மணி பத்தாகிருச்சு வாங்கடீ சீக்கிராமப்போகலாம் நேராமானா அந்த மக்கள் நலப்பணியாளர் பையன் திட்டுவானென்ற சப்தத்தோடு அவசர அவசரமாக தூக்குவாளியை தூக்கிக்கிட்டு கிலம்பினாள் கருப்பாயி. அடியே… கருப்பாயி சோறாக்கிட்டயாடீ என்றது வேப்பமரத்தடி கயிற்றுக்கட்டிலில் அரைத்தூக்கத்தில் படுத்திருந்த குருசாமியின் உரத்த குரல்.
காலையிலயிருந்து வீட்டு வேல பாக்கவே நேரம் சரியாப்போச்சு சோறேதும் ஆக்கல நேத்து ராத்திரி கிண்டுன கேப்பக்கழியும் கருவாட்டுக்குழம்பும் அலமாறியில இருக்கு அத சாப்புடு நான் வேலைக்கு போறேன். நீயும் வாரயா? என்றாள். என்னா வேலைக்கு கூப்புடுறவ என எகத்தாளமாகக் கேட்டான் குருசாமி. யோ உன்ன என்னா வேலைக்குக் கூப்புடுவாங்க நூறுநாள் வேலைக்குத்தான் வாரயா? இல்லயா? சீக்கிரம் சொல்லு நான் கெளம்பனும் என்றாள். எனக்கு ராத்திரி அடுச்ச போத இன்னும் கண்ணக்கெட்டுது நீ போ நான் வரல என்று சோம்பேறித்தனமாக பதில்பேசி பேச்சை முடித்தான்.
மாறாப்போறம் கிளிஞ்சிருந்த ரவிக்கையைச் சரிசெய்து பக்கத்தில் கிடந்த பழைய செருப்பை தன் அழுக்குபடிந்த கால்களில் மாட்டி தலைக்கு சுனுமாடு கூட்டி அதுக்குமேல தூக்குவாளிய வச்சுச்சுமந்து வேகமாக கைகளை வீசி எட்டு வைத்து ஒத்தையடி பாதையைக் கடந்து கம்மாயைத் தொட்டுவிட மக்கள் நலப்பணியாளரின் கைகளிலிருந்த வருகைப் பதிவேட்டில் கடைசியாய் பதிவானது ஊர்காரர்களின் பெயரோடு கருப்பாயியின் பெயரும்.
வேர்த்து விருவிருத்து தனியாக நின்றிருந்தவளை அடியே கருப்பாயி.. கருப்பாயி… என்று அழைத்தது கொஞ்ச தொலைவிலிருந்து வந்த ஒரு தடித்த குரல். யாரென்று திரும்பிப் பார்த்தபோது முள்ளுச் செடிபுதறோரம் கருவேலம்மரத்தின் நிழலடியில் அமர்ந்திருந்தாள் வெள்ளையம்மாள். என்னாடி… வெள்ளையம்மா சொல்லுடீ… என்றது கருப்பாயியின் உரத்த சப்தம். இங்க வாடீ சொல்றேன் என மறுபடியும் அழைத்ததும் நகர்ந்து சென்ற கருப்பாயி
வெள்ளையம்மாளின் அருகிலிருந்த எருக்கலஞ்செடியோர நிழலில் குத்தவைத்து உக்கார்ந்தாள்.
என்னாடீ உங்க தெருவுல ஏதோ கசாமுசாவாமே… என்று குரலை இழுத்தாள் எனக்குத் தெரியல என்னா கசாமுசா சொல்லுடீ. அந்த வேலு மகன் சங்கர்பய இருக்கானே… சங்கர்பய… அவன் மேலத்தெரு சொக்கன் மக சாரதாவ சேத்துருக்கானாமில்ல என்றதும். அது என்னமோடீ எனக்குத் தெரியாது என்னைய ஆளவிடுங்க என்று மலுப்பினாள். பக்கத்திலிருந்த பூங்கோதை என்னா சோறு கொண்டு வந்த கருப்பாயி என்று பேச்சை மாத்த நான் நேத்து வச்ச கேப்பக்கழியும் கருவாட்டுகுழம்பும் கொண்டுவந்தே பூங்கோத என்றால் கருப்பாயி. நிஜமாவா? சொல்லுற என்ற பூங்கோதையின் வாயில் எச்சில் ஊர தொண்டை வழியாய் கடக்… கடக்… என்று விழுந்து மறைந்தது இரண்டு மூன்று சொட்டு என்று எண்ணிக்கை கொண்ட உமிழ்நீர்.
