உலகமயச் சூழலும் பெண்களும்
முன்னுரை
உலகமயச் சூழலில் பெண்களின் நிலை முன்னேற்றம் கண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த படியாகத்தான் இருக்கின்றன. பெண்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் ஆணாதிக்கமானது ஓங்கி எழும்போது பெண்களின் நிலை நசுக்கப்படுகிறது. பெண்கள் விடுதலை பெறுவதற்காகவும் உலக பெண்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காகவும் வருடந்தோறும் மார்ச் 8-ம் நாளை உலக நாடுகள் உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றன.
உலக மக்கள் தொகையில் பெண்கள் 2000-ம் அறிக்கை
•
உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் பெண்கள்.
•
உலக உழைக்கும் சக்தியில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள்.
•
உலக மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு வருமானம் பெண்களால் பெறப்படுகிறது.
•
உலகிலுள்ள மொத்த சொத்தில் ஒரேயொரு விழுக்காடு மட்டும் பெண்களுக்கு உரியதாகும்.
•
இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் 100க்கு 39 பேர்.
•
வேலை செய்யும் பெண்களில் அமைப்பு ரீதியற்ற தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு பெண்கள் வேலை செய்கிறார்கள்.
•
இந்தியாவில் வேலை செய்யும் பெண்களில் அமைப்பு ரீதியுள்ள தொழிற்சாலைகளில் உள்ளோர் 10 விழுக்காடும்.
•
பள்ளி இறுதி நிலைக்குள் பள்ளியிலிருந்து நின்றுவிடும் பெண்கள் 100க்கு 78 பேர்.
•
உயர் நிர்வாகப் பள்ளிகளில் பெண்கள் 100க்கு ஒருவர்.
•
இந்தியப் பாராளுமன்றத்தில் 9.2 விழுக்காடுதான் பெண் எம்.பிக்கள்.
•
இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பெண் துன்புறுத்தப்படுகிறார்.
•
இந்தியாவில் 22 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார்.
•
இந்தியாவில் ஒவ்வொரு 50 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்.
•
ஒவ்வொரு 70 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பெண் விபச்சாரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்.
•
ஒவ்வொரு 106 நிமிடத்திற்கொரு முறை ஒரு பெண் வரதட்சணை கொடுமைக்கு உயிரைவிட வேண்டியுள்ளது.
பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்களிலிருந்து இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருமுறை ஒரு பெண்ணுக்கு குற்றமிழைக்கப்படுகிறது என்ற கசப்பான உண்மை வெளிப்படுகிறது.
உலக மகளிர் தின வரலாறு
வீட்டு வேலைகளைச் செய்யவும் ஆண்களை சந்தோசப்படுத்தவும் மட்டுமே பெண்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்ற ஆணாதிக்கக் கருத்து மேலோங்கியிருந்த காலம் அது. கல்வியறிவு, பொருளாதாரம், சுதந்திரம், சம உரிமை போன்றவற்றை மறுக்கப்பட்ட நிலையில் பெண்கள் நசுக்கப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் பெண் விடுதலைக்காக ஓங்கி முதல் குரலை ஒலிக்கச் செய்தார் லைசிஸ்ட்ரா. பழங்கால கிரேக்க நாட்டைச் சேர்ந்த இவர் நாடுகளுக்கிடையே நடைபெறும் யுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறு போராட வேண்டுமென்று பெண்களைத் திரட்டினார். ஆண்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், நடத்த பெண்களை அழைத்தார்.
அதையெடுத்து பிரான்சு நாட்டில் பெண்கள் புரட்சி வெடித்தது. பிரெஞ்சு புரட்சியின்போது அந்த நாட்டுப் பெண்கள் ஓரணியில் திரண்டனர். சுதந்திரம்- சம உரிமை- சமூக உரிமை போன்றவற்றை ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பேரணி நடத்தினார். இவ்வாரான போராட்டங்களும், பெண்களின் உரிமைக்குரல்களும் பல்வேறு நாடுகளிலும் ஒலிக்கத் துவங்கின எண்ணற்ற நாடுகளும் இதனையே வலியுறுத்தி வந்தன
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாடும் யோசனை பரவலாக எழுந்தது. 1909-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சோசலிஸ்ட் கட்சி “தேசிய பெண்கள் தினம்” கொண்டாடப் போவதாக அறிவித்தது. பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தேசிய பெண்கள் தினமாக அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டது. 1913-ம் ஆண்டுவரை இது நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள கோபன்கெகன் நகரில் 1910-ம் ஆண்டு நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டில் சர்வவேத மகளிர் தினம் ஒன்றை உருவாக்கும் கருத்து எழுந்தது. இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்லாந்து நாட்டு பாராளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பெண்கள் உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட்டத்தில் தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை.
