Monday, 30 May 2016

“காலத்தை வென்ற கலாம்” (1931-2015) (பக்கம் 15-20)


யாரும் எளிமையாக வாழ்ந்து விடலாம். ஆனால், பதவியிலும் அதிகாரத்திலும் உள்ள ஒருவர் எளிமையை கடைபிடிப்பது அபூர்வம். அந்த குணத்தைக் கொண்டவர். தன் தாய்நாடு முன்னேற வேண்டும் என்று எல்லா இந்தியர்களும் நினைப்பார்கள். ஆனால் அப்துல்கலாம் போல் ஒவ்வொரு உழைப்பிலும் தாய்நாட்டின் மீது சிந்தனை கொண்டு உழைப்பவர்கள் அரிது. அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையை வெளிநாடுகள்தான் தருகின்றன என்று கூறி, விமானம் ஏறுகிறவர்கள் உள்ள காலத்தில், தாய்நாட்டு சேவைக்காகவே உறுதியுடன் இருந்து இந்தியாவிலேயே திறமையை வளர்த்துக்கொண்டு உலகத்தரத்திற்கு இந்தியா உயர்வதற்கு வழிகாட்டியவர் அப்துல்கலாம். அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து அப்துல்கலாம் பணிபுரியும் விதத்தை பார்க்க நேர்ந்த பலர். ஏன் வெளிநாடு போனோம் என்று வெட்கித் தலைகுனிந்தோம் என்று கூறக்கேட்டிருக்கிறோம்.
வியப்பு:
1987-88-ம் ஆண்டுகளில் கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த வெளிநாடுவாழ் இந்திய விஞ்ஞானிஇ எம்.வித்யாசாகர். தான் பார்த்த விதத்தை இப்படி பதிவு செய்துள்ளார். “அப்துல்கலாம் தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்களைப் பார்க்கும் போது வழக்கமான அரசு ஊழியர்களுக்கான எந்த அம்சத்தையும் காணோம். வேலை நேரம் முடிந்த பின்னரும், வார விடுமுறைகளிலும் பணிபுரிந்தார்கள், வேறு எங்கும் இதைக்காண முடியாதுஎன்று வியந்து கூறினார். அப்போது அப்துல்கலாம். இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி..) இயக்குனராக இருந்தார். நீங்கள் வேலை செய்வதுபுதிய ஸ்டைலாகஇருக்கிறதே என்று கேட்டபோது. “நான் எனக்கு என்று எந்த ஸ்டைலையும் வைத்துக் கொள்ளவில்லை. வேலை பார்க்கும் இடத்தில் தவறு செய்கிறவர்கள், தவறை ஒப்புக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்என்று கூறினார். இது விண்வெளி அறிவியலுக்கு எவ்வளவு பொருத்தமானது.
அறிவியல் ஆசான்:
முயற்சிகள் தோல்வி அடையும் போது, அதையே அடுத்த முறை வெற்றியாக மாற்றிக் காட்டும் வாய்ப்பு அப்துல்கலாமின் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு கிடைத்தது. செயற்கைக்கோள் ஏவும் ராக்கெட்டான எஸ்.எல்.வி.யின் முதல் பரிசோதனை தோல்வியில் முடிந்தது. ஆனால் அதற்கடுத்த ராக்கெட் வெற்றியுடன் சீறிப் பறந்தது. விண்வெளியை ஆளும் சக்தி படைத்த உலக நாடுகளின் வரைபடத்தில் இந்தியாவும் இடம்பெற்றது. இந்தியாவின் விண்வெளி வளர்ச்சிக்கு விதைபோடும் விஞ்ஞானி வந்துவிட்டார் என்று அவரைக் கொல்ல வெளிநாட்டுச் சதிகள் வரலாம் என்பதற்காக, இந்திய அரசு பாதுகாப்பு அளித்தது. அவர் இரவு 10.30 மணிக்கு நடை பயிற்சி மேற்கொண்ட போது பாதுகாவலர்கள் பின் தொடர்ந்தார்கள். ஆனால் அவர்களிடம், நான் என் நண்பருடன்தானே நடக்கிறேன். நீங்கள் திரும்பிப்போங்கள் என்று கூறிவிடுவார். டி.ஆர்.டி.-வின் தலைமைப் பதவிக்கு வந்தபோது, அதுவரை இருந்த நடைமுறைகள் எல்லாம் தலைகீழாக மாறின. எது தேவையோ அதற்கு முக்கித்துவம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் அதிகாரிகளுக்கு செயல்முறை வழிபயிற்சி எளிமையாக அளிக்கப்பட்டது. இதனால் பலர் பணிகளை விரும்பிச் செய்யும் சூழல் உருவானது. அன்று எஸ்.எல்.வி-யில் தொடங்கி இன்று ஜி.எஸ்.எல்.வி. வரை இந்தியாவின் வெற்றிக்கதை தொடர்ந்ததற்கு அடிப்படைக் காரணம். இவரது ஒருங்கிணைப்புத் திறம்தான்.
