கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்து
மடமை நீங்கி மத நல்லிணக்கம் ஓங்க:
மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி - நாட்டின்
மணி விளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று!
அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல்
அமைதி காக்கும் கேடயமாய் ஆவதற்கும்
ஆகாயத்தில் தாவுகின்ற ஏவுகணை
அண்டை நாட்டுத் தூதராக மாறுதற்கும்
மறு பிறப்பை விஞ்ஞானம் எடுப்பதற்கு
மனவலிவு புவி மாந்தர்க்கு மிகவும் வேண்டும்.
அவ்வலிவை உருவாக்க ஏற்றவரே
அறிவியலை ஆக்கப் பணிக்கென நோற்றவரே
அப்துல் கலாமென ஆரவாரம் புரிந்து
அவனியெங்கும் அன்பு முழக்கம் ஒலிக்கும்.
இத்தகைய உயர்வுக்கும், புகழுக்கும் உரிய அப்துல்கலாம் அவர்களை இந்திய திருநாடே இழந்து நிற்கும் இந்த வேளையில், அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் பெரிதும் நேசிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்:
இராமேஸ்வரத்தில் பிறந்து, கனவுகளுடன் வளர்ந்து இந்தியாவின் ஜனாதிபதியான எளிமை மிகுந்த சிறந்த மனிதர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பெருமைகளை நம் நாடு நினைவில் வைத்திருப்பதோடு, அவருக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கும். அவர் கனவு மட்டும் காணாமல் இந்த நாட்டின் இளைய தலைமுறையையும் சாதிக்க கனவு காணுங்கள் என்று உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். “அப்துல்கலாம் ஒரு தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானி. இந்திய விண்வெளித்திட்டத்தில் அவரது பங்களிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அவரது திறமையை பார்த்த உலக நாடுகள் இந்தியாவின் மீது மரியாதை செலுத்தியது. அது மட்டுமின்றி உலக நாடுகள் எல்லாம் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர். அப்துல்கலாம். ஏவுகணை மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் அவர் ஆற்றிய பங்கு அதைவிட முக்கியமானது. தொழில் நுட்பத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகளால் உலகில் மிகவும் முன்னேறிவிட்ட இராணுவத்திற்கு இணையாக உயர்த்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்துல்கலாம் ஆற்றிய ஆர்வமூட்டும் உரைகள் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளையும், இளைஞர்களையும் தங்களுக்காகவும், தங்கள் நாட்டிற்காகவும் கனவு காண வைத்தது. “எதையும் சாதிக்கும் திறமை இந்தியாவிற்கு இருக்கிறது” என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தி, நம் நாட்டிற்கு உலக அரங்கில் மரியாதையும், பெருமையையும் தேடித்தந்தவர். இன்றைய தினம் அவரது மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு. அவர் நம்மிடம் இல்லை. எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே நேரத்தில். இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பாடுபட்ட அப்துல்கலாமின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றி, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண்போம் என்று இந்த நேரத்தில் உறுதியேற்றுக் கொள்வோம்.