உக்காந்து பேசிக்கொண்டிருந்த போதே டொர்.. டொர்.. டொர்… என்ற சத்தத்தோடு புகையை கக்கியபடி க்கீக்… க்கீக்… கென்று அலாரமிட்டு கம்மாய்குள் நுழைந்தது நெற்றியில் தமிழ்நாடு அரசு என்று பெயர் பொறித்திருந்த ஒரு வெள்ளைநிற பழையகார். அதிலிருந்து மெல்லமாக இறங்கிய உயரதிகாரியைக்கண்டதும் மக்கள் நலப்பணியாளர் ஓடிவந்து வணக்கம் சொல்ல நிழலில் உக்காந்திருந்த அனைவரும் வேட்டையனின் வருகை கண்டு பறவைகலெல்லாம் கூட்டை விட்டு வெரித்து வெளியேறி ஓடுவது போல விரைந்து வேலை செய்ய முற்பட்டனர்.
கையில் நோட்டு பேனாவோடு இறங்கி நின்ற அதிகாரி என்னங்கமா இப்ப என்னப்பாத்ததும் நிழலுலயிருந்து எந்திரிச்சு ஓடி வந்து வேல செய்ரிங்க காலையிலயிருந்து ஒரு வேலையும் செய்யல போலத்தெரியுது இப்படி வேல பாத்தா நாங்க எப்பிடி உங்களுக்கு சம்பளம் தாரது. அரசாங்கத்த ஏன் இப்படி ஏமாத்துரிங்க என்று சிடுசிடுத்துப்பேசினார் மூக்கிற்கு மேலாய் பெரிய கண்ணாடி போட்டு வயதில் முதிர்ந்திருந்த உயரதிகாரி. கோபத்தில் பேசிய உயரதிகாரியிடமிருந்து மக்கள் நலப்பணியாளருக்கு நான்கைந்து திட்டுகள் வந்து சேர்ந்தன. திட்டு வாங்கி வாங்கிப் பழகிப்போன மக்கள் நலப்பணியாளரும் அதைப்பொருட்படுத்தாமல் சரிங்க சார்… சரிங்க சார்… என்று நின்றிருந்தார்.
இல்லங்க சார் காலையிலயிருந்து வேல பாத்துட்டு செத்தநேரம் நிழலுல களைப்பாறலாம்னு இப்பதா உக்காந்தம் அதுக்குள்ள நீங்க வந்துட்டிங்க
அதான் பயந்துபோயி எந்துருச்சு ஓடிவந்தம் சார். என்றது உயரதிகாரியின் அருகில் நின்றிருந்த குருவம்மாளின் பயந்த குரல். சரி… சரி… இனிமேலாவது நியாயமா வேலையப் பாருங்க அரசாங்கத்த ஏமாத்தாதிங்க என்று பட்டும்படாமல் பேசி தன் முட்டைக்கண்களை உருட்டி திறட்டி முறைத்தபடி வண்டி ஏறினார்.
அந்த பழையகாரை ஓட்டுனர் மெல்ல மெல்ல நகர்த்த ஓடை மண்ணில் புதைந்திருந்த நான்கு டயர்களும் செம்மண் புழுதியைக்கிளப்பி கம்மாயை விட்டு வெளியேற எல்லாரும் வேக வேகமாக வேலை செய்தனர். அவசர அவசரமாக வேலைபார்த்தபோது முத்தையாவின் மண்வெட்டி தடுமாறி கருப்பாயியின் காலில்பட்டுவிட காயமாக்கிவிட்டது. அடியாத்தே! காயமாகிருச்சே என்று பதறி ஓடிவந்த வெள்ளையம்மாளின் கறங்கள் பக்கத்தில் கிடந்த பழைய துணியைக்கிழித்து கருப்பாயியின் காலில் காயத்தை மறைத்து ஒரு சிறிய கட்டைக் கட்டிவிட்டு மேலாக தண்ணீரை ஊற்றிவிட.
கூடி நின்ற கூட்டத்தை விலக்கி அருகில்வந்த முத்தையா சற்று பயந்தும் சங்கடப்பட்டும் கருப்பாயி அக்கா… கருப்பாயி அக்கா… நான் தெரியாம மண்வெட்டிய உன் காலுல போட்டுட்டேன் என்னைய
மன்னிச்சிறுக்கா என்றான். முத்தையா தம்பி பெரிய வார்த்தையெல்லாம் பேசாதபா அப்பிடி ஒன்னும் ஏங்காலுல பெருசாக் காயமாகிறல என்றாள்.
