தமிழ் நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி, பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா வல்லரசாக ஆக வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், மது இல்லா இந்தியா உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களை எதிர்கால சமுதாய நலனுக்காக தனது இறுதி மூச்சு வரை அப்துல்கலாம் வலியுறுத்தி வந்தார். அவரின் கருத்துகளை நடைமுறைப்படுத்தும் விதமாக அவரது மறைவு நாளான ஜுலை 27-ந் தேதியை மதுவிலக்கு நாளாக அறிவிக்க வேண்டும்” என்று கூறினர்.
தமிழக அரசு விடுமுறை:
அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி (வியாழக்கிழமை) இராமேஸ்வரத்தில் நடைபெறுவதால், 30-ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. எனத்
தமிழக அரசு
அறிவித்தது.
நினைவிடம்:
அப்துல்கலாமின் நினைவிடத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராமலிங்கம் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர், அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு 24 மணிநேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு, பகலாக பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு நினைவு மண்டபம் கட்டும்பணி நிறைவடையும் வரை நாள்தோறும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுவார்கள். என்று கூறினார். மேலும் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து மாணவ- மாணவிகள், இளைஞர்கள் என ஏராளமானோர்கள்; அஞ்சலி செலுத்தினார்கள். அப்துல்கலாமின் ஆன்மா சாந்தியடையவும், அவருடைய கனவுகள் நிறைவேறவும் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
7 லட்சம்பேர் மரியாதை:
ஜூலை 29, 30- ஆகிய 2 நாட்களில் சுமார் 7 லட்சம் பேர் அப்துல்கலாமிற்கு மரியாதை செலுத்தி உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்தனர். மலேசியாவில் இருந்து வந்த ராஜலட்சுமி, ஜெயலட்சுமி உள்பட 18 பேர் அப்துல்கலாமின் உடல் அடக்க தலத்தில் 31.07.2015- அன்று
அஞ்சலி செலுத்தினர்.
அவர்கள் கூறியதாவது:
விமானம் மூலம் சுற்றுலா பயணிகளாக இந்தியாவுக்கு வந்தோம். சென்னை வந்த போது அப்துல்கலாமின் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு அஞ்சலி செலுத்த எங்கள் குடும்பத்தை சேர்ந்த 18 பேர் 30-ந் தேதி இராமேஸ்வரம் வந்தோம். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக எங்களால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அதனால் இங்கேயே தங்கி இருந்து இன்று அஞ்சலி செலுத்தினோம். அப்துல்கலாம் போன்ற மாமனிதரை இனி பார்க்க முடியாது. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர். அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர். அவர் மறைவு உலகளவில் பேரிழப்பு. அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்து. நூலகம், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். என்று கூறினர்.
மரக்கன்று நடப்பட்டது:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், அப்துல்கலாம் நினைவிடம் அருகே மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினார். மின்வாரிய உதவியாளரான அவர் மாவட்ட அளவில் சிறந்த இளைஞராக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் விருது பெற்றவர். அவர் கூறுகையில், “பாரத ரத்னா அப்துல்கலாம் வழியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் கோவில்களுக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்து சுமார் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன். தற்போது இங்கு அப்துல்கலாம் நினைவாக மரக்கன்று நட்டுள்ளேன். அரசு அனுமதித்தால் இந்த பகுதியில் மேலும் மரக்கன்றுகளை நடுவேன்” என்றார்.
