மேடையில் ஏறி இரண்டு நிமிடங்கள் பேசியிருப்பார். நான் அவருக்குப் பின் அமர்ந்திருந்தேன். 2 நிமிட பேச்சுக்குப் பின்னர் நீண்ட இடைவெளி. நான் அவரைப் பார்த்தேன். அவர் கீழே சரிந்தார். அவரை நாங்கள் தூக்கினோம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். என்ன முதலுதவியெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தனர். என் ஒரு கரத்தில் அப்துல்கலாமின் தலையைத் தாங்கிக் கெண்டிருந்தேன். பாதி மூடிய கண்களில் என்னைப் பார்த்த அந்த கடைசி பார்வையை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அவரது கை எனது கையை இறுகப்பற்றியது. அவரது விரல்களை என் விரல்களோடு கோர்த்துக் கொண்டார். அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது. அவர் எதுவும் பேசவில்லை. வலியை சிறிதும் காட்டவில்லை. அவரது கண்களில் ஞான ஒளி வீசியது. அடுத்த 5 நிமிடங்களில் நாங்கள் மருத்துவமனையை அடைந்திருந்தோம். ஆனால், அப்போதே ஏவுகனை நாயகன் நம்மைவிட்டு பறந்திருந்தார். அவரது பாதம் தொட்டு வணங்கினேன். எனது மூத்த நண்பருக்கு, எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன். உங்கள் நினைவுகள் என்னைவிட்டு நீங்காது அடுத்த பிறவியில் சந்திப்போம்.
“நீ ஒரு இளைஞன். நீ எதற்காக அடுத்தவர்களால் நினைவுகூரப்பட வேண்டும் என நினைக்கிறாய்?” இக்கேள்வியை அப்துல்கலாம் என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார். அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந்திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் அதே கேள்வியை நான் திருப்பிக்கேட்டேன். “நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர். இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்… இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள் என்றேன். பல்வேறு பதில்களை நானே அளித்திருந்ததால் அவர் எளிதில் சொல்லிவிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் விதமாக, “ஆசிரியராக இருந்ததற்காகவே நினைவுகூரப்பட விரும்புவேன் என்றார். சில வாரங்களுக்கு முன்னதாக நானும் அப்துல்கலாமும் அவரது பழைய நண்பர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பேச்சு, பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பேணுவது தொடர்பாக விரிந்தது. அப்போது அவர், “பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் பெரியவர்கள் தங்கள் சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்தளிக்க மரணப்படுக்கையில் விழும் வரை காத்திருக்க வைக்கக் கூடாது. அது குடும்பத் தகராறு ஏற்பட வழி செய்யும். அதேபோல் நோவற்ற மரணம் பெரிய வரம். ஒருவர் தன் பணியின்போதே மரித்துப்போவார் எனில் அது வரமே. இறுதி மூச்சு, இழுபறியின்றி பிரிய வேண்டும். அவரது வார்த்தைகளை இன்று நான் அசைபோடுகிறேன். அவரது இறுதிப்பயணம் அவர் விருப்பத்துக்கேற்ப மாணவர்களுக்கு கற்பிக்கும் போதே நிகழ்ந்திருக்கிறது. கடைசி நேரத்தில் அவர் படுக்கையில் துவண்டு கிடக்கவில்லை. கம்பீரமாக நின்று கொண்டு, பணி செய்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பெருந்தலைவர் நம்மைவிட்டு மறைந்து விட்டார். அவர் சேர்த்து வைத்தது எல்லாம் மக்களின் அன்பு மட்டுமே. அவர் இறுதிப் பயணத்திலும் ஒரு வெற்றியாளரே. அவருடனான காலை சிற்றுண்டி, இரவு உணவு வேளைப் பொழுதுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அவருடைய எளிமை, ஆர்வம், போன்ற குணங்கள் என்னில் எப்போதும் நினைவலைகளாக வியாபித்திருக்கும். அவர் விட்டுச் சென்ற பாடங்கள் எத்தனையோ. ஆனால், இனி அவரிடம் கற்க முடியாது என்ற வேதனை என்னை அமிழ்த்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் எனக்கு கனவுகளைத் தந்தீர். அந்தக் கனவுகள் சாதிக்க முடிந்த சாத்தியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீர்கள். உங்களை என்றும் மறவேன் என்று பதிவு செய்திருந்தார்.
இராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய கோரிக்கை:
முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது கோரிக்கை:
இராமேஸ்வரத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்து. இராமேஸ்வரதுக்கும், இந்திய அரசுக்கும், உலக அளவில் பெருமை சேர்த்த அப்துல்கலாம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர் துடிப்பாக இருந்து, ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவராக விளங்கியவர். அப்படிப்பட்ட புகழ் நிறைந்த எங்கள் மண்ணின் மைந்தர் இறந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களுக்கு சேவை செய்த மாபெரும் விஞ்ஞானியை இழந்தது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, அவரின் உடல் இராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாது. அனைத்து சமுதாய மக்களும் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
28.07.2015- அன்று கூடிய மத்திய மந்திரிசபை முடிவு செய்தது:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடலை அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மத தலைவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதுபற்றி மத்திய மந்திரி சபை 28-ந் தேதி செவ்வாய்கிழமை கூடி இராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்ய முடிவெடுத்தது.
மாணவர்கள் என்னுடைய வருகையை எதிர்பார்ப்பார்கள் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை: காற்றில் கலந்த அப்துல் கலாமின் கடைசி பேச்சு:
மகாத்மா காந்திக்கு பிறகு இந்திய தேசமே ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துவது மக்களின் தலைவராக மிகழ்ந்த பாரத ரத்னா டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுக்குத்தான் என்பது மிகையாகாது.
அப்துல்கலாம் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் ஆகும். மலை பிரதேசமான இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து 6,449 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்குள்ள இந்திய மேலாண்மையியல் கல்லூரியான ஐ.ஐ.எம்-மில் உரையாற்றும் போதுதான் மாரடைப்பால் அப்துல்கலாம் நம்மைவிட்டு பிரிந்தார். கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி உயரத்தில் இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் இதனால் சுவாச பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அப்துல்கலாமிடம் தெரிவித்தனர். இருந்தும் மாணவர்கள் தன்னுடைய வருகையை எதிர்பார்த்திருப்பார்கள், அவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை என கூறி மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி இந்த விழாவில் கலந்து கொண்டார்.
மத்திய மந்திரி சபை கூட்டத்தில் அனுதாப தீர்மானம்:
மக்கள் ஜனாதிபதி என போற்றப்படும் அப்துல்கலாம் மறைவு, நாட்டையே துயரத்தில் உலுக்கி விட்டது. எனவே 28-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பினை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாசித்தார். அப்போது அவர், அப்துல்கலாம்தான் இந்தியாவின் உண்மையான மாணிக்கம் என வர்ணித்தார். அன்பும், கருணையும் கொண்டிருந்த மாபெரும் மனிதர் அப்துல்கலாம் என புகழாரம் சூட்டினார். அவர், இராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பப்பின்னணியில் தோன்றி, கடினமான உழைப்பால் முன்னேறி, இந்தியாவின் விண்வெளி, ஏவுகணை திட்டங்களை செயல்படுத்துவதற்கு மாபெரும் உந்து சக்தியாக விளங்கினார். இந்தியாவின் ஏவுகணை மனிதராக உயர்ந்தார். என சபாநாயகர் இரங்கல் குறிப்பை வாசித்து முடித்த உடன் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று. அப்துல்கலாம் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேல்-சபை இரங்கல்:
டெல்லி மேல்-சபையிலும் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த குறிப்பை சபைத் தலைவர் ஹமீது அன்சாரி வாசித்தார். அப்போது அவர், “இந்தியாவின் உண்மையான மகனை நாடு இழந்துவிட்டது. தொழில் நுட்பவியல் மனிதராக, ஆசிரியராக, தலைவராக, நாட்டுக்கு மிகச்சிறப்பான பங்காற்றினார். அவரது தலைமைத்துவ பணி, தொலைநோக்கு பார்வை இந்தியாவில் மட்டுமல்ல, அவர் சென்ற நாடுகளில் எல்லாம் மதிக்கப்பட்டது” என புகழாரம் சூட்டினார். “இளைய தலைமுறையினர் மீது அப்துல்கலாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார், சரியான வழிகாட்டுதல் மூலம் அவர்கள் நாட்டினை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றிக்காட்டுவார்கள் என நம்பினார். அதுதான் மிகப்பெரிய கனவாக அமைந்தது” என ஹமீது அன்சாரி தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள், அப்துல்கலாமுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
இரு சபைகளும் வியாழக்கிழமை வரை 2 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டடன. மத்திய மந்திரி சபை கூட்டம்:
அப்துல்கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபையின் விசேஷ கூட்டம் டெல்லியில் நடந்தது. அப்துல்கலாமை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மத்திய மந்திரிசபை தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தது. மத்திய மந்திரிசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “அப்துல்கலாம் ஒரு தொலைநோக்கு விஞ்ஞானி, உண்மையான தேசியவாதி, மிகப்பெரும் மகான்” என புகழாரம் சூட்டப்பட்டது.
பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம்:
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது. “அபூர்வமாக மின்னிக்கொண்டிருந்த ஒரு மாணிக்கம், மறைந்துவிட்டது. அப்துல்கலாம், சிறு பையனாக இருந்தபோது செய்தித்தாள்கள் விற்றவர். ஆனால் இன்றைக்கு உலகமெங்கும் உள்ள செய்தித்தாள்கள் அனைத்தும் அவரைப்பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. அவர் பன்முக திறமைகள் அமையப்பெற்ற அபூர்வமான மாணிக்கம். இந்திய தாயின் அன்புக்குரிய மகன் இப்போது அவர்
நம்மிடம் இல்லை. அவரது மறைவு, நமக்கு மிகப்பெரிய இழப்பு” என உருக்கமாகக் கூறினார். “ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய அடுத்த நாளே, அதே புன்னகை மாறாமல் அவர் கல்லூரியில் தனது போதனையை தொடங்கினார். அவரது வாழ்க்கை தொடர்ந்து நம்மை மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைகளையும் கவரும்” என்றும் பிரதமர் நரேந்திரமோடி புகழ்ந்தார். அக்கட்சியின் தலைவர் அமித்ஷா பேசுகையில், “ஜனாதிபதியாக இருந்தபோதும் மக்களோடு அவர் இருந்தார். அரசியல் சட்ட பதவியில் இருந்துகொண்டு எப்படி பங்களிப்பு செய்ய முடியும் என்பதற்கு அற்புதமான உதாரணமாக திகழ்ந்தார்” என்று கூறினார்.
அஞ்சலி நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி:
ஜனாதிபதி பதவிக்கு பிறகு, அப்துல்கலாம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 11 மாதங்களாக சமுதாயத்திற்கான மாற்றம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளுக்கான கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மறைவையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் எம்.ராஜாராம் தலைமையில் அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்கள் உறுதி:
பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், 2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவை நிஜமாக்குவோம்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்துல்கலாம் அண்ணா பல்கலைக்
கழகத்தில் பணியாற்றிய காலத்தில் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் முதல் தளத்தில் உள்ள 11-ம் எண் அறையில் தங்கியிருந்தார். ஆகவே விருந்தினர் மாளிகையின் வாசலில் அப்துல்கலாமின் உருவப்படம் வைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன்:
அந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன். தலைமை தாங்கி பேசும்போது, “மாணவர்களுக்கு நல்ல மாணவராகவும், விஞ்ஞானிகளுக்கு நல்ல விஞ்ஞானியாகவும், நிர்வாகிகளுக்கு நல்ல நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் அப்துல்கலாம்.