கோபன்கெகன் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து 1911-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் பேரணிகள் நடத்தப்பட்டன.
சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர். ஓட்டு போடும் உரிமை, வேலைக்குச் செல்ல உரிமை, ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறும் உரிமை, தொழில் பயிற்சி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு போன்றவைகள் கேட்டு இந்தப் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண்களின் உரிமைக்குரல் சோவியத் யூனியன் (இன்றைய ரஷ்யா)-விலும் எதிரொலித்தது. 1913-ம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமையை அவர்கள் பெண்கள் தினமாகக் கொண்டாடினார்கள்.
முதல் உலகப்போரில் லட்சக்கணக்கான ரஷிய வீரரர்கள் பலியானதைத் தொடர்ந்து பெண்கள் அமைதிக்கான போராட்டத்தில் திரண்டனர். உலகம் முழுவதும் பெண்களின் சம உரிமைக்குரல் பரவலாக ஓங்கி ஒலித்தது. பெண்களுக்கான சம உரிமை வழங்கும் முயற்சியில் ஐ.நா சபையும் தீவிரமாக ஈடுபட்டது. இதன் காரணமாக 1945-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்துப் பெண்கள் உரிமையை நிலைநாட்டத் தனி அமைப்புகள் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டன. சமூக பொருளாதார ரீதியில் பெண்களுக்கு சம உரிமையும் முன்னேற்றமும் கிடைக்க இந்த அமைப்புகள் பாடுபட்டன.
ஒவ்வொரு நாட்டில் வேறு வேறு நாட்களில் சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மார்ச் 8-ம் தேதியை பெரும்பாலான நாடுகள் கடைபிடித்து வந்ததால் ஐ.நா சபையின் அங்கீகாரம் மார்ச் 8-ம் தேதிக்கே கிடைத்தது. பெண்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் 1975-ம் ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதிலும் உள்ள பெண்களின் நலனுக்காக பாடுபடும் அமைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் நாளை, சர்வதேச பெண்களின் தினத்தை, தங்கள் உரிமைகளின் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வப்போது இந்த நல்ல நாளில் பெண்களின் நலனுக்காகப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தாய் வழிச் சமூக அதிகாரம் செய்த பெண்கள், ஆணாதிக்கத்திற்கு அடிமையாகி விட்டதனால் அவர்களின் திறமை மங்கியிருந்தது. அவர்களின் ஆற்றலைப் புதுப்பிக்க அங்கீகாரம் செய்திட 1999-ம் ஆண்டை அதிகார பகிர்வு ஆண்டாக அறிவித்தது. இது பெண்கள் வாழ்வில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்களுக்கென்று தனி நீதி மன்றங்கள், தனி காவல் நிலையங்கள், தனி பல்கலைக்கழகங்கள் இப்படிப் பல உருவாயின. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற காலம் மாறி ஆண்களுக்கே படிப்புச் சொல்லித் தரும் ஆசான்களாகப் பெண்கள் திகழ்ந்தார்கள், பெண்கள் பல்வேறு துறைகளிலும் படிப்படியாக முன்னேற்றமடைந்தனர்.
அரியணை ஏறி அமர்ந்து சாதனை படைத்த பெண்கள்
அரசியலில் அங்கம் வகித்து வலுசேர்த்த பெண்ணினம் கிராம அளவில் மட்டுமின்றி மாநில அளவில் முதல்வர்களாகவும், பிரதமர்களாகவும் உயர் நிலையை எட்டிப் பிடித்து அதிகாரம் செலுத்துவதிலும், நிர்வாகம் செலுத்துவதிலும் தங்களின் பேராற்றலை நிலை நாட்டியுள்ளனர். அன்னை இந்திரா காந்தி, நேருக்கு அடுத்ததாக, நீண்ட நாள் பிரதமராக இந்தியாவை ஆண்ட பெருமை பெற்றவர்.
