டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் திடீர் மறைவு அறிந்து வருந்துகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
ஸ்ரீசாந்த்:
“நாட்டிற்கு சோகமான நாள். நான் உள்பட ஏராளமான மக்களுக்கு ஊக்கமளிப்பவராக இருந்தவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நான் படித்ததில், அவரது புத்தகங்கள் சிறந்தவை. சூரியனை போன்று பிரகாசிக்க வேண்டும் என்றால், சூரியனை போல் சுட்டெரிக்க வேண்டும் என்பது அவரின் புகழ்பெற்ற வார்த்தைகள்”,
சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ளே:
டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் மறைவு நாட்டிற்கு பெரிய இழப்பு.
டென்னிஸ் நாயகி சானியா:
அப்துல்கலாம் மறைந்த இந்தநாள் என் வாழ்க்கையில் சோகமான நாள்.
பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா:
அனைவரின் இதயத்தையும் கவர்ந்தவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். ஒவ்வொருவரின் இதயத்தையும் வென்றெடுத்த டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் மரணம் தேசத்திற்கு பேரிழப்பாகும்.
டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா:
அப்துல்கலாமை இழந்திருப்பது எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர்:
அப்துல்கலாமின் வாழ்க்கையும், பணியும் இளந்தலை
முறையினர், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் உந்துதலை ஏற்படுத்தியவை.
கார் பந்தய வீரர் கருண் சந்தோக்:
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய தலைமுறை:
“மக்களின் குடியரசுத் தலைவர்” என பெருமையாக அழைக்கப்படும் நம் தமிழ் இனத்தின் மாபெரும் பொக்கிஷத்தின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது “புதிய தலைமுறை”.
திரையுலகினர் பலர்:
நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
“அப்துல்கலாமின் மறைவால் வருங்கால சமுதாயம் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து தவிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய நாடு வளர்ச்சியடைய இளைஞர்கள் பாடுபட வேண்டும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். கோடிக்கணக்கான இந்தியர்களுடன் இணைந்து எங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்”.
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
“மாணவ சமுதாயத்திற்கு தமது அனுபவத்தையும், ஆற்றலையும், பகிர்ந்தளித்து வந்த அப்துல்கலாம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணம் அனைவரின் மனதிலும் ஒரு அதிர்வலையை உண்டாக்கி உள்ளது. அவரின் எண்ணங்களையும், கனவுகளையும் செயல்படுத்துவதே நமது தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்”. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அப்துல்கலாமிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல்வேறு அமைப்பினர் அஞ்சலி:
அப்துல்கலாமின் மறைவிற்கு சென்னையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் 28.07.2015 அன்று
அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக பா.ஜ.க அலுவலகமான கமலாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் உருவப் படத்திற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜுலு உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அப்துல்கலாம் உருவப் படத்துக்கு மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநிலப் பொதுச்செயலாளர்கள் ஜோதி, தணிகாச்சலம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பா.ம.க அலுவலகத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அப்துல்கலாமின் உருவப் படத்திற்கு கட்சியின் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கரு.நாகராஜ் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில் அப்துல்கலாம் உருவப் படத்திற்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கே.மோகன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தலைமை செயலகத்தில்:
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் மறைவிற்கு அரசுத்துறை ஊழியர் சங்கங்கள் இரங்கல் தெரிவித்து வந்தன. அந்நிலையில் 28.07.2015 அன்று
காலை தலைமைச் செயலக சங்கத்தின் சார்பில், சங்க அலுவலகத்தில் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள்இ சங்க உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். தலைமை செயலக சங்கம் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித்துறை, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உள்ளிட்ட துறை அலுவலகங்களிலும் அப்துல்கலாமுக்கு ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். சைதாப்பேட்டை பனகல் மாளிகையிலுள்ள வனத்துறை உள்ளிட்ட துறை அலுவலகங்களிலும் அப்துல்கலாமின் உருவப் படத்திற்கு அதிகாரிகள், துறை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை மாநகராட்சியில்:
சென்னை மாநகராட்சியில் தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டிட வளாகத்தில் 28.07.2015 அன்று