ப.சிதம்பரம்:
டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் இழப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் சோகமான ஒன்றாகும். சமீபத்திய வரலாற்றில், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை, பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை. பல மதத்தை சார்ந்தவர்களும், பல மொழிகள் பேசுபவர்களும் விரும்பும் ஒரே தலைவர் அப்துல்கலாம்தான். அவர் ஒரு ஆசிரியராக, ஒரு அறிவியலாளராக, ஒரு தலைவராக, நாட்டின் முதல் குடிமகனாக எல்லாவற்றிற்கும் மேலாக கருணையும் அன்பும் நிறைந்த மனிதராக சேவையாற்றிய அப்துல்கலாமின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:
கடல் அலைகள் தாலாட்டும் இராமேஸ்வரத்தில் எளிய இஸ்லாமிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, அறிவியல் மேதையாக அவனியில் பேர் பெற்று, கோடான கோடி மக்களின் ஏக்கக் கனவுகளை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக ஜனாதிபதி பதவி நாற்காலியில் அமர்ந்து, வளரும் இளம் தலைமுறையினர் விண்முட்டும் சாதனைகளைப் படைக்க வழிகாட்டிய அக்கினிச் சிறகுகளை தந்து ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த ஏந்தல் அப்துல்கலாம் மறைந்துவிட்டார். தமிழர்களுக்கு புகழ் தந்த இதயத் துடிப்பு அடங்கிவிட்டது. உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று இந்திய ஜனநாயகத்தின் மாண்பினை விளங்கிய மணிவிளக்கு ஆவார் அவர். கிரேக்க தேசத்தின் நாடாளுமன்றத்தில் அப்துல்கலாம் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். அந்த உரையில்தான், சங்கத்
தமிழினுடைய உன்னதத்தை, பழந்தமிழர் நாகரிகத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழரின் கோட்பாட்டை எடுத்துரைத்தார். தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் உலகலாவிய பெருமை சேர்த்தார் பெருமகனார். வாழ்க்கைப் போராட்டத்திலும். சமூக போராட்டங்களிலும் எதிர்கொள்ள நேரும் தடைகளை ஆபத்துகளை நெஞ்சுறுதியோடு சந்திக்க தயாராகுங்கள்! “எல்லா நாளும் ஆயத்தமாகுங்கள்: அனைத்து நாட்களையும் சமமாகக் கருதுங்கள். நீ பட்டறையாக இருக்கும்போது உன் மீது விழும் அடிகளை தாங்கிக்கொள்: நீயே சம்மட்டியாக மாறும்போது உன் தாக்குதலைத் தொடங்கு” என்ற அப்துல்கலாமின் மணி வாசகங்கள் இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவர் உலகத்துக்கு இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான பொன்மொழியாகும். அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு அவர் டெல்லிக்குச் செல்லும் விமானத்தில் நானும் பயணித்ததால், அவர் அமர்ந்துள்ள இடம் நோக்கிச் சென்று கைகூப்பி வணங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என் இருக்கைக்கு திரும்பினேன். சில நிமிடங்கள் கழித்து என்னை அழைத்து, என்னைப் பாராட்டி நான்கு வரிகள் எழுதிய கவிதையை அவர் எனக்கு கொடுத்தார். மெய்மறந்து போனேன். இந்த மாமனிதர் மனதில் அடியேனுக்கும் ஒரு இடமா! என திகைத்தேன். 2002-ம் ஆண்டில் குடியரசுத் தலைராக யாரை வேட்பாளராக்குவது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை நடந்தபோது, அன்றைய தலைமை அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாயிடம், அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற கருத்தைச் சொன்னவனும் அடியேன்தான். இரண்டாவது முறையும் அவரே குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற கருத்தை அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சி தலைவர்களிடம் இந்த எளியவன் முன்வைத்தேன். அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக சொல்லாததால்தான் வேட்பாளராக போட்டியிட அப்துல்கலாம் மறுத்தார். 