என்னாடா தம்பி ஊருக்குள்ள தேர்தல் வந்துருச்சுபோல ஆமானே… அஞ்சுவருவமா காணாமப்போன அதே ஆளுதா நம் தொகுதிக்கு மறுபடியும் வேட்பாளராம். அப்பிடியா! அந்தாளு இந்ததடவ ஜெயிச்ச மாதிரித்தா. என்னானே! ஜெயிச்சமாதிரித்தானடான்;னு இழுக்குற? அதலாம் ஜெயிச்சுருவாருனே, எப்பிடிச் சொல்றே எல்லாம் ஒரு கனிப்புதானே. அதுக்கெல்லாம் நம்மூருல ஆளு இருக்குனே! இராத்திரியோட இராத்திரியா பணம் பட்டுவாடா பன்னிருவாங்க, அதெப்பிடிடா சொல்ற இந்ததடவதான் யாராலயும் பணம் தர முடியாதுன்னு அரசாங்கம் ரொம்பத் தெளிவா சொல்லிருச்சே! அரசாங்கம் சொல்லும், அதுக்கு அதுதான் வேலை. ஆனா நம்ம அரசியல்வாதிகள் சொல்லலயே ஏன்னா? அவங்களுக்கும் அதுதான் வேலை. பணம் தரப்போறத என்னா? அரசாங்கமா? நம்ம லோக்கல் அரசியல்வாதிக தானனே! பணம் தரும்போது அரசாங்கம் என்னா பாத்துக்கிட்டேவா இருக்கு? நீ வேனுன்னா பாருனே இந்த தடவ நமமூருல எப்புடி வசூலாகுதுன்னு.
அங்க பாருனே! எங்கடா பாக்கச்சொல்ற அந்த சுவத்துல பாரு என்னா சுவத்துல? சுவத்துல ஒட்டிருக்க அறிவிப்பு நோட்டீசப் பாருனே! ஆமா மனச்சாட்சிப்படி ஓட்டுப்போடச்சொல்லி பஞ்சாயத்துல இருந்து ஒட்டியிருக்காங்க. பண வாங்கி வசமா ஆட்டயப்போடுறவங்க போட்டுருவாங்க, ஆனா நம்மல மாதிரியான நடுத்தர ஆளுக மட்டும் மனச்சாட்சிப்படி ஓட்டுப்போடனுமா எப்பிடி அறிப்பு ஒட்டிருக்காங்கன்று பாத்தியா? நல்லா வருவாங்கென்னே இவங்க. சரிடா அசோக்கு இன்னிக்கு சும்மா இருக்கயா? இல்ல வேலைக்கு எங்கயும் போறயா? நம்ம பொளப்புக்கு வீட்டுல இருந்த கட்டுபடியாகுமானே! அப்பிடியிருந்தும் நானும் வேலை தேடிப்பாத்தே இன்னிக்கு வேலை கெடக்கலனே வீட்டுலதான் இருக்கனும்போல. அப்ப சும்மாயிருந்தா ஏங்கூடவா எங்க தோட்டத்துல கொஞ்சம் முறுங்கக்கா இருக்கு அத ஒடுச்சு மார்க்கெட்டுல போட்டுட்டு வருவம் பொழுசாய செலவுக்கு வாங்கிக்கே! இம் சரினே வாரே எப்பபோகலாம் வீட்டுல போய் சாப்டுட்டு வா போகலாம்.
இம்… சரினே அப்ப நா வீட்டு வரைக்கும் போயிட்டு வாறேன். எம்மா… எம்மா… சோறு இருந்தா ஊத்து வேலைக்கு போற என்னா வேலைக்குபா போற? அந்த ராசா அண்னே இருக்காருலே அவருகூடத்தாம்மா. ராசாவா அதுயாருடா? அவங்க அப்பாகூட இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி விசாயக்கடனெ திருப்பிக் கெட்ட முடியாம தூக்குல தொங்குனாருல அந்த கந்தசாமி அப்பா, அவரு பைந்தாமா. அந்த ராசா பயலா? அவங்கூட என்னா வேலைக்குப்போற? அவகதோட்டத்துல கொஞ்சம் முறுங்கக்கா இருக்காம்மா அத ஒடுச்சுட்டுப்போயி மார்க்கெட்டுல போட்டுட்டு வரனுமா. சரி பாத்துப்போயிட்டுவா! பாவம் அந்த கந்தசாமி மாமா நல்ல மனுசே அவருக்கு இப்பிடி ஒரு சாவு வந்துருச்சு இந்த ராசா மட்டும் அப்பயே இப்படி சொல்பேச்சு கேட்டு, பொறுப்பா தோட்டத்துல வேலையப் பாத்திருந்த அவரு கடவாங்காம பொளச்சு நல்லாயிருந்துருப்பாரு… ஆமா மா… மூனு பொம்பளப்புள்ளகளப் பொத்து வளத்து கல்யாணம் பன்னிக் குடுத்தா கடம்படமாட்டாரா? ஆமாபா அதுக்காக பிள்ளகள பெத்துக்கிறாம இருக்க முடியுமா? இவரு செஞ்தெல்லாம் சரிதாம்மா என்னா அந்த பேங்குல கடன் வாங்கிருக்க கூடாது வேற எங்கயாவதும் வாங்கிருக்கலாம்.