அப்துல்கலாமின் உருவப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாநகராட்சி பணியாளர்கள், ரிப்பன் கட்டிடத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் ஜுலை 31-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அக்கூட்டம் ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதுவை கவர்னர் மாளிகையில்:
புதுவை கவர்னர் மாளிகையில் அவரது உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் அஜய்குமார் சிங் கலந்து கொண்டு அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி தலைமை செயலாளர் மனோஜ் பரிதாஇ காவல்துறை ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
வழக்கறிஞர்கள்:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் 28.07.2015 அன்று
இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது அப்துல்கலாம் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய வழக்கறிஞர்கள், மவுன அஞ்சலியும் செலுத்தினார்கள். மேலும் பெண் வழக்கறிஞர்கள், சங்கத் தலைவர் நளினி தலைமையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தினரும் அப்துல்கலாம் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆட்டோ ஓட்டுனர்:
சென்னையில் வாடகை ஆட்டோ ஓட்டும் கிறிஸ்டோபர் ரவிச்சந்திரன் என்பவர் 28.07.2015 அன்று
வித்தியாசமான முறையில் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தினார். அப்துல்கலாம் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாள் முழுவதும் பயணிகளுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டினார். கிறிஸ்டோபர் ரவிச்சந்திரனின் இந்த வித்தியாசமான அஞ்சலி பயணிகளை நெகிழ்ச்சியடைய வைத்தது. இது குறித்து அவர் கூறுகையில் “எனது சொந்த ஊர் மன்னார்குடி. என் குடும்பத்தினர் எல்லோரும் ஊரில் இருக்கிறார்கள். நான் கடந்த 28 ஆண்டுகளாக சென்னையில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறேன். எத்தனையோ தலைவர்கள், மாமேதைகள் நம்மைவிட்டு பிரிந்து போகிறார்கள். அவர்களில் சிலர் மட்டும் நம்மைவிட்டு நீங்கும்போது சொல்ல முடியாத வேதனை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இருக்கிறார் என்று தெரிவித்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோருக்கும் பிடித்த, அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. அதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோவை இலவசமாக ஓட்ட முடிவெடுத்தேன். இதற்காக நான் சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பெட்ரோல் வாங்க பயன்படுத்தினேன்”.
புதுச்சேரி மாநில தலைவர்கள்:
முதல்- அமைச்சர் ரங்கசாமி:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அணுஆயுத சோதனையின் மூலம் இந்தியாவை தலைநிமிர செய்தவர். ஏழ்மையில் பிறந்து குடியரசு தலைவர் ஆனவர். இந்தியா வல்லரசாக உயர வேண்டும் என அரும்பாடுபட்டவர். அதற்கு இளைஞர்களே கனவு காணுங்கள் என்று தொடர்ந்து சொல்லி வந்தவர். தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர். புதுச்சேரிக்கு அப்துல்கலாம் வந்திருந்தபோது மாணவர்களிடம் உரையாடினார். அப்போது புதுச்சேரி மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்குவதாகவும் புதுச்சேரி மாநிலம் கல்வி கேந்திரமாக திகழ்வதாகவும் கூறினார். இந்திய தேசத்தின் அடையாளமாக திகழ்ந்த டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் இறப்பு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது சார்பிலும், எனது அரசு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவத்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா எல்லா வல்ல இறைவனின் திருவடிகளில் இளைப்பாற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
அமைச்சர் ராஜவேலு:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உந்து சக்தியாகவும், முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இறுதி மூச்சு வரை நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். அவரது இழப்பு நட்டிற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்”.
நாராயணசாமி:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவு இந்திய நாட்டிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அப்துல்கலாம் மிகச்சிறந்த விஞ்ஞானி. இந்திய இராணுவத்
துறையில் ஏவுகணைகள் தயாரிக்கும் குழுவில் தலைவராக இருந்து பல நுண்ணிய ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க உதவியவர். இந்திய நாட்டு மக்கள் மீது மிகவும் பாசம் வைத்திருந்தவர். அதுமட்டுமல்லாமல் இளைய சமுதாயம் இந்த நாட்டை விஞ்ஞான நாடாக ஆக்க வேண்டும் என்று கனவு கண்டார். இந்திய நாடு அணுசக்தி துறையில் ஒரு வல்லரசாக வேண்டுமென்று அரும்பாடுபட்டவர். அப்துல்கலாம் அவர்களோடு நெருங்கி பழகுகின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. குடியரசுத் தலைவராக இருந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரை பலமுறை சந்தித்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது அவர் எனக்கு பல நல்ல அறிவுரைகளை வழங்கினார். அவர் மிக எளிமையானவராக இருந்தார். 24 மணி நேரமும் இந்திய நாட்டு மக்களுக்காக உழைத்தார். 120 கோடி இந்தியா மக்களாலும் மதிக்கப்பட்டவர். இளைஞர்களின் வழிகாட்டி அடிப்படை தலைவர் நம்மைவிட்டு பிரிந்தது மிகப்பெரிய இழப்பாகும்.
