முனைவர்.கொ.சதாசிவம்
உதவிப் பேராசிரியர், பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21.
பெரு.பழனிச்சாமி , கோ.அஜிதா
முனைவர்பட்ட ஆய்வாளர்கள், பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21. அலைபேசி: (0) 9715793829, மின்னஞ்சல்: palanimku@gmail.com, ajitha1904@gmail.com
இன்றைய சூழலில் பெண்களின் நிலை முன்னேற்றம் கண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம்;தான் இருக்கின்றன. பெண்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் ஆணாதிக்கமானது ஓங்கி எழும்போதெல்லாம் பெண்களின் நிலை நசுக்கப்படுகிறது. பெண்கள் விடுதலை பெறுவதற்காகவும் உலகளவில் பெண்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காகவும் வருடந்தோறும் மார்ச் 8-ம் நாளை அனைத்து நாடுகளும் உலக மகளிர் தினமாகக் கொண்டாடி வருகின்றன.
பெருமைசேர்த்த பெண்கள்
இந்தியாவின் தொடக்க காலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் நிலை மிகக் குறைவுதான். அதில் பெண்கள் என்று பார்த்தால் மிக மிகக்குறைவு. அந்தக்கால கட்டத்திலும், ஓளவையார், காரைக்கால் அம்மையார் மற்றும் ஆண்டாள் போன்ற பெண் புலவர்களின் படைப்புகள் பெண் இனத்திற்குப் பெருமை சேர்த்தன. இந்தியாவின் முதல் காவல்துறை அதிகாரிகளான அத்தியட்சகர், கிரன்பேடி. விமான ஓட்டுநராகப் பணியாற்றிய துர்க்கா பானர்ஜி. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து வந்த ஆர்த்திஷா, விண்வெளிக்குச் சென்று சாதனைபடைத்து மறைந்த கல்பனா சாவ்லா, பேருந்து ஓட்டுனராகப் பணிபுரிந்த வசந்தகுமாரி போன்றவர்கள் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை வெளியுலகறியச் செய்து வரலாறு படைத்தவர்கள். நம் இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்களின் சாதனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, துணைவேந்தராக, நீதிபதியாக, பிரதம மந்திரியாக, குடியரசுத் தலைவராகப் பணியாற்றி பெண் இனப் பெருமைகளை நிலைநாட்டும் பெண்களாகப் பலர் முத்திரை பதித்துள்ளனர். இன்றளவும் பெண்கள் பலதுறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். கல்வி நிலையங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், வங்கிகள், வாழ்நாள் காப்பீட்டு கழகங்கள், தொழிற்சாலைகள், சிறுதொழில் நிறுவனங்கள், நவீன தொழில் நுட்பத் துறைகள் போன்றவைகளில் கணிசமான அளவில் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். காவல் துறை, போக்குவரத்துத் துறை, விமானப் பணிப்பெண்கள் போன்ற பதவிகளிலும், துணை ஆளுனர் பணி, முதல்வர் பணி, இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி போன்ற உயர் பதவிகளிலும் கால் பதித்து செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய துறைகளில் சிலப்பல தடைகளை உடைத்தெரிந்து ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் அரசியல் பங்கேற்பில் பெண்கள்
கடந்த கால தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் மொத்தமிருந்த 289 இடங்களில்
1874-பேர் போட்டியிட்டனர். அவர்களில் 51 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். பெண்களின் அளவு வெறும் 2.7 சதவிகிதமாகும். 1957-ல் நடந்த இரண்டாம் பொதுத்தேர்தலில் மொத்தமிருந்த 494 தொகுதிகளில் 45 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 22 பேர் தேர்வாகினர். பின்னர் 1962-ல் நடைபெற்ற மூன்றாம் பொதுத் தேர்தலில் 66 பேர் போட்டியிட்டு 31 பெண்கள் தேர்வாகினர். 1967-ல் நடந்த நான்காம் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 520-தாக உயர்ந்தது. ஆயினும் அத்தேர்தலில் 67 பெண்கள் மட்டுமே போட்டியிட்டு அவர்களில் 29 பேர் தேர்வாகினர். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்தது. அத்தேர்தலில் 70 பெண்கள் போட்டியிட்டு 19 பெண் வேட்பாளர்கள் தேர்வானார்கள். அதன் பின்னர் வந்த பொதுத் தேர்தலில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1980-ல் நடந்த ஏழாவது தேர்தலில் 143 பெண்கள் போட்டியிட்டு 28 பெண்கள் தேர்வாகினர். பின்னர் 1984-ம் ஆண்டில் நடந்த எட்டாவது தேர்தலில் 162 பெண்கள் போட்டியிட்டு 42 பேர் தேர்வாகினர். ஒன்பதாவது தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை 543-ஆக அதிகரித்தது. அத்தேர்தலில் 198 பெண்கள் போட்டியிட்டு 29 பெண்கள் மட்டுமே தேர்வாகினர்.