சுதேசா கிருபாளனி உத்திரப்பிரதேச முதல்வராகவும் (1963-1967) சைதா அன்வாரா தைமூர் அஸ்ஸாமின் முதல்வராகவும் (1980-81), நந்தினி சத்பதி ஒரிசா முதல்வராகவும் (1972-76) ஜானகி இராமச்சந்திரன் தமிழக முதல்வராகவும் (1988), சசிகலா கக்கோட்கர் கோவாவின் முதல்வராகவும் (1973-79), செல்வி.ஜெ.ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகவும் (1991-96) மாயாவதி உத்;திரப்பிரதேச முதல்வராகவும் (1995-97), ராப்ரிதேவி பீகாரின் முதல்வராகவும் (1997-2000), சுஷ்மா சுவராஜ் டெல்லி முதல்வராகவும் (1998), ரஜிந்தர் கஷர் படேல் பஞ்சாப்
முதல்வராகவும் (1996-97), ஷீலா தீட்சித் டெல்லி முதல்வராகவும் (1998);, உமாபாரதி மத்திய பிரதேச முதல்வராகவும் (2004) இருந்து திறம்பட ஆட்சி செய்துள்ளனர்.
பாரதத்தின் முதன்மைப் பெண்கள்
•
இந்தியாவின் முதல் பெண் தூதர் - விஜயலட்சுமி பண்டிட்
•
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
•
இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் - சரோஜினி தேவி
•
இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அமிர்தகவுரி
•
இந்தியாவின் முதல் பெண் நீதிபதி - அன்னாசாண்டி
•
இந்தியாவின் முதல் பெண் மாநிலங்களவை துணைத்தலைவர் - நஜ்மா ஹெப்துல்லா
•
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - கிரெண் பேடி
•
எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண் - பச்சேந்திரிபால்
•
ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் பெண்மணி - ஆர்த்தி சாஹா
•
உலக அழகி (மிஸ்யுனிவர்ஸ்) பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் - சுஷ்மிதா சென்
•
ஆசியப் போட்டியில் முதல் தங்கம் வென்ற முதல் பெண்மணி - சமல்ஜித் சாந்து
•
இந்தியாவின் முதல் (மிஸ் வேர்ல்ட்) பட்டம் வென்றவர் - ரீட்டா ப்ரியா
•
இந்தியாவின் முதல் பெண் விமானி - துர்கா பானர்ஜி
•
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த முதல் விண்வெளி வீராங்கணை - கல்பனா சாவ்லா
பெண்ணுரிமைக்கும் கல்விக்கும் வழிவகுத்தவர்கள்
1828-ம் ஆண்டு இராஜாராம் மோன்ராய், கல்கத்தாவில் நிறுவிய பிரம்மசமாஜம், 1875-ம் ஆண்டு சுவாமி தயானந்த சரசுவதி மும்பையில் நிறுவிய ஆரிய சமாஜம், ப்ளவஸ்கி அம்மையாராலும், கர்னல் ஆல்காட் என்பவரால் அமெரிக்காவில் 1875-ல் தொடங்கப்பட்டு. 1878-ல் சென்னையில், அன்னிபெசண்ட் அம்மையாரால் 1897-ம் ஆண்டு நிறுவப்பட்ட இராமகிருஷ்ண மடம் போன்றவை பெண் கல்விக்கும், பெண்ணுரிமைக்கும் பெரிதும் பாடுபட்டன. சுதந்திர இந்தியாவில் பெண்கள் உயிரியல், பெருளாதாரம், சமூகம், மனித உறவுகள், சுற்றுச் சூழல் தொடர்பான வாழ்க்கைத்தர மேம்பாடு அடைய மத்திய அரசும் மாநில அரசுளும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன.
ஐ.நா. அமைப்பானது பெண்களின் நலனைக் பாதுகாக்க கொண்டு வந்த சட்டங்கள்
•
உடன் கட்டை ஏறுதல் தடுப்புச் சட்டம்
•
இந்து விதவை மறுமணச் சட்டம்
•
இந்திய விவாகரத்துச் சட்டம்
•
தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம்/ குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்
•
இந்து பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம்
•
சிறப்பு திருமணச் சட்டம்/ இந்துத் திருமணச் சட்டம்
•
இந்து தத்து எடுத்தல் மற்றும் ஜீவனாம்சம் பெறும் உரிமைச் சட்டம்
•
வரதட்சணைத் தடுப்புச் சட்டம்
•
பெண்களைப் பரிகாசம் செய்து வெறுப்பூட்டும் செயலைத் தடுக்கும் (தமிழ்நாடு) சட்டம் 1999.
•
பாலியல் பலாத்காரச் சட்டம்
•
இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம்
•
முஸ்லீம்களுக்கான திருமணச் சட்டம்
•
மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம்
•
உழைக்கும் பெண்களுக்குரிய சட்டங்கள்
•
இந்திய தண்டனைச் சட்டம் (பாதுகாப்பு தரும் சட்டம்)
பெண்கள் பிரச்சனைகளுக்குச் சட்ட ரீதியாக உதவும் நிறுவனங்கள்
•
மகளிர் காவல் நிலையம்
•
குடும்ப ஆலோசனை மையம்
•
இலவச சட்ட உதவி மையம்
•
தற்காலிகமாக தங்கும் விடுதி
•
குழந்தைக் காப்பகம்
•
தொழிலாளர் நலத்துறை ஆணையம் அலுவலகம்
•
குடும்ப நீதிமன்றம்
காவல் துறையை அணுகுவதற்குறிய உரிமைகள்
•
கைது செய்வதற்கான காரணம் கூற வேண்டும்
•
அநாவிசயமாக வன்முறையை பிரயோகிக்கக் கூடாது
•
பெண்களுக்கு கைவிலங்கிடக் கூடாது
•
ஆண் காவலர்கள் பெண்களைத் தொடக் கூடாது
•
கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும்
•
காவலில் இருப்பவருடன் உறவினர்/ நண்பர்கள் தங்கலாம்
•
காவல் நிலையத்தில் பெண்களை அடிப்பது கூடாது
உழைக்கும் பெண்களுக்கான சட்ட உரிமைகள்
ஐ.நா. மன்றம் 1991-ல் The World’s Women, 1970, 1990
Trends and Statistics எனும் நூலில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
•
உழைக்கும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுக்க வேண்டும்
•
அரசு நிரிணயித்துள்ள குறைந்தபட்ச கூலிக்கும் குறையாமல் ஊதியம் அளித்திட வேண்டும்.
•
ஒரே மாதிரியான அல்லது சமமான வேலைக்கு ஆண்களுக்குரியதைப் போலவே ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
•
பெண் உழைப்பாளிக்கு அவர்களுடைய பேறுகாலத்தரின் போதும், அதன் பின்னரும், கருச்திதைவு ஏற்பட்டால் அதற்கு பின்னரும் எனச் சில சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்குரிய உரிமைகள் சில:
•
பெண்களுக்கென தனியாக கழிப்பறைகள் அமைக்க வேண்டும். அவைகளுக்கு கதவுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
•
ஒரு தொழிற்சாலையில் 30 பெண் தொழிலாளர்களுக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தால் அவர்களுடைய குழந்தைகளைப் பாதுகாக்க குழந்தைக் காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும்
•
நிர்ணயிக்கப்பட்ட பளுவுக்கு மேற்பட்ட எதையும் தூக்கும் வேலையில் பெண்களை ஈடுபடுத்தக் கூடாது
•
இயங்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு கருவியையும் சுத்தம் செய்யவோ அல்லது அவற்றுக்கு எண்ணெய்விடவோ பெண்களை ஈடுபடுத்தக் கூடாது.
•
பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்புத் தர வேண்டும்.
•
இடைவெளியில்லாமல் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் பெண்களை வேலையில் ஈடுபடுத்தக் கூடாது
•
வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் பெண்களை வேலையில் ஈடுபடுத்தக் கூடாது. பேறுகாலச் சலுகைகளைப் பெற வேண்டுமானால் ஒரு பெண் தொழிலாளி மகப்பேற்றுக்கு முந்தைய 12 மாதங்களில் குறைந்தது 80 நாட்களுக்காவது அந்தப் பணியில் இருந்திருக்க வேண்டும்.