ராதாகிருஷ்ணன்.எம்.பி:
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் அணு
ஆயுத பரிசோதனையில் முக்கிய பங்காற்றியவர். நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்கு அவசியம் என்பதை வலியுறுத்தியவர். 2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவை நெஞ்சில் சுமந்தவர். மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை விதைகளை விதைத்தவர். சாமானியரும் நாடாளும் பதவியை அடையலாம் என்பதை நிரூபித்தவர். அன்னாரின் இழப்பு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு. அவரது லட்சியங்களை நாம் நெஞ்சில் சுமப்போம்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்: நமச்சிவாயம்.எம்.எல்.ஏ.,
சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து இந்தியாவின் முதல் குடிமகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவு பாரத நாட்டிற்கு பேரிழப்பாகும். தமிழனாக பிறந்து விஞ்ஞானத்தில் புரட்சி செய்து பல சாதனைகளுக்கு கர்த்தாவாக விளங்கியவர். இளைஞர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம் என்ற கருத்தை கடைசி வரை வலியுறுத்தியவர். மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர். இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தி ஊக்குவித்தவர். அன்னாரது மறைவு தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
புதுச்சேரி மாநில தி.மு.க வடக்கு அமைப்பாளர்: எஸ்.பி.சிவக்குமார்.
மிகச்சிறந்த மனிதரும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாமின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி:
ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 28.07.2015-ல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. திருவள்ளூர்
அடுத்த திருப்பாச்சூரில் உள்ள இருளர் காலனி வசந்தம் நகரிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திரளான இருளர் இன குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு அப்துல்கலாமின் உருவபடத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். திருவள்ளூர்
மாவட்டம் பள்ளிப்பட்டு மாவட்ட உரிமையியல் கோர்ட்டு வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆரணி பஸ் நிலையம் காந்தி சிலை அருகே அப்துல்கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காந்தி உலக மையம் சார்பில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் பொதுமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சிபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் அப்துல்கலாமின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கனடா நாட்டுப் பயணிகள் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஊத்துக்கோட்டையில் உள்ள அண்ணாசிலை அருகில் அவரது உருவபடம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரிய காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அப்துல்கலாமின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். காஞ்சிபுரம் வட்டார ஐக்கிய நாடார் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் ரெயில்வே ரோட்டில் வைக்கப்பட்டிருந்த உருவபடத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல்கலாமின் இறுதிச்சடங்கிற்காக தமிழக பெட்ரோல் பங்குகள் மூடல்:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது இறுதிச்சடங்கு நடைபெற்ற தினமான 30.07.2015 அன்று, காலை 10 மணி முதல் 11 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள 4,470 பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என தமிழக பெட்ரோலிய அசோசியேஷன் தலைவர் முரளி சென்னையில் தெரிவித்தார்.