அதேபோன்று 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 326 பெண்கள் போட்டியிட்டு 37 பேர் தேர்வாகினர். நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் அதுவரை இல்லாத அளவிற்கு 1996-ம் ஆண்டு நடைபெற்ற 11-ஆவது தேர்தலில் அதிகபட்சமாக 599 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 40 பேர் தேர்வாகினர். அதேபோன்று 12-ஆவது தேர்தலில் 43 பேர்களும், 13-ஆவது தேர்தலில் 49 பேர்களும், 14-ஆவது மக்களவைத் தேர்தலில் 355 வேட்பாளர்களில் 45 பேரும் தேர்வாகினர். 15-ஆவது மக்களவைத் தேர்தலில் 59 பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெண்களின் அரசியல் பங்கேற்பு அடிப்படையில் பார்க்கும்போது 8.29
சதவிகிதம் பேர் மட்டுமே என்பது கண்துடைப்போ எனச் சந்தேகிக்க வைக்கிறது. 15-ஆவது மக்களவைத் தேர்தலில் சுமார் 59 பெண்கள் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றனர். அதுதான், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மக்களவைக்கு வந்த பெண் உறுப்பினர்களின் அதிக பட்ச எண்ணிக்கையாகும்.
தமிழகத்தில் பெண்களுக்கு அரசியல் அதிகாரம்
1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றிய மன்றங்களிலும், மாவட்ட ஊராட்சிகளிலும் உள்ள இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு என்று இருப்பதை 50 சதவிகிதம் அதிகரிக்கச் செய்வது சரியானது என அரசு கருதுகிறது. அதற்கிணங்க 1994-ம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்து மத்திய அரசு கொண்டுவந்திருந்த 33 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு 50 சதவிகிதமாக மாற்றி உயர்த்தியது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றியது. இது தொடர்பாக சட்டசபையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 20.02.2016 அன்று தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்த) சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அன்று தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடை கட்டாயமாக்கும் மசோதாவை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றியது. அச்சட்டப்படி தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் பதவியிடங்கள் 1,32,458 ஆக உள்ளது. இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கிற மசோதாவின் மூலமாக, இந்தப் பதவியிடங்களில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்கள் போடடியிட முடியும். அதைத் தொடர்ந்து பஞ்சாயத்துகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி சவுத்ரி வீரேந்தர்சிங் அறிவித்ததும் கவனிக்கத்தக்கது.
பெண்களிடையே வேலையின்மை இடைவெளி
இந்தியாவில் பெண்களிடையேயான வேலையின்மையின் அளவு ஒவ்வோராண்டும் அதிகரித்த நிலையிலேயே இருக்கின்றது. 2011-12-ல் 3.8 சதவீதமாக இருந்த பெண்கள் வேலையின்மையின் அளவு 2012-13-ல் 4.7 சதவிகிதமாக உயர்ந்தது. அதேபோன்று 2013-14-ம் ஆண்டில் 4.9 சதவீதமாக இருந்த பெண்களின் வேலையின்மையின் அளவு 2014-15-ம் ஆண்டில் 7.7 சதவீதமாக அதிகரித்தது. 2015-16-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக உயர்ந்தது. கிராமப்புறப் பெண்களிடையே வேலையின்மையின் அளவு 2013-14-ம் ஆண்டில் 4.7 சதவிகிதத்திலிருந்து, 2015-16-ம் ஆண்டில் 5.1 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் நகர்புறங்களில் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.9 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. பெண்களிடையே வேலையின்மையின் அளவு உயர்வது கவலையளிக்கும் நிலையாக இருப்பதாக பேராசிரியர். அமிதாப் குண்டு கூறுகிறார். பெண்களின் வேலையின்மை பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பெண்களின் நிலை உயர வழிவகை செய்ய வேண்டும் எனும் சிந்தனை காலத்தின் கட்டாயமாகும்.
இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு
இந்தியாவில் பெண்களுக்குப் பல்வேறு வகைப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறையவே இல்லை. நம் நாட்டில் தினமும் நூற்றுக்கும் மேலான பெண்கள் பாலியல் பலாத்காரச் சம்பவங்களுக்கு ஆளாக்கப்படுவதாக தேசிய ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. 2014-ம் ஆண்டு மட்டும் 36,735 பாலியல் வழக்குகள் பதிவானதாகவும், அதில் 5,076 வழக்குகளோடு மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இராஜஸ்தான் (3,438), டெல்லி (2,096) மற்றும் பீகார் (1,127) ஆகிய மாநிலங்கள் இந்த தரவரிசைப்பட்டியலில் இடம் பிடிப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் கல்வி விகிதாச்சாரத்தில் அதிகமான விழுக்காடுகளைப் பெற்றிருக்கும் கேரளா மாநிலமும்கூட பெண்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதில் பின்தங்கியிருக்கிறது. கேரளாவில் மட்டும் 1,347 பாலியல் வழக்குகள் பதிவாகியிருப்பதும் இதனை உறுதி செய்கிறது.
இன்றைய உலகில் பெண்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் மருத்துவமனைகளில், பாடசாலைகளில் என ஒவ்வொரு துறைகளாக பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். டெல்லியில் பாலியல் கொலை செய்யப்பட்ட நிர்பயா, இலங்கையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா, உத்திரப்பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட இரண்டு தலித் மாணவிகள், கேரள மாநிலத்தில் சாகடிக்கப்பட்ட ஷிசா, தமிழ்நாட்டில் உசிலம்பட்டியில் கௌரவக் கொலை செய்யப்பட்ட விமலா, தேனி மாவட்டத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட இளம் சிறுமி நந்தினி இதுபோன்ற பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ள சில சட்ட பிரிவுகளைத் திருத்தி சில சட்ட பிரிவுகளைப் புதிதாகச் சேர்த்துள்ளது. அந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பின் ஏப்ரல் 3, 2013-ல் குற்றவியல் விதி (திருத்தம்) சட்டம், 2013 நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
இத்திருத்தப்பட்ட சட்டம் ஒரு விளக்கத்தைத் தருகிறது. பாலியல் தாக்குதல் சாதாரணமாக இருந்தால் குற்றவாளிக்கு ஏழாண்டுகளிலிருந்து ஆயுள்வரை சிறை தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். குற்றம் பெரியளவில் இருந்தால் பத்தாண்டுகளிலிருந்து ஆயுள் வரை சிறை தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். பாலியல் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டால் அல்லது அத்தாக்குதலால் நடைபிணமாகப் போனால். அக்குற்றவாளிக்கு 20 ஆண்டுகளில் இருந்து ஆயுள் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும். கூட்டு சேர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகளிலிருந்து ஆயுள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவிற்கும் புணர் நிர்மானத்திற்கும் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் திராவகவீச்சால் உயிரிழந்த ஒரு பெண், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திராவகவீச்சால் பாதிக்கப்பட்ட இரு கல்லூரி மாணவிகள் எனப் பட்டியல் மனிதாபமற்ற அடிப்படையில் நீண்டு கொண்டே செல்லும் கொடுமைகள் வலியை ஏற்படுத்துகின்றன. திராவகம் வீசினால் இ.த.ச 326 ஏ பிரிவின்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். அத்துடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். திராவகம்வீச முயற்சித்தால் இ.த.ச.326 பி பிரிவின் படி 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அரசுச் சட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அதைக் கடந்து திராவக வீச்சாளர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் அதிகாலையில் பெண் ஐடி ஊழியர் சுவாதி அரிவாளால் வெட்டிக்கொலை, சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள்கள் என நான்கு பேர் கொலை, ஒரு கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை, மதுரையைச் சேர்ந்த சோனாலி என்ற மாணவி கரூர் அருகே கட்டையால் அடித்துக்கொலை, பின்னர் பிரான்சினா என்ற ஆசிரியர் தேவாலயத்திற்குள் வைத்து அதிகாலையில் அரிவாளால் வெட்டிக்கொலை. திருச்சி பிச்சாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரின் மகள் மோனிகா கத்தியால் எட்டு இடங்களில் குத்தப்பட்டார். அதே போன்று புதுச்சேரியிலும் ஹீனோ டோனிஸ் என்ற ஒரு கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டார். பின்னர் மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, பழையூர் மலைப்பகுதியில் இரண்டு இளைஞர்களால் விஜயலட்சுமி என்ற இளம் பெண் கொலைசெய்யப்பட்டார். இப்படிப்பட்ட கொடூரமான சூழ்நிலைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பெண்களுக்கான விடுதலையும் பாதுகாப்பும் முழுமையாகக் கிடைத்து விட்டதாக நாம் எப்படிக் கூறிவிட முடியும்.
