Monday, 30 May 2016

“காலத்தை வென்ற கலாம்” (1931-2015) (பக்கம் 10-15)

அப்பொழுது ஒரு பையன் மட்டும் கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த், அவன் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இரண்டு கண்களும் தெரியாது. உனக்கு என்ன ஆசை என்று அவனிடம் கேட்டேன். அவன் சொன்னான், கலாம் சார் மாதிரி, நான் வாழ்க்கையில், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னான். எனக்கு அவனது உயர்ந்த எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவனிடம், நீ வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக உனக்கு 4 முக்கிய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன் என்றேன். அதாவது 4 விஷயங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை, அவை என்ன?.
                     வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும், சிறு லட்சியம் குற்றமாகும்.
                     அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.
                     லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
                     விடா முயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும்.
இந்த நான்கு குணங்களும் உனக்கு இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம் என்று அவனை வாழ்த்தினேன். ஸ்ரீகாந்த் அத்தோடு நிற்கவில்லை, அவன் கனவை நனவாக்க விடாமுயற்சியுடன் உழைத்தான், அவன் 10-ம் வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12-ம் வகுப்பில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்றான், என்ன ஒரு விடாமுயற்சி, அவன் மனதில் வெற்றிபெற வேண்டுமென்ற லட்சியதாகம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machassute Institute of Technology)-யில் கணினி தொழில்நுட்பவியல் படிக்க வேண்டும் என்ற ஆசையை என்னிடம் தெரிவித்தான்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள Lead India 2020 & GE Volunteers-யில் சேர, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும் போது. பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று தெரியவந்தது. உடனே ஸ்ரீகாந்த் MIT US-க்கு எழுதினான். நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டி தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்வு பெற்றால் உங்கள் பல்கலைக் கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றான். போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள் மத்தியில் பிறந்த பார்வையற்ற ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டான்.
எழுத்து தேர்வில் நான்காவது மாணவனாக வந்தான். தனது விதிகளை தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு MIT தலை வணங்கியது. அவனுக்கு உடனே கணினி தொழில்நுட்ப அறிவியல் துறையில் பட்டம் படிக்க அனுமதி வழங்கியது. என்ன ஒரு திடமான, தீர்க்கமான மனது ஸ்ரீகாந்திற்கு, அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பி வைத்த GE கம்பெனியின் மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். நீ படித்து முடித்தவுடன் உனக்கு வேலை தயாராக இருக்கிறது என்று, அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பினான். அதில் கடைசியாக எழுதியிருந்தான், ஒரு வேளை எனக்கு பார்வையற்ற முதல் குடியரசுத் தலைவர் பதவியை அடைய முடியாவிட்டால் கண்டிப்பாக உங்களது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன் என்று, இதில் இருந்து மாணவர்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ளும் அனுபவம் என்ன. நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களால் வெற்றிபெற முடியும் என்பது தான். மற்றொரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்:
நான் DRDL, Hyderabad-ல் டைரக்டராக இருந்தபோது என்னிடம் கதிரேசன் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்தார். அப்பொழுது நீண்ட நேரம் பணியில் இருந்துவிட்டு நான் காரில் ஏறி வீட்டுக்குச்செல்ல வரும்பொழுதெல்லாம், கதிரேசன் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார். அப்பொழுது ஒரு நாள் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார். சும்மா இருக்கும் நேரம் படித்தால் எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்குமே என்று சொன்னார். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் 10-ம் வகுப்பு வரை படித்திருப்பதாகச் சொன்னார். மேலும் படிக்க ஆர்வம் இருக்கிறதா? என்று கேட்டேன். மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் என்னால் எப்படி படிக்க முடியும் என்று வினவினார். உடனே நான் அவரை திறந்தவெளி பள்ளி மூலம் 12-ம் வகுப்பு படிக்க ஏற்பாடு செய்தேன். அதில் படித்து வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் பி.., படித்தார், பின்பு நான் டெல்லி சென்றுவிட்டேன். ஆனால் அவர் படிப்பை நிறுத்தவில்லை, தொடர்ந்து படித்தார் எம்.., முடித்தார், எம்ஃபில்., முடித்தார், பின்பு அரசியல் அறிவியலில் பிஎச்.டி., படித்து முனைவர் பட்டம் பெற்றார். இப்போது அவர் தமிழ் நாட்டில், மதுரைக்கு பக்கத்தில் உள்ள மேலூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
 நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
 உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
 நீ நீயாக இரு”.
