Wednesday, 30 March 2016

சாதியின் தாண்டவம்



நம் சுதந்திர இந்திய நாடு எத்தனையோ முன்னேற்றங்களை நோக்கிப் பயணித்தாலும் அது இன்னும் சாதி எனும் சங்கடமான சூழலிளிருந்து மீண்டேறி வராமல்தான் இருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டுதான் ரோஹித் வெமுலாவின் ()றப்பு. ரோஹித் வெமுலா ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக படிப்பு துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்து வந்தார். அவர் நம் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை அண்ணல். டாக்டர். அம்பேத்கரின் மீது அதிக பற்றுகொண்டிருந்தார். மாணவர்களின் நலனை நேசித்தார், அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
ஹைதரபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) எனும் அமைப்பு மாணவர்களுக்கும் ரோஹித் வெமுலா சார்ந்திருந்த அம்பேத்கர் சங்க மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு ரோஹித் வெமுலா உள்பட 5 மாணவர்களை பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டது. இவர்கள் மீதான புகார்கள் பற்றிய விசாரணையில் விசாரணைக்குழு ரோஹித் வெமுலா மற்றும் சகாக்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தது. அம்பேத்கர் மாணவர் சங்க மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து 18 டிசம்பர், 2015-ல் எழுதிக்கொடுத்த கடிதத்தை பல்கலைக் கழகம் கண்டுகொள்ளவில்லை. இதைவிடவும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் மனிதவள மேம்பாடு அமைச்சகம் இந்த 5 ஆய்வு மாணவர்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி 4 முறை கடிதம் எழுதியனுப்பியுள்ளது. அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிந்த பின்பும் பல்கலைக் கழக விடுதியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கெல்லாம் அஞ்சிவிடாத ரோஹித் வெமுலா பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள்ளேயே இருந்த மரத்தடியில் குடியேறினார். அப்போதும் டாக்டர்.அம்பேத்கரின் புகைப்படத்தை தன் பக்கத்திலேயே வைத்திருந்தார். பகலில் கடும் வெயிலுக்கும் இரவில் கடும் பனிக்குமிடையில் அதிக சிரமங்களுக்கு ஆளானார். ஒரு புரட்சியாளரை தன் வழிகாட்டியாக எடுத்து அவரைப் படித்து வளர்ந்த இவர், அவர் போலவே அறப்போராட்ட வழியில் நம் ஜனநாயக நாட்டில் அராஜகத்தை எதிர்த்து தீர்வுகாண முயன்றார். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சிவிடாத நிர்வாகம் மாணவர்களால் எங்களை என்ன செய்ய முடியும் என்ற சவாலோடு செயல்பட்டது.
இந்த அடக்கு முறைகளுக்கு எதிராக இருவார காலம் தொடர் போராட்டத்தில் அம்பேத்கர் மாணவர் சங்க மாணவர்கள் உட்பட பல்வேறு மாணவ இயக்கங்களும் ஒன்று சேர்ந்து அறப்போராட்டத்தை நடத்தினார்கள். இரண்டுவார காலமாக போராட்டம் தொடர்ந்தும் ஹைதரபாத் மத்திய பல்கலைக் கழக நிர்வாகம் போராடும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுகாண முன்வரவில்லை. இந்த உலகில் இப்படிப்பட்ட மனித மிருகங்களும் உயிர் வாழ்கின்றனவே என்று வேதனைக்கு ஆளான ரோஹித் வெமுலா இவ்வுலகில் வாழ வெறுத்தார், தம் இறப்பாலாவது தன் சகாக்களுக்கு நீதி கிடைக்கட்டும், தான் பயிலும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு அறிவு வரட்டும் உலகெங்குமுள்ள மாணவ சமூகம் எழுச்சி பெறட்டுமென்ற முடிவோடு தன்னை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தார். அரசாங்கமும் நிர்வாகத்திற்கு ஆதரவாய் செயல்பட்டதால் மிகவும் மனமுடைந்து போன ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்ளத் தயாரானார். அதற்காக தன் நண்பர் உமாவின் விடுதி அறையைத் தேர்வு செய்தார். தூக்குக் கயிறை தன் வசமாக வைத்திருந்த அவர் தன் சட்டைப்பையில் பேனாவையும் வைத்திருக்க மறக்கவில்லை. இரண்டு வெள்ளைக் காகிதங்களை எடுத்து எழுதுகிறார்.
காலை வணக்கம்.
இக்கடிதத்தை நீங்கள் வாசிக்கையில் நானிருக்க மாட்டேன். என்மீது கோபம் கொள்ள வேண்டாம். நானறிவேன், உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், நேசித்தீர்கள், என்னை நன்றாக நடத்தினீர்கள். எனக்கு எவர் மீதும் புகார் இல்லை மாறாக அது எப்பொழுதும் என்மீதுதான் எனக்குண்டு எனக்குப் பிரச்சனைகள் இருந்தன. என் ஆன்மாவுக்கும் உடலுக்குமிடையே பெருகிவரும் இடைவெளியை நான் உணர்கிறேன். அதனால் உருக்குலைந்தவனாய் மாறிவிட்டேன். எழுத்தாளராக வேண்டும் என்றே எப்பொழுதும் விரும்பியிருக்கிறேன். கார்ல் ஸேகன் போல அறிவியலை எழுத வேண்டுமென்பதே என் விழைவு ஆனால் இறுதியில் இக்கடிதம் மட்டுமே எனக்கு எழுதக் கிடைத்திருக்கிறது.
நான் அறிவியலை, நட்சத்திரங்களை, இயற்கையை நேசித்திருந்தேன். ஆனால் பின்னாளில் மனிதர்கள் மீது நேசம் கொண்டேன். இயற்கையிடமிருந்து வெகுகாலத்திற்கு முன்பே விலகிவிட்டவர்கள். அவர்கள் என்பதையறியாமல் நான் மனிதர்களை நேசித்தேன். எம் உணர்வுகள் இரண்டாந்தரமாக்கப்பட்டன. எம் அன்பு போலியாக்கப்பட்டது. எம் நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டன. எம் சுயம், செயற்கையான கலை மூலமாகவே செல்லத்தக்கதாயிற்று. காயப்படாமல் நேசங்கொள்வது மிகவும் கடினமானதாக மாறி இருக்கிறது.
மனிதனின் மதிப்பு அவனுடைய உடனடி அடையாளமாக மட்டும் சுருக்கப்பட்டது. அண்மைய சாத்தியங்களாகிவிட்ட தேர்தல் வாக்காகவும் எண்ணாகவும் பண்டமாகவும் குறைக்கப்பட்டுவிட்டது. இங்கு மனிதன் ஒருபோதும் அவனுடைய மனமாகப் பார்க்கப்பட்டதில்லை. கனவுகளால் உருவான அற்புதமாகவும் கருதப்பட்டதில்லை. ஒவ்வொரு துறையிலும், கல்வியிலும், தெருக்களிலும், அரசியலிலும் அப்படியே மரணிப்பதிலும் வாழ்தலிலும்கூட. இதுபோன்றதொரு கடிதத்தை முதன்முறையாக எழுதுகிறேன். ஓர் இறுதிக் கடிதத்தை எழுதுவது இதுவே முதன்முறை ஒருவேளை இக்கடிதத்தை நான் சரியான முறையில் எழுதவில்லையெனில் என்னை மன்னியுங்கள்.
தவறு என்மீதும் இருக்கலாம், உலகைப் புரிந்து கொள்வதில், அன்பை, வலியை, வாழ்க்கையை, மரணத்தைப் புரிந்து கொள்வதில் நான் தவறிழைத்திருக்கக்கூடும். ஒருபோதும் அவசரப்பட்டதில்லை. ஆனால் எப்போதும் ஒரு வாழ்க்கையைத் தொடங்க பெரும் ஆவல் கொண்டு விரைந்திருக்கிறேன். ஒரு சிலருக்கு வாழ்வே சாபம்தான். என் பிறப்பே மரணத்தையொத்ததொரு விபத்துதான். என் பால்யகால தனிமையிலிருந்து ஒருபோதும் என்னால் மீள இயலவில்லை. கடந்த காலத்தில் எவராலும் பாராட்டப்படாத குழந்தை நான். இலக்கணத்தில் நான் காயப்பட்டிருக்கவில்லை. வருத்தங்கொள்ளவும் இல்லை. வெறுமையாய் இருக்கிறேன். அவ்வளவே. என் குறித்த கவலையற்று உள்ளேன். இந்நிலை மிகவும் பரிதாபமானது. ஆகவே நான் இதைச் செய்கிறேன்.
பிறர் என்னை கோழை என்றழைக்கலாம், சுயநலமானவன் அல்லது முட்டாள் என்றும் கூறலாம். நானே போய்விட்டபின், என்னை பிறர் என்னவென்று அழைத்தாலும் நான் கவலைப்படத் தேவையில்லை. இறப்பிற்குப் பின்னான கதைகளில், பேய்கள் அல்லது ஆவிகளில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரே ஒரு விடயத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளதென்று கொண்டால், நட்சத்திரங்களிடையே பயணித்து பிற உலகங்களை அறிந்துகொள்ளும் நம்பிக்கை உண்டு. இந்த மடலை வாசிக்கும் எவரேனும் எனக்கு செய்வதற்கு ஒன்று உண்டெனில், இதை மட்டும் செய்யுங்கள். எனக்கு 7 மாத கால உதவித்தொகை வரவேண்டியிருக்கிறது. ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய். என் குடும்பத்திற்கு அத்தொகை போய்ச் சேர்வதை உறுதி செய்யுங்கள். ராம்ஜிக்கு 40 ஆயிரம் வரை நான் தரவேண்டியுள்ளது. அவர் என்னிடம் ஒருபோதும் திருப்பிக்கேட்டதில்லை. ஆனால் அதிலிருந்து இத்தொகையும் செலுத்திவிடுங்கள்.
என் இறுதிச்சடங்கு மௌனமாகவும் அமைதியாகவும் நடக்கட்டும். நான் வெறுமனே தோன்றி மறைந்ததுபோல் இருங்கள். போதும். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். உயிருடனிருப்பதைவிட இறப்பில் நான் மகிழ்கிறேன். என்றறியுங்கள். “நிழல்களிலிருந்து நட்சத்திரங்களுக்குச் செல்கிறேன்”. சில முறைகளை எழுத மறந்துபோனேன். என்னைக் கொல்லும் என் செய்கைக்கு எவரும் பொறுப்பல்ல.
தங்கள் செய்கைகளாலோ அல்லது சொற்களாலோ எவரும் இதைச் செய்யும்படி என்னைத் தூண்டவில்லை. இது என் முடிவு நான், நான் மட்டுமே இதற்குக் காரணம் என் நண்பர்களையோ எதிரிகளையோ நான் சென்றபின் சிக்கலில் ஆழ்த்த வேண்டாம். உமா அண்ணா, உங்கள் அறையை இதற்குப் பயன்படுத்துவதற்கு மன்னியுங்கள். ASA குடும்பத்திற்கு, உங்கள் அனைவரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்குவதற்காக மன்னியுங்கள். நீங்கள் என்னை மிகவும் நேசித்தீர்கள். வருங்காலம் சிறப்பாக அமைய வாழத்துக்கள். இறுதியாக ஒருமுறை.  
ஜெய் பீம். விடைபெறுகிறேன்.
இதை எழுதி முடித்து வைத்துவிட்டு தூக்கில் தொங்குகிறார் ரோஹித் வெமுலா. அவரது வாழ்க்கையில் இறுதி நொடிகளில் அவர் எழுதிய கடிதத்தைப் படிக்கும்போது நம் நெஞ்சம் சொல்வது அவர் நிரபராதி என்பதை மட்டுமே! இதை ஏன்? முன்பே அப்பல்கலை நிர்வாகம் புரிந்து கொள்ளவில்லை என்பதே கேள்விக் குறியாக நிற்கிறது. இக்கடிதத்தின் மூலம் நம் இந்தியத் திருநாடு ஓர் சிறந்த ஆய்வாளரை, எழுத்தாளரை, கவிஞரை, தொழில்நுட்ப வல்லுனரை, படைப்பாளியை, போராளியை, புரட்சியாளரை, கூர்மைமிகு சிந்தனைவாதியை இழந்திருக்கிறது என்ற எண்ணம் தோன்றுகிறது.
தற்கொலைக்குக் காரணம்:
ரோஹித் வெமுலா அம்பேத்கரை படித்தார், அம்பேத்கரின் சிந்தனைவாதியாக வளர்ந்தார். அம்பேத்கரின் வழியில் நின்று தலித்துகளையும், முஸ்லீம்களையும் ஒன்றிணைக்கும் வழிமுறைகளைத் தேடினார். ரோஹித் வெமுலா சார்ந்த அம்பேத்கர் சங்க மாணவர்கள் முசாரப் கலவரத்தின் உண்யைச் சொல்லும்முசாபர் நகர் பாக்கி ஹேஎனும் ஆவணப்படத்தை திரையிட்டதே அவர்கள் செய்த தேச விரோதச் செயல் எனக் குற்றம் சுமத்தியது, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம். அம்பேத்கர் மாணவர் சங்க மாணவர்களை தேசவிரோதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சமூக வலைதளங்களில் (ஏபிவிபி) மாணவ அமைப்பினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததால் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் சார்பில் அதனை கண்டித்தனர். இதனால் அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி ராணி ஆகியோர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக் கழகத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். இதன் விளைவாகவே ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்களை விசாரணை ஏதுமின்றி ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. 
சட்டமேதை, புரட்சியாளர், அண்ணல் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் போராடிய மிகப்பெரிய அறிவாளர் என்பதையும், அவரைத் தாங்கி நிற்கும் மாணவர்கள் ஒருபோதும் தவறான வழிமுறையில் பயணிக்க மாட்டார்கள் எப்பதையும் ஏன் இந்த அமைச்சர்கள் அறிந்திருக்கவில்லை? என்பதுதான் கேள்விக்குறிய விடயம். இந்த அமைச்சர்கள் அம்பேத்கர் அவர்களை முழுமையாகத் தெரிந்திருக்கவில்லையென்பதே இதற்கான முதற்காரணம். மேலும் போதுமான படிப்பறிவின்மையே இச்செயலுக்கு அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒன்பது மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இவர்களில் எட்டு பேர் தலித் மாணவர்கள். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்ற மாணவர் ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் சாதிய ஒடுக்கு முறைக்கு பலியாகி இருக்கிறார். சேலம் அருகே உள்ள ஜலகண்டபுரத்தில் பன்றிகளை வளர்த்து வாழ்க்கையை ஓட்டியவர்கள் பழனிச்சாமியும் இவரது மனைவி தெய்வானையும். அவர்களுடைய மகன் செந்தில், அவர் படித்த மூன்று கல்லூரிகளிலும் சிறப்பான மாணவராக இருந்தார். அப்துல்கலாமை நேசித்த அவர், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் ஆராய்ச்சிப் பட்டம் பெறத் தேர்வானவர். ஆனால், 2008-ஆம் ஆண்டு இவர் மர்மமாக கொல்லப்பட்டார். இவர் இறந்த தகவலைக்கூட ஹைதரபாத் மத்திய பல்கலை கழக நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ஆறுநாட்களுக்கு பிறகே பெற்றோருக்கு தெரியவந்தது. பாவம் அந்த பெற்றோர்கள் தங்கள் மகனின் நினைவுகளோடு இன்னும் வாழ்கிறார்கள். தலித் மாணவர்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்வது வேதனையை அளிக்கிறது.
இந்த சம்பவங்களையெல்லாம் பார்க்கும் போது அண்ணல். டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் இயற்றிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களெல்லாம் உயிர்ப்புடன் இருக்கிறதா? இல்லையா? மத்திய அரசு அதைச் சரியாக செயல்பாட்டில் வைத்திருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி சட்டங்கள் உயிர்ப்புடன் இருந்திருந்தால் இப்படியான வஞ்சங்களும், வன்மங்களும் தலைவிரித்தாடாது என்பதே உண்மை.
உயர்கல்வி வளாகங்கள் சாதி மத மொழிச்சார்பற்று, ஜனநாயக கருத்துச் சுதந்திரமாக இருக்கவேண்டும். என்பதே ரோஹித் வேமுலாவின் நோக்கம். உயர்கல்வி வளாகங்கள் மாணவர்களுக்குள் சாதிய அத்துமீறல்களுக்கு வழிவகுத்துத் தருவதாக இருக்கக் கூடாது. மாணவர்களுக்கு கருத்துரிமைச் சுதந்திரம் அளிக்க வேண்டும். உயர்கல்வி வளாகங்கள் மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. அரசு வருங்காலங்களில் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துமானால், ரோஹித் வேமுலா போன்ற இளைஞர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இல்லையேல் இது போன்ற சூழல்களே ஏற்படும். ரோஹித் வேமுலாவின் இறப்பு அன்றோடு முடிந்து போனதல்ல. மீண்டும் இங்கே அவர் போன்ற துடிப்பு மிக்க இளைஞர்கள் உயிர்பிப்பார்கள் ஆயிரமாக, இலட்சமாக, கோடியாக. அந்த இளைஞர் கூட்டத்தால் நம் இந்தியா ஒருநாள் நலம்பெறும், வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.

No comments:

Post a Comment