பெண்கள் இப்படிப் பாதிக்கப்படுவதற்கு சில காரணங்களைக் கூறலாம். பல இளைஞர்கள் ஒருதலைக் காதலால்தான் கொலை செய்வதாக வாக்குமூலம் தருகின்றனர். இளம் வயதுகளில் பெண்கள் அதிக தைரியத்துடன் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் தனக்குக் கொடுக்கும் சுதந்திரத்தை எப்போதும் நேர்கொண்டு பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்மகனோடு பழகும்போது அவன் எப்படிப்பட்டவன் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முயலவேண்டும். ஆணும் பெண்ணும் நட்பு பாராட்டுவதும் சகோதர மனப்பான்மையுடன் நடந்துகொள்வதும் வரவேற்கத்தக்க காலமாற்றம்தான்.
அப்படிப் பழகும் ஆண்கள் நட்பைக் கடந்து காதலைச் சொன்னால் தெளிவான முடிவை எடுத்துவிட்டு சரியான பதிலைக் கூறி அதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முடியாத பட்சத்திற்கு தன் நண்பர்களின் உதவியையோ, பயிலும் கல்வி நிலையத்தின் உதவியையோ, குடும்பத்தின் உதவியையோ, காவல் துறையின் உதவியையோ நாடுவது தவறில்லை. அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருப்பதின் பின் விளைவுதான் ஒரு தலைக் காதல் கொலைகளுக்கு முதற்காரணமாக இருக்கின்றன. ஏனெனில் சில நாட்கள் பழகிவிட்டு விலகுகின்ற போது மனநோய்க்குள்ளாகின்ற ஆண்களாலேயே ஒருதலைக் காதல் கொலைகள் நடக்கின்றன என்பது விசாரணையின் மூலம் தெரியவருகிறது.
ஆண்களின் பெற்றோர்கள் பொதுவாக பெண்களின் மீது காட்டுகின்ற அக்கறையைப்போல அவர்களின்மீது செலுத்தத் தவறுகின்றனர். இரவு நேரங்களில் வீட்டிற்குத் தாமதமாக வந்தால்கூட கேட்பதில்லை ஏதாவது வேலையாகப் போயிட்டு வந்திருப்பான் மகன் என்ற ஏராளமான கரிசனம் எல்லா வீட்டிலும் உண்டு, கேள்வி கேட்கும் தந்தையின் வார்த்தைகள்கூட அந்நேரத்தில் செல்லாமல் போய்விடும். கல்லூரிக்குச் செல்கின்ற மாணவர்களுக்கு தான்பட்ட கஷ்டத்தை தன் மகனும் படக்கூடாதென்று நினைத்து. அளவுக்கு அதிகமான பணத்தைக் கொடுத்து அனுப்புவது, அளவுக்கு அதிகமான செல்லம் கொடுப்பது, மேல்நிலைப்படிப்பை முடித்தவுடன், இருசக்கர வாகனத்தை எடுத்துக் குடுத்துவிடுவது. மகன் கேட்கும் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவது. குறிப்பாக அறிவியல் உலகக் கண்டுபிடிப்பான தொலைதொடர்புச் சாதனம் ‘செல்லிடை கை பேசி’ தவறாகப் பயன்படுத்தப்படுவதும் காரணமாகிறது. எல்லாத்தையும் அடைந்த மாணவன் கிடைக்காத ஒன்றை தேடிச் செல்லும் மனோநிலைக்குத் தள்ளப்படுகிறான்.
பருவம் 18 வயதைத் தொட்டுவிட்டாலே உடலில் ஏற்படும் ஜீன்களின் மாற்றத்தால் காதல் தானாக வந்துவிடுகிறது. இந்தக் காதல் ஆண்-பெண் இருவருக்குள்ளும் முளைத்துவிட்டால் பிரச்சனையில்லை. அப்படி வராதபோதுதான் பிரச்சனையே உருவாகிறது. மாறாக நட்பை கொச்சைப்படுத்தும் இருபாலருமே தவறான புரிதலுக்குள் மனரீதியாகப் புகுந்துவிடுவதே மிகப்பெரிய பிரச்சனையாகும். வாழ்க்கையில் எல்லாவும் கிடைத்துவிட்டது. ஏன் இந்த காதல் மட்டும் கிடைக்கவில்லை என்று இருபாளரும் மனதளவில் அள்ளல்படுகின்றனர்.
நண்பர்களோடு பகிரவும் முடியாமல் வீட்டிலும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். சில ஆண்கள் மதுக்கடைகளுக்குச் சென்று குடித்து உடல் கெட்டுப்போகின்றனர். அப்படி மதுகுடிப்பவர்களுக்கு நண்பர்கள் வட்டம்தானாகவே வந்து சேர்ந்துவிடுகிறது. அப்போது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயச்சூழல் ஏற்படுகிறது. நண்பர்களுக்கும் தெரிந்துவிடுகிறது. அப்போது நண்பர்களின் காதல் கிளுகிளுப்பு வார்த்தைகளால் கதாநாயகனாக உணரும் ஆண் எதையும் செய்யத் தயாராகிறான். அப்படித் தயாராகி உணர்ச்சி வசப்பட்டு காதலை மறுக்கிற பெண்னைக்குறி வைத்துச் செய்கின்ற வேலைதான் இந்த ஒருதலைக் காதல் கொலைகள்.
இப்படி கொலை செய்யத் துணிகின்ற இளைஞர்களுக்கு தான் சார்ந்திருக்கும் அரசின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாததும், தாய்வழிச் சமூகம்தான் நம்மை வழி நடத்துகிறது என்ற உண்மையைச் சொல்லித்தராமல் போனதும்தான் முதற்காரணமாக இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி குற்றவாளிகள் எந்தவித தயவு தாட்சன்யமுமின்றி தண்டிக்கப்பட வேண்டும். ஒரு உயிரைக் கொல்கிறவர்களுக்கு அதற்கு நிகரான அளவிற்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றப்பின்னணியுடன் வருபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும். அதேபோன்று தொலைக்காட்சியும், சினிமாத்துறைகளும் சமூகத்திற்கு நன்நெறிகளைக் கற்றுத்தரும் திரைப்படங்களையே தருவதற்கு முன்வரவேண்டும். ஆண்-பெண் நட்பு புனிதமானது என்ற கற்பினைச் சுட்டத்தவறக் கூடாது.
இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகரான பல சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டியது தற்போதைய அரசின் அவசியமாகும். எத்தனையோ சட்ட திட்டங்கள் இருந்தும் பெண்களின் நிலை பாதிக்கப்படுவது கவலைதருவதாக உள்ளது. இதற்கு அரசு போதுமான திட்டங்களைத் தீட்டுவதைவிட ஆண்களுக்குள் அவர்களையே அறியாமல் வாழும் ஆணாதிக்கச் சிந்தனைகளைக் கிள்ளி எறிய போதுமான விழிப்புணர்வுகளைத் தர வேண்டும். பெண்கள் மீதான வரையரைதாண்டிய குற்றச் செயல்பாடுகளுக்குப் பின்னணியாக விளங்குவது ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே காரணம் எனச் சொல்வதில் மிகையில்லை என்பதே மறக்க முடியாத உண்மையாகும்.
No comments:
Post a Comment