Monday, 30 May 2016

“காலத்தை வென்ற கலாம்” (1931-2015) (பக்கம் 1-5)





காலத்தை வென்ற கலாம்” 
                                           
 “காலத்தை வென்ற கலாம்” (1931-2015)-  இந்நூலை முனைவர். கொ.சதாசிவம் அவர்களின் நல்லாசியோடு இணையத்தில் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர்..பி.ஜே.அப்துல்கலாம் அவர்களை எனக்கு பிடிக்கும் என்று சொல்வதைவிட, மிகமிகப் பிடிக்கும் என்றே சொல்வேன் ஏனெனில் அந்த அளவிற்கு அவரை நேசித்தேன். அவரது நேர்மையும், தெளிவும், அன்பும் பல சமயங்களில் என்னை வழிநடத்திச் சென்றிருக்கின்றன. கல்லூரிக் காலத்தில் என் நண்பர்களெல்லாம் சினிமா நடிகர்களை அவர்களின் ரசிகர்களாகச் சொல்வார்கள், ஆனால் நான் மட்டும் ஏனோ அன்றைய குடியரசுத் தலைவரை என் ரசிகராக ஏற்றுக் கொண்டேன். நாளிதழ்களில் அவர் எழுதும் கட்டுரைகளை, அவர் குறித்து வெளிவரும் செய்திகளை வாசிப்பேன், அவர் குறித்த செய்திகளை அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை மிகுந்த ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் காண்பேன்.
நான் ஆண்டிபட்டியிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் முதலாமாண்டு பயின்றபோது ஒரு நாள் வகுப்பறையில் பேரா.மாரிமுத்து அவர்கள் யாரையாவதும் ஒரு மாணவரைஇந்தியாவின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்குஎன்ற தலைப்பில் வகுப்பெடுக்கச் சொன்னார். யாரும் முன்வராத நிலையில் பின் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த நான் பொறுப்பேற்றேன். மறுநாள் வகுப்பில் வகுப்பெடுக்க நான் தேர்வு செய்து கொண்டு வந்த விசயங்கள் அன்றைய குடியரசுத் தலைவர் .பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் சொன்ன பத்து அம்ச கட்டளைகள். வகுப்பெடுத்து முடித்ததும் வகுப்பரை அதிரும் அளவிற்கு ஒரு பெரிய கைதட்டு பரிசாகக் கிடைத்தது. அத்தோடு பேராசிரியர் மாரிமுத்து அவர்களின் பாராட்டுகளும்.
அப்துல்கலாமை நான் ஒரு முறைகூட நேரில் கண்டதில்லை. காணவேண்டுமென்று விரும்பினேன். ஆனால் இறைவன் மண்ணுலகில் உமக்கு புகழ் போதுமென்று விண்ணுலகம் அழைத்துச் சென்றுவிட்டான். அப்துல்கலாம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு நான் மிகுந்த மன வருத்தமுற்றேன். அன்று நான் அளவில்லை அதற்கு மாறாக கனவு கண்டேன் இலட்சியக் கனவு .பி.ஜே.அப்துல்கலாம்  அவர்களின் வாழ்க்கை வரலாரைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டுமென்று அந்த கனவுதான் இன்று உங்கள் முன் இந்த நூலாக வெளிப்பட்டிருக்கிறது. அப்துல்கலாம் அவர்களின் வரலாரைச் சொல்ல வேண்டு மென்றால் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் நான் எனக்குத் தெரிந்த அளவிற்கு மட்டுமே சொல்லியிருக்கிறேன். இந்நூலை முழுவதுமாகப் படியுங்கள் படித்து முடித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை எழுதியனுப்புங்கள் காத்திருக்கிறேன். என் மின்னஞ்சல்: palanimku@gmail.com

சம்பவம்
இந்தியாவில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சூழ்ந்த தீவுப்பகுதியான இராமேஸ்வரத்தில் ஏழ்மையான ஒரு மீனவ குடும்பத்தில்  1931-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15-ம் நாள் .பி.ஜெய்னுலாபுதீன் மரைக்காயர்- ஆஷியம்மா என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் டாக்டர்..பி.ஜே.அப்துல்கலாம். அவரது தந்தை .பி.ஜெய்னுலாபுதீன் மரைக்காயர் அக்காலத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாய்மரக்கப்பல் போக்குவரத்தை நடத்தி வந்தவர். இராமேஸ்வரத்தில் நேர்மையான மனிதராக வாழ்ந்த அவர் தன் வாழ்நாளில்  சில காலம் இராமேஸ்வரம் பஞ்சாயத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளார். டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாமின் இயற்பெயர் அவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல்கலாம் ஆகும். அதைச் சுருக்கி .பி.ஜே.அப்துல்கலாம் என பெயர் வைத்துக் கொண்டார் அப்துல்கலாம்.
    இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் ..ஜெய்னுலாபுதீன் மரைக்காயரின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி எண்.1 என்ற இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை ஒட்டியிருக்கும் ஒரு ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கி வந்த சாமியார் பள்ளிக்கூடத்தில்தான் அப்துல்கலாம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்தார். இந்த பள்ளிக்கூடம்தான் அவருக்கு அகர முதல எழுத்தைக் கற்றுத் கொடுத்த பெருமைக்குறியது. 1941 முதல் 1946-ம் ஆண்டு வரை அப்துல்கலாம் பயின்ற அதே பள்ளியில்தான். அவரது தந்தையின் நண்பரும், இராமேஸ்வரம் கோவில் தலைமை குருக்களுமான பஷி லட்சுமண சாஸ்திரியின் மகன் ராமநாத சாஸ்திரியும் படித்தார். அப்துல்கலாமின் மற்ற இரு நண்பர்கள் அரவிந்தன், சிவப்பிரகாசன் ஆவார்கள். சாமியார் பள்ளிக்கூடத்தில் படிப்பை முடித்த அப்துல்கலாமை அவரது தந்தை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க வைத்திருக்கிறார்.
பள்ளிப் படிப்புகளை படித்து முடித்து திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளிப் பொறியியல் பட்டபடிப்பைத் தொடர்ந்தார். 1963-ம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்வெளி விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி 1969-ம் ஆண்டு இஸ்ரோ அமைப்புக்கு பணி மாற்றம் பெற்றார். அப்போது இந்தியாவின் முதல் செயற்கைகோள் செலுத்து வாகனமாக எஸ்.எல்.வி-3 யை உருவாக்கும் பொறுப்பு அப்துல்கலாமிடம் தரப்பட்டது.
ஏவுகணை தளத்தில் பணி:
20 ஆண்டுகள் கேரளாவில் உள்ள தும்பா வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய அப்துல்கலாம். அடுத்த 20 ஆண்டுகள் ஒடிசா மாநிலத்திலுள்ள சண்டிபூர் ராக்கெட் ஏவுகணை தளத்தில் பணியாற்றினார். அங்கு அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தினார். அங்கு பணியாற்றியபோது இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட் தயாரிக்கும் திட்டத்தையும் உருவாக்கினார்.
வகித்த பதவிகள்:
                     1982-ம் ஆண்டு ஐதராபாத்திலுள்ள விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்தின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
                     1998-ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா தனது 2-வது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அந்த அரிய சாதனைக்கு மூளையாக இருந்து செயல்பட்டார்.
                     1999-ம் ஆண்டு நவம்பர் முதல் 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார். இது கேபினட் மந்திரி அந்தஸ்துக்கு இணையான பதவி ஆகும். அதே போல அறிவியல் ஆலோசனை குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.
                     1998-ம் ஆண்டு இந்தியா இரண்டாவது முறையாக நடத்திய அணு ஆயுத பரிசோதனையின் போது தொழில்நுட்ப ரீதியாக முக்கியப் பங்காற்றினார்.
                     2002-ம் ஆண்டு ஜுலை மாதம் 25-ம் நாள் இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
                     2007-ம் ஆண்டு வரை பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் பதவியை பெருமைப்படுத்தினார்.
தாய் மொழி பற்றாளர்:
தமிழ் வழியில் கல்வி கற்று ஆங்கிலத்தைக் நன்கு கற்றுத் தேர்ந்திருந்தாலும் அவர் தமிழ் நாட்டில் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழியிலேயே உறையாற்றி தன் தாய்மொழியான தமிழ் மொழிக்கு புகழ் சேர்ப்பார். இந்தியாவின் முதல்குடிமகனாக பதவியேற்று பல சிறப்புகளை செய்த  அப்துல்கலாம் தன்னைத் தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வார்.