பெண்களின் நிலை
ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பெண்களைவிட இன்றைய பெண்கள் பலதுறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் கல்வி நிலையங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், வங்கிகள், வாழ்நாள் காப்பீட்டு கழகங்கள், தொழிற்சாலைகள், சிறுதொழில் நிறுவனங்கள், நவீன தொழில் நுட்பத் துறைகள் போன்றவைகளில் பெண்கள் கணிசமான அளவு பணிபுரிந்து வருகிறார்கள், காவல் துறை, போக்குவரத்துத் துறை, விமானப் பணிப்பெண்கள், போன்ற பதவிகளிலும் மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போன்ற உயர் பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு துறைகளில் பணியாற்றி தடைகளை உடைத்தெரிந்து பெண்கள் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெற்று வருகிறார்கள்.
பெண்கள் மீதான வன்முறைகள்
இன்றைய உலகில் பெண்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் மருத்துவமனைகளில், பாடகசாலைகளில் என ஒவ்வொரு துறைகளாக பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட அமைப்புகளிலுள்ள முதலாளிகள், நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள், ஒப்பந்தகாரர்கள், என அதிகார பலம் படைத்தவர்களாலும், நிறுவனத்தலைவர்கள் போன்றவர்களாலும் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்னொருபுறம் பார்க்கையில் குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சூழ்நிலைகளில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
குடும்ப வன்முறைகள்
பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் அண்மைக்காலங்களில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. குறிப்பாக உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, பணம் அல்லது பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக, சைகை மூலதன எச்சரிக்கையாக, வேறு நபர்களைத் தூண்டிவிட்டு எச்சரிக்கை செய்வதாக, அச்சுறுத்தலின் கீழ் தன் விருப்பத்திற்கு மாறாக நடக்கச் செய்வதாக, தனிமைப்படுத்தி விடுவதாக, சூழ்ச்சி மனோபாவத்துடன் நடப்பதன் மூலமாக, சுயகௌரவம் தன்மானத்தை இழக்கும்படி செய்வது, அச்சத்தை அல்லது பீதியை ஏற்படுத்துவது, உடல்நலக்குறைவை ஏற்படுத்துவது அல்லது மருத்துவ சிகிச்சையை புறக்கணிப்பது போன்றவைகள் குடும்ப வன்முறைகளாகும். மேலும் நம் இந்தியா போன்ற நாடுகளில் வரதட்சணை காரணமாகவும் பல பெண்கள் வன்முறைக்கு ஆளாகின்றனர். குடும்ப வன்முறையில் பெரும்பாலாக பாதிக்கப்பட்ட பெண்களாலேயே வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. குடும்ப வன்முறை இனம், சமயம், பால், வயது போன்ற வேறுபாடின்றி யாருக்கும் நடக்கலாம். இப்படிப்பட்ட நிலையானது ஏற்படும் போது குடும்ப வருமானத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கல்வி நிலையில் பின்னடைவை ஏற்படுத்தத் தவறுவதில்லை
உடல் ரீதியான வன்முறை
கன்னத்தில் அறைதல், அடித்தல், கையை முறுக்குதல், கூறிய ஆயுதத்தால் குத்துதல், குரவலையைப் பிடித்து நெறித்தல், தீயால் எரித்தல், மூச்சு திணறடித்தல், உதைத்தல், பொருளொன்றினால் அல்லது ஆயுத மொன்றினால் பயமுறுத்துதல், அடித்தல், கீழே தள்ளுதல், உடலில் குத்துதல் மற்றும் ஒருவருக்கு உடல் ரீதியிலான காயங்களை ஏற்படுத்தும் விதத்தில் வன்முறையின் ஏதாவது வேறு வடிவமைப்பு மற்றும் கொலை ஆகியன உட்பட ஒருவருக்கு எதிராக திசை திருப்பப்பட்டுள்ள உடல் ரீதியிலான தவறாக நடத்தப்படுதலின் அல்லது மூர்க்கத்தனத்தின் ஏதாவது அமைப்பே உடல் ரீதியிலான வன்முறையாகும். இப்படிப்பட்ட வன்முறைகளில் ஒவ்வொரு நாளும் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் பெண்கள்.