திரையரங்கு காட்சிகள் ரத்து:
30.07.2015 அன்று
வியாழக்கிழமை நடைபெறும் அப்துல்கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு காரணமாக திரையரங்கு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
பிரபல சிற்பக் கலைஞர்:
ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வர் நகர கடற்கரையில் அப்துல்கலாமின் உருவத்தை மணல் சிற்பமாக பிரபல கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் வடிவமைத்தார். சாதாரண குடிமகன், ஏவுகணை மனிதர், பாரத ரத்னா, மக்களின் குடியரசுத் தலைவர் எனத் திகழ்ந்தவருக்கு அஞ்சலி என அப்துல்கலாமின் மணல் சிற்பத்திற்குக் கீழ் குறிப்பிட்டிருந்தார். அப்துல்கலாம் குறித்து கருத்து தெரிவித்த அவர், மணல் சிற்பக்கலை பிரபலமடையாத நிலையில், 2005-ம் ஆண்டு அப்துல்கலாம் குடியரசு தலைவராக இருந்தபோது தன்னை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவழைத்துப் பேசி தன்னை ஊக்கப்படுத்தியதை நினைவு கூர்ந்தார். மேலும், அவருடைய சொந்த பணத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயை சன்மானமாக வழங்கி தன்னை கவுரவப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
அப்துல்கலாமிற்கு தி இந்து வாசகர்கள் புகழஞ்சலி:
அ.ப.சந்தோஷ்: எங்கள் கனவு நாயகரே! அக்னிச் சிறகே! துயில் கொள்ளுங்கள்! கனவு காணுங்கள்! என்று கனவுகள் பல காணச்சொல்லி இந்திய இளைஞர்களின் இதயங்களை களவு கொண்டீர். தமிழின் மகனே. தாய் நாட்டின் மாணிக்கமே. பத்தம பூஷன், பாரத ரத்னா விருதுகளெல்லாம் பெருமை கொண்டது உங்கள் பெயரினிலே. காலன் செய்த பிழை. காலம் உங்களை அழைத்துக்கொண்டது. போதிக்கும்போதே உயிர் பிரிய வேண்டுமென்றீர். உணர்ந்து கொண்டேன், உயர்ந்தோர் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்று. மாணவர்களே நாட்டின் உயிர் மூச்சு என்றீர் உங்களின் மூச்சினை எங்கள் சுவாசமாய் விட்டுச்சென்றீர். நீங்கள் மரணிக்கவில்லை. உங்களின் கனவு எங்களின் கடமை. நீர் விட்டுச் சென்ற அக்னிச்சிறகுகள் நாங்கள். உங்களின் நம்பிக்கையை சுமக்கும் நாங்கள் மரணித்து விடமாட்டோம். உங்களின் கனவினை நனவாக்காமல்.
ஹரி: மண்ணில் வாழ்ந்தது போதுமென்று விண்ணில் பறந்தயோ. எங்களின் அணு உலக ஆசானே! நீங்கள் நினைத்திருந்தால் வேறு ஏதாவது படித்திருக் “கலாம்”. வேறு ஏதாவது தொழில் செய்து இருக் “கலாம்”. இந்தியாவை விட்டு வேறு ஏதேனும் நாட்டில் குடி அமர்ந்திருக் “கலாம்”. திருமணம் செய்து சுகபோக வாழ்வு வாழ்ந்திருக் “கலாம்” ஆனால் நீங்களோ மேற்கூறியவாறு எல்லாம் ஆசை வைக்காமல் நாட்டிற்காக உழைத்திட்ட நீங்கள் தான் எங்களின் ஆசான்.
அண்ணாதுரை: இந்தியாவின் பொக்கிஷம், உலக அரங்கில் தமிழை, தமிழரை தலை நிமிரச் செய்த உத்தமர், பாரத ரத்னா, பார் போற்றும் தலைவர், ஏவுகணை நாயகர், இளைஞர்கள், மற்றும் மாணவர்களின் நம்பிக்கை நாயகர், இந்தியா 2020 வல்லரசு என்ற கனவு திட்டத்தை வகுத்தவர், சிறந்த பேராசிரியர், மக்களின் ஜனாதிபதி. தலைசிறந்த மனிதர் இப்படி எல்லாவற்றிற்கும் சொந்தமான அய்யா அப்துல்கலாம் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவருடைய நினைவுகள் நம் மனங்களில் என்றும் நிலைத்து இருக்கும். மேலும் அவர் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்.
முஹமது சுஹைல்:
இந்திய திருநாடு தலைசிறந்ததொரு குடிமகனை, விஞ்ஞானியை, பேரறிஞரை, வழிகாட்டியை, ஆசிரியரை, மாமேதையை, எதிர்கால நம்பிக்கையை, கனவு நாயகனை, முன்னேற்றத்தின் அடையாளத்தை, விண்வெளி மற்றும் அணுசக்தி ஆராய்ச்சியின் முன்னோடியை, குணமிக்க அரசியல் தலைவரை, சமூக ஆர்வலரை, எளிமை விரும்பியை, தமிழனை இழந்து விட்டது. அவரது மறைவு நம் உலகின் பேரிழப்பாகும். அவர் வேற்றுமைகளை கடந்ததொரு மாமனிதர். அவரின் கனவுகளை, எண்ணவோட்டங்களை, ஆசைகளை நனவாக்குவதே அவருக்காக நாம் செய்யும் மரியாதையாகும். இவ்வுலகம் இருக்கும் வரை அவர் புகழ் நிலைக்கும். அவருடைய மறுமை நல்வாழ்வுக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
மைக்கேல் ராஜ்: 128 கோடி குடும்ப உறுப்பினர்களையும், அளவில்லா உலக உறவுகளையும் கொண்ட தலைவா, நீர் எங்கும் செல்லவில்லை. நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவன் என்பது என் பிறவி பலன். அஞ்சலி… அஞ்சலி… கண்ணீர் அஞ்சலி…
ராமசுப்பிரமணிய ராஜா: அக்னி குஞ்சு ஒன்று கண்டேன் என்னும் பாரதியின் கவிதை வரியின் உண்மை டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம். எளிமை, அன்பு, மதிக்கும் பண்பு போன்றவைகளை அவர் வழியில் பின்பற்றுவோம். ஆத்மாவுக்கு அழிவில்லை. அவர் என்றும் நம்மோடு.