மாவட்டம் முழுவதும் அஞ்சலி:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவிற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், கல்வி நிறுவனங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தினர். நாமக்கல் நகராட்சி சார்பில் 30.07.2015- அன்று
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நகராட்சி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டடிருந்த அப்துல்கலாம் உருவப்படத்திற்கு நகராட்சி தலைவர் கரிகாலன், ஆணையாளர் அசோக்குமார், என்ஜினியர் கமலநாதன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மவுன ஊர்வலம்:
இதே போல் நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜேக்டோ) சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நாமக்கல் சந்தைபேட்டை புதூரில் உள்ள அர்த்தனாரி தொடக்கப்பள்ளி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. அதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதேபோல் பல்வேறு அமைப்புகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் அஞ்சலி செலுத்தும் வகையில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த கவிஞர். நஞ்சுண்டன், டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்ததை பள்ளி மாணவ- மாணவிகளிடம் நினைவு கூறினார். அதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியில் அப்துல்கலாமின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது பொன்மொழிகள் பள்ளி மாணவ-மாணவிகள் முன்பு வாசிக்கப்பட்டது. அதில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மோகனூர்:
மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடந்தது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அதேபோல் கே.புதுப்பாளையம் அரசு பள்ளியில் அப்துல்கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, மாடகேசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, துணைத்தலைவர் தங்கவேல் உள்பட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்துஇ மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரிய- ஆசிரியைகள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல நாமக்கல் மாவட்டம் முழுவதும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடந்தது.
திருச்சியில் அரசியல் கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம்:
அப்துல்கலாமின் மறைவையொட்டி திருச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் 29.07.2015- அன்று
மவுன ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி நத்தர்ஷாதர்கா அருகே இருந்து ஊர்வலம் புறப்பட்டு மதுரைரோடு வழியாக மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் வந்து அடைந்தது. அங்கு டாக்டர்.அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசியல் கட்சிகள் மவுன ஊர்வலம்:
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மாநகர செயலாளர் அன்பழகன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் சோமு, ரோசையா, இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாகி ஸ்ரீதர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் அரசு, தமிழாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பயஸ்அகமது, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் சங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொருளாளர் கோவிந்தராஜுலு உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை அருகே இருந்து நேற்று 29.07.2015 அன்று
மாலை மவுன ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் மேலப்புலிவார்டு ரோடு, மெயின்கார்டுகேட் வழியாக சிந்தாமணி அண்ணாசிலையை சென்றடைந்தது. அங்கு அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரசியல் கட்சிகளின் மவுன ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் மாநகர பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை:
உபயோகிப்பாளர் இயக்கம், தேசிய பார்வையற்றோர் சம்மேளனம். எல்.பி.ஜி. சிலிண்டர் வினியோக தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் கூட்டம் அருண் ஓட்டலில் நடை பெற்றது. கூட்டத்திற்கு வக்கீல் மகேஸ்வரி வையாபுரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிவானி கல்வி குழும தலைவர் செல்வராஜ், வ.உ.சி. பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க காப்பாளர் பாலசுப்பிரமணியன், உபயோகிப்பாளர் இயக்க பொருளாளர் வையாபுரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்துல்கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபமும், அதில் அருங்காட்சியகமும், நூலகமும் அமைக்க மத்திய/மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு அப்துல்கலாம் பெயர்சூட்ட வேண்டும். இளைஞர்கள், மாணவர்களுக்கு கலாம் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும் என இரங்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்துல்கலாமின் மறைவிற்கு தேம்பி அழுத மாணவி:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் காலமானதையொட்டி இந்தியா முழுவதும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அனைத்து நிறுவனங்கள், தெருக்கள் என்று எல்லா இடங்களிலும் அப்துல்கலாமின் உருவப்படம் வைக்கப்பட்டு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்களில் பெருக்கெடுத்து ஓடும் கண்ணீரோடு அழுதுகொண்டே அஞ்சலி செலுத்திய மாணவியின் படம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் பல இடங்களில் உள்ள பத்திரிக்கைகளில் வெளிவந்தது. அப்துல்கலாமுக்காக இப்படி அழுகிறாரே? இந்த பெண் யார், என்ற கேள்வி எல்லோருடைய உள்ளத்திலும் எழுந்தது. அந்த பெண் சென்னையைச் சேர்ந்தவர். அவர் பெயர் சாண்ட்ரா ரோஸ் வின்ஸ்லெட். அவர் கூறியதாவது.