உணர்வுப்பூர்வமான /உளவியல் ரீதியான வன்முறைகள்
ஒருவரை உணர்ச்சி ரீதியாக குழப்புகின்ற அல்லது பாதிப்பு ஏற்படுவதை நாடி நிற்கின்ற வன்முறையின் ஏதாவது ஒரு வடிவமே உணர்வுப்பூர்வமான அல்லது உளவியல் ரீதியான வன்முறையாகும். இது தொடர்பாக ஏசுதல், பயமுறுத்துதல், சிறுமைபடுத்துதல், கத்துதல், வீட்டுக்கு கட்டுப்படுத்துதல், மேற்பார்வை, கைவிடுதலின் அல்லது துஷ்பிரயோகத்தின் பயமுறுத்தல்கள், பொருட்களை அழித்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியாக இகழ்தல் ஆகியனவற்றை உள்ளடக்கக் கூடும். பெருமளவு பால்நிலை அடிப்படையிலான வன்முறை உணர்வுப்பூர்வமானதும், உளவியல் ரீதியிலானதுமான வன்முறையில் விளைகின்றது. இந்த வன்முறைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாலியல் ரீதியான வன்முறைகள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுள் பாலியல் வன்முறையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. பாலியல் வன்முறை எனும்போது விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி உறவு கொள்ள நிர்பந்திப்பது, விருப்பத்திற்கு மாறாக பாலியல் தூண்டல்களை ஏற்படுத்தக்கூடியவாறான செயல்களைச் செய்தல், ஏமாற்றி அல்லது ஆள்மாறாட்டம் செய்து உறவு கொள்ளச் செய்தல், ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் அல்லது பானத்துடன் போதை தரக்கூடிய பொருளைக் கலந்து கொடுத்து உறவு கொள்வது, துணையின் சம்மதமில்லாமல் உறவு கொள்வது என்பனவும் பாலியல் வன்முறைக்குள் அடங்குகின்றன. இந்த வன்முறைகளாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பொருளாதார ரீதியான வன்முறைகள்
நிதிசார் அல்லது பொருள் வளங்களை ஈட்டுவதற்கு, நன்மையடைவதற்கு அத்துடன் அனுபவிப்பதற்கு ஒருவரின் சுதந்திரத்தைத் தடுக்கிற, பிடுங்கிக் கொள்கின்ற அல்லது தர மறுக்கின்ற ஏதாவது செயற்பாடு அல்லது முயற்சி பொருளாதார துஷ்பிரயோகமாகும். வாழ்வாதார மற்றும் தனிப்பட்ட செலவினங்களுக்காக நிதியை வழங்க மறுத்தல், நிதிசார் பங்களிப்பதற்கு நிராகரித்தல், உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை மறுத்தல், தொழிலுக்கான அடைதலைக் கட்டுப்படுத்துதல் அல்லது நிர்பந்தித்தல் போன்ற செயல்பாடுகள் பொருளாதார ரீதியான வன்முறைகளாகும். இந்த வன்முறைகள் பெண்களுக்கு நடக்கின்றன.
நவீன தொழில்நுட்பம் சார்ந்த வன்முறைகள்
இன்றைய நவீன காலத்தில் e-mail, SMS, MMS,
முகநூல், வாட்ஸப், தொலைபேசி செல்பேசி தபால் போன்ற தொடர்பு சாதனங்களில் ஊடாக அவசியம் ஏதும் இல்லாமல் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தல் அல்லது அச்சுறுத்துதல், குறிப்பிட்ட பெண்கள் மீது அவதூறு பேசுதல் அல்லது அவதூறு பரப்புதல், அவ்வாறு குறிப்பிட்ட நபர் பற்றிய அத்தகவல் மற்றும் சுய தகவல்களை பிறரின் பார்வைக்கு வைத்தல், இதற்காக இணையம் அல்லது ஏனைய தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துதல், தனியார் நிறுவனங்களை சேவைக்கமர்த்தி குறிப்பிட்ட நபர் குறித்த இரகசியத் தகவல்களைத் திரட்டல், பின் தொடர்தல், நண்பர்களை, அயலவர்களை அல்லது அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை தொடர்பு கொள்ளல் போன்றவைகளும் பாலியல் தொல்லைகளாக கணிக்கப்படுகின்றன. மேலும் இரகசியமான முறையில் தனிமையில் இருக்கக் கூடிய பெண்களை புகைப்படம் பிடித்தல், பெண்களின் அந்தரங்க விசயங்களை பகிரங்கப்படுத்துதல் என்பன வாய்மொழி மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த வன்முறைகளாகும்.