2002-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு அப்துல்கலாம் தாக்கல் செய்த வேட்புமனுவில் முன்மொழிந்த வாஜ்பாய் உள்ளிட்டவர்களோடு, நானும் ஒருவனாக முன்மொழிந்தேன். ஈழத் தமிழர் இனக்கொலை செய்த கொடியவன் ராஜபக்சே 2014-ல் இந்தியப் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் மாளிகை அசோகா அரங்கத்தில் நுழைந்தபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும் அந்த மாபாவியின் கரம் குலுக்கி வரவேற்றபோது, அதே வரிசையில் அமர்ந்திருந்த அப்துல்கலாம் எந்த அசைவும் காட்டாமல் அவனை அலட்சியப்படுத்தி தமிழரின் தன்மானத்தை நிலைநாட்டிய உத்தமறன்றோ! உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், இந்த மண்ணும், கடலும், வானும் இருக்கும் வரை அவரது புகழும் நிலைத்திருக்கும். தமிழகம் உலகத்துக்கு தந்த தவப்புதல்வனை இழந்து துயரத்தில் துடி துடிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:
“முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவர் இழப்பு அவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும். அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு தமிழகத்திலேயே நடத்த வேண்டுமென்று தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்”.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், புகழ் பெற்ற அறிவியலாளருமான அக்னி சிறகு அப்துல்கலாம் உடல் நலக்குறைவால் ஷில்லாங் நகரில் காலமானார் என்ற செய்தி கேட்டு பேரதிச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அப்துல்கலாமின் மறைவு என்னை நிலைகுலையச் செய்திருக்கிறது. அவரை இழந்து வாடும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனாதிபதி, பேராசிரியர், அறிவியலாளர் என பல முகங்களை அவர் கொண்டிருந்தாலும் தலைசிறந்த மனிதனாக விளங்கியவர். அன்பு, கருணை, பாசம், அக்கறை, மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். அவரது மறைவு இந்தியாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். நதிகள் இணைப்பு, மது ஒழிப்பு, தூக்கு தண்டனை ரத்து ஆகியவை அவரது விருப்பமாகவும், நோக்கமாகவும் இருந்தன. இவை நிறைவேறினால் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது இன்னொரு கனவும் நனவாகிவிடும். எனவே, அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்:
“முன்னாள் முடியரசுத் தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைக்குச் சான்றாகத் திகழ்ந்தவருமான அப்துல்கலாமின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தன்னை எப்போதும் ஓர் ஆசிரியராகவே கருதியவர் அவர். மாணவர்களுக்குப் பெரும் உந்துசக்தியாக திகழ்ந்த அப்துல்கலாம் மாணவர்களிடையே உரையாற்றும்போது உயிரிழந்துவிட்டார். செயற்கைகோள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியவர், அணுகுண்டு வெடிப்புச் சோதனையின் முதன்மைக் காரணியாகத் திகழ்ந்தவர் என்பதை எல்லாம்விட மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியவர் என்பதே அவரது பெருமை. இராமேஸ்வரத்தில் ஒரு ஏழைக்
குடும்பத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்று இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்ததற்கு அவரது அயராத உழைப்பும் அறிவாற்றலும்தான் காரணம். குடியரசுத் தலைவராக இருந்தபோது “நகர்புற வசதிகளைக் கிராமங்களுக்கும் அளிப்பது” என்ற திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்தினார். நகர்மயமாக்கத்தின் காரணமாக கிராமப்புறங்கள் மேலும் புறக்கணிக்கப்பட்டு தேக்கத்தின் வளர்ச்சியின்மையின் உறைவிடங்களாக மாற்றப்படும் இன்றைய சூழலில் அப்துல்கலாமின் “புரா” திட்டத்தை இந்திய அரசு தேசியத் திட்டமாக அறிவித்து நடைமுறைபடுத்துவதே அவருக்கு இன்றைய ஆட்சியாளர்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இளைஞர்களின் ஆற்றலில் நம்பிக்கை வைத்து இந்தியாவின் எதிர்காலத்தை வளமானதாக்க ஓய்வின்றி உழைத்த அப்துல்கலாமுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறோம். மேலும் அப்துல்கலாமின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட திருமாவளவன் மறைந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை கௌரவிக்கும் வகையில் அரசு அவரது பெயரில் விருதுகள் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