அப்துல்கலாம் என் ரோல் மடல்:
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமை நான் பார்த்தது இல்லை ஆனால் அவரது பேச்சை கேட்டிருக்கிறேன். அவருடைய பேச்சை கேட்டதும் நான் அவரை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டேன். அவரைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன். அவர் எழுதிய நூல்கள் அவரைப்பற்றி வரும் செய்திகள் என்றால் எனக்கு உயிர். அதன் மூலம் அப்துல்கலாம் எளிமையாக இருப்பார். மாணவ-மாணவிகளிடம் பேசிக்கொண்டிருப்பார். அவர்களின் கருத்தை கேட்பார் என்று தெரிந்து கொண்டேன். மேலும் அவர் திருமணம் செய்யாமல் நாட்டுக்காகவே தன்னை அர்பணித்தார் என்றும் அறிந்துகொண்டேன். எனவே மேலும் அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது.
எனக்கு வந்த மறைவு செய்தி:
நான் பெற்றோருடன் கொளத்தூர் பூம்புகார்நகரில் வசித்து வருகிறேன். எனது தந்தை வின்னி நகை தொழிலாளியாக இருக்கிறார். அவருடைய செல்போனை எனது அம்மா ஷெர்லி கடந்த 27-ம் தேதி வைத்திருந்தார். அன்று இரவு 9 மணிக்கு அப்துல்கலாம். மறைந்ததாக வாட்ஸ்அப்பில் செய்தி வந்தது. முதலில் அதை நான் நம்பவில்லை. பின்னர் அவர் மறைந்தது உண்மைதான் என்று உறுதி செய்து கொண்டேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. சாதி, மதம் கடந்து நாட்டுக்காக வாழ்ந்தவர். தனது ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை தனது வாழ்நாளில் கொடுத்து வந்தார். அவர் ஒரு மாமனிதர். தனக்காக அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. மாணவர்கள், இளைஞர்கள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றவர். அப்படிப்பட்டவரை இழந்துவிட்டோம் என்று எண்ணி அவர் மறைந்த அன்று இரவு நான் மட்டும் எனது வீட்டில் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினேன். அப்போது அழுகைதான் வந்தது. இப்போதும் அவரை நினைத்தால் கண்ணீர்தான் வருகிறது. நான் அஞ்சலி செலுத்திய பின்னர் எனது அப்பா வீட்டுக்கு வந்த பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து அப்துல்கலாம் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அஞ்சலி செலுத்தினோம்.
பள்ளியில் கண்ணீர் அஞ்சலி:
பிறகு 28-ம் தேதி காலையில் எங்கள் பள்ளியில் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் 300 மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் நானும் ஒருவர். நான் அஞ்சலி செலுத்தினேன். அப்போது என்னை அறியாமலேயே தேம்பி தேம்பி அழுதுவிட்டேன். அப்துல்கலாமை இனி நேரில் பார்க்கக்கூட முடியாதே என்று நினைத்துவிட்டேன். நான் சொல்லுவது என்னவென்றால் அப்துல்கலாம் மறைந்தாலும் அவருடைய கனவு, எண்ணம், தொலைநோக்குபார்வை. அவரது பேச்சு மறையவில்லை. இந்தியாவில் பிறந்த அனைவரும் அவரது கனவு நிறைவேற பாடுபடவேண்டும். இந்தியா வல்லரசு நாடாக வேண்டும். குறிப்பாக அவர் இந்தியா வல்லரசு நாடாக வரவேண்டும் என்றார். எனவே இந்தியா வல்லரசு நாடாக வரவேண்டும். அப்துல்கலாமின் கனவை நிறைவேற்ற வேண்டும். நான் பிளஸ்-2 படித்துவிட்டு சி.ஏ., படிப்பேன். பின்னர் பணம் சம்பாதித்துவிட்டு அப்துல்கலாம் கனவுகளில் ஒன்றான விவசாயதொழிலில் ஈடுபடுவேன். இவ்வாறு அம்மாணவி தெரிவித்தார்.