ஏவுகணைகளின் தந்தை:
அப்துல்கலாம்ஏவுகணைகளின் தந்தைஎன்று அழைக்கப்படுவதற்கு காரணம் அன்றைய அவரது கடின உழைப்பும் அதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றிகளும்தான் அவருடன் பணியாற்றுபவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த குணத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களுடன் சமமாக பழகுவார், அவர்களுடைய விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பார். அப்துல்கலாம் மிகக் கடுமையான சுயகட்டுப்பாடு மற்றும் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர், அசைவம் உண்ணாதவர், மது அருந்தாதவர் மற்றும் திருமணமாகாமல் பிரம்மச்சாரியாய் விரதம் கடைபிடித்தவர்.
அறிவியலும் ..ஜே.அப்துல்கலாமும்:
குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின், பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்ய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சர் சென்னையிலிருந்த அப்துல்கலாமைத் தொடர்பு கொண்டு. “கலாம்ஜி நீங்கள் பதவி ஏற்க நல்ல நேரம் தேர்வு செய்துவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அப்துல்கலாம் சொன்னார். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் விண்மீன் திரளையும் சுற்றுகிறது. ஆகவேநேரம்என்பது இந்த நடைமுறையைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அது ஒரு வானவியல் நிகழ்ச்சியே தவிர, ஜோதிட நிகழ்ச்சி இல்லை.” எப்போதுமே சரிஇ அவர் ஒரு விஞ்ஞானியாகவே இருந்தார்.
.பி.ஜே.அப்துல்கலாம் ஆற்றிய பணிகள்:
எம்..டி. கல்வி நிறுவனத்தில் வானூர்தி தொழில்நுட்ப பொறியியல் படிப்பை முடித்த அப்துல்கலாம். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். பின் 1962-ல் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் தும்பா ராக்கெட் தளத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது இஸ்ரோஎஸ்.எல்.வி.-3” வடிவமைப்பில் ஈடுபட்டு வந்தது. 17 டன் எடை கொண்ட நான்கு அடுக்குஎஸ்.எல்.வி.-3” 35 கிலோ கொண்ட செயற்கைகோளைப் புவியின் தாழ்வட்டப் பாதையில் செலுத்த வேண்டும். இந்த ராக்கெட் வடிவமைப்பு, தயாரிப்பு உருவாக்கம் செய்ய 1972-ல் அப்துல்கலாமின் தலைமையில் திட்டக்குழு அமைக்கப்பட்டது. வேறு எந்த நாடும் தொழில்நுட்பத்தைப் பகிராத சூழலிலும் சுயசார்புடன் கடுமையான முயற்சியில் வடிவமைத்தார். குறிப்பாக, எடை குறைவான ஆனால் இழை வலுவூட்டிய பிளாஸ்டிக் பொருட்களைக்கொண்டு ராக்கெட் போன்ற ஏவுவூர்திகளைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு அவருடையது. ராக்கெட் வடிவமைப்பில் 44 முக்கியத் துணை அமைப்புகள் இணைந்து இயங்க வேண்டும். இவரது தலைமையில் ரோஹிணி செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக 1980-ல் ஏவப்பட்டது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதுவரை வலிமை பெற்றிருந்த ஐந்து நாடுகளுடன் ஆறாவது நாடாக இந்தியாவும் இணைந்தது. இதே வலிமை கொண்ட ராக்கெட்டைத் தயாரித்து வெற்றிகரமாக ஏவ, அமெரிக்காவுக்குச் சுமார் பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் பிடிக்க, வெறும் ஏழே ஆண்டுகளில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்தது, அப்துல்கலாமின் தலைமையில்! இஸ்ரோவில் தனது பணி முடிந்ததும் அடுத்த சவாலைச் சந்திக்கத் தயாரானார். இராணுவ தேசியப் பாதுகாப்புக்கு ஏவுகணைகள் அவசியமாயின. குறிப்பாக, அமெரிக்கா சில அண்டை நாடுகளுக்கு இராணுவத் தளவாடங்கள் வழங்க முன்வந்த அந்தக் காலகட்டத்தில் இது ஒரு பெரும் சவாலாக எழுந்தது. 