மார்ச்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
“அக்னி சிறகுகள்” என்ற தன் சுயசரிதை மூலம், இளைய தலை முறையினருக்கு வழிகாட்டியவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம். நாட்டு நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடுவதைத் தவிர, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செயல்பட்டவர். தனக்காக வாழாமல் நாட்டுக்காக வாழ்ந்தவர். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிறந்த மனிதர். அவரது மறைவு, தமிழகத்துக்கும், இந்திய நாட்டுக்கும் பேரிழப்பு.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:
அப்துல்கலாம் சொற்பொழிவாற்றும் போதெல்லாம், திருக்குறளின் பெருமைகளையும், தமிழ் இலக்கியத்தில் உள்ள சிறப்பான கருத்துகளையும் உலகெங்கும் எடுத்துச் சொன்ன தமிழ் உணர்வாளர் டாக்டர்.அப்துல்கலாம் அவரது சாதனை, ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. உலகம் உள்ளளவும் நினைந்து நினைந்து போற்றக்கூடிய அறிவியல் தந்தை அப்துல்கலாமை, சமத்துவ மக்கள் கட்சி என்றும் சுமந்து போற்றும்.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க வடதமிழக தலைவர் டாக்டர் எம்.எல்.ராஜா:
நாட்டின் பல கோடி இளைஞர்கள் மனதில் தேசப்பக்தி கனலை சுடர் விட்டு ஒளிரச் செய்தவர். தேச பக்தர்கள் அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து வழிகாட்டியவர். பாரதத் தாயின் மிகச் சிறந்த தலைமகனாக திகழ்ந்த அப்துல்கலாமின் சிந்தனைகளை கடைபிடிப்பதே, அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம்:
இந்திய நாட்டின் மாணவர், இளைஞர்கள் உள்ளங்களில் நம்பிக்கை வித்துகளை விதைத்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், இன்று நம்முடன் இல்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தென் தமிழகத்தின் கடலோர கிராமத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்து, இமயத்தின் உச்சியை தொட்டதுபோல, நாட்டின் மிக உயரிய பதவியான ஜனாதிபதி பதவியை வகித்த அவரது வரலாறு மகத்தானது. நம் நாட்டில், எத்தனையோ அறிவியல் விஞ்ஞானிகள் இருந்தாலும் கூட, அவரைப்போல யாரும் பெருமை அடையவில்லை. மக்களிடம் பெருமையையும், நம்பிக்கையையும், புகழையும் பெற்றவராக திகழ்ந்தார். அப்துல்கலாம், முழுநேர அரசியல் தலைவர் இல்லை. ஆனால், அரசியல் களத்தில் ஆளுமை செலுத்தியவர். எனக்கு தெரிந்து, அரசியல் தளத்தில் ஆளுமை செலுத்திய ஒரே தலைவர், இவர் தான். நாட்டு மக்களின் முழு நம்பிக்கையை பெற்றவர், வேறு எவரும் இல்லை. இந்திய வரலாற்றில், முழுமையான நம்பிக்கையை பெற்ற தலைவர்கள், பெரும்பாலும் நாட்டின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால், தென்னகத்தில் இருந்து புறப்பட்டு சென்று, நாட்டின் அனைத்து மக்களின் நம்பிக்கையை பெற்றவர், இவர் ஒருவர் தான். அயராத இவரது உழைப்பு, நிமிர்ந்த பார்வையோடு செயல்பட்ட நேர்மை, எல்லாரையும் ஈர்க்கும் எளிமை ஆகியவை தான். இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. என்றென்றும், மக்களின் மனதில் நிலைத்து நிற்பார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்:
இந்திய நாட்டின் முதல் குடிமகனாக 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தான் பதவியில் இருந்தபோது தனது குடும்பத்தார். உறவினர்கள் என யாரையும் தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் தன்னை முழுமையாக இந்திய தேசத்திற்கே அர்பணித்துக்கொண்டார். தேசத்தின் மீது உண்மையான பாசமும், பற்றும் கொண்டதால் இவரை மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அன்னாரின் மறைவால் இந்திய தேசமே ஆழ்ந்த துயரத்தில் உள்ளது.
அப்துல்கலாமின் உறவினர்: செய்யது ஜலாலுதீன்:
அப்துல்கலாம் இழப்பு பேரிழப்பு, அதை யாராலும் ஈடு செய்ய முடியாது. மும்மதத்தினரும், சங்கமிக்கும் இராமேஸ்வரத்தில் பிறந்த எங்கள் மண்ணின் மைந்தர் புகழ், அனைத்து நாட்டு தலைவர்கள், அறிஞர்களிடம் பரவி கிடக்கிறது: அடுத்த 100 ஆண்டுகளுக்கு பின்வரும் தலைமுறையிடமும் நிலைத்து நிற்கும்.
அப்துல்கலாமின் உறவினர்: ஒருவர்:
அப்துல்கலாமின் மறைவு, இராமேஸ்வரம் தீவு மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் பேரிழப்பு. ஒரு தாய், தன் தலைமகனை இழந்து தவிப்பது போல், அனைத்து சமூக மக்களும் தவிக்கிறோம். தன்னலமற்ற அவரது புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும். இது தான் அவருக்கு நாம் செய்யும் கடமை.
அப்துல்கலாமின் நண்பர் வெங்கட சுப்பிரமணி சாஸ்திரி:
அப்துல்கலாமுடன் விளையாடியதை நினைவுபடுத்திய நண்பர். என் தந்தை லட்சுமண சாஸ்திரியும், அப்துல்கலாமின் தந்தை ஜெய்னுலாபுதீன் மரைக்காயரும் நல்ல நண்பர்கள். அதுபோல, என் அண்ணன் ராமநாதன் சாஸ்திரியும், அப்துல்கலாமும் தொடக்கப்
பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அக்காலத்தில், தினமும் எங்கள் வீட்டுக்கு அப்துல்கலாம் வருவார், சைவ உணவை விரும்பி சாப்பிடுவார். ஒழுக்கம், கடமையை அவரிடம் தான் கற்று கொள்ள வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து, கோவில், கடற்கரையில் விளையாடியுள்ளோம். பள்ளியில், முன் வரிசையில், என் அண்ணனும் அப்துல்கலாமும் அமருவர். ஆசிரியர் ஒருவர், அப்துல்கலாமை பின் வரிசையில் அமரும்படி சத்தமிட்டார். இதை என் தந்தையிடம் அப்துல்கலாம் கூறியதும், அந்த ஆசிரியரை, என் தந்தை கண்டித்தார். இச்சம்பவத்தால் எங்கள் குடும்பத்தினர் மீது அப்துல்கலாம் வைத்திருந்த அன்பு மேலும் அதிகரித்தது. அவரது மனதில் என்றுமே, மதம் இருந்ததில்லை. படிப்பும், ஒழுக்கமும் தான் அவரை சுற்றியிருந்தது.
மேலும் பலர்:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சு.திருநாவுக்கரசர், லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், அம்பேத்கர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ம.மத்தியாஸ் என்ற சீனிவாசன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹருல்லா எம்.எல்.ஏ., இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெலகான் பாகவி, கொங்குநாடு ஜனநாயக கட்சி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயளாலர் எம்.தமிழன் அன்சாரி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைர் மணிஅரசன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ஆகியோர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
தொழிலதிபர்கள்:
வி.ஜி.சந்தோஷம் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக்கழகத் தலைவர் ரபியுதீன், அகில இந்திய தெலுங்கு சம்மேளன தலைவர் சி.எம்.கே.ரெட்டி, தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் த.ராமச்சந்திரன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா:
“இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல தமிழர்களின் அடையாளம்”.