நாட்டுப்பற்றாளர்:
தான் பிறந்த தமிழ் நாட்டின் மீது அதிக அக்கரை கொண்டு, இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கு முக்கியமான தலைவராக விளங்கினார். இந்திய ராக்கெட் தொழில்நுட்பம், வேற்று கிரக ஆராய்ச்சி போன்றவற்றை முறியடிக்க அந்நிய நாடுகள் முயன்றபோது, அதை முறியடித்து சாதித்துக்காட்டினார்.

5 புத்தகங்கள்:
அக்னி சிறகுகள் (Wings of Fire)
அப்துல்கலாம் எழுதிய நூல்களில் அக்னி சிறகுகள் (Wings of Fire), தன்னம்பிக்கை மிகுந்த அவரின் அற்புதமான வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளெல்லாம் போற்றுகின்ற ஒரு சிறந்த விஞ்ஞானியாக மாறிய அனுபவங்களையும், இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்து பணியாற்றிய காலங்களையும் இந்நூலில் எழுதியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய டாக்டர். விக்ரம்சாராபாய் மற்றும் பிராம்பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து பணிபுரிந்த அனுபவங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை படித்து முடிபோர்களின் மனதில் தன்னம்பிக்கை விதைகளை வேரூன்ற வைக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
பற்றவைக்கப்பட்ட மனது (Ignited Minds)
பற்றவைக்கப்பட்ட மனது  (Ignited Minds). அப்துல்கலாமால் 2002-ல் எழுதப்பட்டது. நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டபோது ஆங்காங்கே மாணவர்களிடையே நடத்திய கலந்துரையாடல்களின் அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்திருக்கிறார். இந்தியா வல்லரசாகும் என்று மிகஉறுதியுடன் கூறிய அவர். இந்தியா வல்லரசாக மாறக்கூடிய நாடு என்பதை மாணவர்களுடன் உரையாடியதில் இருந்துதான் உணர்ந்து கொண்டதாக பதிவு செய்திருக்கிறார். ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் இரண்டு குழந்தைகளான ஈகோ மற்றும் ஆத்மாவின் உரையாடலுடன் முடித்திருக்கிறார்.
வெல்லமுடியாத ஆத்மா(Idomitable Spirit)
வெல்லமுடியாத ஆத்மா(Idomitable Spirit) என்ற நூலில் ஒரு ஜனாதிபதியாக தான் இருந்தபோது ஏற்பட்ட மதிப்புக்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை மக்களிடையே எழுத்துக்களின் வாயிலாக கொடுத்திருக்கிறார். பெண்களை உயர்வாக போற்றும் அவர்கடவுளின் மிக அழகிய படைப்பு பெண்என்று புகழ்ந்திருக்கிறார். இதன் மூலம் அவர் பெண்கள் மீது கொண்ட நன்மதிப்பு வெளிப்பட்டிருக்கிறது. மேலும் இந்நூல் அப்துல்கலாம் பிறந்த ஊரான இராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதி பவன் வரையிலான அவரின் வாழ்க்கைப் பயணங்களை சுமந்து நிற்கிறது.
இந்தியா 2020 (India 2020)
இந்தியா 2020” (India 2020) என்ற புத்தகமானது ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த உத்வேகத்தை கொடுக்கக்கூடிய விதமாக அமைந்திருக்கிறது. வருகின்ற 2020-ல் உலகின் 4-வது மிகப்பெரிய வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என்பது அவரின் கருத்து. 2020-ல் இந்தியா என்ற புத்தகத்தில் அவரது பார்வை யாரும் எளிதில் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அமைந்திருந்தது. மரம் நடுதலின் மூலம் இந்தியாவில் பசுமைப் புரட்சி மீண்டும் உருவாக வேண்டும் எனவும் இந்தியா வான்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை பெற வேண்டும் எனவும் தான் ஆசைப்படுவதாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
திருப்புமுனை(Turning Points)
 “திருப்புமுனை(Turning Points) என்ற இந்நூல்அக்னி சிறகுகள்புத்தகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. இந்தியாவின் ஜனாதிபதியாக ஆன பின்பு அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பல அனுபவங்களை சேகரித்து இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இப்புத்தகத்தில் இந்தியா 2020-ல் எப்படி இருக்கும் என்பதையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் அப்துல்கலாம்.
எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்:
அப்துல்கலாம் கடைசியாக எழுதிவந்த நூல் எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்: இந்நூலில் தன் தாய்நாடான தமிழ் நாட்டை முன்மாதிரி மாநிலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆகவே தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுகின்ற திட்டத்தோடு. “எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்என்ற புத்தகத்தை எழுதி வந்தார். தமிழில் அவர் எழுதிவந்த இந்த புத்தகத்தின் 7 அத்தியாயங்கள் முடித்திருந்தார். தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியைக் குறிப்பதாக இந்நூலாகும் அமைந்திருக்கிறது.
                     கௌரவித்த பட்டங்கள்:  
                     1981- பத்மபூஷன் விருது- இந்திய அரசு.
                     1990- பத்ம விபூஷன் விருது- இந்திய அரசு.
                     1997- பாரத் ரத்னா விருது- இந்திய அரசு.
                     1997- தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா விருது- இந்திய அரசு.
                     1998- வீர சாவர்கர்- இந்திய அரசு.
                     2000- ராமானுஜன் விருது- ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையம்.
                     2007- அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்- உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம்.
                     2007- கிங் சார்லஸ்- 2 பதக்கம்: ராயல் சொசைட்டி.
                     2008- பொறியியல் டாக்டர் பட்டம்- நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்.
                     2009- சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது- கலிபோர்னியா. இன்ஸ்டிடூட் ஆஃப் டெக்னாலாஜி.
                     2009- {வர் மெடல்- அமெரிக்கா.
                     2010- பொறியியல் டாக்டர் பட்டம்- வாட்டர்லூ பல்கலைக்கழகம்.
                     2012- சட்டங்களின் டாக்டர் பட்டம்- சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம்.
                     2014- அறிவியல் டாக்டர் பட்டம்- எடின்பரோ பல்கலைக்கழகம்.
ஜனாதிபதி பதவியை ஏற்றது எப்படி:
அண்ணா பல்கலைக் கழகத்தில் பல முறை உரையாற்றி இருக்கும் அப்துல்கலாம். 2002-ம் ஆண்டு ஜுன் மாதம் ஆற்றிய அவருடைய 9-வது உரைக்குகுறிக்கோளை நோக்கிய பயணம்என்று பெயரிட்டு இருந்தார். அந்த உரையை அவர் நிகழ்த்திவிட்டு திரும்புவதற்குள் அவரது அறையில் இருந்த டெலிபோனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. அதை அறிந்த அவர் விரைந்து அறைக்கு வந்தார். வந்தவுடன் அந்த டெலிபோன் அழைப்பை எடுத்து பேசினார். எதிர் முனையில் பேசியவர் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். மேலும் உங்களுடன் பிரதமர் பேச விரும்புகிறார் என்ற தகவலையும் தெரிவித்தார். அதையடுத்த சிறிது நேரத்தில் பிரதமர் வாஜ்பாய்இ அப்துல்கலாமை தொடர்பு கொண்டு பேசினார். இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை நீங்கள் ஏற்கவேண்டும் என்று சிறிது நேரத்திற்கு முன் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறோம். இன்று இரவு அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். நீங்கள் இதற்கு சம்மதிக்க வேண்டும் என்று கேட்டார்.
அப்போது அப்துல்கலாம் என்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்வதற்கு எல்லா கட்சிகளுமே ஒப்புதல் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு வாஜ்பாய், நீங்கள் முதலில் சம்மதம் தெரிவியுங்கள். நாங்கள் ஒப்புதலை பெற்றுவிடுகிறோம் என்றார். அதன் பின்பு, தனது நெருங்கிய நண்பர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோருடன் கலந்து ஆலோசித்தபோது பலர் இது அருமையான வாய்ப்பு நழுவவிடாதீர்கள். துணிச்சலோடு செயலில் இறங்குங்கள் என்று தைரியம் அளித்தனர்.
கல்வி பணியில் ஆர்வம் கொண்டு இருக்கிறீர்கள். அது பாதிக்கும் எனவே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்று சிலர் அறிவுரை கூறினார்கள். எனினும் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்த கருத்தின்படி அனைத்து கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என்ற முடிவை எடுத்து அதை பிரதமரிடம் தெரிவித்தார். அதற்கு நிச்சயம்இ அதற்கான பணியில் நாங்கள் இறங்குகிறோம். என்று உறுதி அளித்த வாஜ்பாய் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் ஆதரவைப் பெற்றுவிட்டார். எனினும் இடது சாரி கட்சிகள் சொந்த வேட்பாளரை அறிவித்து விட்டன. அவர்களின் ஆதரவை பெறவும் நான் விரும்பினேன்என்றார் அப்துல்கலாம்.
