பெரு.பழனிச்சாமி, முனைவர்பட்ட
ஆய்வாளர்,
பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21. அலைபேசி: 9715793829 மின்னஞ்சல்: palanimku@gmail.com
தமிழகத்தில் கிராமப் பஞ்சாயத்துகள் முதல் மாநகராட்சிகள் வரை துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தியா முழுவதும் சுமார் பத்துலட்சம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இதில் 95 சதவிகித மக்கள் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். உலகிலேயே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவது நம் இந்தியாவில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்த முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களும் சம அளவில் இருக்கிறார்கள். “இந்தியாவில் 26 இலட்சம் உலர் கழிப்பிடங்கள் இருக்கின்றன, அதில் கிட்டத்தட்ட 8 இலட்சம் கழிப்பிடங்கள் மனிதர்களைக் கொண்டுதான் சுத்தம் செய்யப்படுகிறது. நாடெங்கும் 1,80,657 மலம் அள்ளும் தொழிலாளர் குடும்பங்கள் இருப்பதாகவும் அதில் 98 சதவீகித மக்கள் பட்டியல்இனப் பெண்கள் என்பதையும் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவு செய்கிறது. தமிழகத்தில் மனிதர்களால் சுத்தப்படுத்தப்படும் உலர் கழிப்பிடங்கள் மொத்தம் 27,659 இருக்கின்றன. இக்கழிப்பிடங்களைச் சுத்தம் செய்ய ஏறத்தாழ 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்படுவதையும் இக்கணக்கெடுப்பு உள்பட பல்வேறு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கால மாற்றமும் நாகரீக முன்னேற்றங்களும் எங்கோ சென்றுகொண்டிருக்கும் இச்சூழலில் அருந்ததியர் சமூகமக்கள் இன்னும் துப்புரவுப்பணியில் ஈடுபடுத்தப்படுவது எவ்வளவு கொடுமையான விசயம். அவர்களுக்கான தொழில் மாற்றம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மத்திய மாநில அரசுகளின் தனிக்கவனம் தேவையாகிறது.
அருந்ததியர்கள் யார்?
முதலாம் குலோத்துங்கனின் பத்தாம் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட சதுர்வேதி மங்கலக் கல்வெட்டிலும், அதே கால கட்டங்களில் உருவான இடங்கை, வலங்கை சாதிப் பிரிவில் இடங்கைப் பிரிவிலும், 12-ஆம் நூற்றாண்டில் கவுண்டர்களுக்கு ராயர் அளித்த செப்புப் பட்டயத்திலும், 15-ஆம் நூற்றாண்டின் பேரூர் செப்புப் பட்டயத்திலும் ஓலைச்சுவடிகளில் அருந்ததியர்களின் பெயர் பதிவாகி இருக்கிறது. இது 17-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம். அருந்ததியர்கள் 17-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என அவர்கள் பேசும் மொழியை வைத்து சிலர் கூறுகின்றனர். அதாவது நாயக்கர்கள் வாழ்ந்த பகுதிகளில் வாழ்ந்த இவர்கள் தெலுங்கு மொழி பேசக் கற்றுக்கொண்டனர். அதேபோன்று கவுண்டர்கள் வாழும் பகுதியில் வாழ்ந்த இவர்கள் கன்னடம் பேசக் கற்றுக்கொண்டனர். ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள மனிதனுக்கு எத்தனை வருடங்கள்தான் ஆகிவிடும். 1991-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் 1,07,12,266. அதில் அருந்ததியர்கள் 32.5 விழுக்காடு. அதாவது பட்டியலினத்தவரில் மூன்றில் ஒரு பங்கு, 35,00,000 பேர்கள் அருந்ததியர்கள் என கணக்கெடுப்புச் சுட்டுகிறது.
துப்புரவுப் பணியாளர்களானது எப்படி?