1982-ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட அப்துல்கலாம், தனது இஸ்ரோ அனுபவத்தை வைத்து ஒலியின் வேகத்தைவிடப் பல மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடிய அக்னிஇ ஆகாஷ் போன்ற ஏவுகணைத் திட்டத்தின் சூத்திரதாரி ஆனார். மேலும் ரஷ்யாவிடம் பேசி அவர்களின் உயர் தொழில்நுட்பத்தைக் கற்றார். சுயமாகபிரமோஸ் குரூஸ்ஏவுகணைத் தயாரிப்பிலும் அவர் பங்கு முக்கியமானது. அணுகுண்டுத் தயாரிப்பு, வெடிப்பு முதலியவற்றில் உள்ளபடியே அப்துல்கலாமின் பெரும் பங்கு ராக்கெட் மற்றும் ஏவுகணை போன்ற ஏவுவூர்த்தி வடிவமைப்பில் உள்ளது.
இந்தியாவின் பெருமை:
அமெரிக்கர்கள் கடும் உழைப்பு அறிவியல் ஆர்வமும் விண்வெளித் துறையில் சாதனைகளுக்கு வழிவகுத்தது குறித்த வியப்பு அப்துல்கலாமுக்கு இருந்தது. அதே சமயம், ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவும் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் ஓவியம் நாஸா ஆய்வுக்கூடம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்துல்கலாம் ஆச்சர்யத்தில் உறைந்து நின்றார். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போரிட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளின் ஓவியம் அது. விண்வெளித் துறையில் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவும் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் நிலைபெற்றதும் அப்போதுதான்.
இந்தியா திரும்பிய அப்துல்கலாமுக்கு மற்றொரு மகத்தான வாய்ப்பை வழங்கினார் விக்ரம் சராரபாய். எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தின் தலைவராக அப்துல்கலாமை நியமித்து. 1971-ல் விக்ரம் சராரபாய் மறைவுக்குப் பின், இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்ற சதீஷ் தாவனும் அப்துல்கலாமின் திறமை மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். எனவே சதீஷ் தவான், எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தின் பொறுப்பாளராக அப்துல்கலாமைத் தேர்ந்தெடுத்தார். கடும் சவால் நிறைந்த பணியில் ஆரம்பகட்ட தோல்விக்குப் பிறகு, உலக அரங்கில் விண்வெளித் துறையில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார். அக்காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை அப்துல்கலாம் பதிவு செய்திருக்கிறார். 1979-ல் எஸ்.எல்.வி.-3. ராக்கெட்டை ஏவும் பணி ஹரிகோட்டா ஏவுதளத்தில் நடந்து கொண்டிருந்த போது. கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல், ராக்கெட்டைச் செலுத்துமாறு உத்தரவிட்டதாகவும், ஆனால் அந்த ராக்கெட் புவிவட்டப் பாதையில் நிலைகொள்வதற்குப் பதிலாக வங்காள விரிகுடாவில் விழுந்துவிட்டதைப் பின்னர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் அப்துல்கலாம்.