ராதாகிருஷ்ணன்: விண்ணை நோக்கி ஏவுகணை மனிதரின் பயணம்.
பலதேவ் சிங்: எதிர்கால இளைஞர்களை பற்றி கவலைப்பட்டு கொண்டிருந்த ஒரு ஆசானின் மறைவு இந்திய இளைஞர்களுக்கு மட்டும் இழப்பு அல்ல. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் ஒரு இழப்புதான்.
ச.கோகுலக்கண்ணன்:
பிறந்தது என்னவோ கடைக்கோடியில், படித்தது என்னவோ தெருக்கோடியில், முயற்சிக்கு நீதான் உதாரணம், விஞ்ஞானமோ உனக்கு சாதாரணம், அரசியல் உனக்கு ஒத்துவரவில்லை, அதனால்தான் இந்தியாவே எழுச்சிப் பெறவில்லை, என்னை கனவுகானச் சொன்னாயே, நீ கனவுகான உறங்கினாயோ? இனி நீ சாதிக்க ஏதுமில்லை, நிம்மதியாக உறக்கம் கொள்வாயாக.
அன்பழகன்: நம் நாட்டை வல்லரசு என்று அறிவித்ததில் முழு பங்கு அய்யாவுக்கு மட்டுமே ஓங்குக அவர் புகழ். அவர் கண்ட கனவை நனவாக நாம் அனைவரும் முயலவேண்டும்.
மஹாலஷ்மி: மாணவர்கள் இருக்கும் வரை டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் என்றும் இருப்பார்.
சாம்: நீங்கள் 2020-ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று கனவு கண்டீர்கள். ஆனால் அதை பார்க்காமலேயே சென்று விட்டீர்கள்.
மொஹமத் அமீன்: இந்த உலகத்தில் எதிரிகளே இல்லாத ஒரு மாமனிதர் அப்துல்கலாம்.
இந்து: உங்களை நாங்கள் இழந்துவிட்டோம் அய்யா. உங்கள் கனவு விரைவில் மெய்படும். நீங்கள் ஓய்வெடுங்கள்.
ஜி.செல்வராஜு: இதுவரை ஜனாதிபதி பதவியை வகித்தவர்களில் முதன்மையானவர். மதச்சாயம் பூசப்படாதவர். ஜனாதிபதி பதவிக்கு புகழ் சேர்த்தவர். அவரது மறைவு நமக்கு பேரிழப்பு. நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்வோம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
அருள் செல்வன்:
இந்தியாவையும் இந்திய மக்களையும் பற்றி கவலைப்பட ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவரும் இன்று இல்லை. நான் மகாத்மாவை பார்த்ததில்லை உங்கள் மூலமாக நான் பார்க்கிறேன்.
அலாமீன்: இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் என்பதை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதில் முதன்மை ஆனவராக திகழ்ந்தார். வாழ்க்கை முழுவதையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டுக்காக அர்பணித்தவர். அவருடைய மறுமை நாட்கள் சிறப்பானதாக அமைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிரபு: இருபதின் கனவுகள் தூங்கிக் கொண்டிருந்த கண்களுக்கு கனவுகான கற்றுக் கொடுத்துவிட்டு அவர் தூங்கிப்போனார். உன்னை சுமக்கதான் எங்களுக்கு தகுதி இல்லை. உன் கனவுகளையாவது நாங்கள் சுமந்து நனவாக்கி உனக்கு மாலையாய் வைப்போம். சற்றே உறங்கிடு.