அந்த மேனேசரு வாய்க்கு வந்தபடி பேசுனதாலதாம்மா, ரோசப்பட்டு தூக்குமாட்டி செத்துப்போனாரு, ஆமா! அவலாம் ஒரு மேனசரு அவனும் அவெ மூஞ்சியும், அவவாயில கஞ்சியக்காச்சி ஊத்த. ஏம்மா அந்தாலு என்னா செய்வாறு அரசாங்கம் கடனக்கெட்டச் சொல்லுது. அவரு கெட்டச்சொல்லிருக்காரு சரி எப்பிடியோ எனக்கு நேரமாகுது நான் கௌம்புறே சரி அப்பா எங்க காணம். உங்கப்பனுக்கென்னாபா? கொடுத்து வச்ச ஆளு உள்ளபோயிபாரு கட்டிலுல காலுக்கு மேல காலப்போட்டு படுத்துருக்காரு. இந்த ஆளயெல்லாம் வச்சு நம்ம எப்பிடித்தா காலந்தள்ளப்போறமோ! இந்நேர குடுச்சுட்டு வந்து படுத்துருக்காருடா! சரிவிடுமா அது தெருஞ்சதுதான. இவரச்சொல்லி தப்பில்லமா நம்ம அரசாங்கம் இப்பிடி சாராயக்கடைய தெரந்துவச்சு இப்படி நல்லவங்கல நாசமாக்கிக்கிட்டு இருக்கு. சரிமா ரேமாச்சு நாங்கௌம்புறேன். சரிபா எலெக்சன் சமயம் பாத்து நேரத்துக்கு வீட்டுக்கு வந்துரு, சரிமா.
என்னா ராசா அண்னே தோட்டத்துக்போவமா? இம்… வாடா உனக்குதா காத்துக்கிட்டிருந்தே வண்டியெடு போகலாம். வண்டியெதுக்குனே! நடந்தே போகலாம்னே. அப்ப இந்த வண்டிய அறுவதாயிம்போட்டு எடுத்தது எதுக்கு வீட்டுக்கு காவலுக்கு நிறுத்தவா? உனக்கு ஓட்டத் தெரியாதுன்னு சொல்லுடா ஏன் மலுப்புற… அப்பிடியில்லனே ஓட்டுவெ ஆனா எங்கிட்ட லைசன்சு இல்லனே அதா வண்டி ஓட்ட பயமா இருக்கு ஆமா ஏங்கிட்ட மட்டும் மத்திய அரசு கொடுத்த லைசன்சு வச்சுருக்கே? நானும் லைசன்சு இல்லாமத்தான்டா வண்டி ஓட்டிக்கிட்டு திரியுறேன். உனக்கென்னானே! தோடந்தோப்பு இருக்கு, அவதாரம்போட்டாக் கெட்டிருவ ஆனா நா அப்பிடியா? குடிகார அப்பா, வேலைக்குப்போக முடியாத அம்மா, சொல்பேச்சு கேக்காத அண்னே, கலேசு படிக்கிற தங்கச்சி, இவங்கலாம் நல்லா இருக்கனுன்னா நா வேலைக்குப் போனாத்தேனே முடியும். ஆமாடா அசோக்கு நீ ரொம்ப பொறுப்பான ஆளுடா.
