பெண்களின் நிலை நசுக்கப்படுகிறது. பெண்கள் விடுதலை பெறுவதற்காகவும் உலக பெண்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காகவும் வருடந்தோறும் மார்ச் 8-ம் நாளை உலக
நாடுகள் உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றன.
ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பெண்களைவிட இன்றைய பெண்கள் பலதுறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் கல்வி நிலையங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், வங்கிகள், வாழ்நாள் காப்பீட்டு கழகங்கள், தொழிற்சாலைகள், சிறுதொழில் நிறுவனங்கள், நவீன தொழில் நுட்பத் துறைகள் போன்றவைகளில் பெண்கள் கணிசமான அளவு பணிபுரிந்து வருகிறார்கள், காவல் துறை, போக்குவரத்துத் துறை, விமானப் பணிப்பெண்கள், போன்ற பதவிகளிலும் மேலும் துணை ஆளுனர் பணி, முதல்வர் பணி, இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி, போன்ற உயர் பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு துறைகளில் பணியாற்றி தடைகளை உடைத்தெரிந்து பெண்கள் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெற்று வருகின்றனர்.
இன்றைய உலகில் பெண்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் மருத்துவமனைகளில், பாடகசாலைகளில் என ஒவ்வொரு துறைகளாக
பட்டியலிட்டுக்கொண்டே
போகலாம். டெல்லியில் பாலியல் கொலை செய்யப்பட்ட நிர்பயா, இலங்கையில் பாலியல் கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா, உத்திரப்பிரதேசத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட இரண்டு தலித் மாணவிகள், கேரள மாநிலத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட ஷிசா, தமிழ் நாட்டில் உசிலம்பட்டியில் கௌரவக் கொலை செய்யப்பட்ட விமலா, தேனி மாவட்டத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட இளம் சிறுமி நந்தினி சென்னையில் ஆசிட்வீச்சால் உயிரிழந்த பெண், திருமங்கலத்தில் ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் அதிகாலையில் பெண் ஐடி ஊழியர் சுவாதி அரிவாளால் வெட்டிக்கொலை, சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள்கள் என நான்கு பேர்
கொலை, ஒரு கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை, மதுரையைச் சேர்ந்த சோனாலி என்ற மாணவி கரூர் அருகே கட்டையால் அடித்துக்கொலை, பின்னர் பிரான்சினா (24) என்ற ஆசிரியர் தேவாலயத்தில் வைத்து காலையில் அரிவாளால் வெட்டிக்கொலை. திருச்சி பிச்சாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரின் மகள் மோனிகா கத்தியால் எட்டு இடங்களில் குத்தப்பட்டார். அதே போன்று புதுச்சேரியிலும் ஹீனோ டோனிஸ் என்ற ஒரு கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டார்.
இப்படியே நாடு சென்றுகொண்டிருப்பதால், ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் பெண்கள் குறித்த பாதுகாப்பு நிலை மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடூரமான சூழ்நிலைகள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றபொழுது பெண்களுக்கான விடுதலையும் பாதுகாப்பும் முழுமையாகக் கிடைத்து விட்டதாக நாம் எப்படிக் கூறவிட முடியும்.
பெண்கள் இப்படிப் பாதிக்கப்படுவதற்கு சில காரணங்கள் கூறலாம். பல இளைஞர்கள் ஒருதலைக்
காதலால்தான் கொலை செய்வதாக வாக்குமூலம் தருகின்றனர். இளம் வயதுகளில் பெண்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் குடும்பம் தனக்குத் கொடுக்கும் சுதந்திரத்திற்கு எப்போதும் தீங்கு விளைவிக்கக் கூடாதபடியாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு மாணவனோடு பழகும்போது அவன் எப்படிப்பட்டவன் என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டு பழகவேண்டும். நண்பனாக இருந்தால் நண்பனாக மட்டுமே பழக வேண்டும் இல்லையேல் அண்ணன் தம்பி என்று உறவு சொல்லியே பழக வேண்டும்.
அப்படிப் பழகும் மாணவர்கள் நட்பைக் கடந்து காதலைச் சொன்னால் தெளிவான முடிவை எடுத்துவிட்டு சரியான பதிலைச் சொல்லி அதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முடியாத பட்சத்திற்கு தன் நண்பர்களின் உதவியையோ, பயிலும் கல்வி நிலையத்தின் உதவியையோ, குடும்பத்தின் உதவியையோ, காவல் துறையின் உதவியையோ நாடுவது தவறில்லை. அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருப்பதின் பின் விளைவுதான் ஒரு தலைக் காதல் கொலைகளுக்கு முதற்காரணமாக இருக்கின்றன. ஏனெனில் சில நாட்கள் பழகிவிட்டு விலகுகின்ற போது மனமுடைகின்ற ஆண்களாலேயே ஒருதலைக் காதல் கொலைகள் நடக்கின்றன என்பது விசாரணையின் மூலம் தெரியவருகிறது.
