அப்துல்கலாம் “இந்தியா 2020” என்ற திட்டத்தை உருவாக்கி, இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களை மேம்படுத்த திட்டமிட்டார். அப்போது பேராசிரியர் பி.வி.இந்திரேசன் என்பவர் “புரா” என்ற திட்டத்துடன் அப்துல்கலாமை அணுகினார். இது அப்துல்கலாமை வெகுவாக கவர்ந்தது. நகரத்து வசதிகளை கிராமப் பகுதிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்தத் திட்டம் ஆங்கிலத்தில், புரொவைடிங் அர்பன் அமெனிட்டீஸ் டு ரூரல் ஏரியாஸ் என்பதின் சுருக்கம்தான் “புரா” என்று அழைக்கப்படுகிறது. இந்தத்
திட்டத்தை செயல்படுத்துவதற்காக அப்துல்கலாம் மத்தியபிரதேசத்தில் உள்ள, அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத தோர்னி என்ற கிராமத்தைத் தேர்வு செய்தார். அங்கே மின்சார வசதியோ, சரியான போக்குவரத்து சாலைகளோ இல்லை. “புரா” திட்டம் செயல் வடிவம் பெற்ற பிறகு அப்துல்கலாம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு, இந்தத் திட்டத்தை மற்ற கிராமங்களிலும் அமல்படுத்தவும், இதே போன்ற பல கிராமங்களை ஒன்று சேர்த்து ஒரு தொகுப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அங்கு இருந்த மாநில அரசைக் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் புரா திட்டம்:
தமிழகத்தில் 2003-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக தொடங்கப்பட்டது. அப்துல்கலாம் இதனைத் தொடங்கி வைத்து பேசினார். இந்தத் திட்டத்தில் 65 கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. 2006-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அப்துல்கலாம் அங்கே மீண்டும் சென்று பார்த்தபோது, “புரா” திட்டத்தினால் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. 1.800 சுய உதவிக் குழுக்களின் ஆதரவுடன் தொழில் முனைவோர் பலர் உருவாகி இருந்தனர். நீர் நிர்வாகத் திட்டத்தை செம்மையாகப் பயன்படுத்தியதால், 200 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றப்பட்டு இருந்தது. பல விதமான பொருட்கள் அங்கே உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. “புரா” திட்டத்தில் இணைந்து இருந்த 65 கிராமங்களும் வேகமாக வளர்ச்சி பெற்றன. அங்கே வசித்த மக்களின் வாழ்க்கையில் தரம் வெகுவாக உயர்ந்தது.
புரா திட்டத்தால் ஏற்பட்ட நன்மைகள்:
தஞ்சை மாவட்டம் பூதலூர் இருகே உள்ள முத்துவீரன்கண்டியன்பட்டி, வீரமரசன்பேட்டை கிராமத்தில் மக்கள் புளோரைடு அதிகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தனர். இதனால் அப்பகுதி மக்களின் பற்கள் கொட்டி விட்டன. இதற்காக பல்கலைக் கழகம் அமெரிக்க கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து நீரை சுத்திகரிப்பு செய்து அந்த கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை “புரா” திட்டத்தின் மூலம் தொடங்கியது. அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் நேரடியாக இந்த கிராமத்திற்கு சென்று திட்டத்தை தொடங்கி வைத்தார். தண்ணீரில் புளோரைடு கலந்து இருக்கிறதா? என்பதை அவர் பரிசோதிக்க அந்த தண்ணீரை பாதுகாலரின் எதிர்ப்பையும் மீறி குடித்தார். பின்னர் அங்கு கூடி இருந்த ஒவ்வொருவரிடமும் கை குலுக்கி உடல் நலத்தை நன்கு பார்த்துக் கொள்ளும்படி ஆலோசனை கூறினார்.
கிராமத்திற்கு நேரில் சென்ற ஜனாதிபதி:
இந்த கிராமத்துக்கு ஜனாதிபதி வருவாரா? என்று நினைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த கிராமத்துக்கே வந்த அப்துல்கலாமின் எளிமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நாட்டு நலனிலும், மக்கள் முன்னேற்றத்திலும் கடைசி வரை அவர் மிகுந்த அக்கறை கொண்டு இருந்தவர்.
