Monday, 30 May 2016

“காலத்தை வென்ற கலாம்” (1931-2015) (பக்கம் 20-25)

இலகுவான செயற்கை கால்:
அப்துல்கலாம் மாற்றுத்தினாளிகள் பயன்படுத்துவதற்கு இலகுவான செயற்கை கால்கள் மற்றும் இளம் பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலகுவான காலிபர்கள் தயாரிக்க உதவினார்.
அதுபற்றி சென்னையைச் சேர்ந்த ஜி.கிருஷ்ணன், மோகனா ஆர்தோடிக்ஸ் மற்றும் புராஸ்தெடிக்ஸ் மையத்தின் இயக்குனர் கூறியதாவது:
மாற்றுத்தினாளிகள் பயன்படுத்துவதற்கு இலகுவான செயற்கை கால்கள் கண்டுபிடிக்க காரணமானவராக அப்துல்கலாம் இருந்தார். அதேபோன்று சிறுவயதில் போலியோ நோயால் கால்களை இழந்தவர்களுக்கு இலகுவான காலிபர்களும் தயாரிப்பதற்கும் உதவியாக இருந்தார். குஜராத்தில் 2001-ம் ஆண்டு நிகழ்ந்த நில நடுக்கத்தில் 350 பேர் முழங்காலுக்கு கீழ் கால்களை இழந்தனர். அப்போது அப்துல்கலாம் செயற்கை கால்களை இலவசமாக பொருத்துவதற்கு எங்களது நிறுவனத்தை தேர்ந்தெடுத்தார். உடனடியாக குஜராத் சென்று இதற்கான பணிகளைத் தொடங்குங்கள் என்று கூறியதுடன், டெல்லியில் இருந்து நில நடுக்கம் பாதித்த பூஜ் நகருக்கும் அவர் வந்தார். அவருடைய கைகளாலேயே எங்களது நிறுவனத்தை தொடங்கி வைத்தார். அது மட்டுமல்லாமல், 2 நாட்கள் கழித்து மறுபடியும் பூஜ் நகருக்கு வந்தார். நாங்கள் முதன் முதலாக உருவாக்கிய இலகுஎடை கொண்ட செயற்கை கால்களை சரிபார்த்தார். அவருடைய கைகளாலேயே முதல் நோயாளிக்கு செயற்கை காலைப் பொருத்திவிட்டார். அப்போது அப்துல்கலாமிடம் செய்தியாளர்கள் உங்களது வாழ்வில் மறக்க முடியாத நாள் எது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அப்துல்கலாம். “சுமார் 4.1/2 கிலோ எடை கொண்ட செயற்கை கால்கள் தற்போது வெறும் 400 கிராமுக்கு வந்து விட்டது. இந்த கால்களை பொருத்திக் கொண்டவர்கள் சிரமம் இல்லாமல் நடப்பதை பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதைவிட மகிழ்ச்சியான நாள் எனக்கு வேறெதுவும் இல்லைஎன்று குறிப்பிட்டார். இதிலிருந்தே மாற்றுத் திறனாளிகள் மீது அவர் எவ்வளவு பற்றும் பாசமும் கொண்டிருந்தார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
வீணை வாசிக்க பழகினார்:
அப்துல்கலாம் இசை ஆர்வம் கொண்டவர். அவர் இராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் (டி.ஆர்.டி.)-வில் பணியாற்றியபோது முறைப்படி வீணை வாசிக்க கற்றுக்கொண்டார். இதில் அவருக்கு குருவாக இருந்தவர் எம்.கல்யாணி என்ற இசை ஆசிரியை.
இசை ஆசிரியை எம்.கல்யாணி:
இராணுவ ஆராய்ச்சி ஆய்வக பள்ளியில் இசை ஆசிரியராக நான் பணியாற்றினேன். ஒருமுறை பள்ளி நிகழ்ச்சிக்காக அப்துல்கலாமிடம் சென்றோம். அதுதான் அவருடன் எனது முதல் அறிமுகம். அப்போது அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில், நான் வீணை கற்றுக்கொள்கிறேன் என்றார். சொன்னதோடு நின்றுவிடாமல், ஒரு சனிக்கிழமை இசை வகுப்பு நடைபெறும் இடத்துக்கே வந்தார். 1989-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சுமார் 3.1/2 ஆண்டுகள் முறைப்படி வீணை வாசிக்க கற்றுக்கொண்டார். தியாகராய கீர்த்தனைகளில் ஸ்ரீராகத்தை மிகவும் விரும்புவார். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்போதும், நெருக்கடியான சூழ்நிலைகளிலும் உற்சாகமாக வீணை வாசிப்பார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல் மீது அவருக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. எம்.எஸ் பாடுவது போல் இருக்காது, கடவுளுடன் பேசுவதுபோல் இருக்கும் என்பார். மகாத்மா காந்திக்கு பிறகு அவருக்கு இணையான ஒருவர் அப்துல்கலாம். திருக்குரான் மட்டுமின்றி பைபிள், பகவத்கீதை, இதர இந்து காவியங்கள் என எல்லாவற்றையும் படிப்பார்.