இந்திய ஜனாதிபதி பதவி:
2002-ம் ஆண்டு ஜுன் திங்கள் 18-ம் நாள் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் அமைச்சர்களுடன் சென்று இந்திய ஜனாதிபதி பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்துல்கலாம். முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அப்துல்கலாமிற்கு ஆதரவு தெரிவித்தது, எனவே அவர் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவது அப்போதே உறுதியானது. அவரை எதிர்த்து இடது சாரிகட்சிகளின் ஆதரவுடன் நேதாஜிசுபாஷ்சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லெட்சுமி  ஷேகல் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் ஒன்பது இலட்சத்து 22 ஆயிரத்தி 884-வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். 2002-ம் ஆண்டு ஜுலை திங்கள் 25-ம் நாள் இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அன்று பதவியேற்ற அப்துல்கலாமிற்கு மக்கள் அளித்த கவுரவம் மக்களின் ஜனாதிபதிஜனாதிபதியாகும் முன்னரே பாரத ரத்னா விருது பெற்றவர்இ அந்த விருது பெற்ற மூன்றாவது ஜனாதிபதிஇ ஜனாதிபதியான முதல் விஞ்ஞானி என்ற ஏராளமான பெருமைகளுடன் ராஷ்டிரபதி பவனை அலங்கரித்தார்.
பதவிக்கு புகழ் சேர்த்தார்:
இடது சாரி கட்சிகளின் ஆதரைவையும் பெறவேண்டுமென்று ஆசைகொண்ட  அப்துல்கலாமிற்கு அவர்கள் ஆதரவு தராமல் போனாலும். ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்த 5 ஆண்டுகளில், இந்தியா இதுவரை இப்படியொரு செயலாற்றல் மிகுந்த நாட்டின் முன்னேற்றம் குறித்து அக்கறை கொண்ட ஒரு ஜனாதிபதியை பார்த்திருக்க முடியாது என்ற பெயரையும் புகழையும் சேர்த்தார்.
போர் விமான பயணமும் நீர்மூழ்கி கப்பல் அனுபவமும்:
முப்படைகளின் தலைமைத் தளபதி என்கிற முறையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி.என்.எஸ். சிந்துரக்சக்கடற்படை நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற்றார். 30 மீட்டர் ஆழத்தில் மூழ்கிய நிலையிலேயே அந்த கப்பல் பயணத்தை தொடங்கியது. அந்த நீர் மூழ்கி கப்பலின் நுட்ப அமைப்புகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் அப்போது அவரிடம் விளக்கம் அளித்தனர். கடலுக்கு அடியில் இருந்தவாறே ஏவப்படும் ஏவுகணையையும் கடற்படை அதிகாரிகள் இயக்கி காட்டினர். அது மிகத் துல்லியமாக இலக்கை தாக்கியதை கண்டு கடற்படை அதிகாரிகளை பாராட்டினார். அந்த கப்பலில் 3 அணிநேரம் கடலுக்குள் பயணம் செய்த அனுபவம் பற்றி அப்துல்கலாம் கூறும்போது,ஆழ்கடல் போரில் பல்வேறு அம்சங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. கடலு க்கு அடியில் நீர் மூழ்கி கப்பலில் பணிபுரிவது சாதாரண விஷயம் அல்ல. இது சவால் மிக்க பணி என்பதை புரிந்துகொண்டேன். இது மறக்கமுடியாத பயணம்என்றார்.