ஏ யாருமா அது தோட்டத்துல பிள்ளுப்புடுங்குறது. வெளியபோமா எங்களுக்கும் மாடுடிருக்கு… சொல்றது கேக்கலயா வெளியபோமா? அண்னே விடுனே! பாவம் அது எங்க பக்கத்துவீட்டு காமாட்சி அக்காதான்னே அப்பிடியா? இல்லடா அசோக்கு நம்ம சொல்ற கடமைக்கு சொல்லனுமில்ல அதான், நாளப்பின்ன நம்ம இல்லனாக்கூட தோடத்துப்பக்கம் யாருவரமாட்டாங்க. பாவமின்னே! அந்த காமாட்சி அக்கா, இப்பிடி கஷ்ட்டப்பட்டு புள்ளுப்புடுங்கி மாட்ட வளத்து பாலூத்தி சம்பாரிக்குது ஆனா இது புருசே ஊருக்குள்ள வார கட்சிகரங்ககிட்ட பத்தஞ்ச வாங்கி செலவுக்கு வச்சுக்கிட்டு தண்ணி, சீரட்டுன்னு வாங்கி குடுச்சுக்கிட்டு திமிருதனம் பன்னிக்கிட்டு திரியுறாருனே, ரெண்டு பொம்பளப்புள்ள வீட்டுல இருக்கின்றதக்கூட நெனக்கமாட்டாருனே! அவருவாட்டுக்க தண்ணியப்போட்டுட்டு எங்கயாவதும் படுத்துத் தூங்கிறுவாரு அப்பரம் காலையில வந்து ஏன்டி என்ன எழுப்ப வரல மந்தையிலதானடி படுத்திருந்தே, நான் இராத்திரி அங்கயே தூங்கிட்டே இங்க நீ எவங்கூடடி படுத்துருந்தன்னு சண்டபோடுவாருனே! வீட்டுல ரெண்டு குமரிப்பிள்ளக இருக்காங்கன்னுகூட பாக்க மாட்டாருனே, ஆனா அந்தக்கா நல்லங்கனே, பாவம் இவரகெட்டிக்கிட்டு படாதபாடுபடுராங்கன்னே! நமக்கெதுக்குடா அசோக்கு பக்கத்துவீட்டு பஞ்சாயத்து வாடா நம்ம நம்ம வேலயப் பாக்கலாம். இதுதொரு 30 கிலோ வருமா? இம் தூக்குனே! பாத்துருவம் அதலாம் தாராளமா நாப்பது கிலோ வரும்னே! சரி இதுக்கெதுக்கு வெட்டியா ஆட்டோ வாடகைய குடுத்துக்கிட்டு வா நம்மலே பைக்குல போயி மார்க்கெட்டுல போட்டுட்டு வந்துரலாம்.
இம்… போலாம்னே ஆனா உங்கிட்ட லைசன்சு இல்லயேன்னே! போலீசுகிட்ட மாட்டிக்கிட்டா என்னா பன்றதுனே! ஏன்டா அசோக்கு நீவேற காமடி பன்ற நம்மபாக்காத போலீசாடா? ஏருடா போவம். பாத்துனே! பள்ளம் மேடுமா இருக்கு ஓட்டுக் கேக்க மட்டும் கரெக்ட்டா வாராங்கெ, ஆனா இந்த ரோட்டச் சரிபன்ன மாட்ராங்களேன்னே! ஆமா இதச்சொன்னதுக்குத்தா அந்த பஞ்சாயத்து தலைவரு என்னய என்னமோ எதிரியப் பாக்குற மாதிரியா பாக்குராரு நமக்கென்னாடா சரிபன்னுனாப் பன்றாங்க, இல்லனா எப்படியோப் போறாங்கெ. அண்னே! ஒருநிமிசம் நில்லுனே! கமலா மாதிரியிருக்கு பேசிட்டு வாறேன். சீக்கிரம் வாடா மார்க்கெட்டுல ஏலத்துக்கு நேரமாகிறும். இந்தா வந்திருறேன்னே! ஏமே கமலா… கமலா… என்னா? இந்நேர இப்பிடி நடந்து வார?
ஆமானே! காலேசுல நாங்க போராட்டம் பன்னும்போதெல்லாம் எங்களக்கண்டுக்கிறாத அரசியல்வாதிக இப்பவந்து உங்களுக்கு அதப்பன்றம், இதப்பன்றம் கூட்டத்து வாங்ககன்னு கூப்புடாங்க அங்கபோகப்பிடிக்காம எல்லாரு வீட்டுக்கு வந்துட்டம்னே! நம்மூரு பிள்ளகல்லாம் ஆட்டோல போயிருச்சுக எங்கிட்ட ஆட்டோக்கு காசில்ல அதா டவுன்பசுல வந்து, விலக்குல எறங்கி நடந்து வாறேன். ஏ… அசோக்கு வாடா நேரமாகிருச்சு… சரி கமலா ராசா அண்னே! தோட்டத்துக்கு வேலைக்குப்போன மார்க்கெட்டுல போயி காயப்போட்டுட்டு சம்பளம் வாங்கிட்டு வாறேன் நீ பாத்து வீட்டுக்குப்போ, காலுல செருப்புகூட இல்லாம இருக்க கொடுத்த காச என்னா செஞ்ச? அத அப்பா வாங்கி தண்ணியடுச்சுட்டாருனே! சரி இந்தா ஏஞ்செருப்ப காலுல மாட்டிக்கே நா வீட்டுல வந்து பேசிக்கிற அவர.