அவர் 11 மாதம் நம் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. அவர் எப்போதும் மாணவர்கள் உயர்வுக்காகவே பாடுபட்டு வந்தார். அவருடைய மறைவு நமக்கு மட்டுமல்லாமல், நம் நாட்டுக்கே பேரிழப்பாகும்” என்றார். பல்கலைக்கழக துணை-பதிவாளர் பார்த்தசாரதி, கண்காணிப்பாளர் எபினேசர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அப்துல்கலாமின் உருவ படத்துக்கு மலர்களை தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும், “எங்கள் முன்னாள் மாணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என்ற வாசகத்துடன் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அப்துல்கலாமின் அறை:
அப்துல்கலாம் தங்கியிருந்த அறைக்கு சென்று அவர் பயன்படுத்திய பொருட்களை மாணவர்கள் பார்வையிட்டனர். அவரைப் போன்றே அவர் அறையும் மிகவும் எளிமையாக இருந்தது. அந்த அறையில் இருந்த பொருட்கள். உணவுக்காக 2 தட்டுகள், 2 டம்ளர், 2 டீ கப்கள், 2 பிளாஸ்க்குகள், நடைபயிற்சிக்கான ’சூ’ 2 செருப்புகள், அவர் பெற்ற விருதுகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான புத்தகங்கள், குறிப்பு எடுக்கப்பட்ட நோட்டுகள், ‘தின தந்தி’யில் வெளியான சில கட்டுரைகள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் எழுதிய கடிதங்கள் போன்றவற்றை கோப்புகளில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அத்துடன் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் அடங்கிய கேசட் மற்றும் சாதாரண கேசட் பிளேயர், 2 புனித குரான் இவைகள் மட்டுமே அறையில் காணப்பட்டன.
வனவாணி பள்ளி:
ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் உருவ படத்துக்கு பள்ளி முதல்வர் காவேரி பத்மநாபன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பள்ளி துணை-முதல்வர் சேவியர் சகாயம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல்கலாமின் மறைவிற்கு மரியாதை:
அப்துல்கலாமின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய அரசு 27.08.2015 அன்று
அரசு விடுமுறையை அறிவித்தது, பின்னர் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்தது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்
கழகத்தில் கவுரவ பேராசிரியராக அப்துல்கலாம் பணியாற்றியுள்ளார். அவர் அப்பல்கலைக்
கழகத்தின் முன்னாள் மாணவர் என்பதன் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி எஞ்ஜினீயரிங் கல்லூரி அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி மற்றும் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளிலும் செவ்வாய்க் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உடல் டெல்லி வருகை:
அப்துல்கலாமின் உடலுக்கு மேகாலயா கவர்னர் சண்முக நாதன், முதல்-மந்திரி முகுல் சங்மா உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் எல்.சி.கோயலுடன் அவர் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது அப்துல்கலாமின் உடலை டெல்லி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்
கொண்டதாகவும் டாக்டர். ஜான் எல்.சைலோ தெரிவித்தார். மேகாலயாவில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு செவ்வாய் கிழமை (28.07.2015) காலையில் 6.15 மணிக்கு கொண்டு வரப்பட்டு. அவரது உடல் மூவர்ண தேசியக் கொடி போர்த்தப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்பட்டது. பிறகு இராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஷில்லாங்கில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு எடுத்து வரப்பட்டது. கவுகாத்தியில் அசாம் முதல்- மந்திரி தருண் கோயோய், முன்னாள் முதல்-மந்திரி பிரபுல்லகுமார் மகந்தா, தலைமை செயலாளர் பிபர்செனியா, டி.ஜி.பி.ககன் சர்மா உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். முப்படைகளின் இராணுவ உயர் அதிகாரிகளும் அப்துல்கலாமின் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கவுகாத்தியில் சுமார் 1.30 மணி நேரம் அவர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. காலை 5.30 மணியளவில் கவுகாத்திக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130 ஹெர்குலிஸ் விமானம் மூலம் அப்துல்கலாமின் உடல் டெல்லிக்கு கொண்டுவரப்படும். பிறகு அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 6.30 மணிக்கு டெல்லிக்கு வரும். என்ற தகவலை பாதுகாப்புத்துறை பி.ஆர்.ஓ.