இத்திட்டத்தை பாராட்டினார்:
குடும்ப உறவுகளுடன் கூடிய ஞானத்துடன் நவீன கால கல்வி முறை இணைதல், பெண்கள் உள்பட அனைவருக்கும் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்தல், அனைவரும் ஆரோக்கிய நலன் பெறுதல், தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் மீது அக்கறை காட்டுதல், அனைவருக்கும் ஏற்றத்தாழ்வின்றி செல்வ வளம் கிடைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது” என்று அப்துல்கலாம் பெருமையாகச் சொன்னார்.
அப்துல்கலாமின் கனவு:
எதிர்காலத்தில் நாட்டில் சுமார் 7 ஆயிரம் “புரா” திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று அப்துல்கலாம் கனவு கண்டார். இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி எங்கு சென்றாலும் தனது பேச்சின் ஊடே இந்த “புரா” திட்டம் பற்றி குறிப்பிடத் தவறுவதே இல்லை. அவர் மீண்டும் ஜனாதிபதியாக வந்திருந்தால், இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் அவர் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, கிராமத்து இளைஞர்கள், விட்டில் பூச்சிகளைப்போல நகர் புறங்களை நாடி, தேடி வருவதை கணிசமாக குறைத்திருப்பார்.
சுவாமி சிவானந்தரைச் சந்தித்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம்:
அப்துல்கலாம் போர் விமானியாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில், மனம் சோர்ந்து ஹரித்வாருக்குச் சென்றபோது, சுவாமி சிவானந்தரைச் சந்தித்து அவருடைய ஆசியையும் மன சாந்தியையும் பெற்றுத் திரும்பினார். தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தேசத் தொண்டையும் மணந்து கொண்டார். ஆன்மீகத் தேடலில் சமயத்தின் எல்லைகள் குறுக்கிட அவர் அனுமதிக்கவில்லை. அப்துல்கலாம் பல்வேறு துறைகளில் ஜொலித்தவர். தனது மகத்தான கனவுகளாலும் அசாத்தியமான உழைப்பாலும் கூறிய அறிவாலும் எடுத்த காரியம் யாவிலும் வெற்றிபெற்றவர்.
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் சொற்கள்:
பல்வேறு சாதனைகளையும் விருதுகளையும் ஒப்பற்ற மரியாதையையும் பெற்ற அப்துல்கலாம். இவற்றில் எதுவுமே தன் தலையில் கனத்தைக் கூட்டவோ தன் எளிமையைக் களங்கப்படுத்தவோ அனுமதிக்கவே இல்லை. வலுவானதும் ஆழமானதுமான அவரது கருத்துகளை விடவும் தன் வாழ்வின் மூலம் அவர் நிகழ்த்திக்
காட்டிய முன்னுதாரணங்கள் வலிமையானவை. அவரது சொற்கள் உயர்வானவை. அந்தச் சொற்களின் விளக்கமே அவரது வாழ்வு.
மாணவர்களுக்கு ஊக்கம் தந்தார்:
அப்துல்கலாம் சிறுவர்களுக்கு சாதிப்பதற்கான ஊக்கம் தருவதையே தன் வாழ்வின் தலையாய பணியாகச் செய்து வந்தவர். சாதி, மத, இனம், மொழி என எல்லா விதமான பேதங்களுக்கும் அப்பாற்பட்டு அவரது தாக்கம் இளைஞர்களிடையே பரவியிருந்தது. தன்னிடம் பேச விரும்பும் ஒவ்வொரு இளைஞருக்கும் தன் காதுகளைத் திறந்து வைத்து காத்திருந்தவர். சுதந்திர இந்தியாவில் இத்தகைய ஆளுமை என இன்னொருவரைச் சட்டென்று அடையாளம் காட்டிவிட முடியாது என்பதே அவரது அருமையை உணர்த்துகிறது. தர்க்கரீதியான சொற்களாலும் கண்கூடான தன் சுய உதாரணத்தாலும் இந்தப் பண்புகளை இளைய மனங்களில் பதிய வைத்தவர். தன் அனுபவங்களின் மூலமாக, பரந்த அறிவின் வாயிலாகத் தன் கனவுகளைத் தெளிவான வரைபடமாக மக்கள் முன் வைத்தவர். இன்றைய கனவு என்பது நாளைய யதார்த்தம் என்பதைப் புரிய வைத்தவர். லட்சியவாதமும் மகத்தான கனவுகளும் ஒரு நாளும் காலாவதியாகாது என்பதை நிரூபித்ததே அவரது மகத்தான பங்களிப்பு!