அப்துல்கலாம் படித்த கல்லூரியில் மாவண-மாணவியர்கள் அஞ்சலி:
அப்துல்கலாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1952-54-ல் இயற்பியல் பட்டம் படித்தார். பின்னாளில்இ உலகமே போற்றும் விஞ்ஞானிஇ குடியரசுத் தலைவர் என்ற நினைவுகளை மறந்ததில்லை. குறிப்பாகஇ அவரது பள்ளிஇ கல்லூரி நினைவுகளைக் கூறலாம். எனவேதான்இ திருச்சி வரும்போதெல்லாம் தான் படித்த செயின்ட் ஜோசப் கல்லூரிக்குச் செல்ல அவர் தவறியதில்லை. அதிலும்இ தான் படித்த வகுப்பறைக்குள் சென்று சிறிது நேரம் அமர்ந்துஇ பழைய நினைவுகளைப் பிறருடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார். இந்த நிலையில்இ அப்துல்கலாம் காலமானதையடுத்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 28.07.2015 அன்று
காலை மவுன ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி அதிபர் ஜான் பிரிட்டோஇ கல்லூரி முதல்வர் ஆன்ட்ரூ ஆகியோர் தலைமையில் கல்லூரிப் பேராசிரியர்கள்இ மாணவ- மாணவியர்கள் என சுமார் 3இ000 பேர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். அதேபோலஇ கல்லூரியின் இயற்பியல் துறை மாணவர்களும் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரத்தில் மாணவ-மாணவிகள் அமைதி ஊர்வலம்:
அப்துல்கலாம் மறைவையெட்டி விழுப்புரத்தில் 31.07.2015 அன்று
மகாத்மா காந்தி உயர் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர். விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுயா டெய்சி எர்னஸ்ட்இ இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சமூக சேவகி விஜயநந்தினி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பழனிஇ உடற்கல்வி ஆசிரியர் சுகன்யா, டாக்டர்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் முடிவில் பழைய பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டடிருந்த அப்துல்கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மரக்கன்றுகள் நடப்பட்டன:
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அப்துல்கலாம் நினைவாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சரோஜினி தேவி கலந்துகொண்டு நீதிமன்ற வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டார். அப்போது நீதிபதிகள் குமார் சரவணன், கிருஷ்ணசாமி, சுந்தரமூர்த்தி, கோவிந்தராஜன்திலகவதி, மணிமொழி, ஆனந்திம் எழிழரசிஇ விக்னேஷ்பிரபு, முகிலாம்பிகை மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் உடனிருந்தனர்.
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்:
இந்தியாவில் தெற்கில் பிறந்து, மேற்கில் ஆராய்ச்சி செய்து ஏவுகணை உருவாக்கினார். வடக்கில் ஜனாதிபதி ஆனார். கிழக்கில் மாணவர்கள் மத்தியில் அப்துல்கலாமின் மூச்சுக் காற்று பிரிந்தது. மீண்டும் தெற்கில் விதைக்கப்பட்டுள்ளார். அவரது உடலை உலக தலைவர்கள் வந்து செல்லும் டில்லியில் அடக்கம் செய்தால் தேசிய மறியாதை கிடைக்கும் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இராமேஸ்வரத்தில் நடந்தது. அங்கு தலைவர்கள் வந்தனர் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கூட்டம் வந்து நிறைந்தது. மாணவ மாணவிகளை சந்தித்து லட்சிய கனவு ஏற்றினால் 2020-ல் அவர்கள் உயர் பதவியில் இருப்பார்கள். சூரிய காந்தி போல நாடு வளர்ச்சி பெறும். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் மனதில் பாகுபாடு இருக்காது. அவர்களிடம் லட்சியத்தை விதைத்தால் வளமான நாடு உருவாகும். என அப்துல்கலாம் கூறுவார். 2050 உலக நாடுகளுக்கு உணவு அளிக்கும் நாடுகளாக இந்தியா, சீனா இருக்கும். தற்போதே நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்பட துவங்கிவிட்டது. நாமும் நதிநீர் இணைப்பு செய்ய வேண்டும். என்றார் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்.
அப்துல் கலாம் பெயரில் விருது:
முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அறிவிப்பு:
விஞ்ஞானிகள் அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரை இந்தியாவிற்கு தமிழன்னை வழங்கியுள்ளாள். அந்த வகையில், “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “அணுசக்தி நாயகன்” என்றும், “தலைசிறந்த விஞ்ஞானி” என்றும், “திருக்குறல் வழி நடந்தவர்” என்றும், “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் “பாரத ரத்னா” டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தமிழகம் பெற்றெடுத்த தலைமகன் ஆவார்.
சிறந்த விஞ்ஞானி:
இராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் கடின உழைப்பாலும், ஒரு முக சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசு தலைவராகவும் விளங்கினார். குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சரி, அதன் பின்னரும் சரி, அவரது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது.
வெற்றியின் ரகசியம்:
2020-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வல்லரசு நாடாக ஆகவேண்டும் என்று கனவு கண்டவர் அப்துல்கலாம். மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரால்தான் அந்த கனவை நனவாக்க முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியா வல்லரசாக உருவெடுக்க, மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான் மாணாக்கர்களை, “கனவு காணுங்கள், அந்த கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக்கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்” என தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார். “வெற்றிபெற வேண்டும் என்ற பதற்றமில்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி” என வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார்.
இளைஞர் எழுச்சி நாள்:
அப்துல்கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்து சக்தியாக விளங்கினார். எனவே ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ம் நாளை “இளைஞர் எழுச்சி நாள்” என தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது:
வலிமையான பாரதம், வளமையான தமிழகம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்கு வலுவூட்டும் வகையில், மறைந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவை போற்றும் விதமாக “டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது” என்ற ஒரு விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்கப்படும். இந்த விருதாளருக்கு 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்த விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். என்று முதல்-அமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா கூறினார்.
அப்துல்கலாம் பெயரில் விருது அறிவிப்பு தமிழக அரசுக்கு அப்துல்கலாம் குடும்பத்தினர் நன்றி:
ஷேக் சலீம் இராமேஸ்வரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு அக்டோபர் மாதம் 15- ந் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடவும், ஆகஸ்டு 15- ந்தேதி சுதந்திர தினத்தன்று சிறந்த இளைஞரை தேர்ந்தெடுத்து அவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுடன், 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.5 லட்சம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்காக எங்கள் குடும்பத்தின் சார்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். என் தாத்தா அப்துல்கலாம் இராமேஸ்வரம் வரும்போதெல்லாம் எங்களிடம் உரையாடும்போது இராமேஸ்வரத்தில் பல்கலைக்கழகம், அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று கூறுவார். இது அவரது ஆசை. அவரது ஆசை நிறைவேறும் வகையில் தமிழக அரசும், மத்திய அரசும் இதை செயல்படுத்த வேண்டும். மேலும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் மணிமண்டபம் உருவாக்கி, நூலகம், அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்கள் பார்வையிட வழிவகை செய்ய வேண்டும் என்று எங்கள் குடும்பத்தினர் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். என்று கூறினார். அப்போது, அப்துல்கலாம் அண்ணன் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
ஐதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ மையத்திற்கு அப்துல்கலாமின் பெயர்:
ஐதராபாத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்), இமாரத் ஆராய்ச்சி மையம் (ஆர்.சி.ஐ) நவீன ஆய்வகம் (ஏ.எஸ்.எல்) ஆகியவற்றுக்கு டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மிஷல் காம்ப்ளக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகமான அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் ஐதராபாத் இமாரத் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கிய அனுபவத்தை தனக்கு மிகவும் திருப்தியான ஒன்றாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அப்துல்கலாம் அவர்களுக்கு ஆர்.சி.ஐ வளாகத்தில் வெண்கல உருவச்சிலை எழுப்பப்பட்டது. இதையடுத்து, தற்போது ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ மிஷல் காம்ப்ளக்ஸ்க்கு அப்துல்கலாம் அவர்களின் பெயர் சூட்டப்படுகிறது.