கற்றுக் கொள்ளவேண்டும்:
தகுதியிலும், வயதிலும் கூட மிகவும் சிறியவளான எனக்கு நன்கு கவுரவம் கொடுத்தார். ஆசிரியர்களை கவுரவிப்பதை அவரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். அவரிடமிருந்துதான் குருக்களை கவுரவிப்பதையும், சிறுவர்கள் மீது அன்பு காட்டுவதையும் நான் கற்றுக்கொண்டேன். அவர் எதையும் இலவசமாக வாங்கிக் கொள்ளமாட்டார். வீணை கற்றுக்கொள்ள நானே வீணை வாங்கிவிடுகிறேன் என்றபோது அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அவரே வாங்கிவிட்டார். ஆனால் என் கைகளால் அதை பெற்றுக்கொண்டு தங்கப்பொருளை பாதுகாப்பது போல் அதை பாதுகாத்து வந்தார். பிரச்சனைகளை தோற்கடிக்கத் தெரிந்தவர் மட்டுமே தலைவராக முடியும் என அவர் நம்பினார். என் நாட்டு இளைய தலைமுறையினர் பிரச்சனைகளை தோற்கடிக்க தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடைசி வரை பரிதவித்தார். சாதாரண மனிதராக பிறந்து சிகரத்தை எட்டிய அசாதாரண மனிதர், அவர். இவ்வாறு இசை ஆசிரியை எம்.கல்யாணி கூறினார்.
பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 2013-ல் மாணவ, மாணவிகளிடம் அப்துல்கலாம் நடத்திய உரையாடல்:
மாணவி தஸ்லிமா: உலகம் வெப்பமயமாதலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?.
அப்துல்கலாம்: நாட்டின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டிவிட்டது. ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளை நடவேண்டும்.
மாணவர் அரவிந்த் பாபு: இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் மறைந்து வர காரணம் என்ன?.
அப்துல்கலாம்: நாட்டில் விவசாயம் மறையவில்லை. 250 மில்லியன் அளவில் நெல், கோதுமை பயிர் செய்யப்படுகிறது. இதை தவிர பிற விவசாய பயிர்களையும் விவசாயிகள் பயிர்செய்ய வேண்டும்.
மாணவர் சிவா விஷ்ணு: இந்தியா வல்லரசாக மாணவர்களான நாங்கள் என்ன செய்ய வேண்டும்?.
அப்துல்கலாம்: நீ நீயாக இருக்க வேண்டும், ஆசிரியர்கள் கூறும் கருத்துகளை மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
மாணவர் கார்த்திக் ராஜா: மாணவர்கள் வெற்றியாளர்களாக மாற என்ன செய்ய வேண்டும்?
அப்துல்கலாம்: கடின உழைப்பு, விடா முயற்சியுடன் அறிவை தேடி செல்ல வேண்டும்.
மாணவி ஓவியா: இன்றைய கலாச்சாரத்தை சீர்படுத்த மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
அப்துல்கலாம்: நாட்டில் 200 மில்லியன் குடும்பத்தில் 60 மில்லியன் குடும்பத்தின் வீட்டில் ஊழல் உள்ளது. உன் குடும்பத்தில் உள்ள ஊழலை ஒழித்தால் கலாச்சாரத்தை சீர்படுத்தலாம்.
மாணவி சவுந்தர்யா: விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் மெய்ஞானத்தை மிஞ்ச முடியவில்லை ஏன்?
அப்துல்கலாம்: விஞ்ஞானம் உயர்ந்தாலும் மெய்ஞானம் உயரும். இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்.  
அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை:
•                     நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு தரவேண்டும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், வசதிகள் அளித்தல், தடையற்ற மின்சாரம், ஒவ்வொருவருக்கும் குடியிருப்பு வசதி, தகவல் தொடர்பு, கம்யூட்டர் பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவற்றை பிரதான குறிக்கோளாக கொள்ளவேண்டும்.
•                     வறுமையை முற்றிலுமாக அகற்றுதல், போட்டிகள் நிறைந்த இந்த அறிவு சார் உலகில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் வழங்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
•                     இவற்றை அரசியல் கட்சிகள் பின்பற்றினால், பாராளுமன்ற நடைமுறைகள் நாட்டை விரைவாக முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

வழக்குகளுக்கு தீர்வு:
வழக்கு எத்தனை முறை ஒத்தி வைக்கப்பட வேண்டும், மின்னணு நீதித்துறை, சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் வழக்குகளை தரம் பிரித்தல், இராணுவம், சேவை, வரிவிதிப்பு, சைபர் குற்றங்கள் ஆகிய துறைகளைக் கொண்டோரை நீதிபதிகளாக நியமித்தல், அனைத்து பல்கலைக் கழகங்களிலும் சட்டக் கல்வி வழங்குவதை மேம்படுத்துதல், அற்ப காரணங்களுக்காக வழக்கு தொடர்பவர்களுக்கு அபராதம் விதித்தல், சுப்ரீம் கோர்டின் முன்னோடி திட்ட ஆலோசனைகளைப் பின்பற்றுதல், சனிக்கிழமைகளிலும் கோர்ட் இயங்குதல், அமர்வுகளுக்கு வரையறுக்கப்பட்ட காலக்கெடு வைத்து வழக்குகளுக்கு தீர்வு காணுதல் என பல்வேறு வழிகளை கூறியிருக்கிறார்.
நிறைவேறாத சூரிய மின்சக்தி திட்டம்:
அப்துல்கலாம் ஜனாதிபதி மாளிகையில் 5 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த விரும்பினார். அதற்கான திட்டத்தை ஜனாதிபதியாக இருந்த இறுதி காலகட்டத்தில் தயாரித்திருந்தார். ஆனால் அவரால் அத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. அந்த திட்டத்தை நிறைவேற்றினால் புகழ்பெற்ற முகல் கார்டனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் சூரிய மின் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை அவர் ஆதாரப்பூர்வமாக விளக்க தயாரானபோது அவருடைய பதவி காலம் முடிந்துவிட்டது.
இலட்சிய திட்டம்:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதி, அந்த ஆண்டில் செயல்படுத்த வேண்டிய விஷ்யங்களை குறிப்பிட்டு இலட்சிய திட்டம் ஒன்றை உருவாக்குவார். அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் கணக்கெடுத்து பார்த்தால் 70 சதவீத திட்டங்களை நிறைவேற்றி இருப்பார். அந்த அளவுக்கு திட்டமிட்டு செயலாற்றும் திறன் கொண்டவர்.
21 வருடங்கள் உணவிட்டவர்:
1963 முதல் 1984-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் திருவனந்தபுரம் தும்பா ராக்கெட் நிலையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். அப்போது அவர் காந்தாரியம்மன் கோவில் பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில்தான் வழக்கமாக சாப்பிடுவார்.
அப்துல்கலாம் பற்றி பரமேஸ்வரன் நாயர் கூறியது:
அப்துல்கலாம் அதிகம் பேச மாட்டார். பார்த்ததும் புன்னகை சிந்துவார். அந்த சிரிப்பு அன்பு நிறைந்ததாக இருக்கும். ஒரு நாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. நான் அந்த மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது அப்துல்கலாம் வந்து கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த சாதாரண செருப்பில் இருந்து மழை நீர் தெறித்துவிடாதபடி மெல்ல அடி எடுத்து வைத்து, முழுக்க நனைந்தபடி நடந்து வந்தார். அவரை கூர்ந்து கவனித்தபோது அவருடைய அக்குளில் குடை இருந்தது. ஆனால் அந்த குடை இருந்ததுகூட தெரியாமல் நடந்து வந்தார். அந்த அளவிற்கு எந்த நேரமும் ஆராய்ச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பார். எங்கள் ஓட்டலுக்கு வரும்போது அவருடைய நடையில் வேகம் இருக்கும். ஓடோடி வருவார். பரபரப்பாக காணப்படுவார். காலையில் ஆப்பமும், பாலும் சாப்பிடுவார். இரவில் நெய்யில் வார்த்த தோசையும், பாலும் குடிப்பார். அவர் ஜனாதிபதியான பிறகு அவருடைய அழைப்பின் பேரில் நானும், என் மனைவி லீலாவதியும் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றோம். அவருக்கு பிடித்தமான நீலநிற உடையை வாங்கிச் சென்று அவரிடம் கொடுத்தோம். அதை தொட்டு வணங்கிய அப்துல்கலாம் எங்களிடமே திருப்பிக் கொடுத்தார்என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.