அப்துல்கலாம் கௌவுரமாக நினைத்த பணி:
தனி மனித பண்பு, திறன், எதிர்காலம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் உன்னதமான வாழ்க்கைத் தொழில்தான் கற்பித்தல் பணி. ஒரு சிறந்த ஆசிரியர் என மக்கள் என்னை நினைத்தால் அதுதான் எனக்கு மிகப் பெரிய கௌவுரவம் என்பார்.
கல்வியின் பயன்:
உண்மையைப் பின்தொடர்வதே கல்வியின் குறிக்கோள். ஞான மார்க்கத்தில் செல்லும் முடிவில்லாப் பயணம் கல்வி. மனதை விரிவுபடுத்திக்கொண்டே செல்லும் அப்பயணத்தில் குறுகிய சிந்தனை, பிளவு, பொறாமை, வெறுப்பு, பகைமை போன்றவற்றுக்கு இடமில்லை. முழுமையானவராக, உன்னத ஆன்மாவாக, பிரபஞ்சத்துக்குக் கிடைத்த பொக்கிஷமாக ஒருவரை மாற்றும் வல்லமை படைத்தது கல்வி. ஒரு மனிதரின் கண்ணியத்தை வளர்த்து அவருடைய சுயமரியாதையை மேலும் வளர்த்தெடுப்பதுதான் உண்மையான கல்வி. கல்வியின் சரியான அர்த்தத்தை அனைவரும் உள்வாங்கிக்கொண்டு அவர்களுடைய செயல்பாடுகளில் பின்பற்றத் தொடங்கினால், இவ்வுலகம் அற்புதமான இடமாக மாறும். இவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள்தான் ஆசிரியர்கள். ஞானம், அப்பணிப்பு, கருணையிலிருந்து தோன்றுபவர்கள் என்றார்.
ஆசிரியரின் இடத்தை தொழில்நுட்பத்தால் நிரப்ப முடியாது:
சந்தேகத்துக்கு இடமின்றித் தகவல்களைச் சுலபமாகப் பெற இணையம் உதவுகிறது. சொல்லப்போனால், நவீன கருவிகளும் கல்வி தொடர்பான வலைதளங்களும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவியாக உள்ளன. ஆனால், ஒருபோதும் தொழில்நுட்பத்தால் ஆசிரியரின் இடத்தை நிரப்ப முடியாது என்றார்.
பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும்:
பள்ளி எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய இடமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், கடினமான பாடங்களைச் சொல்லித்தருவதில் தவறில்லை. மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடியபடி மாணவர்களும் நேரடியாகப் பங்குபெரும் வகையில் வகுப்புகள் மாற்றப்பட வேண்டும். வெறும் வீட்டுப்பாடம் தருவதற்கு பதிலாக சுவாரஸ்யமான கற்றல் அனுபவமாகக் கல்வியை மாற்ற வேண்டும். இதைத்தான் மாணவர்கள் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய ஆரம்பக் கல்வி முறை படைப்பாற்றல் அற்று உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கற்றல் முறையை எளிமைபடுத்த, படைப்பாற்றல் மிக்க வகுப்புகள், கற்பனைத்திறன் மிக்க ஆசிரியர்கள், படைப்பாற்றல் மிக்க பாடத்திட்டம் தேவை. மாணவர்களிடம் நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்து அவர்களுக்கு ஆராய்ச்சி மனோபாவத்தைத் தூண்டி, ஞானம் அடையும் பாதைக்கு அழைத்துச்செல்வதே ஆசிரியர்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றார்.