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார். தாமஸ் ஆல்வா எடிசன், தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும்இ அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் அதுதான் சர்.வி.ராமனுக்கு, ராமன் விளைவிற்கான நோபல் பரிசை பெற்றுத் தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடைய இயற்பியல் மற்றும் வேதியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குக்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள், இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா?, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக, அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடியே வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அதாவது நீ நீயாக இரு. ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பதுதான் அதன் அர்த்தம் மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். உங்களுடன் இன்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது கிராமப்புற கல்வியின் அனுபவம்:
நான் ஒரு கிராம சூழ்நிலையில் பிறந்தேன், படித்தேன், வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும்,  கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும், உங்களால் வெற்றி அடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் 1936 முதல் 1944 வரை நான் படித்தபோது, கடற்கரையோரம், பாதி கட்டிடமும் பாதி கூரை வேய்ந்த நிலையிலையிலும்தான் இருந்தது எங்கள் பள்ளி. அன்று இராமேஸ்வரம் தீவிலேயே அந்த ஒரு பள்ளிதான் இருந்தது. 400 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்றோம். இப்போது இருக்கும் பல பள்ளிகள் மாதிரி பல்வேறு வசதிகளும், கட்டிடங்களும் இல்லாத பள்ளி அது. அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்கள் கணித ஆசிரியர் திரு.இராமகிருஷ்ண அய்யர் அவர்களும், அறிவியல் ஆசிரியர், திரு.சிவசுப்பிரமணிய அய்யர் அவர்களும், மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டவர்கள். நான் அப்பொழுது 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் கணிதத்தில் 40 மதிப்பெண்களுக்கும் கீழ்தான் எடுத்தார்கள். கணித ஆசிரியர் திரு.இராமகிருஷ்ண அய்யர் சொன்னார், மற்ற ஆசிரியர் பாடங்களில் 80-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள், ஏன் கணிதத்தில் மட்டும், மதிப்பெண் குறைகிறது. என்று கேட்டார். மாணவர்களின் மனநிலையை அறிந்த கணித ஆசிரியர் திரு.இராமகிருஷ்ண அய்யர் சொல்வார், எனது லட்சியம் எனது மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி படிக்க வைப்பதுதான் என்று மட்டுமல்ல, கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைப்பதும் எனது லட்சியம்தான் என்று சொல்வார். உடனே அவர் மாணவர்கள் அனைவரையும் கணிதத்தில் எப்படி ஈடுபாடுடன் படிக்க வைப்பது என்று ஒரு திட்டத்தை தீட்டி, எங்களுக்கு கணிதத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். எங்களுக்கு என்று கணித சிறப்பு வகுப்பை ஏற்படுத்தினார், அதில் கணிதத்தை அனைத்து மாணவர்களுக்கும் புரியும்படி சிறப்பாக நடத்தினார். எங்களுக்குள்ளேயே விவாதிக்க வைத்தார். அதன் மூலம் கணிதத்தை எங்களுக்குபுரிய வைத்தார். அப்புரம் 10 முக்கிய கணக்குகளை கொடுத்து எங்களை பரிச்சை எழுத வைத்தார். அந்த பரிச்சையில் 90 சதவிகிதம் மாணவர்களை கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற வைத்தார். அதிலிருந்து கணிதத்தின் மீதிருந்த பயம் மாணவர்களை விட்டு அகன்றது. மகிழ்ச்சியால் அனைவரும் மிதந்தோம். பல வருடங்களுக்கு பிறகுதான், கணிதத்தில் அவர் விதைத்த நம்பிக்கை என்ற விதை எங்களுக்குள் எப்படி பரிணமித்தது என்பதை பற்றி அறிந்து கொண்டோம். எனவே நண்பர்களே! நம்மாள் முடியாதது என்று ஒன்றும் இல்லை, நாம் ஒவ்வொருவருக்கும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த நாட்டில் நம்மால் முடியும் என்ற எண்ணம் மலரும்.
அறிவு அற்றம் காக்கும்:
எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைச் சொல்கிறேன் கேளுங்கள்.
“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்”.
அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டைபோல் நின்று நம்மை காக்கும் என்பதாகும்.