அறிவித்த திட்டங்களை கண்காணிப்பார்:
அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, ஜனாதிபதி மாளிகையில் பல தொழில்நுட்பங்களை புகுத்தினார். ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற கூட்டுத் தொடரில் அவர் உரை நிகழ்த்தும்போது அதனை லேப்டாப்பில் பதிவு செய்துவிடுவார். தான் நிகழ்த்திய உரையில் இடம்பெற்ற திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பதை கண்காணித்து வருவார். பிரதமர் தன்னை சந்திக்க வரும்போது லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பேச்சை காண்பித்து, அறிவித்தபடி எந்தெந்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது? என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை என்பதை சுட்டிக்காட்டுவார். பொதுவாக வயதாகும்போது கம்யூட்டர் ஸ்கிரீனை பார்த்து வாசிப்பதற்கு பலரும் தடுமாறுவார்கள். ஆனால் அப்துல்கலாமுக்கு எந்த தடுமாற்றமும் ஏற்படவில்லை. அவர் எப்போதுமே கம்யூட்டர் திரையில்தான் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார்.
ஜனாதிபதி மாளிகையில், 18 ஆண்டுகள் பணியாற்றிய ஜே.கே.சஹா கூறியதாவது:
ஒரு நாள் அப்துல்கலாம்இன்டர் காம்”-ல் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லி, அவரின் தொலைபேசி இணைப்பை பெற்றுத் தருமாறு கூறினார். பொதுவாக, ஜனாதிபதியின் செயலர்கள்தான் இவ்வாறு இணைப்பை பெற்றுத் தருமாறு கேட்பது வழக்கம். தவிர அப்துல்கலாம் அவர்கள் கூறிய பெயர் எனக்கு புரியவில்லை. எனவே, அவரை நேரடியாக தொடர்பு கொண்டு என் சந்தேகத்தை கேட்காமல், அவரின் செயலரிடம் கேட்டு, குறிப்பிட்ட அந்த நபரின் இணைப்பை பெற்றுத் தந்தேன். சிறிது நேரம் கழித்து, மீண்டும் இன்டர்காமில் வந்த அப்துல்கலாம். “உங்களுக்கு நான் கூறியது புரியவில்லையென்றால் தாராளமாக என்னிடமே கேட்கலாம். எதற்கும் தயங்க வேண்டாம்என்று கூறினார். அவரின் வார்த்தைகளால் நான் நெகிழ்ந்து போனேன்.
அங்கு பணியாற்றும் மற்றொரு பணியாளர் டி.கே.சாஹா கூறியதாவது:
 “குடியரசுத் தலைவர் மாளிகையில் ஐந்து ஆண்டுகள் அப்துல்கலாம் தங்கியிருந்த போது ஒரே ஒரு முறை மட்டும்தான் அவரின் குடும்பத்தினர் அங்கு வருகை தந்திருந்தார்கள்”. என்றார்.
அங்கு பணியாற்றும் சமையல்காரரான சலீம் அகமது கூறியதாவது:
 “அவருக்கு தென்னிந்திய உணவுகள் மிகவும் விருப்பமானதாக இருந்தன. எனினும், ஒருபோதும் குறிப்பிட்ட உணவு வகைகளை சமைக்கச் சொல்லி கேட்டதில்லை. அவர் ஒருபோதும் உணவை குறை சொன்னதும் இல்லை என்றார்.