ஆசிரியர்கள் பற்றி:
அறிவு தனித்துவம் வாய்ந்தது. எங்களுடைய ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போதே அவர்களுடைய கல்வி ஞானம் சுடர்விடும். காந்தியின் வாழ்வியலைப் பின்பற்றிய அவர்களிடம் தூய்மையின் ஒளி வீசும். என்னுடைய வகுப்பறை அனுபவத்திலிருந்து சொல்கிறேன். அறிவு தீட்சண்யம், சிந்திக்கும் விதம், வாழ்க்கை முறை இவை அத்தனையும் பொருத்தே ஒருவர் சிறந்த ஆசிரியர் எனும் மரியாதை பெறுகிறார். அத்தகைய ஆசிரியர்கள் இருந்தால் பிரம்புக்கு அவசியமே இல்லை. சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்கள் இருக்கும் சூழலில்தான் இது சாத்தியம். ஆனால், சில நேரங்களில் பிரம்பைத் தவிர்க்கவே முடியாது. உதாரணத்துக்கு, பாடம் ஒழுங்காகப் படிக்காமல் என்னுடைய கணித ஆசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ண ஐயரிடம் நான் பிரம்படி வாங்கியிருக்கிறேன். அப்படி அடிவாங்கிய பிறகுதான் நான் பொறுப்பாகப் படித்து 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கினேன். ஆக அன்பு, கண்டிப்பு இரண்டையுமே புகட்ட வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார்.
நாட்டுப்பற்றை விளக்கினார்:
நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா வெல்லுமா எனும் அவநம்பிக்கை இளைஞர்களிடம் உள்ளது. போராட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தை வென்றெடுக்கும் செயல் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அவசியமற்ற போராட்டம், வெளி நடப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, இதற்கென்று பிரத்யேகமான கூட்டத்தை நாடாளுமன்றம் நடத்த வேண்டும். “இக்கட்டான நிலையில் பொருளாதாரத்தை வென்றெடுக்க நாடு கொண்டிருக்க வேண்டிய பார்வை என்ன?” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்தலாம். மொத்தத்தில், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பொற்றோர், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
அப்துல்கலாமை தூங்கவிடாத கனவு:
நூறு கோடிக்கும் அதிகமான என் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகை காண கனவு காண்கிறேன். இந்தக் கனவு மெய்பட “நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை” எனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். தேசத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த வெளிநாடுகளை நம்பி இருக்கக் கூடாது. அதற்கு பதிலாக தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்றம் உயிர்ப்பான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
அப்துல்கலாம் எழுதிய பாடல்:
விஞ்ஞானி, குடியரசு தலைவர், ஆசிரியர், குழந்தைகள் பிரியர் என பல்வேறு பதவிகளை வகித்தாலும் அவர் ஒரு சிறந்த கவிஞர் என்றாலும் அது மிகையாகாது. அவர் எழுதிய பாடலை உஷா உதூப் பாடியுள்ளார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் ஆசை ஒவ்வொரு மனிதனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதாகும். ஒற்றுடையுடன் வாழ்ந்தால் வளமையான அமைதியான தேசத்தை உருவாக்கலாம் என்பது அவரது ஆசை என்றும் கூறலாம். அந்த பாடல் வரிகளில் அவர் எழுதியது என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் அன்பும் அமைதியும் பரவ வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று கூறியுள்ளார்.
அப்துல்கலாமின் இறுதி ஆசை:
நாட்டில் உள்ள பில்லியன் முகங்களில், பில்லியன் சிரிப்பை பார்க்க வேண்டும் (கோடிகணக்கான மக்களின் முகங்களில் கோடிகணக்கான சிரிப்பை பார்க்க வேண்டும்) என்பதைதான் அப்துல்கலாம் விரும்பினார். “கிராமபுற இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றும், இளைஞர் சமூகம் வலுவடைய வேண்டும் என்றும் அப்துல்கலாம் விரும்பினார். அப்துல்கலாமிற்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது அது
என்னவென்றால், அவருடைய பெற்றோர்கள் வாழ்ந்தபோது. அவர்களுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்க முடியாததே என்று ஸ்ரீஜன் பால்சிங் தெரிவித்தார்.