தவறு என்னுடையதாக இருந்தாலும் அணியின் தோல்வியை இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தாவன் தனது பொறுப்பிலிருந்து எடுத்துக் கொண்டார். விமர்சனங்களையும் அவரே எதிர் கொண்டார். ஆனால், 1980 ஜுலை 18-ல் ரோஹிணி செய்கைகோள் எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க அப்துல்கலாமை அனுப்பினார் சதீஷ் தவான்”. எட்டு முயற்சியும் அர்பணிப்பும் தேவைப்படும் அறிவியல் உலகில் சாதிக்க நினைப்பவர்களுக்கு உதவும் பணியை முனைப்புடன் செய்தார். 2002-ல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டவர்களைக் கவுரவிக்கத் தொடங்கினார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், அறிவியல் துறையின் புதுமையாளர்களுக்கு ஜனாதிபதி மாளிகை கவுரவித்து வருகிறது.
லேசான மனது:
அமெரிக்க செயற்கைகோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியது, அக்னி, பிரித்வி ஏவுகணைகளை உருவாக்கியதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரித்தது, என்று பல்வேறு சாதனைகளைப் புரிந்த அப்துல்கலாம். 400-கிராம் எடை கொண்ட லேசான செயற்கை கால்களை உருவாக்கியதுதான் தனது உண்மையான வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். “4-கிலோ எடை கொண்ட செயற்கைக் கால்களைத் தூக்கி நடக்க முடியாமல் குழந்தைகள் சிரமப்பட்டனர். எனது அணியினர் தயாரிக்கும் இந்த இலகு ரக செய்கை கால்களை அணிந்து குழந்தைகள் ஓடி விளையாடுவதைப் பார்க்க எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன்று நெகிழ்வுடன் கூறினார் அப்துல்கலாம்.
மக்களின் நாயகன்:
உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதிகார மட்டத்திலும் வெளிநாட்டுத் தலைவர்களின் மத்தியிலும் வளைய வருபவர்களாகவே இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்தவரும் அப்துல்கலாம்தான். இளம் தலைமுறையினரிடம் பிரபலமாக இருந்த தலைவர் அப்துல்கலாம். அவரைத் தவிர வேறுயாரும் இல்லை என்றே சொல்லலாம். திரைப்படப் பாடல்களிலும், மக்கள் மேடைகளிலும் உச்சரிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் அவர் ஒருவர்தான். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின்போது அரங்கில் இருப்பவர்களிடம் ஆக்கப்பூர்வமான மனநிலையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். ஒழுக்கம், நற்பண்பு, உழைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகங்களை வாசித்துக் காட்டுவதுடன், அரங்கில் இருப்பவர்கள் அவற்றைத் திரும்பக் கூறும்படி சொல்வதும் அவரது வழக்கம். எதிரில் இருப்பவர்கள் குழந்தைகளானாலும், பெரியவர்களானாலும் அதைச் செய்தாக வேண்டும் அவருக்கு, அந்த நேரத்தில் அது வேடிக்கையாகத் தெரிந்தாலும் அவரது வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும் கணத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் நல்லொழுக்கம், கடின உழைப்பு குறித்த சிந்தனைகள் வலுப்பெறுவதையும், மனம் தெளிவு பெறுவதையும் அவர் பங்கேற்ற கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் உணந்திருக்கிறார்கள்.
திருக்குறளில் ஈடுபாடு:
திருக்குறளை அவர் தனது உரைகளில் மேற்கோளாக காட்டுவார். வேத, உபநிஷத்துக்களையும், மகாபாரதம், மனுஸ்மிருதி போன்றவற்றிலும் ஈடுபாடு காட்டியவர். 2002-ம் ஆண்டில் பதவியிலிருந்த பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தபோது, அரசியல் பேதமின்றி பெரும்பாலான கட்சிகளால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். 2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவை, இளைய சமுதாயத்தின் கனவாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தில், பதவியேற்ற பின் அவர் அதை வலியுறுத்தினார். இந்தியா சூப்பர்பவர் நாடாக வேண்டுமானால் ஒவ்வொரு துறையும் செய்ய வேண்டியது என்ன என்பதை சுட்டிக் காட்டினார். தினமும் காலை 5.30 மணிக்கு எழும் அவர், இரவு 1 மணி அல்லது 2 மணிக்குதான் தூங்கச்செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார்.