ஆரம்பகாலகட்டத்தில் குறவர்இன மக்களே துப்புரவுப்பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். துப்புரவுப்பணியின் மூலமாகக் கிடைக்கும். ஓட்டல் மீத உணவு, இலை, காய்கறி போன்ற கழிவு பொருட்களைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டு சென்று பண்றி வளர்த்து அதிலிருந்து வரும் வருமானம் மற்றும் துப்புரவுப் பணியின் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானம் ஆகியவற்றை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க கிராமங்கள் நகரங்களாகின, நாகரங்கள் மாநகரங்களாயின. ஆகவே குறைந்த அளவிலேயே இருந்த இம்மக்களால் எல்லா இடங்களிலும் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் கிராமப்புறங்களில் வசித்த அருந்ததியர்கள் விவசாயம், தோல் தைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கிராமங்களில் வேலையின்மையின் காரணமாக பஞ்சம் பட்டினி தலைதூக்க நகர்புறங்கள் நோக்கி குடிபெயர ஆரமித்தனர். அதைக் கவனித்த அரசு இவர்களை துப்புரவுப்பணியாளர் பணியில் அமர்த்தியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இம்மக்கள் துப்புரவுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
துப்புரவுப் பணி:
தெருக்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பல இடங்களில் துப்புரவுப்பணிகள் அதிகாலையிலேயே துவங்க வேண்டிய கட்டாயச் சூழல்கள் இருக்கின்றன. இப்பணியில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண்கள் தெருக்களைக் கூட்டி, தெருக்களில் கிடக்கும் மனித மற்றும் விலங்குகளின் மலங்களை அள்ளி கூடைகளில் சேகரிக்க அதை ஆண்கள் வாகனங்களில் எடுத்துச்சென்று ஊர் ஒதுக்குப்புறங்களில் குவிக்கின்றனர். மருத்துவமனைகளில் மருந்துக் கழிவுகள் மற்றும் பிணங்களைத் தூக்கி அப்புறப்படுத்துதல், சுடுகாடுகளில் பிணங்களை எரியூட்டுதல், சுடுகாடுகளை சுத்தப்படுத்துதல், இறந்து கிடக்கும் விலங்கினங்களின் உடல்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளிலும் இப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆண்கள் கழிவுநீர்ச் சாக்கடைத் தொட்டிகளுக்குள் இறங்கி கிருமிகளுக்குள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன் மூலம் பயங்கரமான தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பெரிது படுத்துவதில்லை. அப்படி இறங்காவிட்டால் வேலையிலிருந்து நீக்கிவிடுவார்களோ என்ற பயத்துடனும், பிறரின் கட்டாயத்துடனுமே அப்பணியைச் செய்து முடிக்கின்றனர்.
பாதுகாப்பற்ற சூழல்:
பாதாளச் சாக்கடைகளில் இறங்கி பணியாற்றும்போது வெறும் கயிறை மட்டுமே நம்பி, இரும்பு கம்பி, மூங்கில் குச்சி போன்றவைகளை வைத்துக் கொண்டு சுத்தம் செய்கின்றனர். துப்புரவு தொழிலாளர்களுக்கு இரு கைகளுக்கும் முழங்கை வரையான கையுரைகள், கால்களுக்கு ஷீக்கள், மூக்கை மறைத்துக் கொள்ள முகமூடிகள் என பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. ஆனால் கவசங்களின்றியே பெரும்பாலான இடங்களில் இத்தொழிலாளர்கள் பணியாற்றும் நிலை நம் நாட்டில் அதிகமாகவே உள்ளது. குப்பைக் கழிவுகளை கையால் அள்ளும்போது அதில் கிடக்கும் உடைந்த கண்ணாடிகள் மற்றும் இரும்பு பொருட்களினால் கைகளில் காயங்கள் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயச் சூழலும் நிலவுகிறது.
துப்புரவு பணியாளர்களின் ஆயுட் காலம்:
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில், துப்புரவு தொழிலாளர்கள் அநேகமாக யாரும் 65 வயதுக்கும் மேல் வாழ்வதில்லை. 80 சதவிகிததிற்கு மேல் 60 வயது ஆவதற்கு முன்பே இறந்து விடுகிறார்கள், இந்திய துப்புரவு தொழிலாளர்களின் சராசரி ஆயுட்காலம் 45 வருடங்கள் மட்டுமே என அந்த அறிக்கை கூறுகிறது. அதன்படி பார்க்கையில் இப்பணியாளர்கள் பல்வேறு கிருமித் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்தக்கொடுமையான வேலைகளைச் செய்துவிட்டு அன்றாட உணவைக்கூட நிம்மதியாக உண்ணமுடியாத பலர், மதுவிற்கு அடிமையாகி தன் குடும்பத்தை ஏழ்மை நிலைக்குத் தள்ளிவிட்டு அவர்களும் பாதிநாட்களிலேயே இறந்துவிடுகிறார்கள். இதுபோன்ற உயிரிழப்புகளால் மட்டுமே தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் துப்புரவுப்பணி செய்யும் பெண்களில் 94 சதவிகிதப் பெண்கள் பணிக்காலத்தில் கணவனை இழந்து கருணைப் பணிக்கு வந்தவர்கள் என்று மதுரை அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் ஆய்வு கூறுகிறது.
உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சில பணியாளர்கள்:
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கட்டாரபட்டியில் பெருமாள் என்பவர். பழையூர் பஞ்சாயத்தில் துப்புரவுப் பணியாளராக பணி செய்து வந்தார். அவர் நோய்வாய்பட்டு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோனார். அதே போன்று தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் எட்டப்பராஜபுரம் ஊராட்சியில் பணியாற்றிய கா.காளிமுத்து என்பவரும் நோய்வாய்பட்டு இறந்துபோனார். பின்னர் கோம்பைத்தொழு கிராமத்தைச்சேர்ந்த சுருளி என்பவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்தார். அவரின் மகள் சத்தியா மேல்நிலை முதலாமாண்டு பயின்று வருகிறார். அதே ஊரில் தற்போது பணியாற்றும் பரமசிவமும் உடல்நலம் பாதிக்கப்பட்டவராகத்தான் காணப்படுகிறார். கூடலூரைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரும் குறைந்த வயதிலேயே உயிரிழந்தார். அவரது மனைவி கருணைப் பணியில் அமர்த்தப்பட்டார். அவர்களின் மகளுக்கு அகவை பத்துகூட ஆகவில்லை. பின்னர் ஆண்டிபட்டி தாலுகா, இராமலிங்காபுரம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கருத்தன் என்பவர் திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவச் சிகிச்சை பெற்று தற்போது வீட்டோடு இருந்து வருகிறார். அதேபோன்று ஜி.உசிலம்பட்டியில் மொட்டையாண்டி என்பவரும் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு க.விலக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சை பெற்று மீண்டும் அதே பணியைத் தொடர்ந்து வருகிறார்.
நோய்வாய்ப்படுவதற்கான காரணங்கள்:
சாக்கடை அல்லும் பணியில் செருப்பனியாமல்கூட ஈடுபடுகின்றனர். ஊரில் கேதம் என்றதும் பிணத்தை தூக்கிச் செல்ல ஊருக்கு கீழிருக்கும் பீமந்தையை கூட்டி சுத்தம் செய்கிறனர். சாதாரண நாட்களிலும், திருவிழாக்காலங்களிலும் ஊர் தெருக்களைக் கூட்டி சுத்தம் செய்கின்றனர். குப்பைக்கழிவுகளை நீக்கி பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அள்ளி ஒதுக்குபுறமாகக் கொண்டு சென்று தீயிட்டுக் கொழுத்துகின்றனர். கழிவுகளை எரிக்கும்போது அதிலிருந்து வெளியேறும் அனல், துர்நாற்றம் எந்த அளவிற்கு இருக்கும்? ஊரில் தொற்று நோய்கள் பரவினால் அதற்கு தடுப்பு மருந்துகள் தெளிப்பவர்களும் இவர்கள்தான். இப்படி நோய் தொற்றும் பணிகளையே வரிசையாகச் செய்கின்ற இவர்களுக்கு எப்படி நோய் வராமல் இருக்கும்.
முடிவுரை
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. இந்தியா வல்லரசு நாடாகப்போகிறது என்ற வார்த்தைகளைச் கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால் சில விசயங்களைக் கண்கூடாகப் பார்க்கும்போதுதான் இப்படிப்பட்ட நாட்டிலா நாம் வாழ்கிறோம் என்ற மனக்கசப்பு ஏற்படுகிறது. துப்புரவு பணியாளர்களின் நிலையை ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது முதலில் அவர்களுக்குப் போதுமான விழிப்புணர்வுகள் இல்லை என்பது தெரிய வருகிறது. எனவே அரசு அவர்களுக்குப் போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தித்தர வேண்டும். ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வழிவகை செய்திடல் வேண்டும். மேலும் நோய் ஏற்படும் காலங்களில் மருத்துவ நிதி மற்றும் விடுப்பு நீட்டிப்பு வழங்கிட வேண்டும். முக்கியமாக துப்புரவுப் பணியாளர்களுக்கென தனி நலவாரியம் அமைத்துக்கொடுத்து அவர்களின் நலன்காக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாய்வின் மூலம் இப்பணியாளர்கள் பொதுச்சேவைக்காகவே தங்களை அர்பனித்து வாழ்கின்றனர் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே அவர்களின் நலனில் அரசு தனிக்கவனம் செலுத்தி உதவிட வேண்டும்.
அடிக்குறிப்புகள்:
1. தம்பியன் (2016) துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க மு.கருணாநிதி வலியுறுத்தல், Vannionline
ப ப 1-3.
http://www.vannionline.com/2016/08/blogpost_409.html
2. தமிழக அரசு (2006) தூய்மைப் பணி நலவாரியம், ப 1.
3. மாதியக்கவிராயர் (2011) அருந்ததியர்-கலைஞர் நிலையும் காம்ளேயின் கருத்தும், அருந்ததியன், ப 4-5. http://arunthathiyan.blogspot.nl/2011_07_01_archive.html
4. கோ.ஜெயராஜ் (2011) அருந்ததியர் இனமும் துப்புரவுப்பணியும், அருந்ததியன், ப 1-4. http://arunthathiyan.blogspot.nl/2011/07/blogpost_7122.html
5. தினகரன் (2015) தமிழக அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமனம்: மத்திய அரசு உத்தரவு, தினகரன் நாளிதழ், ப 1. dotcom@dinakaran.com
6. செல்வம் (2016) உங்களுக்குள் ஆதிக்க சாதிப் புத்தி இல்லையா?, வினவு, ப ப 1-5.
No comments:
Post a Comment