சதாசிவசரவணன்: இவர் இந்தியாவின் கனவு நாயகன் மட்டும் அல்ல. மக்கள் என்றும் காலம் முழுவதும் நினைவு வைத்திருக்கும் நினைவு நாயகன். இந்தியாவிற்கு ஏவுகணை ஏவி ஏவுகணை போல சென்றாய் அய்யா.
ஜெயபிரகாஷ்: ஒரு இஸ்லாமியராக இருந்தாலும், ஒன்றுமைக்கு வித்திட்டவர். அனைத்து சமுதாயத்தினரிடமும் அன்பு கூர்ந்தவர். குறிப்பாக இளைஞர்களை, வாலிபர்களை விழிப்புணர்வுக்கு வழி வகுத்தவர். இளைஞர்கள் பாதை மாறாத படி அவர்களை உயர்ந்த நிலைக்கு வர வழிகாட்டியவர், நேர்மையானவர், அப்பழுக்கற்றவர், ஒரு நயா பைசா கூட நாட்டின் சொத்தை எடுக்காதவர், தனது சுய சம்பாதியங்களான விலை மதிப்பற்ற புத்தகங்களை நாட்டுக்கு விட்டுச் சென்றவர், ஒழுக்கமானவர். இதைவிட அவருக்கு வேறு என்ன சிறப்பு இருக்க முடியும். அவரை இறைவன் தனது தோட்டத்தில் ஒரு மலராக இணைத்துக் கொண்டார். இறைவனின் சித்தம் அவர் இன்று பரலோகில். அவருக்கு உரிய கனத்தை கொடுப்போம்.
ஆர்.எம்.மனோகரன்: இந்திய நாட்டில் எத்தனையோ அறிவாளிகள் இருக்கலாம். அவர்களில் தலைசிறந்த அறிவாளி திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம். நாட்டில் எத்தனையோ நேர்மையாளர்கள் இருக்கலாம். அவர்களில் கரும்புள்ளியற்ற நேர்மையாளர் திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாம். நாட்டில் நூறு கோடிக்கும் மேலான இந்தியக் குடிமகன்கள் இருக்கலாம். அவர்களில் நாட்டையாளும் ஜனாதிபதி பதவி அவரையேத்தேடி நாடி அமர்ந்து கொண்ட நாட்டின் ஒரே தலைசிறந்த தலைமகன் திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இனிமையானவர், எளிமையானவர் ஆனால் வலிமையானவர். பிறந்தது இந்தியாவின் தென்கோடி. இறந்தது இந்தியாவின் வடகோடி. அவரது புகழ் இந்தியாவையும் தாண்டி உலகோடு இணைந்துள்ளது. அவரின் இறப்பு அகிலத்திற்கு ஈடுசெய்ய இயலா இழப்பு! விண்வெளி உள்ளவரை அவர் புகழ் மறையாது! பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா இம்மூன்று விருதுகளையும் ஒருமித்துப் பெற்றும் அடக்கமானவர். அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்துள்ளேன் என்பதே எனக்கு கிடைத்த பாரத ரத்னா!.
தர்ஷினி: “கலாம்” என்ற நல்ல மனிதருக்கு ஒரு இரங்கல் அஞ்சலி. உயர்வை நினைக் “கலாம்” நினைத்ததை சாதிக் “கலாம்” நல்லதை சிந்திக் “கலாம்” சிந்தனையால் சிறக் “கலாம்” முதியோர்களை மதிக் “கலாம்” இளைஞர்களை வளர்க் “கலாம்” இந்தியாவை வல்லரசாக் “கலாம்” என்ற கனவை நனவாக் “கலாம்” என்று முழங்கிய நமதருமை “கலாம்” இன்னும் பல காலம் நம்முடன் இருந்திருக் “கலாம்” இறைவன் அதனை கருணை செய்திருக் “கலாம்”.