நேரம் சற்று கடற உச்சிவெயிலும் கண்ணைக்கெட்ட பசி எல்லோரின் வயிற்றையும் கவ்வியது. அந்த நிமிடத்தில் தூரத்திலிருந்து வேகமாக வந்த மக்கள் நலப்பணியாளரின் உரத்த சப்தம் எல்லாறையும் சாப்பிட வரவழைத்தது. எல்லோரின் கரங்களும் தூக்குவாளியைத் தூக்கியபடி ஆலமரத்தடி நிழலைத்தேடி விரைந்தது.
பக்கத்திலிருந்த அடிகுழாயில் டங்கு… டங்கு… கென்று குமரிப்பெண்கள் தண்ணியடிக்க வரிசையில் நின்ற கிழடுகட்டைகலெல்லாம் கை கால்களை தூய்மையாக கழுவிமுடித்தனர். இருபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஆங்காங்கே கும்மல் கும்மலாக அமர்ந்து மதிய உணவை உனக்கு எனக்கு என்று ஒற்றுமையாகப் பகிர்ந்து உண்டு முடித்தன.
அக்குழுக்களில் ஆறாவதாக அமர்ந்திருந்த குழுவில்தான் கருப்பாயி வெள்ளையம்மாள் பூங்கோதை குருவம்மா முத்தையா செல்லமுத்து என்று நீண்ட பட்டியலும் இடம் பெற்றிருந்ததுருந்தது. அப்போது வெகு நாட்க்களாக பான்பராக்கின் பிடியில் சிக்கி தவிர்த்துக் கொண்டிருந்த செல்லமுத்துவின் காறைபடிந்த பற்கள் கொண்ட வாய் திறக்க ஆரம்பித்தது. நாற்றம் சற்று அதிகமாகயிருந்ததைக் கண்டு முகம்சுழித்து ஒன்றும் தெரியாதவள் போல் திரும்பினாள் குருவம்மா. கருப்பாயி அக்கா மாமா வீட்டுல சும்மாதான இருப்பாரு அவரையும் வேலைக்கு கூப்பிட்டு வரலாம்ல இங்க வேல என்னா அவ்வளவு கடுசாவா இருக்கு என்றான்.
அந்த கொடுமைய ஏப்பா கேக்குற அந்த மனுச நம்ம சொல்றதயெல்லாம் காதுகொடுத்தே கேக்க மாட்டாருப்பா முன்னயாவது காட்டு வேலைக்குப்போவாறு ஒரு நாளைக்கு இருநூறு முன்னூறுன்னு கொண்டு வருவாறு அதவச்சு குடும்ப நல்ல படியா முன்னேறி வந்துச்சு ஆனா இப்பயெல்லாம் அவரு ஒருவேலைக்கும் போறதில்லபா. வீட்டுல அரசாங்கம் கொடுத்த இலவச கலர் டிவியும் காத்தாடியும் இருக்கு நாற்காலில கால்மேல கால்போட்டு உக்காந்து நேரந்தவறாம செய்திகளப்பாத்து ஊரு வித்தாரம் பேசிக்கிட்டு அவருவாட்டுக்க ஊர சுத்திக்கிட்டு திரியுவாறுப்பா.
பொழுது விழுந்தா வீட்டுக்கு வருவாரு ஒயின்சாப்புக்குப் போகனும் பணம் குடுடீன்னு சட்டமா கேப்பாறு அப்பதிக்கு பணம் தரலனா போச்சுப்பா வீட்டுல ரனகலமே பண்ணிருவாறு என்னாப்பா செய்றது வசங்கெட்ட ஆளக்கட்டி நானும் படாத பாடுபட்டு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்கேன்பா என்னா செய்ய என்று பேசியதோடு கண்களைக்கசக்கியபடி வாயை மூடினாள்.
கடிகாரமுள் சற்று மூன்று மணியைத்தொட்டுவிட வேலையை முடித்து எல்லோரும் வீட்டுக்குக்கிளம்பினர். வீட்டுக்கு வந்த கருப்பாயி வாசலில் அமர்ந்தபடி அடியே செல்லமா… செல்லமா… குடிக்கக்கொஞ்சம் தண்ணி குடுடி அம்மாவுக்கு என்றாள். ஆடுமேய்க்கப் போனவ இன்னும் வரல நீயே மோந்துகுடி என்று சளைப்பாக கடிந்து பேசினான் குருசாமி.