கவிபேரரசு வைரமுத்து:
எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நின்றேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இன்று இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்து கடைசி குடிமகனாய் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்பத்தால் வந்தது அல்ல, சாதனையால் வந்தது. அணு விஞ்ஞானி அப்துல்கலாம் பெரு முயற்சியால் இந்தியா தன் சொந்த ஏவுகணையைச் செலுத்தியபோது வெள்ளைமாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் அறிவின் துணையால் பொக்ரான் அணுகுண்டு சோதிக்கப்பட்டபோது வல்லரசுகளெல்லாம் மூக்கின்மேல் விரல் வைத்தன. அரசியலுக்கு வெளியே இருந்து அவர் குடியரசுத் தலைவர் ஆனபோது இந்தியாவே எழுந்து நின்று கைதட்டியது. தாய்மொழிவழி கல்வி கற்ற ஒருவர் தாயகத்தையே ஆளமுடியும் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் அப்துல்கலாம். அவர் படிப்பில் ஞானி. பழக்கத்தில் குழந்தை. நாற்பது பல்கலைக் கழகங்களின் பட்டம் பெற்றும் அதைத் தன் தலையில் சூடிக்கொள்ளாதவர். இந்த நூற்றாண்டில் இளைய சமுதாயத்தின் கனவு நாயகன். இளைஞர்களைக் கனவு காணச் சொன்னவர். தூங்கிக் காண்பதல்ல கனவு: உங்களைத் தூங்க விடாதது செய்வதே கனவு என்று இலட்சியத்திற்கு இலக்கணம் எழுதியவர். தன் கடைசி நிமிடம் வரை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே அவரது காலம் கழிந்திருக்கிறது. சென்ற ஆண்டு என் மணிவிழாவிற்கு வந்து வாழ்த்திய பெருமகனுக்கு ஒரு மாலை அணிவித்தேன். அந்த மாலைகூடத் தனக்குச் சொந்தமாகிவிடக் கூடாது என்று அதை எனக்கே அணிவித்துவிட்ட புனிதர் அவர். அவர் பிரம்மச்சாரிதான்இ ஆனால் இந்தியாவே அவரது குடும்பம். அவர் எந்தச் செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவரது ஞானச் செல்வம்தான் அவர் இந்தியாவிற்கு எழுதி வைத்திருக்கும் சொத்து. தடம்மாறும் சமூகம்இ தடுமாறும் அரசியலும் அப்துல்கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு வளம் பெறும். அப்துல்கலாம் இந்தியாவிற்கு எழுதி வைத்துப்போகும் மரண வாசகம் இதுவாகத்தான் இருக்கும். அப்துல்கலாம் தன் செயல்களால் வாழ்ந்துகொண்டே இருப்பார். தேசத்தின் நதிகளிலும், மலைகளிலும், மரங்களிலும், மலர்களிலும், மக்கள் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டேயிருப்பார். அய்யா அப்துல்கலாம் அவர்களே! உங்கள் புகழை வாழ்நாளெல்லாம் உயர்த்திப் பிடிக்கும் திருக்கூடத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன்”.
இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மைய தலைவர் கவிஞர் காசி ஆனந்தன்:
“அப்துல்கலாம் மறைவுக்கு இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது என இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மைய தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.
கவிஞர் பா.விஜய்யின் இரங்கல் பா:
ஜனாதிபதி பதவி என்பது
ஒரு ரப்பர் ஸ்டாம்பாகவே இருந்து வந்தது
ஒரு கலாம் வந்து அமர்ந்த பின்புதான்
அது சலாம் போட்டு நிமிர்ந்தது
இராமேஸ்வரம் தீவு கண்டெடுத்த
இந்தியாவின் கலங்கரை விளக்கம்
பதினொரு லட்சம் மாணவர்களை
தன் ஜனாதிபதி பதவி காலத்தில்
கண்ட இரண்டாம் காந்தி
தேசியத் தலைவர் என்பது
பலருக்கு அடையாளம்
கலாம் அவர்களுக்கு அது
பிறப்பு சான்றிதழ்
உலக மேடைகளில்
உலக ராஜபாட்டையில்
இந்தியாவை நடக்க செய்த பெருமகன்
பாரத தாய் பவித்திரத்தால்
பெற்றெடுத்த திருமகன்
தமிழ் அரங்கத்தில்
தன்னம்பிக்கை அலைகளை
கண்டுபிடித்த விஞ்ஞானி
விண்வெளி அரங்கத்தில்
வெளிச்ச கவிதைகளை
எழுதிய கவிஞானி
கலாம் என்னும் இந்திய தீபம்
அணையவில்லை- அது
இந்திய மாணவர்கள் கண்களில்
கனவாய் தங்கி விட்டது- ஏனெனில்
கலாம் மின்மினிகளின் மாநாடு அல்ல
சூரியனின் சுய பிரகடனம்
இந்தியாவை பச்சையாக்க விரும்பிய
பச்சை தமிழன்
மூவர்ண கொடியை
முத்தமிழ் பற்றை
ஏவுகணையில் ஏற்றி
விண்வெளிக்கு அனுப்பிய
விஸ்வரூப கலைஞன்
அப்துல் கலாம் மறைந்து விடமாட்டார்- அவர்
உதிரும் இறகு அல்ல
அழிக்க முடியாத அக்னி சிறகு.