பத்மபாலா: ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் புகழ் காலத்தை கடந்து நிற்கும். அவரின் இந்தியா 2020-ல் கவரப்பட்ட நான் அவர் வளர்ச்சிக்கு அவர் கூறிய பல வழிகளில் ஒன்றான புரா (Providing
Urban Amenities in Rural Area) என்ற திட்டத்தை எங்கள் பகுதியில் செயல் படுத்தினேன். broadband
cable network எங்கள் பகுதியில் இல்லாதாதால் VSAT
link
மூலம் அனைத்து digital
service-களும் எங்கள் தாய் தந்தை பெயரை இணைத்து பத்மபாலா என்ற PURA மையத்தை துவக்கி எங்களின் பகுதி மக்கள் online
service-களுக்காக மாநகர் செல்லும் நேரம் மற்றும் செலவை சேமித்தோம். அங்கேயே புத்தகம் படிப்பதை ஊக்குவிக்க இலவச நூலகம் உருவாக்கினோம். மரம் நடும் விழிப்புணர்வை உண்டாக்கினோம். இலவச கண் பரிசோதனை ஏற்பாடு செய்தோம். சுமார் 100 ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடத்தினோம். 5 வருடம் இப்பணியை நடத்த எண்ணமும் அதனால் உண்டான அனுபவமும் கொடுத்த அப்துல்கலாம் அவர்களுக்கு நன்றி. அரசு முயற்சியால் அலைபேசி நெட்வொர்க் அனைவருக்கும் கிடைத்துவிட்டதாலும் மாணவர்களுக்கு கணினி கிடைத்து விட்டதாலும் நாங்கள் மேற்கொண்ட பணியை நிறைவு செய்துவிட்டோம். டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் புகழ் ஓங்கட்டும்.
பரமகுரு: உங்கள் வாழ்க்கை முறை எங்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது. உங்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். மக்களின் கனவு நாயகனுக்கு நம் புகழஞ்சலி!
பி.கஸ்தூரிரங்கநாதன்:
2020-ம் ஆண்டு உலகின் வல்லரசாக இந்தியாவை மாற்றுவோம் என்று கூறி விண்ணில் சென்று நம் முன்னேற்றத்தை காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் அவரின் கனவை நனவாக்க முழு முயற்சியுடன் பாடுபடுவோம்.
தாமோதரன்: கனவு காணும் எண்ணம் விதைத்த கண்களையே நாம் இன்று இழந்து தவிக்கிறோம். காலம் மாறினாலும் அய்யா கலாம் அவர்களின் நினைவுகள் மறவாமல் இந்தியா 2020 கனவினை நிஜமாக்கப் போராடுவோம். மக்களின் கனவு நாயகனுக்கு நம் புகழஞ்சலி.
ஸ்ரீராம் சாமிநாதன்:
இந்த தேசம் வல்லரசாகும் அதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைத்தோமோ… வல்லரசு எனும் விதை போட்ட ஆலமரமே சரிந்து விட்டதே… இந்து முஸ்லீம் வேற்றுமை பார்ப்பவனைக்கூட தமிழன் நாட்டின் தலைவன் என சொல்ல வைத்தவரே! நேதாஜிக்கு பின்பு “வல்லரசு” கனவை எல்லோர் கண்களிலும் வைத்துவிட்டு! நீ மட்டும் உறங்க தொடங்கி விட்டாய்… இந்தியாவில் வாழ்ந்தோம் என்பதைவிட நீ இருக்கும்போது வாழ்ந்தோம் என்பதே பெருமை! சிவந்த கண்களோடு… நம் இந்தியாவின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி!.
கூத்தப்பாடிமா கோவிநாதசாமி: உள்ளத்தனையது உயர்வு என்று உலகமெலாம் குறள் பரப்பிய கலாமே! எங்கள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கிறாய் நீயே! வளமான நாடாக்க இளம் நெஞ்சங்களில் பொறி ஏற்றினாய்! சிறுலட்சியம் குற்றம் என்றாய்! கனவை கனவுகாண சொன்னாய்! மரக்கன்றை பூமியில் நட்டாய்! மனங்களின் நம்பிக்கையை விதைத்தாய்! உரையாடி உணர்வெழுப்பினாய்! தேசத்தை தேகமாக்கினாய்! நீ மனிதப் பிறவியல்ல மானுட பூமியின் தனிப்பிறவி உனக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறோம். இந்த தேசத்தை வலிமையுள்ள தேசமாக மாற்றுவோம். ஏனெனில் எங்கள் உள்ளத்தில் அக்னிப் கிரவேசத்தை உண்டு பண்ணிவிட்டாய். அது அணையாது இனி வாழ்பவருக்கும் வாழ உள்ளோருக்கும் பற்றவைத்துக் கொண்டேயிருப்போம்.
செல்வா: Great
leaders don’t tell you what to do… they show you how it’s done… RIP APJ

No comments:
Post a Comment