ஆண்களின் பெற்றோர்கள் பொதுவாக பெண்களின் மீது காட்டுகின்ற அக்கறையைப்போல அவர்களின்மீது அக்கரை செலுத்துவதில்லை. இரவு நேரங்களில் வீட்டிற்கு தாமதமாக வந்தால்கூட கேட்பதில்லை ஏதாவது வேலையாகப் போயிட்டு வந்திருப்பான் மகன் என்று ஏனைய தாய்களின் கரிஷனம் எல்லா வீட்டிலும் உண்டு, கேள்வி கேட்கும் தந்தையின் வார்த்தைகள்கூட அந்நேரத்தில் செல்லாமல் போய்விடும்.
கல்லூரிக்குச் செல்கின்ற மாணவர்களுக்கு அளவுக்கு அதிகமான பணத்தைக் கொடுத்து அனுப்புவது அளவுக்கு அதிகமான செல்லம் கொடுப்பது, ஏனென்றால் தான்பட்ட கஷ்டத்தை தன் மகனும் படக்கூடாது என்று நினைப்பது. மேல்நிலைப்படிப்பை முடித்தவுடன், இருசக்கர வாகனத்தை எடுத்துக் குடுத்துவிடுவது. மகன் கேட்கும் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவது. எல்லாத்தையும் அடைந்த மாணவன் கிடைக்காத ஒன்றை மட்டும் தேடிச் செல்கிறான்.
அதுதான்
காதல் 18 வயதிற்கு மேலாகிவிட்டாலே உடலில் ஏற்படும் ஜீன்களின் மாற்றத்தால் காதல் தானாக வந்துவிடுகிறது இந்தக் காதல் அப்படி வரும்போது அவன் விரும்பும் பெண்ணுக்கும் அந்தக் காதல் அவன் மீது வந்துவிட்டால் பிரச்சனையில்லை, வராதபோதுதான் பிரச்சனையே உருவாகிறது. ஒரு பெண்ணிடம் காதலைச் சொன்னதும் அப்பெண் விலகிச் சென்றுவிட்டால் முடிந்துவிடுகிறது.
இரண்டாவதாய் ஒரு பெண்ணைப் பார்ப்போமென்று மனதைத் தேற்றிக்கொள்வார்கள். ஆனால் அப்பெண்கள் நண்பர்களாகப் பழகுவோமென்று கூறி சில நாட்களுக்குப் பழகுகிறார்கள், நாளடைவில் அவனுக்குள்ளிருக்கும் காதல் மீண்டும் வெளிப்படுகிறது. அப்போது அப்பெண் வேண்டாம் என்கிறாள். வாழ்க்கையில் எல்லாவும் கிடைத்துவிட்டது. ஏன் இந்த காதல் மட்டும் கிடைக்கவில்லை என்று மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
நண்பர்களோடு பகிறவும் முடியாமல் வீட்டிலும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். சிலர் மதுக்கடைகளுக்குச் சென்று தேவையான அளவிற்கு குடித்து கெட்டுப்போகின்றனர். அப்படி மதுக்குடிப்பவர்கள் நண்பர்களோடு சேர்ந்து குடிக்கின்றனர். அப்போது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது. நண்பர்களுக்கும் தெரிந்துவிடுகிறது அப்போது தான் கதாநாயகனாக உணரும் மாணவன் எதையும் செய்யத் தயாராகிறான். அப்படித் தயாராகி உணர்ச்சி வசப்பட்டு செய்கின்ற வேலைகள்தான் இந்த ஒருதலைக் காதல் கொலைகள்.
இப்படி கொலை செய்யத் துணிகின்ற இளைஞர்களுக்கு தான் சார்ந்திருக்கும் அரசின் மீதும் காவல்த் துறையின் மீதும் பயமின்றி போனதுதான் முதற்காரணமாக இருக்கும். இந்தியச் சட்டங்கள் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். ஒரு உயிரைக் கொல்கிறவர்களுக்கு அதற்கு நிகரான அளவிற்கு தண்டணைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பின்வருபவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும். அதேபோன்று சினிமாத்துறைகளும் சமூகத்திற்கு நன்நெறிகளைக் கற்றுத்தரும் திரைப்படங்களையே தருவதற்கு முன்வரவேண்டும்.
இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகள் படைத்து
வரும் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டியது தற்போதைய அரசின் அவசியமாகும். எத்தனையோ சட்ட திட்டங்கள் இருந்தும் பெண்களின் நிலை பாதிக்கப்படுவது கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு அரசு போதுமான திட்டங்களைத் தீட்டுவதை விட ஆண்களுக்குள் அவர்களையே அறியாமல் வாழும் ஆணாதிக்க சிந்தனைகளைக் கிள்ளி போதுமான விழிப்புணர்வுகளைத் தர வேண்டும்.
No comments:
Post a Comment