சேதமடைந்த திசுக்களுக்கு பதிலாக உயிரிபதியன் முறை மூலம் மாற்றம் பற்றி அவர் யோசனை கூறிவந்தார். இதன் மூலம் இதய வால்வு உள்ளிட்ட நோயால் இழந்த உடல் பாகங்களை பெற்றுக்கொள்ள முடியும். நேனோ டெக்னாலஜி துறையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் கூறிவந்தார். அதேபோல், காப்புரிமைகள் கோராத பொதுவான சாப்ட்வேர் வெளியிட்டு தகவல் தொழில்நுட்பம் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். அறிவியல் மூலம் எல்லா வற்றுக்கும் தீர்வுகாண முடியும் என்பது அவரது நம்பிக்கை, மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும் என்றும் விரும்பினார்.
அஞ்சாமல் செயல்பட்டார்:
ஜனாதிபதி பதவிகாலத்தில் அவர் பிறர் சொல்வதை கேட்டு செயல்படுபவராக அதாவது இரப்பர் ஸ்டாம்பாக இருக்கவில்லை, 2005 அக்டோபர் 25-ம் தேதி அவர் மாஸ்கோ சென்றபோது, பீகார் சட்டசபையை கலைக்க வேண்டும் என்று கவர்னர் பூட்டா சிங் பரிந்துரையை ஏற்க இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் அப்துல்கலாமிடம் தெரிவித்தார். அதற்கு அவர் இசைவு தெரிவிக்கவில்லை, என்றாலும் அமைச்சரவை அதை நியாயப்படுத்தியதால் கலைக்கப்பட்டது. பின்னர் சுப்ரிம் கோர்ட் அதை ஜனநாயக படுகொலை என்று வர்ணித்தது. ஆதாயம் தரும் பதவி மசோதாவை திருப்பி அனுப்பினார். ஒருவர் இரு பதவிகள் வகிப்பது நியாயமாகது என்ற கொள்கை உடையவர் அவர். அந்த மசோதா திருப்பி அனுப்பிய நேரம்தான்சோதனைக்குள்ளான பதவிக்காலம்என்று குறிப்பிட்டார். வெளிப்படையான நிர்வாகம், ஊழல் இன்மை, நிர்வாகத் திறன், நேர்மை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக நடந்து காட்டியவர்.
வேளைபளுவானவர்:
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சிவ ரெட்டி போன்றோர் கூட ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் அரசியல் பணிக்கோ கல்விப் பணிக்கோ திரும்பவில்லை ஆனால், அப்துல்கலாமைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி பதவிக்குப் பிறகும் கல்விப் பணியை மீண்டும் தொடர்ந்தார். இது அவரது அதிசயம் மனத்தின் குணாதிசயத்தை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசோ அப்துல்கலாம் டில்லியில் இருந்து அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்பியது. இவரது குடும்பத்தினரோ இராமேஸ்வரம் வந்து தங்களுடன் தங்க வேண்டுமென்று விரும்பினர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் வருகை பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்று போட்டிபோட்டுக் கொண்டு வேண்டுகோள் விடுத்தன. அதில் இருந்து நாடு முழுவதும் கல்விப் பணி மற்றும் விழிப்புணர்வு பணியாற்றியதில் வேளைபளுவானவரானார். அப்துல்கலாம் பதவிக்காலத்தில் விவசாயிகள், தபால்காரர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் என்று 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ராஷ்டிரபதி பவனுக்கு வந்து சென்றார்கள். நமது பாரம்பரியம் இளைஞர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, ராஷ்டிரபதி பவனில் மூலிகைத் தோட்டம் அமைத்தார்.