நகரமோ கிராமமோ வன்முறைகளினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் இளம் பெண்களே என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். பாதிப்புகளுக்குள்ளாகிய ஏனைய பெண்கள் தமது பாதிப்புகளுக்கான நிவாரணம் குறித்த எவ்வித வடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. பயம், சங்கடம் மற்றும் அந்நேரத்தில் சம்பவம் பற்றி சரிவர அறியாதது ஆகியனவே இதற்கான காரணமாகும். இந்த நிலையில் குற்றமிழைத்தவரிடமிருந்து விலகிச் செல்வதே பொதுவானதாக இருக்கிறது. இதனால் குற்றமிலைத்தவர்கள் எளிதில் தப்பித்துவிடுகின்றனர்.
வன்முறைகளை அனுபவிக்கும் பெண்களின் நிலை
16 வயது முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட பெண்களைப் பொருத்த வரையில், அவர்களுக்கு எதிரான வன்முறைகளே மாணத்துக்கும், உடல் ஊனமாகுதலுக்கும் முக்கிய காரணியாக அமைகின்றன. இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களைப் பொறுத்தவரை புற்றுநோயைப் போன்று வன்முறைகளும் அவர்கள் மத்தியிலான மரணத்துக்கு முக்கிய காரணமாகின்றன. உலக சுகாதார நிறுவனம், அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் “உலகில் வீதி விபத்துகளையும், மலேரியா போன்ற நோய்களையும் விட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகத்” தெரிவித்திருக்கிறது. வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள் எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலகாகும் ஆபத்தும் அதிகமாக இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
சட்ட திட்டகளிலிருந்தும் நடக்கும் அவலங்கள்
டெல்லியில் ஐந்து ஆண்களால் கற்பழிக்கப்பட்டு இறந்துபோன நிர்பயா, இலங்கையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா, உத்திரப்பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட இரண்டு சகோதரிகள், தமிழ் நாட்டில் கௌரவக் கொலை செய்யப்பட்ட விமலா, தேனி மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பு படித்த இளம் சிறுமி நந்தினி நான்கு இளைஞர்களால் கற்பழித்து கொள்ளப்பட்டிருக்கிறார். மேலும் ஆசிட் வீச்சுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் என இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிய செய்தித்தாள்களைப் அன்றாட வாழ்வில் புரட்டிப் பார்க்கும்போது நெஞ்சை வதைக்கிறது. இப்படிப்பட்ட கொடூரமான சூழ்நிலைகள் இன்னும் நடைமுறையில் இருக்கும் போது பெண்களுக்கான முழு விடுதலையும் பாதுகாப்பும் கிடைத்து விட்டதாகக் கூறிவிட முடியாது.
முடிவுரை
இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டியது தற்போதைய அவசியமாகும். எத்தனையோ சட்ட திட்டங்கள் இருந்தும் பெண்களின் நிலை பாதிக்கப்படுவது கவலைக்கிடமான சூழலாக உள்ளது. இதற்கு அரசுகள் போதுமான திட்டங்களைத் தீட்டுவதை விட ஆண்களுக்குள் அவர்களையே அறியாமல் வாழும் ஆணாதிக்க சிந்தனைகளைக் கிள்ளி எரிய வேண்டும். பெண்களின் சுதந்திரத்திற்கு பெண்கள் மட்டுமே போராடினால் போதாதுஇ ஆண்களும் இணைந்து கரம் கோர்த்திடல் வேண்டும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என நம்புவோம்.
துணை நின்ற நூல்கள்
1. அஸ்வகோஷ் (2009). பெண்கள் சமூகம் மதிப்பீடுகள், ப 1-256.
2. கு.சாமிதுறை பி.ஏ., பி.எல்., (2011). பெண்கள் கலன் காக்கும் சட்டங்கள், ப 1-368.
3. தமிழ்நாடு மகளிர் மேம்பாடு முற்றம் (2014). மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மாத இதழ், ப 1-32.
4. பின்னலூர் மு.விவேகானந்தன் (2011). மகளிர் மேன்மையும் சட்ட உரிமைகளும், ப 1-160.
No comments:
Post a Comment