சுகாய் போர் விமானத்தில் பறந்தார்:
2006-ம் ஆண்டு ஜுன் 8-ந் தேதி சுகாய் போர் விமானத்தில் பயணம் செய்தார். அது ஒலியின் வேகத்தை விட 2 மடங்கு வேகத்தில் பறக்க கூடியது. இந்த விமானத்தில் பறப்பது எப்படி என்றும், விமானத்தை ஓட்டவும் விங்கமாண்டர் அஜய் ரதேர் அவருக்கு கற்றுக் கொடுத்தார். சுகாய் போர் விமானத்தில் பறந்தபோது 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. அப்போது அதன் வேகம் மணிக்கு 1.200 கி.மீட்டர்கள். இந்த சாகச பயணம் குறித்து அப்துல்கலாம் கூறுகையில். “புவிஈர்ப்பு விசையின் 3 மடங்கு தாக்கத்தை இந்த பயணத்தில் உணர்ந்தேன். அதிலிருந்து உடலை பாதுகாத்துக்கொள்ள விசேஷ ஆடை அணிந்து கொண்டோம். அந்த விமானத்தில் 35 நிமிடங்கள் பயணித்தேன். இதுபோன்ற போர் விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்பது 1958-ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தபோது எனக்கு ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதுஎன்றார்.
உயரமான போர்முனை:
உலகின் மிக உயரமான போர் முனைப் பகுதியான சியாச்சின் பனிப்பிரதேசத்தில் உள்ள கூமர் இராணுவ முகாமுக்கு 2004-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி பயணம் செய்தார். அது கடல் மட்டத்திலிருந்து 7 ஆணிரம் மீட்டர் உயரத்தில் அமைந்த போர் முனை. இந்த போர் முனைக்கு அப்துல்கலாம் சென்றபோது அங்கு மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது, குறிப்பிடத்தக்கது.
பதவியில் இருந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகள்:
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆதாயம் பெறும் இரட்டை பதவி மசோதாவில் கையெழுத்திடாமல் நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார். ஆனால் மீண்டும் அவர் முன் வைக்கப்பட்ட அச்சட்ட மசோதாவில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜனாதிபதி பதவிக்காலத்தில், எடுத்த மிகவும் கடினமான முடிவு அது என அவர் கூறியிறுக்கிறார்.
மரண தண்டனைக்கு எதிராக ஆழமான கருத்தைக்கொண்ட அவர், தனது பதவிக் காலத்தில் 21 கருணை மனுக்களில் ஒன்றை மட்டுமே நிராகரித்தார். மீதமுள்ள 20 கருணை மனுக்களின் மீது முடிவெடுக்கவே இல்லை என்ற சர்ச்சைக்கு அவர் ஆளானார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்ட பின்பும் கருணை மனு மீது அப்துல்கலாம் முடிவு தெரிவிக்காததால், அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது.
பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார்:
2003-ம் ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்துல்கலாம், பொது சிவில் சட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மதத்தினரும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் ஒரே சட்டத்தை பின்பற்றுவதாகும்.

மற்றொரு சர்ச்சை:
அப்துல்கலாமின் பதவிக்காலத்தில் எழுந்த மற்றொரு சர்ச்சை என்றால் அது பீகார் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. 2005-ம் ஆண்டு இரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவின் கட்டாயத்தால், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. 6 மாதங்களுக்கு பிறகு, ஜனாதிபதியின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. சிலகாலம் கழித்து Turning Point: A JOURNEY CHALLENGES என்ற புத்தகத்தில் பீகார் அரசை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. நான் செய்த தவறு என்று அப்துல்கலாம் தெரிவித்தார்.
மீண்டும் ஜனாதிபதி:
2007-ம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுமாறு சில முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தியபோது அதனை ஏற்று சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள், இடது சாரிகள் ஆகியவை ஆதரவு தெரிவிக்காத நிலையில் தான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை. ஜனாதிபதி மாளிகை போட்டிக்கு அப்பாற்பட்டது, என நினைப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நாட்டிலுள்ள கோடான கோடி மக்கள் நினைத்தனர். சமூக வலைத் தலங்களில் மக்கள் அவருக்கு பெருவாரியாக ஆதரவு அளித்தனர், அதுவே அவரை என்றென்றும் மக்களின் குடியரசுத் தலைவராகவே நியமித்தது.