குழந்தைகளின் ராஷ்டிரபதி:
உலகுக்கு உண்மையான அமைதியைக் கற்பிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், குழந்தைகளிடமிருந்துதான் அதைத் தொடங்க வேண்டும்என்றார் காந்தி. குழந்தைகளின் உலகோடு எப்போதுமே நெருக்கமாக தன்னை வைத்துக் கொண்டவர் அவர். நாட்டின் முதல் பிரதமரும் தொலை நோக்காளருமான ஜவஹர்லால் நேருவிடமும் அந்த பண்பு இருந்தது. குழந்தைகள் மீது அவர் காட்டிய அளப்பரிய நேசம், அவர்களுடைய எதிர்காலம் மீதான அவருடைய கனவுகள் ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், நாடு முழுவதும் திறக்கப்பட்ட பொதுப் பள்ளிகளில் தொடங்கி எய்ம்ஸ், .ஐ.டி ஐ..எம். வரை நீண்டது. அவர்கள் விட்டுச் சென்ற பணியை மக்களின் ஜனாதிபதியான அப்துல்கலாம் செய்து வந்தார்.
உலகின் மிகப்பெரிய ஆட்சியாளர் மாளிகையான, 370 ஏக்கர் ராஷ்டிரபதி பவனில் அதிகமான பொதுமக்கள் உள்ளே நுழைய முடிந்த காலம். அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த காலமாகும். பெரும்பகுதி விருந்தினர்கள் குழந்தைகள், மாணவர்கள். அவரைச் சந்தித்து வந்த பலர் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிந்தது. அவருக்குக் கடிதம் எழுதினால், நிச்சயம் பதில் வரும். குழந்தைகளின் மீதும் இயல்பாகவே அவருக்கு மிகப் பெரிய அன்பு இருந்தது.
ஒரு ஊருக்கு அவர் வருகிறார் என்றால், நிச்சயம் அவருடைய நிகழ்ச்சி நிரலில் பள்ளி/கல்லூரிகள், பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கு ஒரு இடமேனும் இருக்கும். ஒரு காலகட்டத்தில் அவரைப் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைக்க ஒப்புதல் பெற வேண்டும் என்றால். கூடவே பள்ளி, கல்லூரி/பல்கலை நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களையும் முன்மொழிந்தால், ஒப்புக்கொள்வார் என்ற சூழல்கூட உருவானது. இப்படிக் கல்வி நிலையங்களைத் தேடி வரும்போதெல்லாம், தான் மேடையில் நின்று பேச ஏனையோர் கீழே கை தட்டல் பெற வேண்டும் என்று விரும்பியவர் அல்ல மாறாக, குழந்தைகள் மத்தியில், அவர்களில் ஒருவராகக் கலந்துரையாடியவர். குழந்தைகளை அதிகம் பேச வைத்து தான் கை தட்டியவர். தன்னை அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கால தாமதமாகச் செல்வதைக் குற்றமாகக் கருதியவர். “குழந்தைகள் நமக்கு தெரியாமலேயே நம்மிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறவர்கள். நாம் அறியாமலேயே நமக்கு நிறையக் கற்றுக்கொடுப்பவர்கள். நாம் அதிகமாகவே மதிப்போடும் ஜாக்கிதையோடும் அணுக வேண்டியவர்கள் என்பார்கள்என்பார். அப்துல்கலாமுக்குள் எப்போதும் ஓர் ஆசிரியர் இருந்தார். எப்போதும் ஒரு மாணவரும் இருந்தார். இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒருமுறை சொன்னார்.
என்னை எப்போதும் வழிநடத்தும் கவிதை வரிகள் இவை. நான் சின்ன வயதில் படித்தவை.
உனது எல்லா நாட்களிலும்
 தயாராக இரு
 எவரையும் சம உணர்வுடன் எதிர்கொள்
 நீ பட்டறைக் கல்லானால்
 அடிதாங்கு
 நீ சுத்தியலானால்
 அடி!”
என்றார். ஆம், குழந்தைகளின் உலகோடு நெருக்கமானவர்களுக்குத்தான்
இது சாத்தியம்
நாட்டின் வளர்ச்சிக்கு இலட்சியங்களை வளர்த்தவர்:
அப்துல்கலாம் விஞ்ஞானி, சமூக சிந்தனையாளர், மனிதாபிமானி, தமிழ்மொழிப் பற்றாளர். என பன்முகத் தன்மை கொண்டவர். என்ற இவ்வொவ்வொன்றிலும் அவர் தனி முத்திரை பதித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விசயம். அதுவும் குறிப்பாக இன்றைய இளைஞர்களை உத்வேகப்படுத்தும் விதமாக அவர் கூறிய கருத்துகள் இந்தியாவுக்கு அரிய பொக்கிஷம். இளைஞர்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினால் அவர்களை இந்த சமூகத்தில் சிறந்த குடிமக்களாக உருவாக்கிவிடலாம் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அப்போதுதான் தேசத்தின் கட்டுமானத்தை வலிமையாக அமைக்க முடியும் என்று கூறுவார். ஒரு செயலில் இறங்கும்போது, அதை முடித்துவிட வேண்டும் என்கிற உறுதி மொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் திட்டமிட்டவாறு செய்து முடிக்க முடியும் என்றும் கூறுவார். இளைஞர்களுக்கு அவர் அளித்திட்ட நம்பிக்கை, மரம் வளர்த்தலின் அவசியம். நதிநீர் இணைப்பு, பயோ டீசல் பயன்பாடு, விண்வெளி அணுசக்தி ஆராய்ச்சி என்று அவருடைய சிந்தனைகள் பெருமளவில் விரிவடைந்து கொண்டே போகிறது.
பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றாக கொண்டது நமது நாடு. எனவே கோடிக்கணக்கான மக்களின் மனதையும், இதயங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். முன்னேற்றம் என்கிற 10 அம்ச திட்டத்தின் உதவியுடன் இதனைச் செய்து முடிக்கவேண்டும். இதற்கு என்னால் இது முடியும் என்ற தன்னம்பிக்கையை மக்களின் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றிக் காட்ட வேண்டும் என்றும் சபதம் எடுத்துக் கொண்டார். இப்படி நாட்டின் வளர்ச்சிக்கே தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்துக் கொண்டார்.
அப்துல்கலாமை விரும்பும் இளைஞர்கள்:
ஒரு நடிகனுக்கு கிடைக்கும் விளம்பரம் நல்ல மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை என்ற பேச்சைக் கேட்டிருப்போம். ஆனால் அது .பி.ஜே.அப்துல்கலாமைப் பொருத்த வரையில் அதுபுரளிதான். நூலகம் தொடர்பான மாநாடு ஒன்றில் பங்கேற்ற வந்த அவருக்கு வி..பி அந்தஸ்துடன் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, அன்பான உபசரிப்பையும் அளித்து மகிழ்ந்தனர். இளைஞனைப்போல சுறுசுறுப்பாக இளைஞர் கூட்டத்துக்கு அவர் வந்தவுடன் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு அதிகமானது. அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டியடித்தவர்களில் மீடியாவைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.
மொபைலின் முக்கியத்தும்:
மாநாட்டில் அப்துல்கலாம், இந்தியாவை மொபைல் நாடு என்று வர்ணித்தார். ஒவ்வொருவரின் கையிலும் மொபைல் போன் இருக்கும் போதுஅறிவை ஊட்டிவிட அவசியமில்லைகைகளில் திணித்துவிட்டால் போதும் என்றார் அவர்.
அப்துல்கலாமின் 50 ஆண்டுகால நெருங்கிய நண்பர் ஒய்.எஸ்.ராஜன்:
அப்துல்கலாமுடன் எனக்கு 50 ஆண்டுகளாக நெருங்கிய நட்புறவு இருந்து வந்தது. அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மையத்தில் அவர் பணியாற்றியபோது முதல் முறையாக அவரை சந்தித்தேன். அப்போது நானும் அங்கு பணியாற்றினேன். அந்த நேரத்தில் வயதில் அவர் என்னை விட 12 ஆண்டுகள் பெரியவராக இருந்தார். எனக்கு 21 வயது. அவர் 33 வயதை தாண்டி இருந்தார். அந்த நாள் முதல் கடைசி வரை நான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்தார்.
தொலைநோக்கு திட்டங்கள்:
1998-ம் ஆண்டு நாங்கள் இருவரும் இணைந்து இந்தியா-2020 என்ற புத்தகத்தை எழுதினோம். இந்த புத்தகம் எழுதிய 17 ஆண்டுகளில் நாங்கள் வளர்ச்சியை, முன்னேற்றத்தை காண முடிகிறது. ஆனால் சில பிரச்சனைகள் எங்களை சுற்றிச் சுற்றி வந்தது. அதன் பிறகு “2020-க்கு அப்பால் இந்தியாஎன்ற புத்தகத்தை நாங்கள் இணைந்து எழுதினோம். இது எதிர்கால இந்தியாவுக்கான தொலைநோக்கு திட்டங்களை கொண்ட புத்தகம் ஆகும். நாட்டுக்காக அவர் ஓய்வின்றி உழைத்ததை என்னால் பார்க்க முடிந்தது. அவர் என்னுடன் பேசும்போதெல்லாம் நாட்டின் வளர்ச்சி பற்றியே உரையாடுவார். பெரும்பாலும் அவர் தினமும் என்னுடன் பேசுவார். தமிழ் மொழியில் நாங்கள் இருவரும் பொதுவானவர்கள். திருவள்ளுவர் மற்றும் சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள் பற்றி கலந்துரையாடி உள்ளோம். நான் பல கவிதைகளை அவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஒய்.எஸ்.ராஜன் அறிவியல் துறை செயலாளராக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு தொழில்நுட்ப தகவல் வானிலை ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கவுன்சில் செயல் இயக்குனராக பணியாற்றினார். அப்போது அதன் தலைவராக அப்துல்கலாம் பணியாறறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழக மாணவர்களை சந்தித்த அப்துல்கலாமின் கடைசி நிகழ்ச்சி:
கரூர் மாவட்டம் தஞ்சை அவரக்குறிச்சியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சி.சுப்பிரமணி நடத்திவரும் ஆறுமுகம் அகாடமி பள்ளியில் ஜுலை 18-ம் தேதி 2016-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல்கலாம், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவிகளைப் பாராட்டி பரிசு வழங்கினார். அதன் பின்னர், திண்டுக்கல்லில் உள்ள அவரது ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்துவிட்டு, மதுரையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நடத்திய விழாவில் பங்கேற்றார்.
மதுரையில் அப்துல்கலாமின் பேச்சு:
                        தமிழகத்தில் மதுரையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நடத்திய தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு நிறைவு விழா, மின்னணு நிர்வாகத்தில் யாரும் தனிமைபடுத்தப்பட்டு விட்டதாக கருதக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் கணினி பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சங்கத்தின் சார்பில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளடிஜிட் ஆல்என்ற அமைப்பின் தொடக்கவிழா ஆகியவை வர்த்தக சங்க அரங்கத்தில் ஆகஸ்ட் 18-ந் தேதி மாலை நடந்தது. அவ்விழாவில் அப்துல்கலாம் கலந்து கொண்டுடிஜிட் ஆல்என்ற அமைப்பை தொடங்கி வைத்து பங்கேற்றார்.
அப்துல்கலாம் பேசியதாவது:
•                     அரியலூர் சோழன்மாதேவியில் இயற்கை வேளாண்மை செய்து வரும் 3 ஆயிரம் விவசாயிகளை சந்தித்து பேசினேன். இயற்கை சார்ந்த முறையில் விவசாய பொருட்களை விளைவித்து, அதை மதிப்புகூட்டி உலகத்தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது கனவு. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்.
•                     அவரக்குறிச்சியில் தனது ஆசிரியர் பெயரில் ஒருவர் பள்ளி தொடங்கியுள்ளார். அதுபோன்ற ஆசிரியரின் பெயரில் ஒருவர் பள்ளி தொடங்கி இருப்பதை நான் பார்த்தது இல்லை. அந்த பள்ளிக்கு சென்று வந்த நான், அதை நினைத்து பெருமை அடைகிறேன்.
•                     இயற்கை விவசாயத்தை பெருக்கி, இல்லந்தோறும் இயற்கை உணவு உண்ணும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று, ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் ஒரு மணி நேரம் டி.வி. பார்ப்பதை குறைத்து விட்டு அந்த நேரத்தில் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகத்தை படிக்க வேண்டும். அப்போது தான் நமது குழந்தைகள் அறிவுசார் குழந்தைகளாக வருவார்கள். அறிவு சார் சமூகத்தை உருவாக்க முடியும்.
•                     நமது பகுதிகளில் உள்ள ஊருணிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும். ஊருணிகளை தூர்வாரி தண்ணீர் தேக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில்களையும், தொழில் முனைவோரையும் இணையதளம், சமூக வலைதளம் மூலம் சாதாரண மக்களிடம் கொண்டு செல்வது மகிழ்ச்சிக்கு உரிய விஷயமாகும்.
•                     வேளாண்மை, டெக்ஸ்டைல், பிளாஸ்டிக் உற்பத்தி, செங்கள், டைல்ஸ் உற்பத்தி, மீன் உணவு போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். மதுரை மல்லிகையை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும்.
•                     “விஷன் இந்தியா 2020” என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் உயர்த்தப்படும்.