அமித் மகாஜன் தெரிவித்தார். அதன் பிறகு சிறப்பு விமானத்தில் அவர் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சிறப்பு விமானம் 28.07.2015 செவ்வாய் கிழமை மதியம் டெல்லி பாலம் விமான நிலையத்தில் 12.15 மணிக்கு தரை இறங்கியது. அப்துல்கலாமின் உடலை இந்திய அரசின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி பெற 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. மூவர்ணகொடி போர்த்தப்பட்டிருந்த அப்துல்கலாமின் உடலை முப்படை தளபதிகளான தல்பீர் சிங் (இராணுவம்), ஆர்.கே.தோவல் (கடற்படை), அரூப் ரஹா (விமானப்படை) என மூவரும் இராணுவ மரியாதையுடன் உடலைப் பெற்று அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் வைத்தனர். அப்துல்கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிகர் ஆகியோர்கள் ஒருவரின் பின் ஒருவராக அஞ்சலி செலுத்தினர். பின்னர் டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க், முதல் மந்திரி அரவித் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஸ் சிசோடியா, ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி, விமான படை தளபதி அரூப் ரஹா, கடற்படைத் தளபதி ஆர்.கே தோவல், இராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் மலர் வலையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் மத்திய மந்திரிகள் மத்திய அரசின் அதிகாரிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
விமான நிலையத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள அவர் வாழ்ந்த டெல்லி, எண்.10, ராஜாஜி மார்க் அரசு வீட்டுக்கு அப்துல்கலாமின்
உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சாலையின் இரு ஓரங்களிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் அணிவகுத்து நின்று தங்கள் “கனவு நாயகனுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது வீட்டில் அப்துல்கலாமின்
உடல் இறக்கி வைக்கப்பட்டு அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்பாசித் மற்றும் இஸ்ரேல் நாட்டுத் தூதர் டேனியல் கர்மோன் இருவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மேகாகன் சிங், அவரது மனைவி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்திரபிரதேசம் மாநிலம் முதல்-அமைச்சர் அகிலேஷ்யாதவ், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஜிஜேந்திர சிங், மத்திய மந்திரி ஹர்ஷவரதன், கோவா கவர்னர் மிர்துலா சிங்கா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேகவுடா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வீட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந் கெஜ்ரிவால் ஆகியோர் மரியாதை செலுத்தினர். வீட்டில் அப்துல்கலாம் உடலுக்கு மரியாதை செலுத்திய, பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார். கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கர் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினார். புதுச்சேரி மாநில கவர்னர் அஜய்குமார் சிங், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சார்பில் புதுவை அரசின் கூடுதல் உள்ளிருப்பு ஆணையாளர் பங்கஜ் குமார் ஜா, மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி மாநில எம்.பி., ராதாகிருஷ்ணன் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் எம்.எல்,ஏ., முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி, சட்டமன்ற எதிர் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மரபை மீறி ஜனாதிபதி அஞ்சலி:
முன்னாள் ஜனாதிபதி “பாரத ரத்னா” அப்துல்கலாம் மறைவு செய்தி வெளியானபோது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்துல்கலாம் மறைவு செய்தி அறிந்தவுடன் பிரணாப் முகர்ஜி தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக டெல்லி திரும்பினார். அப்துல்கலாம் உடல், டெல்லி பாலம் விமான நிலையத்தில் 28.07.2015 அன்று
காலையில் தனி விமானம் மூலம் வந்திறங்கியது. அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரபை மீறிய செயலாக, மறைந்த மகத்தான தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விமான நிலையத்துக்கே வந்துவிட்டார். அங்கு அவர் அப்துல்கலாம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இது அப்துல்கலாம் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய மதிப்பையும், மரியாதையையும் பறை சாற்றுவதாக இருந்தது.