வரலாறு எழுதும் அளவிற்கு புகழ் சேர்த்தவர்:
பலவீனமான பின்னணியும் ஆதரவற்ற சூழலும் ஊக்கம் கொண்ட ஒருவரைச் சிறுமைப்படுத்தும் திறன் கொண்டவை அல்ல என்பதைத் தன் வாழ்வின் மூலம் நிரூபித்தார். பொறுப்பேற்ற ஒவ்வொரு இடத்திலும் அப்துல்கலாமுக்கு முன், அப்துல்கலாமுக்கு பின் என்று வரலாறு எழுதலாம் என்னும் அளவுக்குத் தன் ஆளுமையின் தடத்தை அழுத்தமாகப் பதித்தார். இத்தனையையும் அழுக்கற்ற நேர்மையுடன் செய்தார் என்பதுதான் அவரது மதிப்பைக் கணிசமாக உயர்த்துகிறது.
மரணத்தைவென்ற ஏ.பி.ஜே.அப்துல்கலாம்:
இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் மிகவும் வித்தியாசமானவர் அப்துல்கலாம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழைகளுக்காகச் சிந்தித்து, பேசி, உழைத்த அறிவியலாளர். தன் இளமை காலத்திலிருந்தே உழைத்தவர். பெரும் முயற்சி, கனவுகளோடு படித்து முன்னேறம் கண்டவர். நாட்டின் மிக உயரிய பதவிக்கு வந்த முதல் விஞ்ஞானி. மரணம் என்பது அனைவரின் வாழ்வுக்கும் முடிவாகிறது. சிலர் தமது வாழ்வின் மூலம் அந்த முடிவை மறுத்து அழியாப் புகழைப் பெறுகிறார்கள். தான் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகளின் மூலம் அவர்கள் மரணத்தை வெல்கிறார்கள். அர்த்தபூர்வமான வாழ்வின் தன்மை அது. அத்தகைய வாழ்வை வாழ்ந்தார் மக்களின் ஜனாதிபதியான நம் அப்துல்கலாம்.
சரித்திரம்
மேகாலயாவிலுள்ள ஷில்லாங் பயணம்:
மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரில் உள்ள ஐ.ஐ.எம்- கல்வி நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை இரு நாட்கள் கவுரவப் பேராசிரியராக அப்துல்கலாம்
செல்வார். அந்த இரண்டு நாட்களும் முழுக்க முழுக்க ஆசிரியப் பணி நிமித்தமாகத்தான் இருக்கும். அவர் ஐ.ஐ.எம்-க்கு செல்வது அங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும். எப்படியென்றால், பொதுவாக வடகிழக்கு மாநிலங்கள் இந்திய சமூகத்திலிருந்து தனித்து கவனிப்பாரற்று இருக்கும் மனநிலையில் இருப்பவை. டெல்லியிலிருந்தோ, இந்தியாவின் ஏனையப் பகுதிகளிலிருந்தோ யார் வந்தாலும் அவர்களுக்கு சந்தோஷம்தான். மக்களின் ஜனாதிபதியான அப்துல்கலாமே தங்கள் இளைஞர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க மெனக்கெட்டு வருகிறார் என்பது, கூடுதல் சந்தோஷம்தான்.