•                     இதன் மூலம் வறுமையில் வாழும் 30 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவார்கள். எனவே தனிமனித கல்வி, நகர்புற வளர்ச்சி மேன்மை அடையும். இந்த லட்சியங்களை அடைய மத்திய-மாநில அரசுகள் தேவையானவற்றை செய்ய வேண்டும். வறுமை முற்றிலும் ஒழிய கல்லாமை ஒழிக்கப்பட்டு சமுதாயத்தில் யாரும் தனிமை படுத்தப்படவில்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
•                     இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக மாறினால் மட்டுமே ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த நாடாக இந்தியா மாறும். நீடித்த வளர்ச்சிக்கு தலைமைப்பண்பு மிகவும் அவசியம். எனவே, இளைஞர்கள் தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
•                     பொருளாதார, சமூக ரீதியான அனைத்து வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சி சங்கம் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன். என்று பேசினார்.
அப்துல்கலாம் இரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள்:
பாம்பன் பாலத்தில் இரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் இரயில் பாலத்தின் நூற்றாண்டு தொடக்க விழா கடந்த 2014 ஜனவரி 28-ம் பாம்பன் இரயில் நிலையம் அருகே நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அப்துல்கலாம் தெற்கு இரயில்வே நிர்வாகப் பொது மேலாளர் ராஜேஷ் மிஸ்ரா, மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் .கே.ரஸ்தோகி ஆகியோர் முன்னிலையில் ரயில்வே அமைச்சகத்துக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
கோரிக்கைகள்:
•                     நூற்றாண்டு பாரம்பரியச் சின்னமாக பாம்பன் பாலத்தை யுனெஸ்கோவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்.
•                     இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்குபாம்பன் எக்ஸ்பிரஸ்என்ற பெயரில் ஒரு புதிய தினசரி இரயிலை இயக்க வேண்டும்.
•                     இராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு இரயிலிலும் மீனவர்கள் மீன்களைக் கொண்டு செல்வதற்காக பிரத்யேக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும்.
•                     இராமேஸ்வரம், பாம்பன் இரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
புதிய தலைமுறை இதழில் தொடர் கட்டுரை எழுதினார்:
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டுக்காக புதிய தலைமுறை இதழ் ஆரம்பிக்கப்பட்ட போது, அந்த இதழை பெரிதும் வரவேற்றார் அப்துல்கலாம். “இளைய இந்தியா 2020” என்ற தலைப்பில் புதிய தலைமுறை இதழில் ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள், மாணவ சமுதாயத்திற்கும், இளைஞர்களுக்கும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்தன. இதன் மூலம், அப்துல்கலாமின் கருத்துக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சென்றடைவதற்கு புதிய தலைமுறை ஒரு தளமாகத் திகழ்ந்தது.
ஒரு புறாவின்புரா

மத நல்லிணக்கத்துக்கு ஒரு வழிகாட்டியாக, வானில் பறந்த சமாதானப் புறாவான அப்துல்கலாம் வாழ்வில் மற்றொருபுராமுக்கிய இடம் பெற்றது. அப்துல்கலாம் கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும். மேல் படிப்புக்காகவும் பணி நிமித்தம் காரணமாகவும் அவர் பெரு நகரங்களில்தான் அதிக நாட்கள் வாழ்ந்தார் என்றாலும், கிராமத்தின் முக்கியத்துவத்தை அவர் என்றும் மறந்ததே இல்லை. ஒரு மாநிலம் முன்னேற வேண்டும் என்றால், முதலில் அங்குள்ள கிராமங்கள் முன்னேற்றம் பெற வேண்டியது மிக அவசியம் என்று அவர் அடிக்கடி கூறுவது உண்டு. “நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் கிராம வாழ்க்கையின் லயத்தை என்னால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இப்போது பலரும் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி படையெடுப்பது அதிகரித்துவிட்டது. சொத்து சுகங்கள், ஆசாபாசங்களை இழந்து விட்டு, நகரத்தின் நெருக்கடியான பகுதிகளில் குடியேறி காலம் தள்ளுகிறார்கள். கிராமங்களை நகர வசதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தினால், அவர்கள் கிராமங்களிலேயே தங்கிவிடுவார்கள் இதனால் இந்தியாவின் முகமே மாறிபோய்விடும்என்று கூறினார்

No comments:

Post a Comment