புத்தகம் படிப்பின் அவசியம்:
ஒவ்வொரு குடும்பத்திலும், நல்ல அருமையான புத்தகங்கள் இருக்க வேண்டும். வீட்டில் ஒரு சிறு புத்தக நூலகம் அமைப்பது மிகவும் அவசியம். புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நண்பர்களே! நான் சொல்வதை திருப்பிச் சொல்வீர்களா? அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும் கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும் படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும் சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்.
அறிவு உன்னை மகானாக்கும்:
நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், அதை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும். புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான, தொடர்ந்த நண்பனாகும். சில நேரங்களில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நமக்கு முன்பே பிறந்ததாகும். நமது வாழ்க்கை பயணத்தில் அது நம்முடன் கூடவே வரும், அது மட்டுமல்ல தலைமுறை தலைமுறையாக அது நம் அடுத்த தலை முறையோடும் தொடர்ந்து வரும். எனது இளமைக்காலத்தில் சென்னை மூர் மார்க்கெட்டில் நான் ஒரு புத்தகம் வாங்கினேன். அதன் பெயர் “Light from many lamps”, அதை “Watson Lillian Eichler” என்பவர் எழுதியிருந்தார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக அது எனக்கு உற்ற தோழனாக இருந்து வருகிறது. அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்ததினால் அதை பல தடவைகள் பைண்ட் பண்ண வேண்டியதாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் கஷ்டமான, துன்பமான சூழ்நிலை நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த புத்தகம் அரும்பெரும் மனிதர்களின் எண்ணங்களை கொண்டு கண்ணீரை அது துடைக்கிறது. எப்பொழுதெல்லாம் அளவில்லா மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் அது மனதை ஒரு நிலைபடுத்தி, சமன்படுத்தி எண்ணத்தை வரைமுறைப்படுத்துகிறது.
மனசாட்சியின் மாட்சி:
சமீபத்தில் திரு.சமர்பண் எழுதிய “Tiya: A Parrots Journey Home” என்ற புத்தகத்தை படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை, எனக்கு மிகவும் நெருக்கமானவை அந்த புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஒரு புத்தகம்தான் இந்த புத்தகம். தியா என்ற இந்த புத்தகம் மனசாட்சியை பற்றியதாக இருப்பதால் நம் ஒவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார். திரு.சமர்பண். எப்படி நல்மனசாட்சி கொண்ட ஒரு அருமையான பச்சைக்கிளியின் வாழ்வு, தியாவின் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான் இது. கோபம் விவேகத்திற்கு அழகல்ல. இதை பச்சைகிளியின் வாழ்வு தியாவின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதுதான் அது. கோபம் விவேகத்திற்கு அழகல்ல, இதை பச்சைகிளி மட்டும் உணர்ந்து கொள்வதில்லை, ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணர்வார்கள். என்னை கவர்ந்த ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால்
எனக்குள் ஒரு அகம் பெரும் சக்தி புதைந்துள்ளது.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்துஇ
என் சக்தியாலே வெற்றி அடைந்தே தீருவேன்.  என்பதாகும்
புத்தகமும் சிறு வயதில் அரும் பெரும் எண்ணங்களும்:
நண்பர்களே! புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்துப்பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும் அறிவியலையும், தொழில் நுட்பத்தையும், நல்ல புத்தகங்களின் மூலம் படித்து, கற்று தேர்ந்தால்தான், நாம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற முடியும். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தொலைக்காட்சிகள் நம் நேரத்தை எடுத்துக் கொண்டாலும், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், எழுத்து, படிப்பு, அதிகமாக இருந்தாலும், நாம் தினமும் ஒரு அரைமணி நேரமாவது ஒதுக்கி நல்ல புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறரைக் குறித்து மட்டும் ஆராய்பவர் சாதாரண மனிதர். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவராக இருப்பவரே கல்விமான். ஒவ்வொருவரும் கல்விமானாக முயல வேண்டும். கல்வியின் நோக்கம் மதிப்பெண்களையும், வேலை வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் உண்மையான நோக்கம். உளபூர்வ விவேகத்தினூடே ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களது வாழ்க்கையின் இரண்டாவது அதிசயம் என்று எதைச் சொல்கிறார் என்று தெரியுமா?. உங்களுக்கு, அதாவது அவரது 9-வது வயதில் அவர் கற்றுக்கொண்டதுதான் அவரது வாழ்வின் முதல் அதிசயம். ஐன்ஸ்டீனின் அப்பா அவருக்கு ஒரு காம்பஸ்ஸை தரும் வரை நகரும் ஒரு பொருளை நகர்த்துவது வேறு ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி என்றுதான் நினைந்திருந்தாராம். தனது 12-வது வயதில் அவரது ஆசிரியர் ஒரு புத்தகம் கொடுத்தார். அந்த புத்தகம்தான் Max Talmud எழுதிய Euclidean Plain Geometry என்ற புத்தகமாகும். அந்த புத்தகத்தை அவர் “Holy Gepmetry Book” என்று சொல்லுவார். அந்த புத்தகத்தை படித்ததுதான் ஐன்ஸ்டீனின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டாவது அதிசயம் என்று கூறுகிறார். உண்மையான அர்த்தத்தை நோக்கி, அதனுடன் ஐன்ஸ்டீன் கலந்துவிட்டார். மிகப்பெரிய ஆய்வுக்கூடமோ, உபகரணங்களோ இல்லாத சூழ்நிலையிலும், அவர் தனது உள்மனதின் எண்ணத்தின் சக்தியை கொண்டே, உலகலாவிய உண்மையை கண்டுணர்ந்தார். கணிதத்தின் கடினமான விடை தெரியாத புதிர்கள்தான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்தது, அத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள்தான். எனவே நண்பர்களே! புதுமை என்பது உலகின் இயல்பில் பயணிப்பவர்களால் உருப்பெறுவதில்லை. உலகின் சராசரி போக்கிலிருந்து முரண்பட்டு தனித்து சந்திப்பவர்களே புதுமையைப் புஷ்பிக்கிறார்கள்.
ஸ்ரீநிவாச இராமானுஜம் அவர்கள் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கணித மேதை, அவருக்கு இயற்கையாகவே கணித்தில் திறமை வாய்கப் பெற்றிருந்தார். அவரது 13-வது வயதில் S.L.Loney Advanced என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து, தானே தியரங்களும், அல்காரிதங்களும் படைத்தார். பள்ளியில் யாருக்கும் இல்லாத வகையில் கணிதத்தில் தனித்துவம் பெற்று விளங்கினார். அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வியடைந்தார். ஆனால் கணித வாழ்வில், உலக மேதையாகி வெற்றியடைந்தார். அதாவது நண்பர்களே! நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால்?. எதிர்பாராத  விஷயங்களை எதிர்பார்க்க கற்றுக்கொள்வதுதான் உங்களை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும். சற்றும் எதிர்பாராத விஷயங்கள் எதிர்படுவதே எதார்த்தம்.
வெற்றி என்பது இறுதிப்புள்ளி:
 தோல்விகள் என்பது இடைப்புள்ளி.
 மன உறுதியுடன் இடைப்புள்ளிகளை
தோல்வியடையச் செய்து உங்களால் வெற்றியடைய முடியும். வெற்றியைக் கொண்டாட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. நம் பயணத்தை முழுமை பெறச் செய்பவை.
திருவள்ளுவர் சொன்னது போல்
இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு
இடும்பை படாதவர்.
எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற்றதினால்தான், அப்படிப்பட்ட ஒரு தனித்திறமை அவருக்கு கணிதத்தில் கிட்டியது. அந்த திறமை அவருக்கு புத்தகம் படித்ததினால் மெருகேற்றப்பட்டு பட்டை தீட்டிய வைரமாக விளங்கியது. இன்றைக்கும் அவரது எண் கணிதம், அறிவியலை, தொழில்நுட்பத்தை செம்மை படுத்திக்கொண்டு இருக்கிறது.
புதிய சிந்தனைகளுடன் படியுங்கள் எனவே மாணவர்களே! இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் பாட புத்தகம் மட்டும் படிப்பது உங்களை கல்வியின் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். ஆனால் அது சம்பந்தமாக, பல்வேறு புத்தகங்களை நூலகங்களுக்குச் சென்று படித்தால், உங்களது சந்தேகங்கள் நிவர்த்தியாகும். அடிப்படை கணிதம், அடிப்படை அறிவியலில் நீங்கள் பல்வேறு புத்தகங்களை படித்து தேர்ந்து விட்டீர்கள் என்றால், பின்பு மேல் படிப்பு உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மனப்பாடம் பண்ணுவது ஒரு அறிவியல் தத்துவத்தை, கணித சூத்திரத்தை, தீர்வுக்கான முறையை உங்கள் மனதில் பதிய வைக்காது. ஒவ்வொரு பாடத்தையும் மூன்று முறையாவது ஆழப்படித்து, உங்கள் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் விவாதித்தீர்கள் என்றால், அது உங்கள் மனதை விட்டு அகலாது கேள்விகளுக்கு பதில் சொல்லி தெளிவாக்கினீர்கள் என்றால், அது உங்களது வாழ்க்கைக்கும் நினைவிருக்கும்.
நான் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது, எனது தமிழ் ஆசிரியர் திரு.பரமேஸ்வரன் அவர்களும், கணித ஆசிரியர். இராமகிருஷ்ண அய்யர் அவர்களும், வகுப்பு எடுக்கும் போதெல்லாம், சொல்கிற பாடங்களை, நான் அன்றே, அந்த பாடங்களை ஒரு தடவை என்னுடைய நோட் புத்தகத்தில் அந்த இரவே என் கையால் எழுதி முடித்துவிடுவேன். இந்த பழக்கம், கல்லூரியிலும் நீடித்தது தமிழிலும், கணிதத்திலும் பல தடவைகள் ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் வகையில் பல சமயங்களில், தமிழில் 90 சதவிகிதம் எடுத்திருந்தேன். கணிதத்தில் 100 சதவிகிதம் எடுப்பேன் இதிலிருந்து நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், ஆசிரியர் சொல்வதை புரிந்து அதை பாடமாக எழுத வேண்டும். அது மனதில் என்றென்றும் பதிந்துவிடும்.
எனவே, ஆசிரியர் சொல்லித் தருவது, உங்களுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவது மட்டுமே. ஒவ்வொரு பாடத்தின் முதல் நிலை அறிமுகம் முடிந்தவுடன். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, அந்த பாடத்தின் ஒவ்வொரு பகுதியையும், மாணவர்கள் குழு அவர்களது கற்பனைத்திறத்தோடு, பல்வேறு புத்தகங்களின் துணை கொண்டு, பள்ளியில் விவாதிக்க வேண்டும். கேள்வி கேட்டு மாணவர்களே அதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி ஒவ்வொரு பாடத்தையும் செய்து பாருங்கள், எந்த படிப்பும் கஷ்டமில்லை அப்படிப்பட்ட சூழ்நிலையை பள்ளிகளில், வீடுகளில் ஏற்படுத்த வேண்டும். அந்த சூழ்நிலைதான் உங்களை அறிவார்ந்தவர்களாக மாற்றும். எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான விழிகளைப் புலரச் செய்கிறது. இந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள், அதனால் பெற்ற அறிவை விவாதித்து தெளிவு படுத்தினீர்கள் என்றால் உங்கள் இலட்சியம் நிச்சயம் ஜெயிக்கும்.
கனவு காணுங்கள்:
அப்துல்கலாமின் சில பொன்மொழிகள் கனவு காணுங்கள், அவற்றை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும். நம்மால் முடியும். இந்தியாவில் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என விமர்சிப்பர். மழை வந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான  இடத்தில் தஞ்சம் அடையும் ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது ஆனால், திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்பு கிடைக்கிறது. எனவே திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

40 டாக்டர் பட்டங்கள்:
இக்காலத்தில் ஒரு டாக்டர் பட்டம் பெறுவதே பெரிதான காரியமாக இருக்கிறது. ஆனால். அப்துல்கலாமின் உயரிய பணிகளைப் பாராட்டி உலகம் முழுவதும் இருந்து 40 பல்கலைகழகங்களின், சார்பில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. நம் இந்திய தேசத்தின் மீது அதிக நேசம் கொண்ட ஜனாதிபதி, விஞ்ஞானி என பன்முக மனிதராக இருந்த அப்துல்கலாம், தேசப்பற்றுமிக்கவராக இருந்தார். இந்தியாவின் மிகப்பெரும் விஞ்ஞானி விக்ரம் சராரபாயை தனதுரோல்மாடலாகஎடுத்துக்கொண்டு செயல்பட்டார்.
பாதுகாப்பு சக்தி:
அப்துல்கலாமின் நண்பர்கள் அவருடைய எளிமையையும் உயர் அளவிலான சிந்தனைகளையும் போற்றினர். கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார். அவருடைய சகாக்கள் எப்போதும் அவரை அணுகும் விதமாக அவருடைய இல்லம் இருந்தது. இவரது திறமையிலும் ஆர்வத்திலும் நம்பிக்கையுடைய அனைவரும் ஆர்.டி..வில் இவர் திறம்படவே செயல்படுவார் என்று எதிர்பார்த்தனர். அதேபோல் ஒருங்கிணைந்த செலுத்து ஏவுகணைவங்கி 7 ஆண்டுகளில் தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் திரிசூல்இ தரையிலிருந்து தரை இலக்கை பிருத்வி, நடுத்தர வேக ஆகாஷ் ஏவுகணை, பீரங்கியை எதிர்த்துத் தாக்கும் நாக் ஆகிய பாதுகாப்பு சக்திகள் மேம்படுத்தப்பட்டன. அதன்பின் 1989-ல் வெற்றிகரமாக சோதித்தறியப்பட்ட அக்னி வெளியுலகிற்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியது. அக்னி எஸ்.எல்.வி-3 என்ற ராக்கெட்டின் மறுவடிவமே ஆகும். இந்தியா தன் சொந்த முயற்சியிலேயே முன்னேற வேண்டும் என்று கருதிய அவர் இந்திய விஞ்ஞானிகள் எந்தவொரு நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் சளைக்காதவர்கள் என்று கூறினார். 60-க்கும் மேற்பட்ட கல்வி, ஆராய்ச்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து வெற்றி கண்டதன் அடிப்படையில் இதனை அப்துல்கலாம் தெரிவித்திருந்தார். ஐ.ஜி.எம்.டி.பி. மூலம் அப்துல்கலாம் பல்வேறு தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்தினார். உந்து விசை, செலுத்து அமைப்பு, உயரிய உலோகக் கலவைகள் ஆகியவற்றை டி.ஆர்.டி..வின் தொழில்நுட்ப இயக்குநரகம் கவனித்தது. 3 ஆயிரம் டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையிலும் உருகாத உலோகப் பொருட்களை காம்ப்ரோக் என்னும் மையம் உருவாக்கியது. இது ஏவுகணைகள் தீப்பிடித்து எரிந்துவிடாமல் இருக்க பயன்பட்டது. அக்னியின் திண்ம உந்து விசை எரிபொருள் இஸ்ரோ எஸ்.எல்.வி-3 பயன்படுத்தியதாகும். திரவ எரிபொருள் குறித்த ஆய்வு அக்னியின் 2-வது கட்டத்துக்கு பயன்பட்டது. பிருத்வி திரவ இயக்கு எரிபொருளால் உந்தப்படுகிறது. எனவே இந்திய தொழில்நுட்பத்தைக் கொண்டே அப்துல்கலாம் பாதுகாப்பு சக்திகளுக்கு வலுவூட்டினார். டி.ஆர்.டி..வில் தலைமை இயக்குநராக இவர் பதவி வகித்தபோதே இந்தியா மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியது. 2-வது முறையாக ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. இந்திய அணுசக்தி துறை (டி..) டி.ஆர்.டி. மற்றும் இஸ்ரோ ஆகிய அமைப்புகள் இணைந்து இச்சோதனையை நிகழ்த்தின. டி.ஆர்.டி..வின் சார்பில் முழுவீச்சில் சோதனையில் அப்துல்கலாம் ஈடுபட்டார். டி.ஆர்.டி. வின் ஒரு ஆய்வுக்கூடம் நிரூபிக்கப்பட்ட வடிவமைப்பை ஆயுதமாக்கும் பணியை செயல்படுத்தியது. வெடிப்பைத் தோற்றுவிக்கும் கருவிகள், அதிக மின்சாரத்தைத் தூண்டும் கருவிகள் ஆகியவற்றை ராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்தது. சோதனை செய்து உற்பத்தி செய்வது இந்த ஆய்வுக்கூடத்தின் பணியாக இருந்தது. வளி இயக்கம் இயற்பியல், படைக்கலன், பிளப்பு, பாதுகாப்பு, பறப்பு சோதனைகள் ஆகியவற்றில் மேலும் மூன்று ஆய்வுக் கூடங்கள் பணியாற்றின.