பாம்பன் கடலில் பிரம்மாண்ட சிலை அமைக்க கோரிக்கை:
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவருக்கு உலகமே வியக்கும் வண்ணம் 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவச் சிலையை இராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பன் கடலில் நிறுவி இருப்பதுபோன்ற தோற்றத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் கிராபிக்ஸ் மூலம் தயாரித்துள்ளார். அதை அப்துல்கலாம் மீது பிரியம்கொண்ட ஏராளமானோர் பகிர்ந்துள்ளனர். இப்படி ஒரு சிலை இந்த இடத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பெருமை. இராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் அந்த சிலையை பார்த்து பிரமிப்பு அடைவார்கள். இதுபோன்ற தோற்றத்தில் சிலை நிறுவ வேண்டும் என்று அதனை விளக்கும் மாதிரி படம் “வாட்ஸ்அப்பில்” பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தென்னக ரெயில்வே துறை சார்பில் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்துல்கலாம் பேசும்போது, பாம்பன் பாலத்தால் 3 பகுதிகளை சேர்ந்த (பாம்பன், தங்கச்சிமடம், இராமேஸ்வரம்) பல லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்றும், இந்த ரெயில் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இராமேஸ்வரம் அகல இரயில்பாதை அமைப்பதற்கு அப்துல்கலாம் தூண்டுகோலாக இருந்தார். எனவே பாம்பன் கடலில் அப்துல்கலாமின் பிரம்மாண்ட சிலையை நிறுவ வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை அரசு நிறைவேற்றும் என ஏனையோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அக்டோபர் 15-ம், தேதி வாசிப்பு தினமாக மராட்டிய அரசு அறிவிப்பு:
இந்தியாவுக்கு அப்துல்கலாம் ஆற்றிய சிறந்த தொண்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை “வாசிப்பு தினமாக” கொண்டாட மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மராட்டி கல்வி மந்திரி வினோத் தாவ்டே கூறுகையில், “இந்தியாவின் தலைசிறந்த மாமனிதர் அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 15-ம் தேதியை ஆண்டுதோறும் வாசிப்பு தினமாக மராட்டிய பள்ளிகளில் கொண்டாடப்படும்” என தெரிவித்தார்.
அப்துல்கலாமின் பெயரில் புத்தாக்க பயிற்சி மையம் அசாம் முதல்-மந்திரி அறிவிப்பு:
அப்துல்கலாமின் பெயரில் புத்தாக்க பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் 30.07.2015 அன்று
தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மறைந்த அப்துல்கலாம் மிகச்சிறந்த விஞ்ஞானி, மனித நேயம் மிக்கவர். ஆசிரியராக இருந்து இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டினார். அவரின் நினைவை போற்றும் விதமாக அசாமில் புத்தாக்க பயிற்சி மையம் விரைவில் அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த மையத்துக்கு டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் என்று பெயர் சூட்டப்படும். அசாம் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களில் இளம் தொழிலதிபர்கள், படைப்பாளிகள் உருவாக இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.
பீகார் வேளாண் கல்லூரிக்கு அப்துல்கலாம் பெயர்:
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், கிஷன்கஞ்ச் நகரில் உள்ள அரசு வேளாண் கல்லூரிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பெயரை சூட்டுவதாக அறிவித்தார்.
பள்ளிக்கூட பாடதிட்டத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு:
மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக பள்ளிக்கூட பாடதிட்டத்தில் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்படும் என்று அறிவித்தார்.
கடற்கரைக்கு அப்துல்கலாமின் பெயர் சூட்ட கோரிக்கை:
சமாஜ்வாடியின் மராட்டிய மாநில பிரிவு மும்பை நரிமன்முனையில் இருந்து கண்டிவிலி வரையிலான 35 கி.மீ தூர கடற்கரைக்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய புத்தகத்தில் அப்துல் கலாமின் கடைசி உரை:
இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் “பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்” என்ற தலைப்பில் அப்துல்கலாம் உரையாற்றினார். பேசத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். அதே தலைப்பில் அவர் புத்தகம் ஒன்றை எழுதி வந்தார். மாசுகளை அகற்றுதல், கழிவுப்பொருள் மேலாண்மை, நில மேலாண்மை, குடிநீர் பாதுகாப்பு, மறுசுழற்சி, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை கட்டிடங்கள், மாசற்ற எரிசக்தி போன்றவை பற்றி அந்த புத்தகத்தில் அவர் எழுதியிருந்தார். இப்படி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது. அந்த புத்தகத்தை உருவாக்குவதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். கிட்டத்தட்ட புத்தகத்தின் பாதி பகுதியை அப்துல்கலாம் எழுதி முடித்து விட்டார்.

No comments:
Post a Comment