நம்பிக்கை:
5 ஆண்டு காலமாக முழுமையாக இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்த அப்துல்கலாம், மாணவ-மாணவியர்கள் மத்தியில் உரையாற்றுவதையும் அவர்களை ஊக்குவிப்பதையும் பெரும் விருப்பத்துடன் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அவர் எப்படி தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருந்தாரோ அதே போன்று மாணவ-மாணவியர்களையும் தன்னம்பிக்கையின் உச்சத்திற்கு தன் பேச்சால் அழைத்துச் செல்வார். “நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்என்று அடிக்கடி மாணவ-மாணவியர்களின் மனதில் தன்னம்பிக்கை விதைகளை விதைப்பார். தன் நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த அவர், கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதை உறுதியாக நம்பினார். எனவே கல்வியைப்பற்றியும் நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றியும் தொடர்ந்து மாணவ-மாணவியர்களின் மத்தியில் அறிவுறுத்தி வந்தார்
நேர்மை தன்மை:                   
                        வாழ்க்கையில் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றே வாழ்ந்த அப்துல்கலாம் காந்திய கொள்கை உடையவராகவும் வாழ்ந்தார். மேலும் மாணவ- மாணவிகளைப் பார்த்தால் போதும் அவர் பூரித்துப் போவார். மாணவ மாணவிகளின் அருகில் சென்று பேசுகின்ற மனப்பக்குவம் கொண்டவர். நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் சிறிதளவு கூட இருந்ததில்லை. எந்த இடத்திலும் தன்னை முன்னிலை படுத்துவதை அவர் விரும்பமாட்டார் தன்னை ஒரு சாதாரண மனிதராகவே நினைப்பார்.

மசூதியில் மக்களின் ஜனாதிபதி:
 ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழுகைக்கு சென்றார். அங்கு இடம் சற்று நெருக்கடியாக இருந்த காரணத்தால் கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக தானும் சேர்ந்து நின்று இறைவனைத் தொழுதுவிட்டு வந்தார். அந்த அளவிற்கு தன்னடக்கம் நிறைந்த மனிதர்.
அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள்:
இந்திய அரசியல்வாதிகளிடம்தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள் அதுதான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்”. என்று அடிக்கடி நினைவு படுத்தி வந்தார்.
சிறுமியின் கேள்விக்கு பதில்:
ஒரு முறை அப்துல்கலாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு மாணவி நாட்களில் நல்ல நாள் கெட்ட நாள் எது? என்று கேள்வி கேட்டாள். அதை கூர்ந்து கவனித்த அப்துல்கலாம். “பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். சூரிய ஒளி படாவிட்டால் அது இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லைஎன்று சிறித்துக் கொண்டே கூறினார். அது அம்மாணவிக்கு மட்டுமல்ல அங்கிருந்த யாருமே எதிர் பார்க்காத புதிய பதிலாக இருந்தது. அதே போன்று உலக தலைவர்களில் மாணவர்களும் இளைஞர்களும் எழுப்பிய அதிகமான கேள்விகளுக்கு பதில்ச்சொன்ன தலைவர்கள் யார் என்றால் அது அப்துல்கலாமைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
நட்பு மற்றும் உறவு வட்டம்:
அப்துல்கலாம் எப்போதும் தன்னை ஒரு தனிமனிதராக உணர்ந்ததே இல்லை. ஏனெனில் அந்த அளவிற்கு மிகப்பெரிய உறவு மற்றும் நட்பு வட்டாரம் உடையவராக திகழ்ந்தார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யாருக்கும், எதற்கும் சிபாரிசு செய்தது கிடையாது. அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் இன்றும் நடுத்தரவர்க்க வாசிகளாகவே உள்ளனர். அவரின் கறை படாத நேர்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கனகசுந்தரம்:
இலங்கையிலுள்ள யாழ்பாணத்தை சேர்ந்த சன்னியாசியான கனகசுந்தரம் என்ற ஆங்கில ஆசிரியரிடம் அப்துல்கலாம்  முறையாக ஆங்கிலம் கற்றுத் தேர்ந்தார்.
சிதம்பரம் சிவசுப்பிரமணியம்:

இராமேஸ்வரம் மாவட்ட கல்விக்கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சிவசுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கற்றுக் கொண்டார். அப்துல்கலாமை அவரது மனைவிக்கு பிடிக்காத சூழலிலும் அவரது வீட்டு சமையற்கட்டு வரை அழைத்துச் சென்று உணவு பரிமாறியவர் சிவசுப்பிரமணிய அய்யர். அப்துல்கலாம் நீ நன்றாக படித்து நகர்புறங்களில் வாழும் மெத்த படித்தவர்களுக்கு இணையாக வளர்ந்து வரவேண்டும் என்று அப்துல்கலாமை ஊக்கப்படுத்தியவரும் அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர்தான்.

No comments:

Post a Comment