வண்டியெடுனே போவம். நல்ல உக்காந்துக்கெடா… என்னடா நம்மூருக்கரங்கெ யாருக்கு ஓட்டுப்போடுவாங்க அதலாம் யாருகாசு நெறைய தாராங்கலோ அவங்களுக்குப் போடுவாங்கனே! நம்மூருக்கரங்கெ ரொம்ப விவரமானவங்கனே! எல்லாப் பக்கமும் வசூல்பன்னிட்டு யாராவது ஒராளுக்கு ஓட்டுப் போட்டுருவாங்கெ! ஆனா யாருகேட்டாலும் உங்களுக்குத்தா ஓட்டுப்போட்டே, உங்களுக்குத்தா ஓட்டுப்போட்டேன்னு சமாளிச்சிறுவாங்கெ இந்த விசயத்துல நம்மூருக்கரங்கெல யாராலயும் அடுச்சுக்க முடியாதுனே! அப்பிடியா சொல்ற ஆமானே! அதான் இப்ப காசு கொண்டுப்போற வண்டியெல்லாம் போலீஸ்சு பிடிக்கிறாங்கலேடா! ஆமா போலீஸ்சு பிடிக்குறாங்க போலீஸ்சு… அட நீவேற போலீசு பிடிக்கிறதெல்லாம் சும்மான்னே! நம்மல மாதிரி ஆளுகள, அதாவது விவசாயம் பன்ன நகைய அடகு வச்சுருப்பாங்க அதத்திருப்ப பணம் கொண்டுப்போவாங்கலே அவங்களப்பிடிப்பாங்கஇ அப்ரம் யாராவதும் மக கல்யாணத்துக்கு பணம் சேர்த்து வச்சு நகையெடுக்கப் போவாங்க அவகளப்பிடிப்பாங்க! ஆனா கார்ல சீட்டுக்கடியில அங்கயிங்கன்னு கட்டுக்கட்டா அடுக்கி வச்சு கடத்துறவங்கள விட்ருவாங்கனே! இப்ப அந்தக்காலம் மாதிரியலாம் இல்லாடா அசோக்கு போலீசு நேரா அப்பிடியே லைவா வீடீயோ கவரேஜ் பன்றாங்க. இம்… அப்பிடியானே! அப்பயாருமே தப்பமுடியாதுனே! ஆமானே போன எலெச்சன்ல இப்படித்தான் கோடிக்கோயா பணம் சிக்கிச்சின்னு சொன்னாங்க, இந்த வருசமும் ரொம்பப் பணம் சிக்கிருக்குன்னு சொல்றாங்க அந்த பணத்தையெல்லாம் என்னானே பன்னுவாங்க? அத என்னமாவது பன்னிட்டுப்போறாங்க? நமக்கெதுக்குடா இந்தத்த தேவையில்லாத வெட்டிப்பேச்சு, முன்ன போலீஸ்சுவேற நிக்குது சும்மா வாடா.
ஏ… ஏ… வண்டிய ஓரங்கட்டுங்கடா! என்னனே இந்த ஏட்டையா முன்னபோற காருகல, பஸ்சுகலயெலாம் விட்டுட்டு நம்மள மறைக்கிறாரு சரியான லூசா இருப்பாருபோல. ஏ… வாயவச்சுட்டு சும்மாயிருடா அசோக்கு, என்னா இம்புட்டு வேகமா போற உயிர்மேல ஆசயில்லயா? மார்க்கெட்டுக்கு நேரமாச்சு சார் அத கொஞ்சம் வேகமா வந்தேன். கொஞ்ச வேகமா வரலா ரெம்ப வேகமாத்தா வந்த, சரி வா ஐயாவா பாhத்துட்டுப்போ… ஐயா வணக்கங்கையா! இம் வணக்கம் என்னா ஏட்டையா தம்பி எல்லாம் சரியா வச்சுருக்கானா? தெரியல யா நீங்களே விசாரிங்க நா இன்னொரு வண்டிய புடுச்சு வாரேன். இந்த போன்ட் சட்ட போட்டவங்களப்புடுச்சா அவங்க சட்டம் கிட்டமின்னு பேசி நம்ம நேரத்த வீணடிக்கிறாங்கப்பா! இந்த மாதிரி கைலியில வார நாலுபோத்தப் புடுச்சாப் போதும். செலவுக்குச் சரியாப்போகும். என்னா ஏட்டையா சொன்னிங்க? ஏ… நீயாருடா? நா ஏம்மனச்சாட்சிகூட பேசிக்கிட்டிருக்கே. ஏ பேரு அசோக்குயா நா அந்த ராசா அண்னே கூட வந்தே யா, அப்ப அங்கபோடா இங்கென்னா செய்ற? உம் பேர் என்னா? ராசாயா! ஊரு சிங்காரபட்டினம், அப்பாபேரு கந்தசாமியா, அப்பிடியா? லைசன்சு இருக்கா? இல்லாயா! லைசன்சு வீட்டுல இருக்குயா எடுக்காம வந்துட்டே யா! எதுக்கு வீட்டுல வச்சுட்டு வந்த? தண்ணியடுச்சுருக்கயா? இங்கவா வாய ஊது? இல்லாயா இப்பதா தோட்டத்துல முறுங்கக்காயயொடுச்சுட்டு மார்க்கெட்டுக்குப்போறே அதா கெரக்கமா இருக்கே யா! அப்பிடியா? சரி அவதாரம் போடுரே கோhட்டுல கட்டிரு அய்யா வேனாங்கையா நாளைக்கிருந்து லைசன்ச எடுத்து வந்துடுரேங்கை யா? இந்த ஒருதடவ மண்ணிச்சிறுங்கையா! அப்பிடியா சரிப்போ ஏட்டையாவப் பாத்துட்டுப்போ… சரிங்கையா ரொம்ப நன்றிங்கையோ! ஏட்டையா ஐயா உங்களப் பாத்துட்டுப் போகச் சொன்னாருங்கையா! ஓ… அப்படியா? ஐயாகிட்ட அவதாரம் கட்டுனயா? இல்ல யா! பைல பணவச்சுருக்கயா? இல்ல யா! இங்கவா? இதென்னா பணந்தான இது எங்க அம்மாவுக்கு டவுன்ல மாத்திர மருந்து வாங்கனுய்யா அதான். அப்ப இதென்னா? இது முறுங்கக்காயா மார்க்கெட்டுல போடனும். மார்க்கெட்டுல போட்டு மாத்திர மருந்து வாங்கிக்கெ இதக்குடு, கௌம்பு, கௌம்பு அடுத்தாளப்பாக்கனும். சரி எடுனே போனாப்போகட்டும். என்னாடா அந்தாலு கொஞ்சங்கூட மனச்சாட்சி இல்லாம இப்பிடியிருக்காரு சிலபேரு அப்பிடித்தானே என்னாசெய்ய? நம்ம கைல அஞ்சு விரலு ஒன்னு சொன்னாப்புலயா இருக்கு?
சரிவா ஏறு போவம் மார்க்கெட்டுக்கு நேரமாச்சு. சரிபோனே! அசோக்கு இங்கென்னாடா ஒரே போலீஸ்சு கூட்டமா இருக்கு? அண்னே இவங்கதான்னே! பணங்கொண்டு வாரவங்கள பிடிக்குற போலீஸ்சு சரிவா நம்ம கிட்டதா பணம் இல்லயே! ஏ… நில்லு, நில்லுடா! என்னடா இது? இதுமுறுங்கைக்கா யா? அது எனக்கு தெரியுது அதுகுள்ள என்னா இருக்கு? வெத இருக்குங்கையா! டே என்னா கிண்டலா? ஏட்டையா கூட்டமாகுது பைக்க மறைக்காதிங்க விடுங்கபோகட்டும். வழிவிடுங்க! ஐயா இம் சரிங்கையா. ஏட்டையா, அதிகாரி ஐயா, சொல்லிட்டாருலே வழியவிடுங்க போகனும். இம் பைக்கெல்லாம் போங்கப்பா… போங்கப்பா… என்னடா இந்த தேர்தல் வந்தது வந்துச்சு ரோட்டுல நிம்மதியா வண்டிகூட ஓட்ட முடியல.
No comments:
Post a Comment