மேடை ஏறினார் மக்களின் ஜனாதிபதி:
ஐ.ஐ.எம்-யில் சரியாக 5.40 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது மிகுந்த வரவேற்புடன் சிரித்த முகத்தோடு குறிப்பிட்ட நேரத்தில் மேடை ஏறி
அனைவருக்கும் வணக்கம் சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தார் அப்துல்கலாம். அவர்
பேசுவதற்கான நேரம் நெருங்கியது. அனைவரின் விழிகளும் அவரையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தன எழுந்து
வாருங்கள் ஐயா உங்களின் உரைக்காகத்தான் காத்திருக்கிறோம் என்ற ஏக்கங்கள் நிறைந்து. அவர் மேடையில் உரையாற்றுவதற்கான அழைப்பு வந்தது. தன் இறுக்கையிலிருந்து எழுந்து நடந்தார். மாணவர்களை நோக்கி கை அசைத்தார். ஐ.ஐ.எம்-மாணவர்கள்
உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். நண்பர்களே! அனைவருக்கும் மாலை வணக்கம் என்று கூறி மாலை 6.30 மணிக்கு பேசத்துவங்கினார். பேசிக்கொண்டிருந்த இரண்டு நிமிடங்களிலேயே உடல் முழுதும் சலசலவென வேர்த்துக்கொட்டியது. குளிர்பிரதேசமான ஷில்லாங்கில் அந்த மாலை வேளையில் மக்களின் ஜனாதிபதிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. பேசும்போதே சுவாசக்கோளாறு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அவரது உதவியாளர் ஸ்ரீஜன் பால்சிங் பிடிக்க முயன்றார் அதற்குள் கீழே விழுந்தார், எதுவும் பேசவில்லை அருகிலிருந்தவர்களை பார்த்தபடியே கண் மூடினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவக்குழு விரைந்து வந்தது முதலுதவி அளித்தனர். பின்னர் பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலாளர் பி.பி.ஓ.வார்ஜிரி, டி.ஜி.பி.ராஜீவ் மேத்தா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
காலமானார் மக்களின் ஜனாதிபதி:
டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்திராகாந்தி இராணுவ மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி
மரணம் அடைந்தார் மக்களின்
ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இதுபற்றி பெதானி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். ஜான் எல்.சைலோ ரிந்தாதியாங் கூறுகையில், “கிட்டத்தட்ட முற்றிலும் நினைவிழந்த நிலையிலேயே அப்துல்கலாம் கொண்டுவரப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் பலன் இல்லாமல் போய்விட்டது. அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கக்கூடும் என்று கருதுகிறோம்” என்றார். தகவல் மருத்துவமனையைவிட்டு வெளியாகவில்லை அனைவரும் அமைதி காத்தனர். அப்போது மருத்துவமனை வாசலில் பத்து பதினைந்து பேர் மட்டுமே நின்றிருந்தனர். எல்லாரும் பெரும்பாலும் ஊடகவியலாளர்கள், மற்றும் ஐ.ஐ.எம், நிறுவனத்திலிருந்து வந்தவர்கள். கொஞ்ச நேரத்தில் ஆளுனர் உள்ளே வந்தார். பின்னர் அமைச்சர்கள் வந்தார்கள். அடுத்தடுத்த நிமிடங்களில் அங்கிருந்த அனைவரின் முகமும் சோகத்தில் மூழ்கியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஷில்லாங்
முழுவதும் செய்தி தீ போலப் பரவியது. தங்கள் நேசத்திற்குரிய மக்களின் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்த அந்த இரவில் ஷில்லாங்கில் நூற்றுக்கணக்கான இதயங்கள் குவிந்து கொண்டே இருந்தன. அப்துல்கலாமின் உடல் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது. கூடியிருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்கெடுத்து அழ ஆரம்பித்தார்கள். அந்த கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் உரத்த குரல் எழுப்பினார். “கலாம் அமர் ரஹே. பாரத் மாதா கீ…” அடுத்த நொடி அந்த இடமே ஒருமித்த குரலில் அதிர்ந்தது “ஜே!” என்ற வர்த்தையில்,
அதன் பின்னர் அப்துல்கலாமின் உடல் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் இந்த முழக்கங்களைக் கேட்க முடிந்தது. அப்துல்கலாமின் உடல் இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானப் படைப் பயிற்சியகத்துக்கு
கொண்டு செல்லப்பட்டது. அங்கு
ஆளுனர் சண்முகநாதன் மலர் வளையம் வைத்து
வணங்கியபோது மனதை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினார். ஷில்லாங்கிலிருந்து டெல்லிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டது. “கலாம் அமர் ரஹே. பாரத் மாதா கீ… ஜே!” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
மரணச் செய்தி:
அப்துல்கலாம் இறந்த செய்தி இராமேஸ்வரத்திலுள்ள அவரது இல்லத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்ட அவருடைய அண்ணன் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அதன்பின் அவர் எழுந்து பேசமுடியாமல் அப்படியே சோகமாக அமர்ந்தார். குடும்பத்தினர் கண்கலங்கினர், வாய்விட்டு அழுதனர்.