அமிதாப் பச்சன்:
அனைவராலும் விரும்பப்படும் எளிமையான மனிதர் அப்துல்கலாம். ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அறிவியல், ஏவுகணை தொழில் நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வு திட்டங்களால் இந்தியாவை உலக வரைபடத்தில் இடம் பெற செய்தவர் அப்துல்கலாம். ஓர் எனிமையான மனிதர், குழந்தைத்தன தோற்றம் கொண்டவர், இயல்பாக பழக கூடியவர், நலனில் அக்கறை கொண்டவர் மற்றும் அனைவராலும் விரும்பப்பட்டவர். அவருடன் தொடர்பு கொண்டதில் எனது ஒரே சாதனை என்றால், இந்தியாவின் அடுத்த, குடியரசு தலைவர் என அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு தொலைபேசியில் அவருடன் பேசினேன். தற்போது அவரை இழந்த இந்தியா வருத்தமடைந்துள்ளது.
நடிகர் சிவக்குமார்:
“உண்மை, நேர்மை, திறமை, கடும் உழைப்பு, நாட்டுப்பற்று இருந்தால் ஒருவன் எந்த குக்கிராமத்தில் பிறந்தாலும் எவ்வளவு ஏழையாகப் பிறந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டில் உயர்ந்த பதவியைப் பெற முடியும். உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம். பதவியில் இருந்த போதும் இல்லாத போதும் உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப்பட்ட மகான்! இளைஞர்களின் உந்து சக்தியாக இறுதி மூச்சு வரை இருந்த அற்புத மனிதர்!” அப்துல்கலாம்.
நடிகர் விவேக்:
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவு இந்திய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மாபெரும் அதிர்ச்சியான தகவல். இந்திய தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பு. தமிழ்நாட்டில் மரம் நட வேண்டும் என்ற ஒரு செய்தியை எனக்கு அவர் கூறினார். நான் இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருப்பது அவரின் அறிவுரை மற்றும் ஆசியால் தான். அவர் எனக்கு கூறிய இலக்கு தமிழ் நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகள். அவர் ஆத்மாவிற்கு செய்யும் மரியாதை அந்த ஒரு கோடி மரக்கன்றுகளை நான் நட்டு முடிப்பது தான். அவர் உடலால் மறைந்தாலும் அவருடைய எழுத்துகளும், பேச்சுகளும் என்றென்றும் இந்திய திருநாட்டின் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டியாகவே இருக்கும். தமிழ் நாட்டின் பொக்கிஷம், இந்தியாவின் கவுரவம் நம்மை விட்டு பிரிந்திருக்கிறது.
விளையாட்டுலக பிரபலங்கள்:
வி.வி.எஸ்.லட்சுமணன்:
சிறந்த மனிதரை இழந்திருப்பதால் தேசமே துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. மாணவர்களிடம் பேசுவது மற்றும் அவர்களுக்கு பயிற்றுவிப்பதை டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விரும்பினார். அவர் விரும்பியதை செய்து கொண்டிருந்தபோதே காலமானார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர்:
“மக்களின் ஜனாதிபதியான டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம், ஒரு அறிவாளி. நம்ப முடியாத ஒரு சிறந்த மனிதர். ஒரு உயரிய இந்தியரை நாம் இழந்துள்ளோம்”.

No comments:
Post a Comment