Monday, 18 April 2016

வாருங்கள் வாக்களிப்போம்…



அள்ள ஆளின்றி நேற்று வரை நாறிக்கிடந்த
சாக்கடைகளும், தெருக்களும் தூய்மையாகின
எப்போதாவதும் வரும் தண்ணீர் குழாய்களில்
இப்போது தண்ணீர் வடிந்துகொண்டே இருக்கின்றன

இரவில் இருண்டுகிடந்த தெருக்களிளெல்லாம்
இரவு பகலாக விளக்குகள் எரிந்துகொண்டே யிருகின்றன
நகரப்பேருந்துகூட வராத சேரிகளில் சுமோ வாகனங்கள்
போட்டிபோட்டுக்கொண்டு வலம்வருகின்றன

பலநாட்களாய் பலுதடைந்துகிடந்த
தார்சாலையெங்கும் சரிசெய்யப்பட்டுவிட்டன
அழுக்குப் படிந்த மேனிக்கு ஆடைகூட இல்லாமல் திரிந்த
விவசாயிகள் வாழும் குடியிருப்புகளுக்குள்
வெள்ளையாடைகள் இன்று அலைமோதுகின்றன

இறந்த பிணத்தை எடுத்துச் செல்ல
வழியின்றி தவிர்த்தபோது வந்துவிடாதவர்கள்
தடைகளைமீறி எடுத்துச்சென்ற தலித்துகள்மீது
காவல் துறையை ஏவிவிட்டு கைதுசெய்தவர்கள்
இன்று ஓட்டுக்கேட்டு வருகிறார்கள்

கலப்புத்திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை
ஓட ஓட வெட்டிக்கொன்ற கயவர்களை
கைது செய்ய வலியுறுத்தாதவர்கள்
சாதிக்கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காதவர்கள்
இன்று ஓட்டுக்கேட்டு வருகிறார்கள்

ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள்
திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள்மீது
கவனம் செலுத்தாதவர்கள்
இன்று புதிதாய் கவனம் காட்டி
ஓட்டுக்கேட்டு வருகிறார்கள்

கல்விக்காக மாணவர்கள் போராடி கைதாகியபோது
தட்டிக்கேட்க வந்துவிடாத தலைவர்கள்
இன்று புதிதாய் வந்துவிட்டார்கள்
இனி அதைச் செய்வோம், இதைச் செய்வோமென்று

வறுமையால் வாடிய மக்களை
நேற்றுவரை கண்டுகொள்ளாதவர்கள்
இன்று உதவிட ஓடிவருகின்றனர்
முன்பே இப்படியாய் உதவியிருந்தால்
பஞ்சம் தீர்ந்திருக்கும் கலியுகம்; மாறியிருக்கும்

வாக்களிப்பது நம் உரிமை
வாக்களிப்பது நம் கடமை
இது ஜனநாயக நாடு- ஆகவே
தவறாமல் வாக்களிப்போம்

பணம்பெறாமல் மனிதநேயர்களுக்கு… 

No comments:

Post a Comment