சரி வீட்டுக்கு வெளியில இந்த முட்டபலுப்பு இன்னவரைக்கும் எரியுதே! அதக்கூட உன்னால அமத்த முடியலயா? என்றாள். இப்ப என்னா காசா பணமா அரசாங்கம் குடுத்த இலவச கரண்டுதான அதுவாட்டுக்க எரிஞ்சுட்டுப்போகுது. அதுக்கு நீ என்னா கரண்டுபில்லா கட்டுற சும்மா இருடி என்று ஒரு கையில் மீசையை முறுக்கியபடி முறைத்துப்பார்த்தான் .
வீட்டுல இப்பிடியே சும்மா உக்காந்து இருக்காட்டி ஆட்டுகுட்டிகளக்கூட மேய்க்கப்போகலாம்லயா? அதுக்குத்தே செல்லம்மா போயிருக்கால எனக்கு ஒரே உடம்பு வலியா இருக்கு என்னத் தொல்ல பண்ணாத முடுஞ்சா ஒரு நூறு ரூபா குடு. ஏங்கிட்ட ஒரு நயாப்பைசா கூடயில்ல. அப்பவிடு இனிமேல் நான் ஆட்டவித்து செலவு பண்றேன். அய்யய்யோ அது அரசாங்கம் இலவசமா குடுத்த ஆடுகயா அதையும் வித்து தொலச்சுறாத அப்புறம் நம்ம குடும்பத்தையே போலீஸ் புடுச்சுட்டு போயிருவாங்க. அடப்போடி பைத்தியக்காரி நம்ம பக்கத்து வீட்டு மாரிமுத்தெல்லாம் ஆட்ட வித்துதான் மகளுக்கு ஊருமெச்ச வளையகாப்பு பண்ணுனான். அவனெயெல்லாம் ஒரு போலீசும் பிடிக்கல ஏண்டி வெட்டிப்பேச்சா பேசுற போயி வேற வேலையிருந்தா பாருடீ.
இன்னொன்னு சொல்றே கேலு கருப்பாயி என்று பணிந்தவன். இப்ப நம்மகிட்ட இருக்குற ஆடயெல்லாம் வித்துச்செலவு பண்ணுனாத்தான் நாளைக்கு நமக்கு இலவசமா பால்மாடு தருவாங்க தெரிஞ்சுக்க என்று தெளிவாகச் சொல்ல இப்படியே ஓசியிலயேவும் பொழப்ப ஓட்டனும்ன்னு நெனக்கிறேயே? நீ சுயமா என்னைக்கு சம்பாரிக்கப்போற என்று கடிந்ததோடு.
செல்லம்மாவத்தா நீ படிக்க வைக்காம ஆடமேக்கப்போட்டுட்ட செல்வத்தையாவது நல்லா படிக்க வைக்கலாம்ன்னா நீ குடுச்சே எல்லா சொத்தையும் தொலச்சுறுவ போல தெரியுதே என்று கண்ணீர் மல்க பேசினாள்.
ஆமா எனக்கு இப்பதா ஞாபகம் வருது தம்பிக்கு இந்ததடவ பள்ளிக்கூடத்துல ஏதோ கம்பியூட்டரு தருவாங்கலாம். பக்கத்து வீட்டுப் பசங்க சொன்னாங்க
அத வித்தா ஒரு பத்தாயிறத்துக்கு போகுமாம் என்றதும் உன்னய திருத்தவே முடியாது யா என்று தன் தலையில் அடித்து அழுதாள். எனக்கு இப்ப குடிக்க பணம் வேனும் தரமுடியுமா முடியாதா? என்று வீம்பாகக் கேட்டவனுக்கு வேறு வழியின்றி தன் மகனின் மேல்படிப்பு செலவுக்காக சேத்து வச்சிருந்த உண்டியல் பணத்தில் ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொடுத்தாள். ஏண்டி அரசாங்கம் நமக்கு எவ்வளவோ இலவசமா பண்ணிருக்கே அந்த அரசாங்கத்துக்கு தினமும் பத்துரூபா வருமானம் குடுக்க ஏன்டி இப்பிடி சாகுற என்று கருப்பாயியின் கொமட்டில் இடதுகையாள் இடித்துவிட்டு வேகமாகப் பணத்தைப் பிடுங்கி ஒயின்சாப்புக்கு விரைந்தான்.
இந்த பாளாப்போன அரசாங்கம் இப்படி ஒயின்சாப்ப திறந்து வச்சு ஏங்குடும்பத்த கெடுத்து நடுத்தெருவுக்கு கொண்டுவந்துருச்சே என்று ஒப்பாறி வைத்து அழுது கொண்டிறுந்தாள். வீதி வழியாய் போன முத்தையா வீட்டிற்கு திடீரென்று வந்துவிட வாப்பா… முத்தையா வா… என்னா இம்புட்டு தூரம் வந்துருக்க என்று கண்களைத் துடைத்தவாறு பேசினாள்.
ஆமாக்கா சும்மாதா வந்தேன் என்ற முத்தையா இந்தாக்கா காலுக்கு மருந்து வாங்கிப்போட்டுக்கோ என்று முப்பது ரூபாயைக் கொடுக்கவும் வேண்டாமென்று கையை வைத்து மறைத்தாள். முத்தையாவின் கைகள் பணத்தை வம்பாகக் கொடுக்கவும். இருவரின் கரங்களும் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை எதிர் பாராமல் வந்த குருசாமி பார்த்துவிட்டு ஓடிவந்து முத்தையாவின் நெஞ்சுச்சட்டையை பிடித்து எத்தன நாளாடா இந்தப்பழக்கம் நடக்குது என்று அறட்டி கண்ணத்தில் அரைந்து விட்டான்.
பள்ளியிலிருந்து வந்த செல்வமும் கொட்டத்திலிருந்து வந்த செல்லம்மாவும் விரைந்து வந்து சண்டையை விளக்கிவிட பொழுதும் சாய்ந்து விட்டது. நடந்த விசயத்தை விவரமாக விளக்கிச் சொல்லியும் புரிந்து கொள்ள சுய நினைவில்லாத அளவிற்கு போதையிலிருந்த குருசாமி சாப்பிடாமலேயே தூங்கிவிட்டான். காலையில் வழக்கத்திற்கு மாறாக சீக்கிறமாக எழுந்த குருசாமி திண்ணையில் உக்காந்து வீதியைப்பார்த்து பீடி குடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த செல்லமுத்து குருசாமியின்
வீட்டுக்கு வந்தான். என்னா? குருசாமி அண்ணே… இன்னிக்கு மழையே வந்துரும் போல சீக்கிரமே எந்திருச்சுட்டிங்க. அட ஆமாப்பா என்று பேசியவன். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான். ஏன்னே இப்படி சும்மாவே இருக்காட்டி அக்காகூட நூறு நாள் வேலைக்கு வரவேண்டியதான.
செல்லமுத்துவை முறைத்துப்பார்த்த குருசாமி எனக்கு என்னடா? கொறச்சல் வீட்டுக்குத்தேவையான அரிசி மொதக்கொண்டு அரசாங்கம் இலவசமா தருது. அப்புற அப்ப அப்ப நடக்குற கட்சி மீட்டிங்குல கலந்துக்கிட்டா மட்டன் பிரியாணியும் குவாட்டரும் தாராங்க. அடுத்து வரப்போர தேர்தலுல எல்லாக்கட்சி காரங்ககிட்டயிருந்தும் ஏமாத்தி கொஞ்சங் கொஞ்சமா பணம் கறந்தா வாழ்கைய சாதாரணமா ஓட்டிரலாம். நம்ம நாட்டுலதான் யாரு ஆட்சிக்கு வந்தாலும் நிறைய இலவசங்கள் தாராங்கலே.
இதுக்குமேல ஒரு மனுசனுக்கு என்னடா வேனும். நீ என்னைய எதுக்குடா வேலைக்குக் கூப்புடுற போடா வேலையத்தவனே! என்று செல்லமுத்துவை கடிந்து பேசி விரட்டியடிக்க துண்டைக் காணம் துணியக்கானமென்று ஓடி விட்டான்.
வழக்கம்போல கருப்பாயி வேலைக்குக் கிளம்பிச்செல்ல அவ்வழியாய் வந்துசேர்ந்த குருவம்மாவிடம் நேற்று வீட்டில் நடந்த கதையைச் சொல்லி அழுதுகொண்டே நடந்து செல்ல முனியாண்டி கோவிலைத்தாண்டி இரண்டு ஓடைகளைக் கடந்ததும் சீமக்கருவேலம்மரங்கள் நிறைந்திருந்த புதுக்கொளம் கம்மாய் வந்துவிட்டது.
No comments:
Post a Comment