கோட்டை போல பாதுகாப்பு:
விரும்பத்தகாத எந்தவொரு சம்பவமும் நடந்துவிடாதபடிக்கு தடுக்கிற விதத்திலும் அப்துல்கலாம் இல்லத்திலும்இ இல்லத்தை சுற்றிலும் அரண் போன்ற போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இறதிச் சடங்கு:
மறைந்த மக்களின் ஜனாதிபதியின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் 30.07.2015 அன்று
வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, இறுதிச் சடங்கில் பிரதமர். நரேந்திர மோடி, கேரள முதல்வர். உம்மன் சாண்டி, முன்னாள் கேரள முதல்வர். அச்சுனாநந்தன், கேரள ஆளுநர். சதாசிவம் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என அறிவிப்பு
வெளியானது. அதனைத் தொடர்ந்து இராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்துல்கலாமின் வீடு மற்றும் அஞ்சலி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் இராமேஸ்வரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மத்திய அமைச்சரவை புகழாரம்:
பிரதமர். நரேந்திர மோடி தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடை
பெற்றது. அதில், அப்துல்கலாம் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரின் மறைவையொட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில். “அவரின் மறைவால், தொலைநோக்கு பார்வையுடைய அறிவியலாளரையும், உண்மையான தேசியவாதியையும், சிறந்த தலை
மகனையும் தேசம் இழந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் “தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் அப்துல்கலாம் ஆர்வம் மிக்கவராக இருந்தார். குறிப்பாக மனித நலனுக்காக அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் இளம் சமுதாயத்தை ஈர்ப்பவராக இருந்தார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சிறப்புமிகு உறுப்பினராக, இந்தியாவின் முதல் சுயசார்பு செயற்கைகோள் ஏவுகலத்தை உருவாக்குவதில் அப்துல்கலாம் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்” என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றம் இரண்டு நாட்கள் ஒத்திவைப்பு:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் இரு அவைகளும் அன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் 30.07.215-ல் நடைபெறயிருந்த அப்துல்கலாமின் இறுதிச்
சடங்கில் எம்.பி.,க்கள் பங்கேற்பதற்கு வசதியாக, இரு அவைகளும் 2 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
7 நாட்கள் துக்கம்:
மத்திய அரசு சார்பில் ஜுலை 27 முதல் 7 நாட்கள் துக்கம் அனுசரிகக்கப்படுகிறது. இருப்பினும் விடுமுறை ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் 28.07.2015 செவ்வாய் கிழமை இயங்கும். 7 நாட்களும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்
கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உலக தலைவர்கள் இரங்கல்:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா, மலேசியா பிரதமர் நஜிப் ரசாக், சிங்கப்பூர் பிரதமர் லீ சேய்ன் லூங், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, வங்காளதேச எதிர்கட்சி தலைவர் கலிதா ஜியா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
நேபாள பிரதமர் இந்திய பிரதமருக்கு அனுப்பிய இரங்கள் செய்தி:
நேபாள அரசு, நேபாள மக்களின் சார்பில் அப்துல்கலாமின் உறவினர்கள், இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். நேபாளம் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டது. நான் கவுரவமான, ஒரு சிறந்த பிரமுகரை பறிகொடுத்துவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அசாதாரண ஆளுமை:
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, அப்துல்கலாம் அசாதாரண ஆளுமை நிறைந்த சாதாரண மனிதர். அவர் வகித்த அத்தனை பதவிகளிலும் மிகச்சிறப்பாகச் செயலாற்றியவர். அரிதான மாணிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது. அவர் இந்த தேசத்தைப் பற்றிக் கண்ட கனவுகளை நிறைவேற்றுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும். இந்தியத்தாயின் அன்புக்குரிய மகன். தன்னை எப்போதும் ஓர் ஆசிரியராகவே கருதிக்கொண்டார் எனப் பேசினார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “அப்துல்கலாம் மக்களின் ஜனாதிபதி. அவர் தன் வாழ்வின் கடைசி நொடியிலும் மக்களுக்காகவே செயலாற்றினார். தன் வாழ்நாள் முழுக்க அவர் இவ்வாறு வாழ்ந்ததால்தான் இன்றும் நம் பெருமைக்குரியவராக உள்ளார்” என்றார்.