வீட்டு முன்பு கூடிய மக்கள்:
அப்துல்கலாம் மறைந்த தகவல் அறிந்த ஊர் பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள், முஸ்லீம் ஜமாத்தார்கள் வீட்டு முன் கூடினர். இராமேஸ்வரம் மட்டுமல்லாமல் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் அனைத்து சமுதாய மக்கள் ஏராளமானோர் அவரது இல்லத்திற்கு வந்தனர். மொத்தத்தில் இராமேஸ்வரம் தீவே சோகத்தில் மூழ்கியது.
சோகத்தில் மேகாலயா:
அப்துல்கலாமின் மறைவு, வட கிழக்கு மாநிலமான மேகாலயா மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேகாலயா போன்ற வட கிழக்கு மாநிலங்களுக்கு வருவதில், முக்கிய பதவிகளில் உள்ள தலைவர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், அப்துல்கலாம், நான்கு முறை சென்றுள்ளார். அப்துல்கலாமின் கடைசி மூச்சு, மேகாலயாவின் ஷில்லாங் நகரில் பிரிந்தது, அந்த நகர மக்களை உணர்ச்சி மயமாக்கியுள்ளது. மேகாலயா மக்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.
தன் மறைவுக்கு முதல் நாள் மூத்த சகோதரரின் உடல் நலம் விசாரித்தார்:
அப்துல்கலாம் தனது மரணத்திற்கு ஒரு நாள் முன் ஷில்லாங்கிலிருந்து தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 98 வயதான தனது அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரின் உடல் நலம் விசாரித்தார்.
ஷேக் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:
26- ந் தேதி மாலை டெல்லியில் இருந்து தாத்தா அப்துல்கலாம் பேசினார். உறவினர்களிடம் பேசி நலம் விசாரித்தார். எங்களிடம் நன்றாகத்தான் பேசினார். நலமாக உள்ளதாக கூறினார். அருங்காட்சியகத்தை பற்றியும் விசாரித்தார். அவரது திடீர் மறைவு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷில்லாங்கில் குளிர் சீதோஷண நிலையாக இருந்ததால், சுவாச பிரச்சனை ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எங்கள் ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் கண்ணீர் வடித்தபடி உள்ளனர். அவரது உடலை இராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் அனைத்து மதத்தினர் மற்றும் உறவினர்களின் விருப்பம். அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். என்று கண்ணீர் சிந்தக் கூறினார்.
அப்துல்கலாமுடன் கடைசி தருணங்கள்: ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்த தகவல்:
அப்துல்கலாமுடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் அப்துல்கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன. அப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசி தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் அப்துல்கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடையைச் சுட்டிக்காட்டி நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை அதுவே நான் பார்க்கும் கடைசி நிறமென்று. பருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், அப்துல்கலாமுக்கு அதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வைப் புரிந்து கொண்ட அப்துல்கலாம், என் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கு மேல் இருக்கும் திரையை இழுத்துவிட்டு, இப்போது நீ அச்சமின்றி இருக்கலாம் என்றார். விமானப்பயணம் ஒரு வழியாய் முடிந்தது. அடுத்ததாக ஷில்லாங்கிலுள்ள ஐ.ஐ.எம்-க்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப்பயணம். கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கிவட்டது. ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம். கடந்த ஆறு ஆண்டுகள் இது போன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது. இருப்பினும் எனக்கும் அப்துல்கலாமுக்கும் இடையேயான கடைசி பேச்சுகளில் மூன்று முக்கிய நிகழ்வுகள்/ ஆலோசனைகள் எப்போதும் நினைவில் நிற்கும். முதலாவதாக, பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் அப்துல்கலாமை வெகுவாக பாதித்திருந்தது. அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. அன்றைய தினம் அவர் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம்-யின் அரங்கில் பேசவிருந்த தலைப்பு “வாழ்வதற்கு உகந்த பூமி”. பஞ்சாப் சம்பவத்தையும் அவர் பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட அப்துல்கலாம், “மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்த புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி வருகின்றன. வன்முறையும், சுற்றுச்சூழல் மாசும். சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். எதிர்காலம் உங்கள் கைகளிலேயே இருக்கிறது” என்றார். இரண்டாவதாக நாங்கள் பேசிக்கொண்டது தேசிய அரசியல் பற்றியது. நாடாளுமன்றம் முடங்கி வருவது குறித்து அப்துல்கலாம் மிகுந்த வேதனை தெரிவித்தார். “எனது பதவிக் காலத்தில் நான் இரு வேறு அரசுகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் நிறைய ஆட்சி மாற்றங்களைப் பார்த்துவிட்டேன். ஆனால், இத்தகைய முடக்கங்கள் மட்டும் மாறவில்லை. இது சரியானது அல்ல. நாடாளுமன்றம் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்த ஏதாவது ஒரு வழிவகை காண விரும்புகிறேன்” எனக் கூறினார். பின்னர் என்னிடம் ஐ.ஐ.எம் மாணவர்களிடம் கேட்பதற்கான சில கேள்விகளை தயார் செய்யுமாறு வலியுறுத்தினார். அதை தனது உரை முடிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமானதாகவும், துடிப்பு மிக்கதாகவும் மாற்றக்கூடிய வழிமுறைகள் மூன்றினை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். அதுவே அவர் மாணவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த அந்த கடைசி நேரக் கேள்வி. சிறிது நேரம் கழித்து என்னிடம் அந்த கேள்வி குறித்து மீண்டும் பேசினார். என்னாலயே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் மாணவர்களால் எப்படி முடியும் என்றார். அடுத்த ஒரு மணி நேரம் இதைப் பற்றியே எங்கள் பேச்சு இருந்தது. பல்வேறு யோசனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களது அடுத்த படைப்பான “அட்வான்டேஜ் இந்தியா” என்ற புத்தகத்தில் இது குறித்து சேர்க்கலாம் என முடிவு செய்தோம். மூன்றாவது நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிகரமானது. அவரது பண்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். எங்கள் வாகனத்துக்குப் பாதுகாப்பாக 6 வாகனங்கள் வந்தன. நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம். எங்கள் காருக்கு முன்னதாகச் சென்ற ஒரு திறந்த ஜிப்ஸி வாகனத்தில் 3 வீரர்கள் இருந்தனர். இருவர் ஜிப்ஸிக்குள் அமர்ந்திருந்தனர். ஒருவர் வாகனத்தில் நின்றபடி பயணித்தார். ஒரு மணி நேர பயணம் ஆகியிருக்கும். “அந்த நபர் ஏன் நின்று கொண்டே வருகிறார்? அவர் சோர்ந்து விடுவார். இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது? ஏதாவது செய்யுங்கள். ஒயர்லெஸ் கருவியில் தகவல் அனுப்பி அவரை அமரச் செய்யுங்கள் அல்லது கை அசைத்தாவது அவரை உட்கார சொல்லுங்கள்” என அப்துல்கலாம் என்னிடம் கூறினார். அவரிடம் நான் எவ்வளவோ எடுத்துரைத்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கும் மேலதிகாரி கூறியிருக்கலாம் என்றேன். ஆனால், அப்துல்கலாம் சமாதானம் அடையவில்லை. ரேடியோ கருவி மூலம் தகவல் அனுப்ப எவ்வளவோ முயன்றோம். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. அடுத்த 1.5 மணி நேரப் பயணத்தின் போது ஷில்லாங் சென்றதும் அந்த நபருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்” என்பதை அவர் என்னிடம் மூன்று முறையாவது நினைவுபடுத்தியிருப்பார். அதேபோல் ஷில்லாங் சென்றதும், அந்த நபரை நான் ஒருவழியாக தேடிப்பிடித்தேன். அவரை அப்துல்கலாமிடம் அழைத்துச் சென்றேன்.
அந்த வீரரிடம் கைகுலுக்கிய அப்துல்கலாம். “சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடுகிறாயா” எனக் கேட்டார். “எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்” என்றார். அப்துல்கலாமின் பண்பைக் கண்டு வியந்துபோன அந்த வீரர். “சார், உங்களுக்காக நான் 6 மணி நேரம் கூட நிற்பேன்” என்றார். அதன்பிறகு நாங்கள் கருத்தரங்கம் நடைபெறவிருந்த இடத்துக்கு சென்றோம். அவர் எப்போதுமே குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற கொள்ளையுடையவர். மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். 
No comments:
Post a Comment