அணு ஆயுத சோதனை:
1998-ல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தியது. இதில் அப்துல்கலாமின் பங்கு மிக முக்கியமானது. இதன் மூலம் இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்தார். எதிர்நோக்கியிலிருந்து அணு ஆயுத அபாயத்தை அகற்றும் வகையில் அணு ஆயுதச் சோதனையில் அணுசக்தி துறையிலிருந்து ஆர்.சிதம்பரம் முக்கியப் பங்காற்றினார். அவருக்கு இணையாக டி.ஆர்.டி.-வில் அப்துல்கலாம் பணியாற்றினார்.
கிருஸ்த்துவ தேவாலயத்தை இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமாக மாற்றினார்:
1960-களில் திருவனந்தபுரத்திற்கு அருகாமையில் அமைந்திருந்ததும்பா”. ஒரு அழகிய மீனவக்கிராமம், ஆனால் இன்று அது இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது. இதற்கு காரணம் அப்துல்கலாம்தான். தும்பா கிராமம் காந்த மையக் கோட்டிற்கு மிக அண்மையில் அமைந்திருந்தது. சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து காணப்பட்ட அக்கிராமத்தின் மையத்தில் ஒரு அழகிய பெரிய கிருஸ்தவ தேவாலயம் அமைந்திருந்தது. அத்தேவாலயத்தின் ஆயர் போற்றத்தக்க பீட்டர் பெர்னார்ட் பெரேரா அவர்களைச் சந்தித்து, அங்கு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பது குறித்து விளக்கினார். அதை முழுவதுமாக கேட்ட ஆயர் அவருடைய கோரிக்கையை ஏற்பதாக சொன்னார். அது மட்டுமல்லாது, தும்பா கிராமத்தில் இருந்த மீனவ மக்களும் சம்மதம் தெரிவித்தனர். அன்று தும்பா கிராமத்தின் புனித மகதலேனா மரியாள் கிருஸ்தவ தேவாலயம், இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதல் ஆராய்ச்சி கூடமாக மாறியது. தேவாலயத்தின் வழிபாட்டு அறை அப்துல்கலாமின் முதல் ஆய்வுக்கூடமாக மாறியது. ஆயரின் அறையில்தான் அவர், விண்கலங்களை வரையும் அலுவல்களை செய்து வந்தார். நாசாவால் வடிவமைக்கப்பட்டநைக் அப்பாச்சேஎன்ற விண்கலம் 1963 நவம்பர் 21-ம் தேதி தும்பா கிராமத்தில் இருந்தே விண்ணில் ஏவப்பட்டது. தற்போது இந்த கிருஸ்தவ தேவாலயம் இந்திய ஆராய்ச்சி மையத்தின் அருங்காட்சியமாக செயல்பட்டு வருகிறது. 1980 ஜுலை 18-ம் நாள் விண்ணில் ஏவப்பட்ட எஸ்.எல்.வி-3 விண்கலம் முழுக்க முழுக்க அப்துல்கலாமால் வடிவமைக்கப்பட்டது. இதுதான் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட முதல் விண்கலமாக இன்றுவரை போற்றப்படுகிறது.
எளிமையானவர்:
எளிமை என்பதற்கு ஏராளமானோர். விளக்கம் தந்திருக்கின்றனர். “எவ்வளவு எளிமையாக இருக்க வேண்டுமோ, அதற்கு மேல் ஒன்றுமில்லை என்ற அளவிற்கு எளிமையாக இருக்க வேண்டும்என்றார் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன். “உலகிலேயே மிக வசதியானது என்பது எளிமைதான்என்றார் பிரம்மாண்டங்களைப் படைத்த இத்தாலியின் லியனார்டோ டாவின்சி. “ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக இயற்கையிலேயே எழுகிற குணாதிசயம்தான் எளிமைஎன்றார் வில்லியம் ஹாஸ்லிட் என்ற தத்துவஞானி. இதுபோன்று எளிமைக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விதங்களில் விளக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், நாடு பேதமில்லாமல் தற்போது உலகில் வாழும் அனைத்து தலைவர்களுக்கும், சிறந்த முன்னுதாரணமான எளிமைவாதியை பார்க்க முடியும் என்றால் அவர்தான் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். அறிஞர்களும் நிபுணர்களும் ஆழ்ந்து சிந்தித்து விளக்கம் கூறிய எளிமையை வாழ்வில் கடைபிடித்த மகான் அவர்

No comments:

Post a Comment