அப்துல்கலாம் எனது மாணவர்: கல்லூரி பேராசிரியர் பெருமிதம்:
அப்துல்கலாம் நடந்த 18-ம் தேதி திண்டுக்கல், மதுரை, கரூர் மாவட்டங்களுக்கு வந்து சென்றார். அதுவே அவரின் கடைசி தமிழக சுற்றுப்பயணமாக அமைந்துவிட்டது. அந்த சுற்றுப் பயணத் திட்டத்தில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள அவரது கல்லூரிப் பேராசிரியரை சந்திக்கும் நிகழ்ச்சி இடம் பெறவில்லை. கடைசி நேரத்தில் அப்துல்கலாம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திருச்சி செயின் ஜோசப் கல்லூரியின் ஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியர் முனைவர். சின்னத்துரையை திண்டுக்கல்லில் சந்தித்தார். 1952-ம் ஆண்டு பி.எஸ்.சி இயற்பியல் படித்தபோது இவரிடம் மாணவராக இருந்துள்ளார். தன்னை சந்தித்த 10 நாளில் தனது மாணவர் அப்துல்கலாம் காலமான தகவலை கேட்ட பேராசிரியர் சின்னத்துரை மிகுந்த கவலையடைந்தார். 28.07.2015 அன்று
அப்துல்கலாம் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி கண் கலங்கினார். அப்துல்கலாம், அவரை சந்தித்தபோது அவருக்கு வழங்கிய இரண்டு புத்தகங்களை, அவரது உருவப்படத்துக்கு முன் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றியும், ஊதுபத்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்தார். மேலும் பேராசிரியர் சின்னத்துரை கூறியதாவது, “எளிய குடும்பத்தில் பிறந்து, நாட்டின் உயர்ந்த பதவிக்கு சென்று, இன்று நாடே போற்றும் அப்துல்கலாமிற்கு ஆசிரியராக இருந்தது நான் செய்த பாக்கியம். இன்னும் அவர் இருந்து நாட்டுக்கு சேவை செய்திருக்கலாம். என்று, அதற்குமேல் பேச முடியாமல் தவித்தார்.
“இராமேஸ்வரம் சோலார் மிஷன்” திட்டம்:
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அப்துல்கலாம் தான் பிறந்த இராமேஸ்வரம் தீவுக்காக “இராமேஸ்வரம் சோலார் மிஷன்” திட்டத்தை உருவாக்கினார். இராமேஸ்வரம் தீவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை சூரிய சக்தியில் இருந்து பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதற்காக இராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீடான ‘ஹவுஸ் ஆப் கலாம்”, அதில் இயங்கும் “மிஷன் ஆப் லைப்” எனப்படும் அருங்காட்சியகத்திற்குத் தேவையான மின்சராத்தை சூரிய ஒளியில் இருந்து பெறுவதற்கான பணியை தனது சொந்த செலவிலேயே செய்தார். அதைத் தொடர்ந்து மின்சார வசதி இல்லாத தனுஷ்கோடி, முந்தல்முனை, ராமகிருஷ்ணாபுரம், நடராஜபுரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சக்தி பெறக்கூடிய உபகரணங்கள் இராமேஸ்வரம் சோலார் மிஷன் திட்டம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் முதன்முறையாக சூரிய சக்தியில் இயங்கும் மீனவர்களின் நாட்டுப் படகுகளும் பாம்பனில் அறிமுகம் செய்யப்பட்டன. இராமேஸ்வரம் சோலார் மிஷன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஷேக் சலிம் உள்ளார்.
ஷேக் சலிம் கூறியதாவது:
இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை கொண்டது இராமேஸ்வரம் தீவு. இத்தீவின் பெரும்பான்மையான மக்களான மீனவர்களின் குடிசைகளில் மின்சார வசதி கிடையாது. எனவே இராமேஸ்வரம் தீவு முழுதும் சூரிய மின் சக்தி மூலம் இயங்க வேண்டும் என்பது தாத்தா அப்துல்கலாமின் கனவாக இருந்தது. தாத்தாவின் வழிகாட்டுதலின் படி இராமேஸ்வரம் சோலார் மிஷன் திட்டம் உருவாக்கப்பட்டது. இன்னும் ஒரு ஆண்டு கால அவகாசத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இராமேஸ்வரம் தீவில் உள்ள 22 அரசுப் பள்ளிகளில் 66 கிலோ மெகாவாட் சக்தியில் முழுமையான சூரிய மின்சக்தியில் இயங்கக் கூடியதாக அமைப்போம். அதைத் தொடர்ந்து பாம்பன் பாலமும், இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலும் சூரிய ஒளியில் இருந்து மின்சக்தியை பெறுவதற்கான பணிகளைத் தொடங்குவோம். இதற்காக எங்களுடன் இன்டர் நேஷனல் வீ சர்வ் பவுண்டேஷன், ரோட்டரி கிளப் ஆகியவை உறுதுணையாக உள்ளன. தாத்தாவின் கனவுகளை நிறைவேற்றுவதே நாங்கள் அவருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment