முனைவர்.கொ.சதாசிவம்
உதவிப் பேராசிரியர், பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21.
கோ.அஜிதா, பெரு.பழனிச்சாமி
முனைவர்பட்ட ஆய்வாளர்கள், பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21. மின்னஞ்சல்: ajitha1904@gmail.com, palanimku@gmail.com
இந்திய நாட்டைப் பொறுத்தவரையில், எல்லா நடுத்தர, சாமான்ய மக்களால் பொருளாதார ரீதியாக தெரிவு செய்யப்படுகிற ஒரு போக்குவரத்து சாதனம் இரயில். 1850-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய தேசத்துக்கு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், போர்க்கால நடவடிக்கைகளுக்காக துருப்புக்களை ஏற்றிச் செல்லவும், பருத்தி ஏற்றுமதிக்காகவும் இரயில் போக்குவரத்து கொண்டுவரபட்டது. அதன்பிறகு ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு 14 பெட்டிகளைக்கொண்ட 400 பயணிகள் பயணிக்கும் வகையில் மும்பையிலிருந்து தானேவுக்கு முதல் பயணிகள் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரயில்வே பட்ஜெட் துவக்கம்
இரயில்வே நிதிநிலைகளை நிர்வகித்து ஒழுங்கு படுத்துவதற்காக, 1921-ம் ஆண்டு பிரிட்டிஷ் இரயில்வே வில்லியம் மிட்செல் அக்வொர்த் எனும் பொருளாதார நிபுணர் தலைமையில் பத்து பேர் கொண்ட குழு ஒன்றினை நியமித்தது. இக்குழு இரயில்வே பட்ஜெட்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது. “அக்வொர்த் அறிக்கை” என அழைக்கப்பட்ட இந்த அறிக்கையின் பரிந்துரையின்படி இரயில்வே பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இரயில்வே துறை, இதர துறைகளுடன் ஒப்பிடும்போது நிதி நிலையில் சிறந்து விளங்கியமையால் 1924-ம் ஆண்டு இரயில்வே நிதி, பொது நிதியில் இருந்து பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட இரயில்வே பட்ஜெட் முதன் முறையாக 1925-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் இரயில்வே பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய இரயில்வே அமைச்சர் ஜான் மத்தாய் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
இரயிவேக்கு மட்டும் தனி பட்ஜெட் ஏன்?
1925-ம் ஆண்டு தொடங்கி 92 வருடங்களாக, இந்திய இரயில்வே தனக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இதற்கான காரணங்களாக பின் வரும் விசயங்கள் கருதப்பட்டன.
Ø பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே இரயில்வே இந்தியாவின் பெரும் சொத்தாக கருதப்பட்டதாலும், 75 சதவிகித அரசு வருமானம் இரயில்வே துறை சார்ந்து இருந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கமே இரயில்வேக்கு தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.
Ø இந்திய இரயில்வே 21,000 இரயில்கள், 7172 இரயில் நிலையங்கள், 23 மில்லியன் பயணிகளையும் உள்ளடக்கி அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியான பெரிய இரயில்வே சேவையை கொண்டு விளங்குவதோடு மட்டுமல்லாமல் இத்துறையின் பங்கு பிற துறைகளிலும் ஆகப்பெரும் தாக்கத்தைக் கொண்டு விளங்குகிறது.
Ø நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கக்கூடிய நிறுவனமாகச் செயல்படுகிறது. கணக்கீட்டின்படி 44 சதவீதம் மக்கள் இரயில்வே துறையின் கீழ் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
Ø நாட்டிலேயே மிகப்பெரும் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் இரயில்வே துறையின் கீழ் 14 துணை நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஆய்வு, வடிவமைப்பு மற்றும் தரப்படுத்துதலுக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய அமைப்பான இரயில்வேதுறை நிர்வாகக் கட்டுமான வளர்ச்சிப்பணிகள், பணியாளர் ஊதியம், பயணிகள் சேவை ஆகிய பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவை அனைத்தையும் செவ்வனே செய்து முடிக்க தனிப்பட்ட வரவு செலவு திட்டம் இரயில்வே துறைக்கு அவசியமாய்பட்டது.
இனி இரயில்வே பட்ஜெட் இல்லை
1925-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை, 92 வருடங்களாக, பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பே, தனியாக தாக்கல் செய்யப்பட்டு வரும் இரயில்வே பட்ஜெட் இனி வரும் ஆண்டிலிருந்து மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு தற்போது அமல்படுத்தப்பட உள்ளது. மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆகஸ்ட் 9, 2016 அன்று மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர். அருண்ஜெட்லியிடம் இரயில்வே பட்ஜெட்டை, மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கக் கோரிய வேண்டுகோளின்படி, நிதித்துறை ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது, இக்குழு ஆகஸ்ட் 31, 2016 அன்று அறிக்கை ஒன்றைச் சமர்பித்தது.
அக்குழுவின் பரிந்துரையின்பேரில் செப்டம்பர் மாதம் மத்திய பட்ஜெட்டுடன் இரயில்வே பட்ஜெட் இணைக்கப்படும் முடிவு அறிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் கூறுகையில், இனிமேல் இரயில்வே வரவு செலவுத் திட்டமும் மத்திய பட்ஜெட்டுடன் இணைந்து செயல்படும், ஆனால் இந்த முடிவால் இரயில்வே துறையின் தன்னாட்சி பாதிக்கப்படாது எனக் கூறுகிறார். இனிமேல் இரயில்வே துறையின் வருவாய் பற்றாக்குறை, மூலதன செலவு போன்றவை நிதித்துறையின் கீழ் பரிசீலிக்கப்படும். இரயில்வே துறை நாட்டில் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக இருப்பதால் 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்த ரூ. 40,000 கோடி செலவிட வேண்டியுள்ளது, மற்றும் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முற்றுப்பெறாத 458 திட்டங்களை முடிக்க ரூ. 4.83 லட்சம் கோடிகள் தேவையாக இருக்கும் இந்நிலையில், இந்த இணைப்பு இரயில்வே துறைக்கு மிகவும் அவசியமான ஒன்று எனவும், மேலும் ஆண்டு தோறும் இரயில்வே துறையில் மத்திய பட்ஜெட்டுக்கு ஈவுத்தொகையாக செலுத்தப்பட்டு வரும் ரூ.10,000 கோடியில் இருந்து விடுபடும் வாய்ப்பும் உண்டு எனவும் தெரிவித்தார்.
இரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு இதுபற்றிக் கூறுகையில், இந்த இணைக்கப்பட்ட பட்ஜெட் இரயில்வே துறையின் மூலதன செலவை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் எனக் கூறியுள்ளார்.
இணைப்பு நல்லதா? கெட்டதா?
இந்த இரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது பற்றி பல்வேறு தரப்பினர் பல கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். பலர் இந்த இணைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் எனவும் இன்னும் பலர் அதற்கான வாய்ப்புகள் இல்லை என அறுதியிட்டும் வாதிடுகின்றனர்.
இணைப்பு நன்மையே தரும் என்போர் கீழ்வரும் வாதங்களைத் தருகின்றனர்.
i) இரயில்வேக்கு எனத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கால விரயம் தவிர்க்கப்படுகிறது.
ii) அரசியல் கட்சிகளின் தேவையற்ற தலையீடு குறைக்கப்படுகிறது.
iii) அரசின் தலையீடு இருப்பதால் மக்களுக்கு இசைவான பிற போக்குவரத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு தோன்றலாம்.
iv) இரயில்வே துறை தன்னிச்சையாக செயல்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஈவுத்தொகையை செலுத்தி வருகிறது. அது பொது பட்ஜெட்டோடு இணைக்கும்போது அந்த தொகையை மற்ற இரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு உபயோகப்படுத்தலாம்.
v) தற்போதைய காலகட்டத்தில் இரயில்வே நஷ்டத்தில் இயங்குகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி இல்லாததாலும், இருக்கும் வளங்களை முறையாக உபயோகப்படுத்தாத குறைநிலையும் நிலவுகிறது. நிதித்துறையுடன் இணைக்கப்படும்போது இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு பல்வேறு சாதகமான காரணங்களுக்காக மத்திய பட்ஜெட்டுடன் இரயில்வே பட்ஜெட்டை இணைப்பது அவசியமான ஒன்றாகக் கருதப்படலாம். ஆனால் இந்த இணைப்பு தீர்க்க முடியாத தீமைகளுக்கும் வழிவகுக்கலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
Ø இது இரயில்வே துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முதல்படி என முன்னால் இரயில்வே அமைச்சர். தினேஷ் திரிவேதி சுட்டிக்காட்டுகிறார்.
Ø இந்த இணைப்பு இரயில்வே துறைக்கு பயனளிக்காது, மாறாக அதன் தன்னாட்சியை குறைக்கும் என்பது பீகார் மாநில முதலமைச்சர் நித்திஷ் குமாரின் கருத்தாக உள்ளது.
Ø இது தற்போதைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான ஒரு முடிவு. இவ்வாறு இணைக்கப்படும்போது இரயில்வே துறையை ஒரு சமூக அமைப்பாக மாற்றுவதிலும், நிதி மற்றும் திட்டம் தீட்டுதல் ஆகியவற்றிலும் சிரமம் ஏற்படும்.
Ø மேலும் இது இரயில்வே துறையின் தன்னாட்சி நிலையை மாற்றி பிற துறைகள் மாதிரியான நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளதாக இரயில்வே மாநாட்டு குழு தலைவர் பாரத்ருஹரி மஹ்தப் சுட்டிக்காட்டுகிறார்.
Ø இரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்படும்போது அரசின் வருவாயில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட இரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பெருமளவில் பாதிக்கும் என ஆர்த்தி ஹோஸ்லா என்பவர் கூறுகிறார்.
இரயில்வே பட்ஜெட்டை மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கும் இத்தகைய முடிவு 2002-ம் ஆண்டு அடல்பிகாரி வாஜ்யாய் அவர்கள் பிரதமராக இருந்தபோதே அமல்படுத்த விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். ஏற்கனவே பல்வேறு இரயில்வே பட்ஜெட்டுகளில் தீட்டப்பட்ட திட்டங்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த முடிவு, எந்த அளவுக்கு அந்த திட்டங்களை அமல்படுத்தி முடிக்கவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் துணைபுரியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டிய கட்டாயச் சூழல் இந்திய மக்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது ஒரு வகையான துரதிஷ்டம்தான். இம்முடிவு ஏழை எளிய மக்களுக்குப் பயணச் செலவை அதிகரிக்கச் செய்து வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதும், நடுத்தர மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு எதிரானதாகவும், தனியார்மயச் சூழலுக்கு வழிவகுக்கும் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும்.
No comments:
Post a Comment