அந்த இரண்டு சூட்கேஸ்:
ஜனாதிபதிகள் ராஷ்டிரபதி பவனை விட்டு கிளம்பிச் செல்லும் போது, லாரி லாரியாக பொருட்களை ஏற்றிச் செல்வது உண்டு. ஆனால் அப்துல்கலாமுக்கு லாரிகள் தேவைப்பட வில்லை இரண்டு சூட்கேஸ்களுடன் அவர் புரப்பட்டுச சென்றார். ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி. மாளிகையை விட்டு கிளம்பியபோது, அவருடைய பொருட்கள் ஏற்றிய லாரியில் ஜனாதிபதி அமர்வதற்குரிய அசோக சின்னம் பொருத்தப்பட்ட விலையுர்ந்த நாற்காலியும் ஏற்றப்பட்டது. பின்னர் பாதுகாவலர்களால் அடையாளம் காணப்பட்டு திரும்ப ராஷ்டிரபதி பவனில் வைக்கப்பட்டது. அதேபோல் பரிசுப் பொருட்களை பலர் தங்களுடன் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்துல்கலாம் தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை அங்கேயே விட்டுச் சென்று விட்டார். அப்துல்கலாமின் குடும்பத்தினர் டெல்லி சுற்றுப்பயணம் வந்த போது, ராஷ்டிரபதி பவனை சேர்ந்த ஒரு வாகமும் பயன்படுத்தப்படவில்லை, தன் குடும்பத்தினர் ராஷ்டிரபதி பவனில் சாப்பிட்ட உணவிற்கு அவரே பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தார். அப்துல்கலாம் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தபோது எடுத்து வந்தவைகளை விட, அவர் திரும்பிச் செல்லும்போது கொண்டு சென்றது குறைவு. மேலும் அவர் விலை கொடுத்து வாங்கிய புத்தகங்களையும் தன் உடைகளையும் மட்டும்தான் உடன் எடுத்து சென்றார்.
எதிலும் முதலானவர்:
                     ஜனாதிபதி ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்.
                     ஜனாதிபதி ஆன முதல் விஞ்ஞானி மற்றும் திருமணமாகாதவர்.
                     இமயமலையில் சியாச்சியின் பனிமலை எல்லையில் உள்ள உலகத்தின் போர்க் களத்துக்கு சென்ற முதல் ஜனாதிபதி.
                     நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த முதல் ஜனாதிபதி.
                     வேகமாகக் பறக்கும் சுகோய் ரக போர் விமானத்தில் பறந்த முதல் ஜனாதிபதி.
                     ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்து அவர்களிடம் நாட்டு வளர்ச்சியைப் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, அவர்களுடைய கேள்விக்கு நேரடியாகவும் இமெயில் மூலமும் பதில் அளித்தவர்.
                     பதவிக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியவர். சிக்கனத்தை கடைபிடித்தவர். எளிமையாக வாழ்ந்ததால் மக்கள் ஜனாதிபதி என்ற பெயரையும், ராஷ்டிரபதி பவனுக்கு மக்கள் மாளிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்தவர்.
                     பரிசுப் பொருட்களை யாரும் பெறக்கூடாது என்று அறிவுறை கூறி அதை கடைபிடித்து வாழ்ந்தவர்.

விடுமுறை வேண்டாம்:
இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஒருவேளை நான் இறந்தால்கூட அதற்காக விடுமுறை விடவேண்டாம். ஏனெனில் அந்த விடுமுறையால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டும், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே என் இறப்பிற்கு விடுமுறைவிடக் கூடாதென்று அப்துல்கலாம் உயிருடன் இருந்தபோதே கேட்டுக்கொண்டார்.
பிடித்த உணவு:
சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு ஏழு முறை வந்து சென்றிருக்கும் அப்துல்கலாம். கடைசியாக வந்தபோது அதாவது ஏழாவது முறை சாஸ்த்ரா நானோ ஆராய்ச்சி மையத்துக்கு இரவு 9 மணிக்கு வந்த அப்துல்கலாம், நள்ளிரவு 12.30 வரை ஆர்வமுடன் கேட்டு அறிந்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த முறை நேரம் போதாது, அடுத்த ஆண்டு ஒரு நாள் முழுக்க இந்த மையத்தில்தான் நான் இருப்பேன் என்று தெரிவித்துச் சென்றார். அங்கு வரும் போதெல்லாம் புளியோதரை, தயிர் சாதம், ஆவக்காய் ஊருகாய், வத்தல் குழம்பு மட்டும் செய்து வையுங்கள் போதும் என்பார். தக்காளி மற்றும் முறுங்கைக்காய் சாம்பார் என்றால் அவருக்கு தனிப்பிரியம்.
உந்து சக்தி:
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு ஆறு முறை வந்திருக்கும் அப்துல்கலாம். அவர் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த போது, பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்துடன் டி.ஆர்.டி..வில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்.
புரா திட்டம்:
2002-ல் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது நகர்புற வசதிகளை கிராமங்களுக்கு வழங்கும்புராதிட்டம் பற்றி பேசினார். 6 லட்சம் கிராமங்கள் உள்ள பின் தங்கிய இந்தியாவை அதுதான் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எனறார். ஜனாதிபதியான பின்னர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வந்த அவர். அத்திட்டத்திற்குபெரியார் புராஎனப் பெயரிட்டார். இன்று வரை 67 கிராமங்களில், 1 லட்சம் மக்கள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உந்து சக்தியாகவும், தொழில்நுட்ப வழிகாட்டியாகவும் அப்துல்கலாம் இருந்தார். அப்துல்கலாமின் பரிந்துரையால் மத்திய அரசின் மேம்பாட்டு திட்டங்களில் பங்கேற்கவும், ஆலோசனை வழங்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டார்கெட் 3 பில்லியன் என்ற நூலில் 10 பக்கங்கள் அவர்கள் பணிகள் குறித்து எழுதியிருக்கிறார்.
கணித ஆசிரியர்:
விளையாட்டுத்தனமாக மற்றொரு வகுப்பிற்குள் நுழைந்துவிட்ட மாணவனை. அவ்வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த, அம்மாணவனின் கணக்கு வாத்தியார் இராமகிருஷ்ண ஐயர். பார்த்தவுடன், கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் அடித்து விட்டார். அது முடிந்த பல மாதங்கள் கழித்து. அதே ஆசிரியர், அந்த மாணவரை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அந்த மாணவர் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான். என்று பெருமிதமாக பேசினார். அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஆம், அவரிடம் அடி வாங்கிய மாணவர், பள்ளிக்கும் ஊருக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்து விட்டார். அந்த மாணவர் தான் நம் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம்.
அறிவியல் கதாநாயகர்:
                        1998-ம் ஆண்டு மே 11-ம் நாள் மதியம் 3.45 மணிக்கு இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கைகோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியாவின் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா அப்துல்கலாம்தான். அதன் பிறகுதான் இந்திய பத்திரிக்கைகளில் தலையங்கம், கார்டூன், கவர் ஸ்டோரி என பிரபலமாகிப் போனார். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் வெளிவந்தது.
ஏவுகணைகளின் அவசியம்:
நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டல்களுக்கு பயந்து கொண்டே வாழ வேண்டியிருக்கும்என்று கூறிய அப்துல்கலாம், பாதுகாப்புத்துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார்.
எளிமையின் சிகரம்:
அப்துல்கலாம் ஒருமுறை சென்னை குரோம்பேட்டை எம்..டி-யின் பொன்விழா ஆண்டு நிறை விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் பயின்ற கல்லூரியிலேயே, உரையாற்ற வந்தார். நெடுஞ்சாலையில் இருந்து எம்..டி வளாகத்தினுள் செல்ல, இரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த நேரத்தில், இரயிலின் வருகைக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அவர் வந்த கார் கேட்டுக்கு வெளிப் பக்கமாகவே நின்று விட்டது.
இரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். அப்துல்காலம் நேரம் தவறக்கூடாது, குறித்த நேரத்தில் மேடையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காரை விட்டு இறங்கினார். கேட்டுக்குக் கீழே குனிந்து, தண்டவாளத்தைத் தாண்டி நடக்கலானார். உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு,டாக்டர். அப்துல்கலாம் சார் போறார்…” என்று அவர் பின்னாடியே ஓடி வந்தனர். மறுநாள் பத்திரிக்கைகளில் அதுதான் சிறப்புச் செய்தியாக வெளிவந்தது.
இசைப்பதும் இரசிப்பதும்:
உண்மையில் விஞ்ஞானி அப்துல்கலாம் ஒரு சிறந்த இசைஞானி. இரசிப்பதில் மட்டுமல்ல, வீணை வாசிப்பதிலும் தேர்ந்த கலைஞானி. தமது சொந்த ஊரான இராமேஸ்வரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்துவிட்டுத் திரும்பும் பழக்கமும் அவரிடம் இருந்தது. இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே அவர் எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேறி வெளி வந்துள்ளது.
வாருங்கள் இளைஞர்களே:
நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயசார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்என்று இளைய தலைமுறையினருக்கு அப்துல்கலாம் கோரிக்கை விடுத்தார்.
நிறைவேறாத கனவு:
அப்துல்கலாமின் சொந்த வீடு இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தை அருங்காட்சியமாக மாற்றினார். அப்துல்கலாமுக்கு நிறைவேறாத கனவு ஒன்று உண்டு. பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது அதை அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கைகொடுத்து உதவினார்:
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டம் ஓலவார் கிராமத்தில் வசிக்கும் தாய் தந்தையை இழந்த 11-வயது சிறுமிக்கு பெருத்த சோகம். பெற்றோருக்கு பிறகு உடன் பிறந்தவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அந்த வயதிலேயே அவளது தலையில் விழுந்தது. அப்போது அவளுடைய தம்பிக்கு வயது 6. தங்கைக்கு 4. இருவருமே எச்..வி நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள். அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய முன்வருவார் யாரும் இல்லை. இனி அவர்களை காப்பாற்றுவது கடினம், இருவர் உயிரையும் காலன் பறித்து விடுவான் என்று அக்காள் மனம் தளர்ந்த நேரத்தில் கருணையின் வடிவமாக அவர்களுக்கு அப்துல்கலாம்தான் கை கொடுத்து உதவினார்.
2005-ம் ஆண்டு நடந்ததை அவர் கூறுகிறார்:
இன்றுமக்களின் ஜனாதிபதியாக டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம் இருக்கிறார். அவர் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். கஷ்டநிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கிறார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த பெண், அவர்களது சோக நிலை குறித்து 2005-ம் ஆண்டு அவரிடம் உதவிகேட்டு கடிதம் எழுதினார். சில நாட்கள் கழித்து அவரது பெயருக்கு ஜனாதிபதி கையெழுத்திட்ட ரூ.20 ஆயிரத்துக்கானடிராப்ட்தபாலில் வந்தது. தபால்காரரின் கையில் இருந்து அதை வாங்கிய போது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் தகுந்த நேரத்தில் அப்துல்கலாமின் உதவி கிடைத்தது. இன்னும் சிறிது நாள் கடந்திருந்தால் கூட உடன் பிறந்தவர்களை பறிகொடுத்து நிர்க்கதியாகி இருப்பேன். எனவே என் உயிருள்ள வரை அப்துல்கலாமை மறக்கமாட்டேன்என மனம் நெகிழ்ந்தார்.
அந்த சிறுமி குறித்து உள்ளார் நிர்வாகம் மூலம் முழுமையாக விசாரித்த பிறகே இந்த உதவியை அப்துல்கலாம் செய்திருந்தாலும்கூட, ஜனாதிபதியே உதவி செய்து விட்டார் என்பதை அறிந்து பின்னர், இந்த சிறுமிக்கு ஆதரவுக் கரம் நீட்டியவர்கள் அனேக பேர். மாநில அரசும் உடனடியாக ரூ.20 ஆயிரம் நிதி உதவி செய்தது. அதையும் அவர் கூறினார். அந்த பெண்ணின் தம்பியும், தங்கையும் தற்போது நலமாக இருக்கின்றனர்.
வெளியேற்றம் தடுக்கப்பட்டது:

ஒடிசா மாநிலத்தின் பல குடும்பங்கள், அப்துல்கலாமின் உதவியை இன்றும் மறக்கவில்லை. அப்துல்கலாமால் பயனடைந்த குடும்பங்களில் ஒருவரான பிரபுல்ல மிஸ்திரி கூறியதாவது. அப்துல்கலாமின் உதவியால்தான் நாங்கள் இன்று இந்தியர்களாக இங்கேயே வாழ்கிறோம். நாங்கள் உண்மையிலேயே இந்த மண்ணில் பிறந்தவர்கள்தான். ஆனால் வங்காள தேசத்தில் பிறந்தவர்கள் என்று கூறி 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு எங்களுக்கு நோட்டீசு வந்தது. வேதனையில் இருந்த நாங்கள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு கடிதம் எழுதினோம். அவர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தனக்கு அதற்கான விளக்க அறிக்கை தரும்படி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். அதன் பிறகு எங்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டது. அப்துல்கலாமின் தலையீட்டால்தான் எங்களது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. என்று கூறினார்.  

No comments:

Post a Comment